கடலை ஆக்கிரமிக்கும் ஞெகிழிக் குப்பை | சொல்... பொருள்... தெளிவு
2050க்குள் மீன்களைவிட அதிகமாக ஞெகிழியே கடலில் மிதக்கக்கூடும் அதிவேகமாக அதிகரித்துவரும் ஞெகிழி மாசு உலகளாவிய பெரும் சுற்றுச்சூழல் சிக்கலாக உருவெடுத்திருக்கிறது. சூழலியல் தொகுதிகள், நிலைத்த வளர்ச்சி, மனித இனத்தின் சமூகப் பொருளாதார ஆரோக்கியப் பரிமாணங்கள் என ஒட்டுமொத்தமாகப் பாதிக்கக்கூடிய தீவிரமான பிரச்சினை இது. பொருளாதாரச் சந்தைகளின் மோசமான வளர்ச்சியே ஞெகிழியின் மிதமிஞ்சிய பயன்பாட்டுக்கு முக்கியக் காரணம் என்கிறது பொருளாதார ஒத்துழைப்பு - மேம்பாட்டுக்கான அமைப்பின் ‘உலகளாவிய ஞெகிழிக் கண்ணோட்டம்’ அறிக்கை.
குப்பைக் கிடங்காகும் ஏழை நாடுகள்: கடந்த காலத்துடன் ஒப்பிடுகையில் 2000 - 2019 காலக்கட்டத்தில் ஞெகிழி உற்பத்தி இரட்டிப்பானது. இதற்கு இடைப்பட்ட காலத்தில் 46 கோடி டன் ஞெகிழிப் பொருள்கள் தயாரிக்கப்பட்ட நிலையில், அவற்றிலிருந்து வெளியேறிய கழிவின் அளவு மட்டும் 35.3 கோடி டன். ஞெகிழிப் பொருட்களில் மூன்றில் இரண்டு மடங்கு தயாரிக்கப்பட்ட ஐந்து ஆண்டுகளுக்குள் கழிவாகிவிடுபவை. பொருட்களைச் சேமித்துவைத்து விற்பனை செய்ய அல்லது விநியோகிப்பதற்கு ஏற்ப ‘பேக்கேஜிங்’ செய்வதில் மட்டும் 40% ஞெகிழிக் கழிவு வெளியேற்றப்படுகிறது.
