Published : 28 Nov 2018 10:53 AM
Last Updated : 28 Nov 2018 10:53 AM

ஆய்வு நேர்மையும் வாழ்வு நேர்மையும் வேறுவேறல்ல!

ஐராவதம் மகாதேவன் தமிழுக்குத் தந்த மிகச் சிறந்த கொடை அவருடைய ஆய்வு நூல் - Early Tamil Epigraphy: From the Earliest Times to the Sixth Century AD. கிட்டத்தட்ட நாற்பதாண்டு உழைப்பில் உருவானது இது. 1966-லேயே மகாதேவன் தமிழ் பிராமிக் கல்வெட்டுகளைப் பற்றி கள ஆய்வு மேற்கொண்டு கல்வெட்டுகளின் திரட்டு ஒன்றை 1968-ல் வெளியிட்டிருந்தார்.

பின் வந்த காலத்தில் புதிய கல்வெட்டுகள், மட்பாண்டத்தில் பொறிக்கப்பட்ட எழுத்துகள் ஆய்வு உலகத்துக்குத் தெரியவந்ததும், மீண்டும் ஒரு விரிவான கள ஆய்வை 1990-களில் மேற்கொண்டு, குகைகுகையாகப் போய், கல்வெட்டுகளை அவற்றின் அமைவிடத்திலேயே ‘படித்து’ விரிவான ஆய்வுக்கு உட்படுத்தி, பதினைந்து ஆண்டுகள் கையெழுத்துப் பிரதியை உருவாக்கச் செலவிட்டு எழுதிய நூல் அது.

இந்த ஆய்வை ‘க்ரியா’ வெளியிட்டது அதன் பேறு. நூலை அச்சுக்குத் தயார்செய்யக் கிட்டத்தட்ட ஒரு ஆண்டுக்கும் மேலாக மகாதேவனுடன் இணைந்து வேலை செய்ய எனக்குக் கிடைத்த வாய்ப்பு மிகவும் அரியது; அவருடன் இருக்கும் ஒவ்வொரு மணி நேரமும் நீங்கள் கற்றுக்கொண்டே இருப்பீர்கள் என்பது என் அனுபவம்.

மகாதேவனின் வேகத்துக்கு ஈடுகொடுப்பது நம்மை நாமே மேம்படுத்திக்கொள்வது. அவருடைய உழைப்பு அசாத்தியமானது. ஆறு மாத காலம் தினமும் மூன்று மணி நேரம் கையெழுத்துப் பிரதியை வரிவரியாகப் படிப்போம். நாம் கேட்கும் கேள்விகளைக் கவனத்துடன் கேட்பார்; பொறுமையாகப் பதில் சொல்வார். மாற்றுக் கருத்துகளைக் கவனத்துடன் பரிசீலிப்பார். ஏற்கத் தகுந்தவற்றைத் தயக்கமில்லாமல் ஏற்றுக்கொள்வார். எனக்கும் அவருக்கும் இடையே நிறைய வாக்குவாதம் நிகழும். “நீ சொல்வது ஒவ்வொன்றைப் பற்றியும் கவனமாக யோசிக்கிறேன், அதனால் நான் எப்போதும் உன்னுடன் முரண்படுகிறேன் என்று நினைக்காதே” என்பார்.

அவருடைய புலமை ஒழுக்கம் மிக அரியது. தான் எழுதும் ஒவ்வொரு வாக்கியத்துக்கும் தான் பொறுப்பேற்க வேண்டும் என்பது அவர் கொள்கை. அதேமாதிரி, அவர் தரும் ஒவ்வொரு தகவலும் சரியாக இருக்க வேண்டும் என்பதில் அவர் பெரும் அக்கறை கொண்டிருந்தார்.

நேரம் தவறாமை அவருக்கு மிக முக்கியம். ‘பத்து மணிக்கு வருகிறேன்’ என்று நான் சொல்லியிருந்தால், 9.55-க்கே தயாராக இருப்பார். பிறரும் தன்னைப் போல நேரம் தவறாமையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பார். வாக்குத் தவறாமையும் அவருடைய உயர்ந்த பண்புகளில் ஒன்று. இந்தப் புத்தகம் பதிப்பிக்கப்பட்ட கதையையே உதாரணமாகச் சொல்லலாம்.

இந்த நூலை அவர் எழுதிக்கொண்டிருந்தார் என்பதைக் கேள்விப்பட்டு, 2000-ம் ஆண்டு அவரை அணுகி, க்ரியா இந்த ஆய்வை வெளியிட விரும்புவதைத் தெரிவித்தேன். க்ரியா வெளியிட்டால் மகிழ்ச்சி அடைவேன் என்று சொல்லி, அவரும் தன் ஒப்புதலைத் தந்தார். அப்போது அவர் நூலின் சில இயல்களை மட்டுமே எழுதியிருந்தார்.

இதனிடையே க்ரியா இந்நூலை வெளியிடப்போகிறது என்று கேள்விப்பட்ட ஹார்வர்டு பல்கலைக்கழகப் பேராசிரியர் மைக்கேல் விட்சல், அவர் அப்போது பதிப்பித்துக்கொண்டிருக்கும் ‘ஹார்வர்டு கீழை நூல்கள் வரிசை’யில் (Harvard Oriental Series) வெளியிட மகாதேவனிடம் இந்நூலைக் கேட்டார்.

ஹார்வர்டு கீழை நூல்கள் வரிசையில் ஒரு அறிஞரின் நூல் வெளியிடப்படுவது அறிவுலகில் மிக உயரிய கௌரவங்களில் ஒன்றாகக் கருதப்படுவது. முழுமை அடையாத ஒரு கையெழுத்துப் பிரதியைப் பார்வையிடாமல்கூட ஹார்வர்டு தன்னுடைய புகழ்மிக்க கீழை நூல்கள் வரிசையில் வெளியிட முன்வந்தது, உலக அறிஞர்களிடையே மகாதேவனின் புலமைக்கு எவ்வளவு மதிப்பிருந்தது என்பதை நமக்குச் சொல்லிவிடக்கூடியது.

இது மகாதேவனை ஒரு இக்கட்டில் சிக்கவைத்தது. அவர் சொன்னார்: ‘‘ஹார்வர்டு வெளியிடுவது எனக்குக் கிடைக்கும் பெரிய கௌரவம்; ஆனால், அப்படி அவர்கள் அழைப்பை நான் ஏற்றால் அது உனக்கு நான் கொடுத்த வாக்கை மீறுவதாகும்.”

அவர் சங்கடம் எனக்குப் புரிந்தது. நான் சொன்னேன்: “நிச்சயம் அது உங்களுக்குக் கிடைக்கும் பெரிய கௌரவம்தான். நீங்கள் ஹார்வர்டு வாய்ப்பை ஏற்றுக்கொண்டால் நானும் மகிழ்வேன். ஆனால், சில விஷயங்களை நீங்கள் பரிசீலிக்க வேண்டும். முதலாவதாக, ஹார்வர்டு ஒரு நூலை வெளியிட்டால் அதன் காப்புரிமை ஹார்வர்டுக்குப் போய்விடும்; இந்த நூல் - இந்த அறிவுப் புதையல் தமிழ் மண்ணுக்குச் சொந்தமானது. நீங்கள் இதை மறுஅச்சு செய்ய நினைத்தால் ஹார்வர்டின் அனுமதி பெற வேண்டும் என்ற நிலை சரியல்ல; காப்புரிமையை நீங்கள் வைத்திருப்பதுதான் உசிதமானது. இரண்டாவதாக, இந்தப் புத்தகம் அச்சாகும்போது நீங்கள் அதை மேற்பார்வையிட வேண்டும் என்பது முக்கியம். ஏனென்றால், ஒரு கல்வெட்டு தலைகீழாக அச்சிடப்படலாம்; இந்தப் புத்தகம் மற்ற புத்தகங்களைப் போல் இல்லை. ஹார்வர்டில் அச்சானால் இது சாத்தியமா?”

இதை மகாதேவன் ஆமோதித்தார். மறுநாள் என்னிடம் சொன்னார். “நீ சொன்னது ரொம்பச் சரி. இதை ஹார்வர்டுக்கும் தெரிவித்துவிட்டேன். இப்போது க்ரியாவுடன் இணைந்து நூலை வெளியிட ஹார்வர்டு விரும்புகிறது. நீ என்ன சொல்கிறாய்?” நான் சொன்னேன், “எனக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை. ஆனால், சில விஷயங்களை அவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். கையெழுத்துப் பிரதியை நீங்களும் நானும் இங்கேதான் இறுதிசெய்வோம். அதில் நாம் இந்தியப் பதிப்புத் துறையில் பின்பற்றும் பிரிட்டிஷ் ஸ்பெல்லிங்கைத்தான் பின்பற்றுவோம், அமெரிக்க ஸ்பெல்லிங் அல்ல. அவர்கள் கையெழுத்துப் பிரதியில் எந்த மாற்றமும் செய்யக் கூடாது. அடுத்து, முகப்புப் பக்கத்தில் க்ரியாவின் பெயர்தான் முதலில் இடம்பெற வேண்டும், ஹார்வர்டு பெயர் அல்ல.”

இவை நியாயமானவை என்று மகாதேவன் கருதினார். அதைப் பேராசிரியர் விட்சலுக்கும் தெரிவித்தார். அவர்களும் இதை ஏற்றுக்கொண்டார்கள்.

மகாதேவனின் ஆய்வு நேர்மை என்பது வாழ்வு நேர்மையோடும் பிணைந்தது!

- ‘க்ரியா’ எஸ்.ராமகிருஷ்ணன், அகராதியியலாளர், ‘க்ரியா’ பதிப்பகத்தின் நிறுவனர், ஐராவதம் மகாதேவனின் ‘எர்லி தமிழ் எபிகிராபி’ நூல் பதிப்பித்தலில் அவருடன் இணைந்து பணியாற்றியவர்.

தொடர்புக்கு: crea@crea.in

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x