Last Updated : 29 Nov, 2018 09:37 AM

 

Published : 29 Nov 2018 09:37 AM
Last Updated : 29 Nov 2018 09:37 AM

மதம் பாகிஸ்தானை ஒற்றுமைப்படுத்தும் என்று சொன்னார்கள் அப்படி நடக்கவில்லை; மக்களைப் பிளக்கிறது! - ஃபர்சானா ஷேக் பேட்டி

“எதற்கு எதிராக இருக்கிறோம் என்று பாகிஸ்தானுக்குத் தெரியும். ஆனால், எதற்காக இருக்கிறோம் என்பதுதான் அதைத் தெளிவற்ற நிலையில் வைத்திருக்கிறது” என்கிறார் கராச்சியில் பிறந்து இன்று லண்டனில் வசிக்கும் வரலாற்றாசிரியர் ஃபர்சானா ஷேக். பாகிஸ்தானைப் புரிந்துகொள்ள ஒரு புத்தகத்தையும் (மேக்கிங் சென்ஸ் ஆஃப் பாகிஸ்தான்) அவர் எழுதியிருக்கிறார். அவருடன் ஓர் உரையாடல்.

பாகிஸ்தானில் நடப்பவற்றிலிருந்து எதைப் புரிந்துகொள்வது? மத நிந்தனை வழக்கில் தண்டனை அனுபவிக்கும் ஆசியா பீபியை உச்ச நீதிமன்றமே விடுதலை செய்தது; மதத் தீவிரவாதிகளுக்குப் பணிய மாட்டேன் என்று பிரதமர் இம்ரான் கானும் அறிவித்தார்; இறுதியில் அரசு பின்வாங்கி, மதத் தீவிரவாதிகளின் விருப்பப்படி ஒப்பந்தம் செய்துகொண்டுவிட்டதே?

எந்த விஷயத்திலும் முற்போக்காக, பிரமாதமாக அறிவிப்பது, நடைமுறை என்று வரும்போது அப்படியே பின்வாங்குவது என்று செயல்பட்டுக்கொண்டிருக்கிறார் பிரதமர் இம்ரான் கான்.

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் முழுதாகக் கைப்பற்றியதைப் போல பாகிஸ்தானும் மத அடிப்படைவாத நாடாகிறதா?

நான் அப்படி நினைக்கவில்லை. தலிபான் பாணி மதவாதிகள் அரசைக் கைப்பற்றும் வாய்ப்பு இல்லை. ஆப்கானிஸ்தான் அல்ல பாகிஸ்தான். தவிர, அதை ராணுவமும் அனுமதிக்காது, சர்வதேச சமூகமும் அனுமதிக்காது. ‘இழக்கப்பட முடியாத நாடு பாகிஸ்தான்’ என்ற கூற்றில் உண்மை இருக்கிறது. இதைத்தான் அதன் தலைவர்கள் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்கிறார்கள். வலிமையான பக்கத்து நாட்டை (இந்தியா) கொண்ட அணு ஆயுத நாடு பாகிஸ்தான். ஆப்கானிஸ்தானை மையமாக வைத்து மிகப் பெரிய வல்லரசுகள் அனைத்துமே பாகிஸ்தானுடன் உறவாடுகின்றன. பாகிஸ்தானுடன் அரசியல் செய்வதில் சில நாடுகளுக்கு எரிச்சல் இருப்பது உண்மைதான். அதற்காகத் தொடர்பை அவை துண்டித்துக்கொண்டுவிடாது. இப்படி அரசியல் நிலையற்றத்தன்மையிலேயே பாகிஸ்தான் நீடித்திருக்கும். பாகிஸ்தானின் கட்டமைப்பிலேயே இது அமைந்துவிட்டது. ராணுவத்துக்கும் அரசியல் சமூகங்களுக்கும் இடையில் ஒருபுறமும், இஸ்லாத்துக்கும் அரசுக்கும் இடையில் மற்றொருபுறமும் இடையறாத பதற்றம் நிலவிக்கொண்டே இருக்கிறது.

இருந்தாலும் ஒரு பெரிய முரண்பாடு தொடர்கிறது; எந்தத் தேர்தலிலும் மதக் கட்சிகள் பெரும்பான்மையைப் பெறுவதில்லை. சமீபத்தில் நடந்த தேர்தலையும் சேர்த்துத்தான் இல்லையா?

மதவாதக் கட்சிகள் அதிக தொகுதிகளில் வெற்றிபெறாவிட்டாலும் நாட்டின் செயல்திட்டங்களையே அவைதான் தீர்மானிக்கின்றன. இதற்குக் காரணம் பாகிஸ்தானின் தேசியக் கட்சிகளே மதவாதத்தை உள்வாங்கிக்கொண்டிருப்பதுதான். மதத் தீவிரவாதிகளின் நிலைக்கும் இக்கட்சிகளின் நிலைக்கும் அதிக வித்தியாசம் இல்லை. மதநிந்தனைச் சட்டம் தொடர்பாக அனைத்துக் கட்சிகளுமே அரசியல் குரலில்தான் பேசுகின்றன. மதவாதக் கட்சிகள் தீவிரமாகக் கருத்துகளை எடுத்துரைப்பதற்குப் பதிலாக மிதவாத அரசியல் கட்சிகளே அதைத் தீவிரமாகச் செய்துவிடுகின்றன.

மத அடிப்படையில் பிரிக்கப்பட்டதுதான் பாகிஸ்தானின் பிரச்சினைகளுக்கு மையமா?

நாடு அமைந்ததன் அடிப்படை ஒரு காரணம்; ஆனால், அந்நாட்டின் கலாச்சாரம்தான் முக்கியக் காரணம். அக்கலாச்சாரத்தைப் பகுத்தாய்ந்து புரிந்துகொள்ள முடியவில்லை. மிகப் பெரிய பகை நாட்டுக்குப் பக்கத்திலேயே இருக்க நேர்ந்ததால் அதன் மக்களுக்கும் ராணுவத்துக்கும் இடையில் எப்போதும் பதற்றம் இருக்கிறது. இந்தியாவால் தாக்கப்படக்கூடும் என்ற அச்சம் காரணமாகவே பாகிஸ்தானில் ராணுவத்துக்கு முக்கியத்துவம் அதிகமாகிவிட்டது. இஸ்ரேலிலும் இதே நிலைதானே, அங்கே இப்படி இல்லையே என்று நீங்கள் கேட்கலாம். இஸ்ரேலின் முதல் பிரதமர் டேவிட் பென்குரியன் காலத்திலிருந்தே அந்நாடு மதச்சார்பின்மை கொள்கையை ஏற்றுக்கொண்டது. நாட்டின் குடிமக்களுக்குத்தான் முதலிடம் என்ற கருத்தும் அங்கே வலுவாக இருக்கிறது. பாகிஸ்தானில் அப்படியல்ல.

மேலும், அரசியல் செய்வதுடன் இல்லாமல் பொருளாதார ரீதியாக வளங்களையும் ஏற்படுத்திக்கொண்டுள்ள ராணுவம், ஏராளமான சொத்துகள் உள்ள பெருந் தொழில் நிறுவனமாகிவிட்டது. அதேசமயம், ராணுவ ஆட்சி நடந்த பிற நாடுகளைப் போல அல்லாமல் ராணுவம் என்ற அமைப்பே ஆட்சியில் ஒரு நிலைத்தன்மையை வழங்குவதாக இங்கே இருப்பது கவனிக்க வேண்டியது. சர்வாதிகாரியாக ஆகும் ராணுவத் தலைமைத் தளபதி எவ்வளவு அதிகாரங்கள் தனக்கு இருந்தாலும் ஒரு குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு இன்னொரு ராணுவத் தளபதியிடம் பொறுப்பை ஒப்படைத்துவிடுகிறார். இதை எப்படிப் புரிந்துகொள்வது? ஜெனரல் பர்வீஸ் முஷாரஃப், ஜெனரல் அஷ்ஃபக் கயானி, ஜெனரல் ரஹீல் ஷெரீஃப் என்று எல்லோருமே தங்கள் பொறுப்பை அடுத்தவர்களிடம் ஒப்படைப்பவர்களாகவே இருக்கின்றனர்.

முஷாரஃப் அதில் சற்றுத் தடுமாறினார் என்பது உண்மை. ஒவ்வொரு முறை புதியவர் ராணுவத்தின் தலைமைத் தளபதியாக மாறும்போதும், ‘இவர் வித்தியாசமானவராக இருப்பார், ஜனநாயகத்துக்கு அதிக முக்கியத்துவம் தருவார், சமாதானத்தை ஏற்படுத்துவார்’ என்றெல்லாம் எதிர்பார்ப்புகள் எழுகின்றன. ராணுவத்தின் தலைமை தளபதியைவிட ராணுவம் என்ற கட்டமைப்பு வலுவானது. அதையே மாற்றியமைக்க முயன்ற முஷாரப்பை அந்த அமைப்பே ஓங்கி அறைந்து வழிக்குக் கொண்டுவந்தது.

ராணுவத்தின் வெவ்வேறு பிரிவு தலைவர்களின் ஒற்றுமையும் ஒருங்கிணைப்பும் கருத்தைக் கவரும் வகையில் இருக்கின்றன. ராணுவத்தின் முக்கியத்துவத்தைக் குறைத்து மதிப்பிடக் கூடாது. பாகிஸ்தான் ராணுவம் ‘வாழைத்தோட்ட குடியரசு’ நாடுகளுடையதைப் போல அற்பமானது அல்ல. ராணுவத்தில் இருந்தாலும் அரசியலைக் கற்றுத் துறைபோகிய தளபதிகளின் நுட்பமானக் கைத்திறன்களால் வளர்க்கப்பட்டது இந்த அமைப்பு.

உங்களுடைய புத்தகத்தில், இந்தியாவுடனான உறவைவிட அதன் வெளியுறவுக் கொள்கையில் மையமானது வேறு ஒன்றும் இல்லை என்று எழுதியிருக்கிறீர்கள்; கடந்த பத்தாண்டுகளாக இரு நாடுகளுக்கும் இடையில் பயன்தரும் வகையில் பேச்சுகளே நடக்கவில்லை. பயங்கரவாதம் தொடர்பாக இந்தியா படும் கவலைக்கு முக்கியத்துவம் தர வேண்டும் என்று கூற அந்நாட்டு ராணுவத்தில் யாராவது இருக்கிறார்களா?

பத்தாண்டுகளாகப் பலனுள்ள பேச்சு நடக்கவில்லை என்பது இதுவரை இருந்திராத நிலை. இது மாறும் என்று எனக்குத் தோன்றவில்லை. பேச முடியாத நிலையில் இரு நாடுகளும் இருக்கின்றன. கடந்த கால அனுபவங்கள், ஒரு நாடு சொல்வதை இன்னொரு நாடு நிராகரிப்பது, உள்நாட்டு அரசியலின் பாதிப்பு, அடுத்தடுத்து வரும் தேர்தல்கள் என்று முட்டுக்கட்டைக்குப் பல காரணங்கள். காஷ்மீர் பிரச்சினைக்கு மூன்றாவது நாட்டின் மத்தியஸ்தத்தை ஏற்றால் என்ன என்று பலரும் கேட்கின்றனர். காஷ்மீர் பிரச்சினை என்பது இரு நாடுகளுக்கும் இடையிலான எல்லைப் பிரச்சினை மட்டும் அல்ல; இரு நாடுகளின் அடையாளப் பிரச்சினையே காஷ்மீர்தான். மதச்சார்பற்ற தன்மையைப் பறைசாற்ற காஷ்மீர் தனக்கு அவசியம் என்று இந்தியா கருதுகிறது. பிரதமர் மோடியும் ஆர்எஸ்எஸ்ஸும் எதைக் கூறினாலும் இந்தியாவின் மதச்சார்பற்ற அரசியல் சட்டம் இந்து, முஸ்லிம், பவுத்தர் என்று அனைவருக்கும் பொதுவானதாக இருக்கிறது. இந்தியாவின் அனைத்துப் பகுதி முஸ்லிம்களுக்கான நாடுதான் பாகிஸ்தான்; எனவே, காஷ்மீர் இல்லாத பாகிஸ்தான், பூர்த்தி அடையாத பிரதேசம் - பிரிவினைக்கே அர்த்தமில்லை என்று நினைக்கிறது.

பாகிஸ்தானின் தந்தை முகம்மது அலி ஜின்னா, காஷ்மீரத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கவில்லை, அது தானாகவே பாகிஸ்தானுடன் சேர்ந்துவிடும் என்று நம்பினார். அவருடைய கவனமெல்லாம் பஞ்சாப், வங்காளம் ஆகியவற்றின் எல்லைகள் மீதுதான் இருந்தது. அத்துடன் சிந்து, பஷ்டூன் பகுதிகளில் இருந்தவர்கள் பாகிஸ்தானுடன் தங்கள் பகுதி சேர்க்கப்பட்டதற்கு அதிருப்தி தெரிவித்ததால் அதைக் கவனிக்க வேண்டிய நிலையிலும் இருந்தார். எதற்கு இதையெல்லாம் சுட்டிக்காட்டுகிறேன் என்றால் மூன்றாவது தரப்பு தலையிட்டால்கூட இந்தப் பிரச்சினை தீராது என்றே நினைக்கிறேன்.

பாகிஸ்தானியர்கள் இந்தியா வர எளிதாக விசா தர வேண்டும் என்ற கட்டுரையை ஆர்வமுடன் படித்தேன். அதன் பிறகு பாகிஸ்தானியர்களிலேயே ஒரு பிரிவினர், இந்தியாவைப் பற்றிய அறியாமையால் பாகிஸ்தானில் பரப்பப்படும் தவறான செய்திகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பார்கள், அதேபோல, இந்தியர்களும் பாகிஸ்தான வர எளிதாக விசா தந்தால் இந்தியர்களுக்கும் பாகிஸ்தானியர்களின் உள்ளம் புரியும் என்றது அக்கட்டுரை. ஆனால், இரு அரசுகளின் நிலையிலும் அப்படியொரு மாற்றம் வரும் என்று தோன்றவில்லை. ஆப்கானிஸ்தான் கோணமும் இப்பிரச்சினையில் இருக்கிறது. இதிலும் பாகிஸ்தான் விட்டுக்கொடுக்காது. டிரம்ப் எச்சரித்தாலும் ரஷ்யா, சீனா தலையிட்டாலும் ஆப்கானிஸ்தான் பிரச்சினையின் மூல வேர் என்பது இந்தியா, பாகிஸ்தான் இடையிலான மோதல்தான். மற்றவையெல்லாம் துணைக் காட்சிகள்தான்.

பயங்கரவாதத்துக்குத் துணைபோகக் கூடாது என்ற உணர்வை பாகிஸ்தானுக்கு ஊட்ட முடியாதா?

இதற்கு ஒரேயொரு சூத்திரம் என்று எதுவும் கிடையாது. பாகிஸ்தானை ‘பாதுகாப்பான நாடு’ என்பார்கள். அங்கே ராணுவ ஆதிக்கம்தான். ‘பாதுகாப்பு குறைவான நாடு’ என்றே நான் அழைப்பேன். தனக்கு என்ன நேரும், எப்படி நேரும் என்று தெரியாத நாடு பாகிஸ்தான். ‘யாருக்கு எதிராக இருக்கிறோம்’ என்று பாகிஸ்தானுக்குத் தெரியும் ‘அது இந்தியா’. ‘எதற்காக இருக்கிறோம்’ என்பதில் அதற்குத் தெளிவில்லை. ‘தேசமற்ற தேசியவாதம்’ என்பது பாகிஸ்தானின் எதிர்மறை அடையாளமாக இருக்கிறது. மதம் ஒற்றுமைப்படுத்தும் என்று பாகிஸ்தானியர்கள் நம்பவைக்கப்பட்டனர். ஆனால், அப்படி நடக்க வில்லை. பாகிஸ்தானில் பிளவுக்கு அதுவே மூலமாக இருக்கிறது.

‘தி இந்து’ ஆங்கிலம், தமிழில்: சாரி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x