Last Updated : 19 Aug, 2014 09:37 AM

 

Published : 19 Aug 2014 09:37 AM
Last Updated : 19 Aug 2014 09:37 AM

உனுக்கு இன்னா பிரச்சன நைனா?

சென்னைத் தமிழ் வண்ண மயமானது. பல மொழிகளால் வளமூட்டப்பட்டது

சென்னையின் வழக்கமான காட்சிகளில் ஒன்றுதான் அது. கடுமையான போக்குவரத்து நெருக்கடி. பெரிய வாகனங்கள் முன்புறமும் எதிரிலும் வழியை அடைத்துக்கொண்டு நிற்கின்றன. இடது புறம் சிறிய இடைவெளி உள்ளது. அதன் வழியே சென்றால் முன்னேறிவிடலாம். உங்கள் முன்னால் இருப்பவரிடம் அதை விளக்கிச் சொல்ல முயற்சி செய்கிறீர்கள். அப்போது பின்னாலிருந்து ஒரு குரல்: “லெப்ட்ல வாங்க்கினு போ சார்”.

மெட்ராஸ் பாஷை எனச் சொல்லப்படும் சென்னைத் தமிழ் என்னும் சென்னை வட்டார வழக்கின் சிறப்புகளில் ஒன்று இந்தக் கச்சிதம். ‘கெலம்பு, காத்து வர்ட்டும்’ என்ற புகழ்பெற்ற தொடர் ஒன்று இதை மேலும் தெளிவாக்கும். எதிராளியிடம், “உன் பேச்சை நான் மதிக்கவில்லை; உன்னோடு பேசுவதால் நேரம்தான் வீணாகிறது; நீ இங்கே நிற்பதுகூடத் தொந்தரவாக இருக்கிறது; நீ நகர்ந்தால் குறைந்தபட்சம் எனக்குக் காற்றாவது வரும்” என்றெல்லாம் சொல்ல சில சமயம் நாம் விரும்பக்கூடும். ‘கெலம்பு, காத்து வர்ட்டும்' என்ற தொடர் இத்தனையையும் சிக்கனமாகச் சொல்லிவிடுகிறது.

தாராத்துட்டான்!

பீற்றிக்கொள்ளாதே, உணர்ச்சியை அதிகம் வெளியில் காட்டாதே, முழு உண்மையையும் வெளிப்படுத்திவிடாதே என்ற பொருள்களில் வழங்கிவரும் ‘அமுக்கி வாசி' என்னும் தொடர் இன்னொரு உதாரணம். இப்படி நிறையச் சொல்லலாம். தாராந்துட்டான், பூட்ட கேஸ், உடான்ஸு, மெர்சல், நாஸ்தி என சென்னைத் தமிழின் எந்தச் சொல் அல்லது தொடரை எடுத்துக்கொண்டாலும், சிக்கனம், உணர்ச்சியைக் கச்சிதமாக வெளிப்படுத்தும் பாங்கு, பிற மொழிகளைத் தகவமைத்துக்கொள்ளும் தன்மை எனப் பல சிறப்பம்சங்களை உணரலாம்.

கஸ்மாலம் என்ற சென்னைத் தமிழ் வசைச் சொல்லின் வேர்ச் சொல், வடமொழியில் உள்ள ‘கஸ்மலம்'. இதன் பொருள் அழுக்கு. ஜபூர்/ஜபுரு என்ற சொல்லின் வேர்ச் சொல் ஜபுர் என்னும் உருதுச் சொல். பொருள் ஜால வித்தை. அதே பொருளின் அங்கத வடிவில் ஜபுரு காட்டாதே என்று சென்னைத் தமிழில் வழங்கிவருகிறது. சென்னைத் தமிழ் பிற மொழிகளை எப்படி நுட்பமாக உள்வாங்கியிருக்கிறது என்பதை இதுபோன்ற சொற் களைக் கொண்டு புரிந்துகொள்ளலாம். பஜார், பேஜார், மஜா, கேடி, தௌலத், உல்ட்டா, உட்டாலக்கடி என உதாரணங்களை அடுக்கலாம்.

எதையாவது தொலைத்துவிட்டால் ‘தாராத்துட்டியா’ என்று சென்னைத் தமிழில் கேட்பார்கள். தன்னுடைய பொருளைத் தன்னுடையது அல்ல என்று முற்றாகத் துறந்து பிறருக்குத் தந்துவிடும் செயலே தாரை வார்த்தல். இந்தச் சொல்லின் பொருள் ஆழமாக உள்வாங்கப்பட்டுச் சற்றே அங்கதச் சுவையுடன் தாராத்துட்டியா எனத் தகவமைக்கப்பட்டிருக்கிறது.

பிற மொழிச் சொற்கள் சற்றே திரிந்த நிலையிலும் வித்தியாசமான பயன்பாட்டிலும் புழங்கிவருகின்றன. ‘அப்பீட்’ என்ற சொல் பம்பர விளையாட்டில் பயன்படுத்தப் படுகிறது. கீழே சுற்றும் பம்பரத்தைச் சாட்டையால் சுண்டித் தலைக்கு மேலே எழுப்பிப் பிடிப்பதுதான் அப்பீட். இது ‘அப் ஹெட்’ என்ற சொல்லிலிருந்து மருவி வந்தது என்ற தகவல், ஜெயகாந்தனின் ‘ஒரு மனிதன், ஒரு வீடு, ஒரு உலகம்’ என்னும் நாவலில் கூறப்படுகிறது. அம்பேல் என்னும் சொல் ஐ-ஆம்-ஆன்-பெயில் என்னும் தொடரின் மரூஉ என்றும் அந்த நாவல் சொல்கிறது. இவை இரண்டுமே மூலப்பொருளுக்கு நெருக்கமான பொருளிலேயே பயன்பட்டாலும், மாறுபட்ட சூழல்களில் வேறு பொருள்களையும் கொள்கின்றன. கிளம்புகிறேன் (நான் அப்பீட்டு) என்றும் ஆளை விடுங்கள் (அம்பேல்) என்றும் வழங்கப்படுகின்றன. ஒரு சொல் வெவ்வேறு சூழல்களில், வெவ்வேறு வடிவங்கள் எடுப்பது மொழியின் அழகு அன்றி வேறென்ன?

மொழி கூறும் வரலாறு

சென்னை மொழிக்கு வேறு எந்த வட்டார வழக்குக்கும் இல்லாத தனித்தன்மை - பல மொழிகள் கலந்த தன்மை - உள்ளது. சென்னைக்கு மிக அருகில் இருக்கும் ஆந்திரப் பிரதேசத்தின் தாக்கத்தை நைனா, டப்பு, துட்டு போன்ற சொற்களிலும் (எனக்)கோசரம், (அதுக்)கோசரம் போன்ற வழக்குகளிலும் காணலாம். ஆங்கிலம், தெலுங்கு, உருது, இந்தி ஆகிய மொழிகளின் கலப்பை ஆராய்ந்தால், பிற மொழி மக்களுடனான சென்னையின் தொடர்பையும் வரலாற்றுரீதியில் புரிந்து கொள்ளலாம்.

இந்த அளவுக்கு வண்ண மயமான, பல்வேறு மொழிகளால் வளமூட்டப்பட்ட இன்னொரு வழக்கை எந்த மொழியிலும் காண்பது அரிது. இத்தகைய வழக்கை மரியாதையுடன் ஆராய்வதற்குப் பதிலாக, இழிவுபடுத்தும் போக்கே பொதுவாக நிலவுகிறது. சென்னைத் தமிழின் கொச்சை வழக்கைக் கேட்ட மாத்திரத்தில் கூசிப்போகும் மேட்டுக்குடியினர் பலர் இருக்கிறார்கள். பலரும் இதைத் தமிழின் இழிவழக்காகக் கருதி விமர்சனமும் பரிகாசமும் செய்வதுண்டு. கூவம் பாஷை என்று சொல்லும் அளவுக்குச் சிலர் போய்விடுகிறார்கள். நாற்றமெடுக்கும் கூவத்தோடு இம்மொழி ஒப்பிடப்படுவது தற்செயலானது அல்ல. தமிழ்ப் பரப்பின் பொதுப்புத்தியின் பார்வை இது.

வட்டார வழக்குகள் ஒரு மொழியின் உயிர்ப்பை உணர்த்தும் அடையாளங்கள். மதுரைத் தமிழ், கொங்கு தமிழ், கரிசல் தமிழ், நாஞ்சில் தமிழ், ஈழத் தமிழ் போல சென்னைத் தமிழும் ஒரு வட்டார வழக்குதான். எல்லா வட்டார வழக்குகளையும் போலவே பல்வேறு இயல்பான காரணிகளால் உருவாகி, தொடர்ந்த பயன்பாட்டினால் உருமாறிவரும் ஒரு வழக்கு அது.

களுத மட்டும் சரியா?

சென்னைத் தமிழை இழிவுபடுத்துபவர்கள் அதன் உச்சரிப்புத் திரிபுகளையும் (வலிச்சிக்குனு, இஸ்துகினு) கொச்சைகளையும் (துன்ட்டியா) சுட்டிக்காட்டுவார்கள். குறைகளும் திரிபுகளும் எல்லா வழக்குகளிலும் உள்ளன. வந்துகொண்டிருக்கிறேன் என்பதை வந்துட்ருக்கேன், வந்துக்கிருக்கேன், வந்துண்ட்ருக்கேன் என்றெல்லாம் சொல்வது வட்டார/சாதி வழக்காக அங்கீகாரம் பெறுகிறது. ஆனால், வந்துனுருக்கேன் என்றால் மட்டும் அது இழிவழக்காகக் கருதப்படுகிறது. கஷ்டம் என்பதை கஸ்டம் என்று சென்னைத் தமிழர் சொல்கிறார் என்றால் சிவாஜி என்பதை ஜிவாஜி என்று நெல்லைத் தமிழர்கள் சிலர் சொல்லத்தான் செய்கிறார்கள். கழுதையைக் கய்தே என்பது சென்னைத் தமிழ் வழக்கு. இதைக் களுத என்று சொல்லும் தமிழர்கள் தமிழகமெங்கும் இருக்கிறார்கள். ஆனால், சென்னைத் தமிழின் கொச்சை மட்டும் பரிகசிப்புக்கும் இழிவுக்கும் உள்ளாக்கப்படுகிறது.

வசைச் சொற்களை வைத்து சென்னைத் தமிழை இழிவாகப் பார்க்கும் போக்கும் உள்ளது. வசைச் சொற்கள் சென்னைத் தமிழின் தனிச் சொத்து அல்ல. எல்லா மொழிகளையும் போலவே தமிழிலும் வசைச் சொற்கள் நிறையவே உள்ளன. சென்னைத் தமிழைப் பேசுபவர்கள் அவற்றை அதிகம் பயன்படுத்துவதால் சென்னைத் தமிழே வசைத் தமிழ் ஆகிவிடாது. கெட்ட வார்த்தைகளை அதிகம் பேசும் பிற வட்டாரத்து மக்களின் வட்டார வழக்குகளுக்கும் இதே அளவுகோல் பின்பற்றப்படுவதில்லை என்பதைப் பார்க்கும்போது, சென்னைத் தமிழின் மீதுள்ள ஒவ்வாமைக்குப் பின் உள்ள மேட்டிமைத்தனத்தைப் புரிந்துகொள்ளலாம். சென்னைத் தமிழை ரசிக்கும் சிலரும் தட்டிக்கொடுக்கும் மனப்பாங்கோடுதான் அதை அணுகுகிறார்கள்.

வாழும் மொழிக்கான பல்வேறு இலக்கணங்களையும் தேவைகளையும் தன்னகத்தே கொண்டிருக்கும் சென்னைத் தமிழ் என்னும் வட்டார வழக்கை மொழி மீது அக்கறை உள்ள யாரும் புறக்கணிக்கவோ இழிவுபடுத்தவோ மாட்டார்கள். மொழியின் தன்மைகள் இடம், தொழில், சாதி வரலாறு ஆகிய காரணங்களால் மாறுவது மிக இயல்பானது. வெகுமக்கள் பண்பாடு, பழக்க வழக்கங்கள், மொழிக் கூறுகள் ஆகியவற்றில் உள்ள வேறுபாடுகள் பல்வேறு கோணங்களில் ஆராயப்பட வேண்டியவை. இதில் உயர்வு, தாழ்வு காண்பது மேட்டிமைவாதம். அந்த மேட்டிமைத்தனத்தைக் கைவிட்டு, சென்னைத் தமிழை முறையாக அணுகு வதற்கான பார்வையை வளர்த்துக்கொள்வதே மொழி யின் மீதுள்ள நம் அக்கறையை வெளிப்படுத்தும்.

- அரவிந்தன்,

தொடர்புக்கு: aravindan.di@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x