Last Updated : 29 Aug, 2018 09:38 AM

 

Published : 29 Aug 2018 09:38 AM
Last Updated : 29 Aug 2018 09:38 AM

2 மினிட்ஸ் ஒன்லி 7

நான் ஏற்கெனவே சொன்ன ஒரு விஷயத்துல இருந்தே இந்த வாரத்தை தொடங்குவோம்.

உலகத்துல சக்சஸ்ஃபுல் மனிதர்களோட பட்டியலை சொல்லுங்கன்னா... பில்கேட்ஸ், அம்பானின்னு விரல் விட ஆரம்பிப்போம். இந்த மாதிரி எங்கேயோ இருக்கிறவர்களைப் பற்றி சொல்லாமல், கண் முன்னாடியே ஜெயித்தவர்கள் என் வாழ்க்கையை எப்படி மாற்றியிருக்கிறார்கள் என்பதை இங்கே சொல்லப் போறேன். அந்த மாதிரியானவங்க நல்ல மனிதர்கள், நல்ல பழக்கவழக்கம்னு மட்டுமே இல்லாமல் அவங்கக்கிட்டே இருந்து நிறைய ஐடியாக் களையும் எடுத்துக்க முடியும்.

இவங்க எல்லோரும் தன்னோட வெற் றிக்கு ஒரு ரூபாயை முதலீடு செய் துட்டு ரூ.10 ஆயிரம் எடுக்கணும்னு நினைக்கிற ஆளுங்க இல்லை. சாதார ணமாவே, நல்லா சம்பாதிக்க முடி யும்னு ஓடிட்டிருக்கிறவங்க. அதில் ஒருத் தர் சென்னை ராஜா அண்ணாமலைபுரம் அருகே இளநீர் விற்கிற ஓர் உழைப் பாளி. இவரைப் பற்றி நான் ரேடியோ வுல, மேடையில சொல்லியிருக்கேன்.

இது நடந்த நேரத்துல நான் தினமும் அடையார் வீட்டுல இருந்து ஆபீஸுக்கு பைக்ல போவேன். அந்த இளநீர் கடைக்காரர் தன்னோட கடைக்கு முன்னே செவ்விள நீர் ரூ.25-ன்னும், சாதா இளநீர் ரூ.20-னும் போர்டு வைத்திருந்தார்.

என்னடா இது? அடையார் பக்கம் எல்லாம் செவ்விள நீர் ரூ.70-ன்னும், சாதா இளநீர் ரூ.60 ன்னும், மற்ற சில இடங்கள்ல எல்லாம் செவ்விள நீர் ரூ.50-ன்னும், சாதா இளநீர் ரூ.40 ன் னும் விக்கிறாங்க. இவர்கிட்ட இருப்பது ஓல்டு ஸ்டாக் போலிருக்குன்னு அவரைக் கண்டுக்காம போய்ட்டேன். அப்படியே ரெண்டு, மூணு நாட்கள் ஓடுச்சு. தினமும் அந்த வழியாத்தானே ஆபீஸ் போகணும். ஒவ்வொரு நாளும் அந்த இளநீர் கடைக்கு வர்ற கூட்டம் அதிகரிச்சுக்கிட்டே இருந்தது. சரின்னு ஒருநாள் கிட்டபோய் ஒரு இளநீர் வாங்கி குடித்தேன். அப்படி ஒரு ஃப்ரெஷ்னெஸ். எப்படி இவரால மட்டும் இவ்ளோ ப்ரெஷ்ஷான இளநீரை கம்மியான விலைக்கு விற்க முடியுதுன்னு ஆச்சர்யம்.

‘‘அய்யா உங்களுக்கு எப்படி கட்டுப்படியாகுது?’ன்னு கேட்டேன்.

“தம்பி! இங்கே கடந்த 13 வருஷமா இளநீர் கடை போட்டிருக்கேன். முன்னாடி எல்லாம் ஒரு நாளைக்கு 100 இளநீர் விக்கிறதே பெரிய விஷயமா இருந்துச்சு. பெப்சி, கோக் வேண்டாம். இது நம்ம இந்திய பானம், இயற்கை பானம்னு கூவி பார்த்தேன். என்ன செய்தாலும் 100-க்கு மேல தாண்டவில்லை. ஒரு கட்டத்துல என்னோட லாபத்தைக் குறைக்கலாம்னு முடிவெடுத்து செவ்விள நீர் ரூ.25-க்கும், சாதா இளநீர் ரூ.20-ன் னும் போர்டு வைத்தேன். இப்போ ஒரு நாளைக்கு 500-ல இருந்து 600 காய்ங்க விக்குது’’ன்னு சொன்னார்.

அந்த நேரத்துல வசந்த் அண்ட் கோ ஓனராத்தான் அவர் எனக்கு தெரிந்தார். அன்றைக்கு போய் இந்தக் கதையை அப்படியே ரேடியோவுல சொன்னேன். எனக்கு ஒரு நிகழ்ச்சிக்கான கதையா அது தோணுச்சு. இளநீர் கடைகளில் இந்த மாதிரி போர்டுகளை நீங்களும் பார்த்திருக்க வாய்ப்பிருக்கு. ஆனா, யாருக்குமே அது எங்கே இருந்து ஆரம்பித்தது? எதனால ஆரம்பித்ததுன்னு தெரியாது.

நடிப்புன்னு இறங்கினதுக்குப் பிறகு ராயபுரம், அண்ணா நகர், திருவான்மியூர், வடபழனின்னு ஷூட்டிங் ஏரியாவுக்கும், மற்ற சில வேலையாவும் இப்போ எல்லாம் போகுற சூழல் அமைந்தது. அப்படி போகிற பல இடங்கள்ல இப்போ சாதாரணமாவே செவ்விள நீர் ரூ.25-க் கும், சாதா இளநீர் ரூ.20-ன்னும் போர்டு பார்க்க முடிகிறது.

ஒரு நாள் பார்க் செராட்டன் ஹோட்டல் பக்கமா போகும்போது அந்த பழைய இளநீர் கடைக்காரரைப் பார்த்தேன்.

அவரிடம் போய், “என்னாச்சுங்க. இப்போ இந்த ஏரியாவுல நிறையப் பேர் விலையைக் குறைச்சிட்டாங்க போல?” என்று கேட்டேன். அதுக்கு அவர், “நான் கம்மியா கொடுக்கிறதை தெரிஞ்சிக்கிட்டு சில இளநீர் கடைக்காரங்க எல்லாம் சண்டைக்கு வந்தாங்க. எனக்குக் கட்டுப்படியாகுது விக்கிறேன்னு சொன்னேன். அப்புறம் எதுவும் கேட்கலை. இப்போ சில ஏரியாவுல கம்மியா விக்கிறாங்கன்னு நானும் கேள்விப்பட்டேன் தம்பி!”ன்னு சொல்லிட்டு தொடர்ந்து எதுவும் பேசாமல் அவர் வேலையில மூழ்கிட்டார்.

அப்படியே அதை ரீ-கலெக்ட் பண்ணி, ’என்ன நடந்திருக்கும்?’னு யோசிக்க ஆரம்பித்தேன்.

ஒரு ஆள். அவர் ஷாரூக் கான் அல்ல. கார்ப்பரேஷன் கமிஷனர் அதிகாரியாக இருந்து, ‘இனி இளநீர் இவ்ளோதான்’ன்னு எந்த உத்தரவையும் போடல. சமூக வலைதளத்தில் 5 மில் லியன், 10 மில்லியன் ஃபாலோயர்களை வைத்திருப்பவரும் அல்ல; இப்படி ஓர் உழைப்பாளின்னு எந்த ஒரு செய்தி சேனல்லயும் வரல. நியூஸ் பேப்பர்லயும் பிரிண்ட் ஆகல. ஆனா, ஒரு மாற்றம் கண் முன்னே நடந்திருக்கு.

ஓர் ஆள் தன்னோட லாபத்தை குறைத்ததால் இந்த மாற்றம் நடந்திருக்கு. என்னோட வாழ்க்கையில மிகப் பெரிய திருப்புமுனையை உருவாக்கிய சம்பவமாகத்தான் இதைப் பார்க்கிறேன். நம்ம வேலை ரேடியோவுல பேசுறது. மேடையில பேசுறதுன்னு இருந்த எனக்கு, பெரும் விழிப்புணர்வை ஏற்படுத்தியது. அந்த விழிப்புணர்வுக்கான இன்ஸ்பிரேஷனாகத்தான் இளநீர் கடைக்காரரைப் பார்க்கிறேன்.

‘வலது கை கொடுத்தது. இடது கைக்கு தெரியக்கூடாது!’ - இது நம்ம ஊர்ல சில தலைமுறையா வழக்கத்துல இருக்குற ஒரு பழமொழி. ஆனா, வலது கை செய்தது; இடது கைக்குத் தெரியணும். அப்போதான் அதோடு இன்னும் 10 கைகள் சேரும். அந்த 10 கைகளைச் சேர்த்த செயலைத்தான் அந்த ஒரு இளநீர் கடைக்காரர் செய்தார். அடுத்து?

- நிமிடங்கள் ஓடும்...

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x