Last Updated : 13 Nov, 2018 09:56 AM

 

Published : 13 Nov 2018 09:56 AM
Last Updated : 13 Nov 2018 09:56 AM

உள்நாட்டுப் புலம்பெயர்வின் துயர முகம்

குஜராத்தில், செப்டம்பர் மாதம், 14 மாதப் பெண் குழந்தை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளான கொடூர சம்பவத்தைத் தொடர்ந்து, வெளி மாநிலத் தொழிலாளர்களுக்கு எதிராக நடந்த வன்முறைகள் புலம்பெயர் தொழிலாளர்கள் தொடர்பான விவாதங்களை எழுப்பின. அந்தப் பிரச்சினை தற்போது சற்றே ஓய்ந்திருந்தாலும், இது தொடர்பாகப் பேச வேண்டிய விஷயங்கள் இன்னும் இருக்கின்றன.

குஜராத்தின் உற்பத்தியில் அண்டை மாநிலத் தொழிலாளர்களின் பங்கு கணிசமானது. குஜராத்தின் கட்டுமானத்திலும் கனரகத் தொழிற்சாலைகளிலும் ஜவுளி ஆலைகளிலும் வைரப் பட்டறைகளிலும் அயல் மாநில வியர்வை படிந்திருக்கிறது. இந்தத் தொழிலாளர்கள் இந்தி பேசுபவர்கள். மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம், பிஹார், ராஜஸ்தான் முதலான மாநிலங்களிலிருந்து பிழைப்புத் தேடி வந்தவர்கள்.

குஜராத் முதலாளிகள் அயல் மாநிலத் தொழிலாளர்களை விரும்புகின்றனர். அவர்களுக்கு ஊதியத்தைக் குறைத்துக் கொடுக்கலாம். கிடைத்த இடங்களில் தங்கிக்கொள்வார்கள். மருத்துவம், சுகாதாரம், பிள்ளைகளின் கல்வி என்று எந்தக் கோரிக்கையும் அவர்களுக்கில்லை. இவர்களால் தங்கள் வேலைவாய்ப்பு பறிபோவதாகக் குஜராத்திகள் கருதினர். அது வெறுப்பாகக் கனன்றுகொண்டிருந்தது. அப்போதுதான் இந்தப் பாலியல் குற்றம் நிகழ்ந்தது. அது பற்றிக்கொண்டது.

தமிழர்களின் இடத்தில் வட இந்தியர்கள்

பிழைப்புக்காக அயல் மாநிலங்களுக்குப் புலம்பெயர்வது இந்தியாவில் நீண்டகாலமாக நடந்துவருவதுதான். நான் எண்பதுகளில் எர்ணாகுளத்தில் வேலைபார்த்தேன். அப்போது கட்டுமானத் துறையில் திறன் குறைந்த பணிகளைத் தமிழர்கள் செய்துவந்தனர். பலரும் தேனி, உசிலம்பட்டி பகுதிகளைச் சேர்ந்தவர்கள். அவர்களுக்கு முறையான ஊதியம் கிடைத்தது. அங்குள்ள தொழிற்சங்கங்கள் அதை உறுதிசெய்தன. ஆனால், அவர்களது வாழ்நிலை அத்தனை திருப்திகரமாக இருந்ததாகச் சொல்ல முடியாது. அவர்கள் வாத்துருத்தி என்கிற பகுதியில் செறிவாக வசித்தனர். மறை தட்டிகளாலும் சாக்குப் படுதாக்களாலும் உருவாக்கப்பட்ட, ஒற்றை அறைக் குடியிருப்புகளில் ஒதுங்கிக் கொள்வார்கள். சுகாதாரக் குறைவைப் பொருட்படுத்த மாட்டார்கள். பிள்ளைகளை ஊரிலேயே விட்டுவிடுவார்கள்.

இரண்டாண்டுகளுக்கு முன்னால் நண்பர்களைச் சந்திக்க எர்ணாகுளம் போயிருந்தேன். இப்போது தமிழர்களின் இடத்தில் வட இந்தியத் தொழிலாளர்கள் இருந்தனர். ஊர் திரும்பியபோது கண்ட காட்சியை மறக்க முடியாது. அது தீபாவளி நேரம். நான் எனது ரயிலுக்காகக் காத்திருந்தேன். எனது ரயிலுக்கு முன்பாக விசாகப்பட்டினம், புவனேஸ்வரம், கொல்கத்தா வழியாக கெளகாத்தி செல்லும் விரைவு ரயில் வந்தது. முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளில் பயணிகள் நெருக்கியடித்து ஏறினார்கள். படிகளிலும் ஜன்னல்களிலும் தொற்றிக்கொண்டார்கள். இவர்கள் ஒடிஷா, வங்கம், பிஹார், அசாம் முதலான மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள். இந்தத் தொழிலாளர்கள் ஊர் போய்ச் சேர இரண்டு நாட்கள் ஆகும்!

வழியனுப்ப வந்த நண்பர்களிடம், “எர்ணாகுளத்தில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் எத்தனை பேர் இருப்பார்கள்?” என்று கேட்டேன். அவர்களுக்குத் தெரியவில்லை. அதற்காக அவர்களைக் குறைசொல்லிவிட முடியாது. இப்படியொரு கேள்வி கடந்த மாதம் குஜராத்தில் சமூக ஆர்வலர்களால் எழுப்பப்பட்டது.                                2014-ல் தமிழகத்திலும் இப்படி ஒரு கேள்வி எழுந்தது. அப்போது மவுலிவாக்கம் கட்டிட விபத்தில் 61 தொழிலாளர்கள் பலியாகியிருந்தனர். பலரும் ஆந்திரத்தைச் சேர்ந்தவர்கள். புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் குறித்து யாரிடத்திலும் முறையான கணக்கில்லை.

சீனத் தொழிலாளர்களின் நிலை

உலகின் தொழிற்சாலை என்றழைக்கப்படும் சீனாவில், நகரங்கள்தோறும் தொழிற்சாலைகள் இயங்குகின்றன. இவற்றில் பணிபுரிபவர்களில் பெரும்பாலானோர் அயல் மாகாணங்களிலிருந்து புலம்பெயர்ந்தவர்கள். சீனக் குடிமக்களுக்கு அவர்களது ஊராட்சிகள் ‘ஹுக்கு’ எனப்படும் குடியுரிமை அட்டையை வழங்குகின்றன. இவை அந்தந்த ஊரில்தான் செல்லுபடியாகும். அரசு வழங்கும் கல்வி, மருத்துவம், வீட்டு வசதி முதலானவற்றைப் பெற ஹுக்கு அவசியம். ஒரு குடும்பத்தில் கணவனும் மனைவியும் வேலை நிமித்தம் நகரங்களுக்குப் புலம்பெயர்வார்கள். அவர்களுக்கு மட்டும் நகரங்களில் பணிபுரிய அனுமதி கிடைக்கும், ஆனால் நகர ஹுக்கு கிடைக்காது. பிள்ளைகள் தாத்தா - பாட்டியுடன் கிராமங்களிலேயே இருப்பார்கள். புலம்பெயர்ந்த கணவனும் மனைவியும் வெவ்வேறு தொழிற் சாலைகளில் பணியாற்றக்கூடும். அவர்கள் தொழிற்சாலையின் துயிற்கூடத்தில் (டார்மிட்டரி) தங்கிக்கொள்வார்கள். ஆண்டுக்கு ஒருமுறை பிப்ரவரி மாதம் வரும் சீனப் புத்தாண்டின்போது எல்லாத் தொழிற்சாலைகளையும் ஒரு மாதம் மூடிவிடுவார்கள். அப்போது எல்லோரும் தத்தமது கிராமங்களை நோக்கிப் பயணமாவார்கள். நீரில், சாலையில், ரயிலில் எங்கும் பயணமயமாக இருக்கும். அதற்கேற்பக் கூடுதல் வாகனங்கள் இயங்கும்.

புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் பிள்ளைகள் பெற்றோரைப் பிரிந்து வளர்வது சீனாவில் பல சமூகச் சிக்கல்களை உண்டாக்குகின்றன. என்றாலும், அவர்களுக்கு நகர ஹுக்கு வழங்க நகராட்சிகள் தயங்குகின்றன. கூடுதல் குடும்பங்களுக்கான உள்கட்டமைப்பையும், வீட்டு வசதி, மருத்துவமனை, கல்விச்சாலைகள் போன்றவற்றையும் ஏற்படுத்திவிட்டு, அதற்கேற்ப ஹுக்கு வழங்குவோம் என்கின்றன. அதற்கான இலக்குகளை நிர்ணயித்துக்கொண்டு முன்னேறவும் செய்கின்றன.

மாற்றம் எப்போது?

இந்தியாவின் நிலைமை இதற்கு நேர்மாறானது. இந்தியாவில் யாரும் எங்கு வேண்டுமானாலும் செல்லலாம். வேலை தேடிக்கொள்ளலாம். நடைபாதைகளில் தங்கிக்கொள்ளலாம். புலம்பெயர்ந்த ஊரில் அவமானங்களையும், சமயத்தில் அடி உதையையும் சகித்துக்கொள்ள வேண்டும். அதுவும் நாள்பட நாள்படப் பழகிவிடக்கூடும்.

இந்நிலை மாற வேண்டும். இந்தியாவின் மனித வளம் மேம்படுத்தப்பட வேண்டும். எல்லோருக்கும் பள்ளிக் கல்வி வழங்க வேண்டும். அது தொழிலாளர்கள் தம் தொழில்சார்ந்த நுணுக்கங்களைக் கற்றுக்கொள்ள உதவும். நிறுவனங்கள், புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் ஊதியத்தில் கைவைக்க அரசு அனுமதிக்கலாகாது. இது உள்ளூர் தொழிலாளர்களின் வேலைவாய்ப்பை உறுதிசெய்யும்; தேவையற்ற காழ்ப்புணர்வும் தவிர்க்கப்படும். புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் அடிப்படை வசதிகளைத் தொழில் நிறுவனங்களும் அரசும் உறுதிசெய்ய வேண்டும்.                                அவர்கள் தத்தமது ஊருக்குச் செல்லும்போது நெரிசலற்ற பயணம் சாத்தியமாக வேண்டும். புலம்பெயர்ந்து வாழும் தொழிலாளர்களைக் குறித்த முறையான கணக்கு அரசிடம் இருக்க வேண்டும். இவையெல்லாம் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் கண்ணியமான வாழ்வுக்கு வகை செய்யும். அவர்கள் உற்சாகமாகப் பணியாற்ற உதவும். தேசத்தின் உற்பத்தியும் பெருகும்!

- மு.இராமனாதன்,

ஹாங்காங்கின் பதிவுபெற்ற பொறியாளர்,

தொடர்புக்கு: muramanathan@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x