Last Updated : 28 Jan, 2019 10:20 AM

 

Published : 28 Jan 2019 10:20 AM
Last Updated : 28 Jan 2019 10:20 AM

ஏன் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு விடைகொடுக்க வேண்டும்?

நடந்து முடிந்துள்ள ஐந்து மாநில சட்டப் பேரவை பொதுத் தேர்தல், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் கோளாறுகள் இல்லாமல் நடந்துவிடவில்லை. இந்தக் கோளாறுகளைத் ‘தொழில்நுட்பக் கோளாறுகள்’ என்று தேர்தல் ஆணையமும், ‘திட்டமிட்ட மோசடி’ என்று எதிர்க் கட்சிகளும் கூறுவதைக் கவனிக்க வேண்டும். இதில் இது எதுவாக இருந்தாலும், மி.வா.ப. இயந்திரங்கள் நம்பகமானவை அல்ல என்பது மட்டும் நிச்சயம்.

மத்திய பிரதேசத்தில் மட்டும் மொத்தமுள்ள 230 பேரவைத் தொகுதிகளில் 204 தொகுதிகளில் பதிவான வாக்குகளுக்கும், எண்ணப்பட்ட வாக்குகளுக்கும் இடையிலான வேறுபாடுகள் தெளிவாகத் தெரிந்தன. ‘எவ்வளவு வாக்குகள் எண்ணப்பட்டனவோ அவ்வளவு வாக்குகள்தான் பதிவாகியிருக்கின்றன’ என்ற தேர்தல் ஆணையத்தின் வாதம், இதைச் சரிபார்ப்பது அவசியமில்லை என்றே அது கருதுவதை வெளிப்படுத்துகிறது.

பதிவான வாக்குகளுக்கும் எண்ணப்பட்ட வாக்குகளுக்கும் இடையில் ஒரு வாக்கு வித்தியாசம் இருந்தாலும் அது ஏற்றுக்கொள்ளப்பட முடியாதது. இது மிக உயர்வான தரமுடைய தேர்தலுக்கான இலக்கணம் அல்ல, உலகம் முழுவதும் ஜனநாயகத்தில் பின்பற்றப்படும் நடைமுறை. வாக்குப்பதிவு இயந்திரத்தில் தில்லுமுல்லு செய்வது எளிதா, கடினமா என்ற வாதங்கள் பிரச்சினையைத் திசை திருப்புபவை. இவற்றை நாம் கருத்தில்கொள்ளத் தேவையில்லை. நேர்மையும் நியாயமும் உள்ள தேர்தலுக்கான அடிப்படைக் கொள்கைகள் வேறு.

அடிப்படைக் கொள்கைகள்

மக்களுடைய விருப்பம் வெளிப்பட வேண்டும் என்பதுதான் ஜனநாயகத்தின் அடிப்படை. ரகசிய வாக்குரிமை அடிப்படையில் மக்கள் தங்களுடைய தேர்வைத் தெரிவிக்கிறார்கள். இந்த வாக்குகள் சரியாகப் பதிவுசெய்யப்பட வேண்டும், சரியாக எண்ணப்பட வேண்டும். வாக்குப்பதிவு, வாக்கு எண்ணிக்கை தொடர்பான நடைமுறைகள் மக்களால் நேரில் பார்க்கும்படியாகவும் சரிபார்க்கும் வகையிலும் இருக்க வேண்டும். ‘வெளிப்படைத்தன்மை’, ‘சரிபார்க்கும் தன்மை’, ‘ரகசியம்’ என்ற மூன்று அடிப்படைகளின் மீதுதான் சுதந்திரமான, நியாயமான தேர்தல் நடைபெற வேண்டும்.

மின்னணு வாக்குப்பதிவுக்கு ஆதரவு அல்லது எதிர்ப்பு என்று எந்த நிலையை எடுப்பவராக இருந்தாலும், இந்த மூன்று அடிப்படைத் தன்மைகளை விட்டுக்கொடுக்க முடியாது. காகிதத்தாலான வாக்குச்சீட்டு மட்டுமே இந்த மூன்றையும் உறுதிப்படுத்தும். தான் எந்தச் சின்னத்தின் மீது முத்திரை குத்தினோம் என்பது வாக்காளருக்குத் தெரியும். அப்படி வாக்களிப்பது சாவடியில் மறைவான இடத்தில் நடப்பதால் ரகசியம் காக்கப்படுகிறது. வாக்குகள் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் வெளிப்படையாகக் காட்டப்பட்டு பிறகு எண்ணப்படுகின்றன. மி.வா.ப. இயந்திரங்கள் இந்த மூன்று சோதனைகளிலும் தோற்றுவிடுகின்றன.

2009-ல் ஜெர்மானிய அரசியல் சட்ட நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் இது தெளிவாக்கப்பட்டிருக்கிறது. இதனால் அந்நாட்டில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் கைவிடப்பட்டு, வாக்குச் சீட்டு முறையிலேயே தேர்தல் நடக்கிறது. நெதர்லாந்து, அயர்லாந்து போன்ற தொழில்நுட்பத்தில் முன்னேறிய நாடுகள்கூட இயந்திரங்களைக் கைவிட்டுவிட்டன.

சரிபார்க்கும் வாய்ப்பில்லை

மி.வா.ப. இயந்திரங்களில் எத்தனை வாக்குகள் பதிவாயின என்று மட்டும் பார்க்க முடியுமே தவிர, அந்தந்த வாக்காளர் அழுத்திய பொத்தான்படிதான் சின்னங்களில் பதிவானதா என்று பார்க்க முடியாது. வாக்குப்பதிவு இயந்திரத்தில் தெரியும் வரிசைப்படி, இயந்திரத்தின் நினைவுப்பகுதியில் அது சேமிக்கப்படும் என்பதும் நிச்சயமில்லை. இப்படியொரு இடைவெளி இருப்பதால்தான் வாக்குப்பதிவு ‘ஒப்புகைச் சீட்டு முறை’ (விவிபாட்) அறிமுகப்படுத்தப்பட்டது.

தேர்தல் ஆணையம் இப்போது ஒவ்வொரு தொகுதியிலும் ஒரு வாக்குச் சாவடியில் மட்டும்தான் இந்த ஒப்புகைச் சீட்டு முறையை அமல்படுத்துகிறது. பழுதான இயந்திரங்களைச் அடையாளம் காண்பதில் இந்த ஒப்புகைச் சீட்டு முறை 98-99% தவறிவிடுகின்றன என்று முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி அசோக்வர்தன் ஷெட்டி சமீபத்திய கட்டுரையில் குறிப்பிட்டிருக்கிறார். மோசடி நடக்காமல் தடுக்க வேண்டும் என்றால், அந்தத் தொகுதியின் எல்லா வாக்குச் சாவடிகளிலும் ஒப்புகைச் சீட்டு முறையைக் கையாள வேண்டும் என்கிறார். இல்லாவிட்டால், இது ஆதாரபூர்வமாக அல்லாமல், நேர்மையை உறுதிசெய்யும் மேம்போக்கான நடவடிக்கையாகவே இருக்கும்.

காகிதத்தால் ஆன வாக்குச் சீட்டு என்றால், தேர்தல் ஆணையம் அவற்றை ஒன்றாகக் கலந்துவிட்டு பிறகு எண்ண முடியும். அதனால், ஒரு குறிப்பிட்ட வாக்குச் சாவடியில் யாருக்கு வாக்குகள் அதிகம் என்பதை அறிய முடியாது. மி.வா.ப. இயந்திரங்கள் சாவடி வாரியாக எண்ணப்படும்போது வறியவர்களும் நலிவுற்றவர்களும் யாருக்கு, எப்படி வாக்களித்தார்கள் என்பதைக் கண்டுபிடித்துவிட முடியும். இது அவர்களை அரசியல் கட்சிகள் நெருக்குவதற்கு வழி செய்துவிடும். மொத்தமாகச் சேர்த்து எண்ணும் இயந்திரங்கள் இருந்தால் பிரச்சினையை ஓரளவு தீர்க்கலாம். தேர்தல் ஆணையத்துக்கு இதில் ஆர்வம் இல்லை.

ஆக, வெளிப்படைத்தன்மை, சரிபார்ப்புத்தன்மை, ரகசியத் தன்மை ஆகிய மூன்று அம்சங்களிலும் மி.வா.ப. இயந்திரங்கள் குறைபாடுள்ளவை என்பது புரிகிறது. சமீபத்தில் பழுதுபட்ட வாக்குப்பதிவு இயந்திரங்களின் எண்ணிக்கையைப் பார்க்கும்போது, தேசியத் தேர்தலில் இந்த எண்ணிக்கை அதிகமாகிவிடும் என்று தெரிகிறது. அதற்காகக் கையால் எண்ணும் முறையையும் கையாள முடியாது. அது மி.வா.ப. இயந்திரத்தைக் கொண்டுவந்ததன் நோக்கத்தையே சிதைத்துவிடும். இப்படியொரு கொள்கை இல்லாமல் ஒப்புகைச் சீட்டு முறையை அமல்படுத்துவதும் அர்த்தமில்லாதது.

தேர்தல் ஆணையத்தின் கடமை

இவ்வளவு குறைகள் இருந்தும் தேர்தல் ஆணையத்தின் நம்பிக்கைக்கு உரியதாகிவிட்டன மி.வா.ப. இயந்திரங்கள். மேற்கத்திய நாட்டு இயந்திரங்களைப் போல இந்திய வாக்குப்பதிவு இயந்திரங்களில் தில்லுமுல்லுகள் செய்ய முடியாது என்று அடித்துப் பேசுகிறது ஆணையம். முடியுமா, முடியாதா என்பதல்ல கேள்வி... நம்பிக்கைக்குரியதா, இல்லையா என்பதுதான். இயந்திரத்தில் உள்ள மென்பொருள் எரிந்துவிட்டால்கூடத் தேர்தல் ஆணையத்துக்கும் வாக்காளருக்கும் எதுவும் தெரியாது. உள்ளே எது வேலை செய்கிறது என்று இரு தரப்புக்குமே தெரியாது. வாக்குப்பதிவு இயந்திரங்களைத் தயாரித்த நிறுவனத்தையும் தேர்தல் ஆணையத்தையும்தான் நம்பியிருக்க வேண்டும். வெளியிலிருந்து யாரும் சோதிக்க முடியாத வகையில் மி.வா.ப. இயந்திர நடைமுறை இருப்பதை, ஜெர்மானிய நீதிமன்றத் தீர்ப்பு சுட்டிக்காட்டுகிறது.

தேர்தல் முடிவுகள் விரைவாக வெளியாகின்றன, செலவு குறைகிறது என்பது உண்மையாக இருந்தாலும், தேர்தல் நேர்மையாக நடக்கிறதா என்பது அதைவிட முக்கியம். வாக்குச் சாவடியைக் கைப்பற்றுவது, ஏற்கெனவே முத்திரையிட்ட வாக்குச் சீட்டுகளைப் பெட்டியில் திணிப்பது போன்ற முறைகேடுகளுக்கு மி.வா.ப. இயந்திர முறை இடம்தருவதில்லை என்கின்றனர். இது ‘ஸ்மார்ட்-போன்’ யுகம். நன்கு தேர்ந்த ஒரு தொழில்நுட்ப நிபுணர், ஒரேயொரு செயல் மூலம் எண்ணற்ற வாக்குச் சாவடிகளில் வாக்குகளை மாற்றி விழவைத்துவிட முடியும். அதைவிட முக்கியம் மி.வா.ப. இயந்திரத்தில் தில்லுமுல்லுகள் நடந்திருந்தால் அதைக் கண்டுபிடிப்பது மிகமிகக் கடினம். இதுவரைக்கும் எந்த முறைகேடும் நிரூபிக்கப்படவில்லை என்பதுதான் இதைக் காப்பாற்றிக்கொண்டிருக்கிறது. ஆனால், தேர்தல் நடைமுறையில் மக்களுக்கிருக்கும் நம்பிக்கை தளர்ந்து வருகிறது.

மறுக்க முடியாத நிரூபணங்கள் அவசியம் இல்லை, வெறும் சந்தேகமே போதும் - வாக்குச் சீட்டு முறைக்கு நாடு திரும்புவதற்கு. இப்போது இந்தச் சந்தேகம் அதிகரித்துக்கொண்டே வருகிறது. மி.வா.ப. இயந்திரங்கள் மீதான சந்தேகங்கள் நியாயப்படுத்த முடியாதவை என்று தேர்தல் ஆணையம் கூறுகிறது. ஜனநாயகம் நம்பத்தக்கதாக இருக்க வேண்டுமென்றால் தேர்தல் நடைமுறையும் அதற்கேற்ப இருக்க வேண்டும். அதை அளிக்க வேண்டியது தேர்தல் ஆணையத்தின் கடமை.

© ‘தி இந்து’ ஆங்கிலம், சுருக்கமாகத் தமிழில்: சாரிசமீபத்தில் பழுதுபட்ட வாக்குப்பதிவு இயந்திரங்களின் எண்ணிக்கையைப் பார்க்கும்போது, தேசியத் தேர்தலில் இந்த எண்ணிக்கை அதிகமாகிவிடும் என்று தெரிகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x