Last Updated : 30 Nov, 2018 10:11 AM

 

Published : 30 Nov 2018 10:11 AM
Last Updated : 30 Nov 2018 10:11 AM

அமெரிக்கர்களை அசரடித்த நடிகர் திலகம்

சிவாஜி கணேசனுடன் டென்னிஸ் குக்ஸ் என்ற வெளியுறவுத் துறை அதிகாரியும் வேறு இரண்டு நண்பர்களும்தான் அமெரிக்காவைச் சுற்றிவந்தனர். டென்னிஸ் குக்ஸ் சரளமாகத் தமிழ் பேசுபவர். அமெரிக்கத் திரையுலகின் தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், நடிகர்கள், கதை வசனகர்த்தாக்கள் என்று அனைவருமே எங்கு போவதாக இருந்தாலும் மக்கள் தொடர்பு அதிகாரி, விளம்பரத் தூதர், போட்டியாளர்களை வசைபாடித் தூற்றுபவர் என்று ஐந்தாறு பேர் உள்ள சிறிய படை இல்லாமல் செல்ல மாட்டார்கள்.

சிவாஜி எளிமையாக வந்திருப்பதை வியப்போடு பார்த்தார்கள். இங்கு மட்டுமல்ல, இந்தியாவிலும் தனக்கு இப்படி யாருமில்லை என்றபோது, அவர்களுடைய விழிகள் வியப்பால் விரிந்தன. எனக்கு நானே விளம்பரத் தூதர் என்று சிரித்துக்கொண்டே அவர் சொன்னபோது ஆடிப்போனார்கள்.

சிவாஜி போன இடங்களிலெல்லாம் அனைவரும் கேட்ட கேள்விகள், உங்களுடைய சொந்த வாழ்க்கையை நிருபர்கள் மோப்பம் பிடித்துவிடாமலிருக்கவும், சொந்த விஷயங்கள் வெளியே பேசப்படாமலிருக்கவும் என்ன உத்தியைக் கையாளுகிறீர்கள் என்பவைதான். எங்கள் நாட்டு சினிமா நிருபர்கள், நாங்கள் நடிக்கும் படத்தின் கதை, அதில் எங்களுடைய கதாபாத்திரம் ஆகியவற்றோடு நிறுத்திக்கொள்வார்கள் என்று பதிலளித்திருக்கிறார்.

உங்கள் திரைப்படங்களில் முத்தக் காட்சிகளுக்கு அனுமதி இல்லையாமே, ஆணும் பெண்ணும் அன்பாக இருப்பதைக் காட்ட என்ன செய்வீர்கள் என்று கேட்டுள்ளனர். லேசாகக் கட்டி அணைப்பதன் மூலமும் கைகளைப் பற்றுவதன் மூலமுமே காதலையும் உணர்ச்சிகளையும் வெளிப்படுத்துவோம், அதுவே போதுமானது என்றார். ஆனால், இந்தப் பதில் அமெரிக்கர்களுக்குத் திருப்தி தரவில்லை. அழுத்தமாக ஒரு முத்தம் தருவதைப் போல இதுவெல்லாம் வருமா என்று கேட்டுள்ளனர். இன்னும் சிலர், இந்தியர்கள் பாவம், எல்லா உணர்ச்சிகளையும் அடக்கிக் கொள்பவர்கள்போல இருக்கிறது என்று ஆதங்கப்பட்டுள்ளனர்.

ஹாலிவுட்டின் முன்னணி நடிகர்கள் பிரெடரிக் மார்ச், ஹென்றி ஃபோன்டா, ஷெல்லி விண்டர்ஸ், பர்ட் லங்காஸ்டர் ஆனாலும் சரி, புதிதாக நடிக்க வந்தவர்களானாலும் சரி, எல்லோருடனும் உற்சாகமாகவும் கண்ணியமாகவும் பேசியிருக்கிறார் சிவாஜி.

தொலைக்காட்சியில் நடிக்க வரும் பயிற்சியற்ற கலைஞர்களுக்கான பயிற்சிப் பள்ளிக்கும் சென்றிருக்கிறார். சிறுசிறு வேடங்களை ஏற்று படிப்படியாக முன்னேறி மாபெரும் கலைஞனான அவரைச் சக கலைஞர்கள் மரியாதையோடும் பிரமிப்போடும் பார்த்தார்கள்.

அவர்களுடைய நாடக அரங்க அமைப்புகளையும் காட்சி ஜோடனைகளையும் காட்சிகளை மாற்றும் உத்தியையும் கருவிகளையும் கண்டு வியந்தார் சிவாஜி. ரேடியோ சிட்டி மியூஸிக் ஹால் என்ற அந்த அரங்கத்தைப் போல இந்தியாவிலும் நிறைய உருவாக வேண்டும் என்ற ஆசையை சிவாஜி உரக்க வெளிப்படுத்தினார்.

இந்தியத் திரைப்படங்கள் அமெரிக்காவில் ஓடாது என்று ஒரு விநியோகஸ்தர் கூறியபோது, அதை வன்மையாக மறுத்தார் சிவாஜி. சத்யஜித் ராய் படம் விதிவிலக்கு என்றார் ஒரு அமெரிக்கர். நீங்கள்கூட சத்யஜித் ராய் படத்தில் நடித்ததால்தானே புகழ்பெற்றீர்கள் என்றுகூட ஒருவர் கேட்டார். கேள்வி கேட்டவர்களின் அறியாமையை சிவாஜி பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.

பெருமிதத்தோடு வழியனுப்பிய சென்னை

அமெரிக்க அரசின் அழைப்பின்பேரில், இந்தியாவின் நல்லெண்ணத் தூதராக பிரிட்டன், ஐரோப்பா, அமெரிக்கா, ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு 1962-ல் இரண்டு மாத சுற்றுப் பயணம் மேற்கொண்டார் சிவாஜி. மீனம்பாக்கம் விமான நிலையத்திலிருந்து தனி விமானத்தில் பம்பாய் சென்று, அங்கிருந்து அமெரிக்கா சென்ற அவரை வழியனுப்ப வந்தவர்களின் எண்ணிக்கையும் உற்சாகமும் சென்னை மாநகரம் அதுவரை கண்டிராதது.

இந்தியாவைச் சேர்ந்த ஒரு திரைப்பட நடிகரை அமெரிக்க அரசு கெளரவித்திருப்பது அதுவே முதல் முறை. சாதாரண சுற்றுலாப் பயணி அல்ல; முக்கிய அரசு விருந்தினர் என்ற அந்தஸ்து அவருக்கு. திறந்த ஜீப்பில் சென்னை விமான நிலையத்தைச் சுற்றிவந்த சிவாஜி, தன்னுடைய ரசிகர்களின் வாழ்த்துகளையும் ஆசிகளையும் அன்போடு தலைவணங்கி ஏற்றார்.

புறப்படுவதற்கு 14 நாட்களுக்கு முன்பாகத் தினமும் ஒரு பாராட்டுக் கூட்டம், வழியனுப்பு விழா என்று 34 வயது சிவாஜியை அயரவைத்தனர் பல்வேறு திரையுலக நண்பர்களும் சங்க நிர்வாகிகளும். வருவதற்கு இரண்டு மாதங்களாகும் என்பதால், கையில் இருக்கும் திரைப்படங்களை முடித்துக்கொடுக்க அன்றாடம் 18 மணி நேரம் இடைவிடாமல் உழைத்தார் சிவாஜி. உரிய நேரத்துக்குச் சாப்பாடு, தூக்கம் இல்லாமல் செயல்பட்டதால் வழியனுப்பு நிகழ்ச்சிகளில்கூடக் களைப்போடுதான் காணப்பட்டார். அவசரமான இந்த நேரத்திலும் அவர் வேகமாக நடித்துக்கொடுத்ததுதான் மூன்று வேடப் படமான ‘பலே பாண்டியா’.

இந்த விழாக்களிலேயே முக்கியத்துவம் வாய்ந்தது சர்வதேசத் திரைப்படச் சங்கம் அளித்த வரவேற்பு நிகழ்ச்சி. அமெரிக்கத் துணைத் தூதரகத்தின் அதிகாரி டாக்டர் தாமஸ் டபுள்யு. சைமன்ஸ் தலைமை வகித்தார். நகரின் தனி அடையாளமான மவுன்ட் ரோடு 14 மாடி எல்ஐசி கட்டிடத்தின் புல்தரையில் நிகழ்ச்சி நடந்தது. இந்திய, அமெரிக்கக் கொடிகள் மட்டுமல்லாது பல்வேறு நாடுகளின் தேசியக் கொடிகளும் அந்த இடத்தை அலங்கரித்தன. சிவாஜி கணேசன் இந்தியாவுக்கு மட்டுமே உரியவரல்ல, ‘உலக நாயகன்’ என்று மறைமுகமாகச் சுட்டிக்காட்டின கொடிகள்.

இந்திய, அமெரிக்கத் திரைப்பட நடிகர்கள் பரஸ்பரம் இரு நாடுகளையும் சென்று பார்ப்பதன் மூலம் இரு நாட்டு மக்களிடையே புரிதல்களும் அன்பும் பெருகவும், உறவு வலுப்படவும் உதவும் என்று தூதர் தாமஸ் சைமன்ஸ் சுட்டிக்காட்டினார். சர்வதேசத் திரைப்பட சங்கத்தின் ஹாலிவுட் கிளை நிர்வாகிகள் முதல் முறையாக இந்தியத் திரைப்பட நடிகர் ஒருவரைக் கௌரவிப்பதைப் பூரிப்புடன் அவர் கூறினார். நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கிய தென்னிந்திய திரைப்பட வர்த்தகசபைத் தலைவர் ஏ.எல்.சீனிவாசன், சிவாஜியை வழியனுப்பும் நிகழ்ச்சியில் சர்வதேசத் திரைப்பட சங்கத் தொடக்கமும் அமைவது மிகவும் பொருத்தமானது என்றார்.

சர்வதேசத் திரைப்பட சங்கப் புரவலரும் எல்ஐசி மண்டல மேலாளருமான எச்.பலராம் ராவ், நடிகர் ஜெமினி கணேசன் ஆகியோர் வரவேற்றுப் பேசினர். நடிகை சவுகார் ஜானகி நன்றி கூறினார். எம்.எல்.வசந்தகுமாரியின் இறைவணக்கப் பாடலுடன் நிகழ்ச்சி தொடங்கியது. ‘ஃபாலோ தி சன்’ என்ற பயணக் கதைப் படத் திரையிடலுடன் நிகழ்ச்சி நிறைவுற்றது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x