Published : 16 Apr 2019 09:25 AM
Last Updated : 16 Apr 2019 09:25 AM

ஏழைகளை வறுமையிலிருந்து மீட்டெடுக்க காங்கிரஸின் ‘நியாய்’ திட்டம் உதவுமா?

வறுமையை ஒழிப்பது என்ற சிந்தனையைத் தேர்தல் களத்துக்கு இந்திரா கொண்டுவந்து கிட்டத்தட்ட அரை நூற்றாண்டாகிறது. ‘வறுமையே வெளியேறு’ (கரீபி ஹட்டாவ்) என்று அவர் முழங்கினார். இதை நிறைவேற்றும் வகையில் நாட்டைச் சிறிது காலம் வழிநடத்தினார். அவரது ஆட்சிக் காலத்தில் வறுமை வெளியேறிவிடவில்லை என்றாலும், வறுமையைக் குறைக்கும் நடவடிக்கைகள் 1960-களின் இறுதியில் தொடங்கின. 1980-களின் தொடக்கத்தில் மீண்டும் அவருடைய தலைமையிலான ஆட்சியின் கீழ், அந்த நடவடிக்கைகள் வேகம் பெற்றன. இந்திரா செயல்படத் தெரிந்த அரசியல் தலைவர் என்பதால், வருவாயைப் பெருக்குவதுதான் வறுமையை ஒழிக்கும் வழி என்று புரிந்துகொண்டு அதற்கான செயல்களிலும் இறங்கினார்.

2019 மக்களவைத் தேர்தலையொட்டி ஏழைகளின் வருவாயைப் பெருக்கும் திட்டங்கள் பாஜக, காங்கிரஸ் இரு கட்சிகளாலும் அறிவிக்கப்பட்டுள்ளன. ‘பிரதான் மந்திரி கிஸான் சம்மான் நிதி’ (பிஎம்-கிஸான்) என்ற பாஜகவின் திட்டம் விவசாயக் குடும்பங்களுக்கு ஆண்டுக்கு ரூ.6,000 உதவித்தொகை தருவதை இலக்காகக் கொண்டது. இது ஏற்கெனவே தொடங்கிவிட்டது.

பாரபட்சம் அற்றது சமத்துவம்

நாட்டு மக்களில் ஏதேனும் ஒரு பிரிவினருக்கு மட்டும் வருவாய் உதவித் திட்டம் என்பது சமத்துவ அணுகுமுறைக்கு எதிரானது என்ற அடிப்படையில் இது விமர்சிக்கப்பட்டது. விவசாயக் கூலிகளைப் போலவே நகரங்களில் நடைமேடைகளில் வசிக்கும் ஏழைகளும் தினக்கூலிகளும்கூட இத்தகைய உதவித் திட்டத்துக்குத் தகுதியானவர்கள்; மேலும், விவசாயத்துக்குத் தரும் மானியங்கள் விவசாயிகளுக்குத்தான் செல்கின்றன என்ற குற்றச்சாட்டு எழுந்தது. ஆனால், உணவு உற்பத்தியைப் பெருக்கவும், அனைவருக்கும் நியாய விலையில் உணவு கிடைக்கவும், உணவுக்காக வெளிநாடுகளிடம் கையேந்தாமல் இருக்கவும் இத்தகைய மானியங்கள் அவசியம் என்பது நல்ல பதில். அதேசமயம், எந்தவொரு சமூக நலத் திட்டமும், சமமான பொருளாதார நிலையில் இருப்பவர்களில் ஒரு சாராரை ஒதுக்கிவிட்டு இன்னொருவருக்கு மட்டும் பலன் தரும் வகையில் செயல்படுத்தப்படுவது சரியல்ல.

காங்கிரஸ் அறிவித்துள்ள ‘நியாய்’ திட்டம் பாஜக திட்டத்தைவிடப் பெரிது. வறுமைக்கோட்டுக்குக் கீழே வாழும் ஏழைகளில் 20% பேருக்கு மாதந்தோறும் ரூ.6,000 வீதம் 12 மாதங்களுக்கு ரூ.72,000 வழங்கும் உத்தேசத்தைக் கொண்டது இத்திட்டம். இரண்டு திட்டங்களும் மக்கள் முன் இருக்கின்றன. ‘நியாய்’ திட்டம் மேலும் கடுமையாக விமர்சிக்கப்படுகிறது. ஆனால், இந்தத் திட்டம் ஒருவருக்கு அளித்துவிட்டு இன்னொருவருக்கு இல்லை என்று பாரபட்சம் காட்டவில்லை என்பதை இங்கே சுட்ட வேண்டியிருக்கிறது. இப்போதைய விலைவாசிப்படி இத்திட்டத்தை அமல்படுத்த அரசுக்கு ஆண்டுக்கு ரூ.3.6 லட்சம் கோடி செலவு பிடிக்கும். மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில் 2019-20-ல் அரசு ஒதுக்கியுள்ள செலவில் 13% இந்தத் தொகை. மத்திய அரசு நிர்வகிக்கும் அனைத்துத் திட்டங்களையும் நிறுத்திவிட்டு, இதர துறைகளுக்கான மானியத்தை ஓரளவுக்குக் கட்டுப்படுத்தினால் இந்தத் தொகையை அரசால் ஒதுக்கிவிட முடியும்.

ஆனால், இந்த 13% தொகையானது கல்வி, சுகாதாரம் ஆகியவற்றுக்கும் மூலதனச் செலவுக்கும் அரசு ஒதுக்கியிருக்கும் தொகையைப் போல இரண்டு மடங்கு. ஆனால், இந்தத் தொகையையும் தொடர்ந்து இத்துறைகளுக்குச் செலவிட்டால்தான் வறுமையைக் கட்டுக்குள் வைக்க முடியும். ரூ.3.6 லட்சம் கோடியை வறுமை ஒழிப்புக்கு நேரடியாகத் தருவதைப் போல, அரசே வேறு சமூக நல அடித்தளக் கட்டமைப்புகளுக்கும் செலவிட்டுப் பலனைக் கூட்டலாம் என்பதையும் இங்கே சொல்ல வேண்டும்.

தென்னிந்திய முன்னுதாரணம்

இந்த விஷயத்தில் தென்னிந்திய மாநிலங்களை அரசு ஒரு முன்னோடியாகக் கருதலாம். சுகாதாரம், கல்வி, பாதுகாக்கப்பட்ட குடிநீர், பொது விநியோக முறை மூலம் மானிய விலையில் அத்தியாவசியப் பண்டங்களை அளிப்பது போன்ற பொதுச் சேவைகள் மக்களுடைய வறுமையை ஒட்டுமொத்தமாகக் குறைப்பதை உணர்த்தும் சான்றுகள் நிறைய இருக்கின்றன. நேரடியான வறுமை ஒழிப்புத் திட்டங்களைவிட இவை நல்ல பலன்களையும் அளிக்கின்றன. இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் நபர்வாரி வருவாயும் நபர்வாரி ஏழ்மையும் ஒரே அளவில் இல்லை. வடக்கு, கிழக்கு, மத்திய மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் தென்னிந்திய மாநிலங்களில் வறுமையின் அளவும் வறியவர் எண்ணிக்கையும் குறைவு. இதற்கு முதல் காரணம் மனிதவள ஆற்றல் மேம்பாட்டுக்குத் தென்னிந்திய மாநிலங்கள் செய்த செலவுகள்தான்.

மாநில அரசின் கொள்கைகளே காரணம்

தென்னிந்தியர்களின் கல்வியறிவு, சுகாதார நிலை, நபர்வாரி வருவாய் ஆகியவற்றைப் பிற பகுதி இந்தியர்களுடன் ஒப்பிடும்போது, வருமானம் அதிகரித்தால் வறுமை குறையும் என்ற உண்மை புலப்படுகிறது.

இந்தியாவின் எல்லாப் பகுதிகளுக்கும் ஒரேயொரு மத்திய அரசுதான். மனிதவள ஆற்றலில் வெவ்வேறு பகுதிகளுக்கு இடையே வேறுபாடு நிலவுகிறது என்றால், அந்தந்த பகுதி மாநில அரசுகள் கடைப்பிடிக்கும் கொள்கைகளும் செய்யும் செலவுகளும்தான் அதற்குக் காரணம். ஆகவே, இத்தகைய சேவைத் துறைகளுக்கான செலவில் கை வைத்து பாதிப்பை உண்டாக்கிவிடாமல் வறுமை ஒழிப்புத் திட்டங்களைத் தீட்டுவது மிக முக்கியம்!

- புலப்ரே பாலகிருஷ்ணன்,

அசோகா பல்கலைக்கழகப் பேராசிரியர்.

© ‘தி இந்து’ ஆங்கிலம், தமிழில்: சாரி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x