Published : 13 Jun 2018 10:38 AM
Last Updated : 13 Jun 2018 10:38 AM

பத்திரிகை சுதந்திரத்தின் வெற்றி ‘பென்டகன் பேப்பர்ஸ்’

வ்வொரு பத்திரிகையும் ஒவ் வொரு செய்தியாளரும் கொண்டாட வேண்டிய நாள் - ஜூன் 13. ‘பென்டகன் பேப்பர்ஸ்’ - செய்தியாய் வெளியானதும், 40 ஆண்டுகள் கழித்து அரசிதழில் இடம் பெற்றதும் இதே தேதியில்தான். ஒரு போர். பல பொய்கள். ஒரு பத்திரிகை. பல வழக்குகள். நீதியின் தயவால், அதிகார மையத்தை எழுத்துரிமை வென்றது. இதுவே ‘பென்டகன்’ கதைச் சுருக்கம்.

‘வியத்நாம்’ - காலனி ஆதிக்க சக்திகளால் வடக்கு, தெற்கு என்று இரண்டாகப் பிளவுபட்டு இருந்தது. வடக்கு வியட்னாம், சீனாவின் கைப்பொம்மை யாக இருந்தது. தென் வியட்னாமுக்கு அமெரிக்கா ஆதரவு அளித்தது. தென் வியட்னாமில் தனது அதிகாரத்தை நிலைப்படுத்துதல், அதன் மூலம் வட வியட்னாம் மீது தாக்குதல் நடத்துவது.

இதுதான் அமெரிக்க அரசு போட்ட திட்டம். இதன் ஒரு பகுதியாக, தென் வியட்னாம் பகுதியில், தனக்கு வேண்டிய அரசு அமைவதில் அமெரிக்கா அதிக ஆர்வம் காட்டியது. அதன் உள் நாட்டு அரசியலில், நேரடியாகவும் மறைமுகமாகவும் தீவிரமாக ஈடுபட்டது. 1954 ஜூலையில் அரசர் பாவோ டாயி, தென் வியட்னாமின் பிரதமராக, அமெரிக்க நிதி உதவி பெற்றுத் தரக் கூடிய ஒருவரை பிரதமராக நியமிக்க நினைத்தார். நோ டிங் டையும் சரியான நபராக இருந்தார்; நியமிக்கப்பட்டார். பதவிக்கு வந்த சில நாட்களிலேயே டையும் அரசருக்கு எதிரான பாதையில் செல்லத் தொடங்கினார்.

1955 அக்டோபரில் மோசடி வாக்கெடுப்பு ஒன்றை நடத்தினார் டையும். அமெரிக்க உளவு அமைப்பான சி.ஐ.ஏ. வின் ஏஜன்ட் எட்வர்ட் லேன்ஸ்டேன் முழு ஒத்துழைப்பு வழங்கினார். தனது சகோதரர் நோ டிங் துக் தலைமையில் அத்தனை அராஜக வழிகளின் மூலமும் வாக்கெடுப்பில் வெற்றி பெற்று, தென் வியட்னாமின் சர்வ அதிகாரம் கொண்ட அதிபர் ஆனார் நோ டிங் டையும். அப்போது ஆரம்பித்தது அவரது ஆட்டம்.

வெறும் அரசியல் மட்டுமல்ல; வன்முறை கலந்த மத வெறியாட்டமும் இணைந்து கொண்டது. பவுத்த மதத்தினர் மிகுந்த வியட்னாமில், கிறிஸ்தவ கத்தோலிக்க மதத்தை நிறுவுகிற பணியில் இறங்கினார் டையும். 1957-ல் தனது தேசத்தை, கன்னி மேரிக்கு ‘அர்ப்பணித்தார்’.

புத்தரின் பிறந்த நாளாக கொண்டாடப்படும் ‘புத்த பூர்ணிமா’ நாளன்று கூட, புத்த சமயக் கொடி ஏற்றுவதற்குத் தடை விதித்தார். அதே சமயம், தனது சகோதரர் நோ டிங் துக், ஆர்ச் பிஷப்ஆகப் பதவி ஏற்றுக் கொண்டதை ஒட்டி, வாடிகன் கொடியை ஊரெங்கும் பறக்க விட்டார். புத்த விகாரங்கள் தாக்கப்பட்டன. புத்த மதத் துறவிகள் கொல்லப்பட்டனர்.

1954 முதலே டையும் அரசுக்கு ஆதரவு தெரிவித்து வந்தது அமெரிக்க அரசு. ஆனால், நாளுக்கு நாள் அவருக்கு, மக்களின் ஆதரவு தேய்ந்து வருவதை உணர்ந்த அமெரிக்க அரசு, வேறு ஒரு தலைவரைத் தேடியது. ராணுவ உயர் அதிகாரி, ஜெனரல் டூங் வான் கிடைத்தார். சி.ஐ.ஏ. முகவராக இருந்த லூசியன் கோனேன், 1963 ஆகஸ்ட் 23-ம் தேதி வியட்னாம் ராணுவ அதிகாரிகளை சந்தித்து, கலவரத்துக்கு வித்திட்டார். 1963 நவம்பர் 1-ம்தேதி அமெரிக்காவின் நிதி, நிர்வாக உதவியுடன், ராணுவக் கலகம் ஏற்பட்டது. அதிபர் நோ டிங் டையூம், அவரது சகோதரர் உட்பட பலரும் கொல்லப்பட்டனர். கலகக்காரர்களை ஊக்குவித்த அமெரிக்கா, புதிதாக வேறொரு பொம்மை அரசை நிறுவியது. 1964 ஆகஸ்ட் 2 -ம் தேதி ‘டான்கின் வளைகுடா’ சச்சரவு, வியட் னாம் போருக்கான தளம் அமைத்துத் தந்தது.

இதன் பிறகு சுமார் 4 ஆண்டுகள் கழித்து 1968 ஜூலை 28-ம் தேதி சி.ஐ.ஏ. இயக்குநர் ஜான் மெக்கோனே, அதிபர் ஜான்சனுக்கு ஒரு தாக்கீது அனுப்புகிறார். “சப்ளை மையங்களைத் தாக்குவதைக் காட்டிலும், நேரடியாக வட வியட்னாம் மீது விமானத் தாக்குதல் நடத்தினால்தான், வட வியட்னாம் போரில் இறங்கும்.” இதன் பிறகுதான் அமெரிக்கா, வட வியட்னாம் மீது நேரடித் தாக்குதலைத் தொடங்குகிறது.

இப்படியாக வட வியட்னாம் மீது திட்டமிட்டு ஒரு போரைத் திணித்தது அமெரிக்கா. சுமார் 8 ஆண்டுகள் நீடித்த வியட்னாம் போரின் முடிவில் வடக்கு வியட்னாம் வெற்றி பெற்றது. அமெரிக்கா, அவமானகரமான தோல்வியைத் தழுவியது. 1976-ல் மீண்டும் ஒன்றுபட்ட வியட்னாம் உருவானது.

போரில் ஈடுபடுவதை தாமும் அமெரிக்காவும் விரும்பவில்லை என்றே அடுத்தடுத்து வந்த அதிபர்கள் ஹாரி ட்ரூமென், ஐசன்ஹோவர், ஜான் எஃப் கென்னடி, லிண்டன் ஜான்சன் சொல்லி வந்தனர். அதற்கு முற்றிலும் மாறாக, வலிந்து ஒரு போரை உருவாக்கி, அதில் அமெரிக்காவை ஈடுபடுத்தி, தேசத்துக்கு சேதம், அவமானம் ஏற்பட நேரடிக் காரணமாக இருந்துள்ளனர். இதைத்தான் ‘பென்டகன் பேப்பர்ஸ்’ ஆதாரத்துடன் நிரூபித்தது.

1967 ஜூன் 17-ம் தேதி அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் ராபர்ட் மெக்னமாரா, ‘வியட்னாம் ஸ்டடி டாஸ்க் போர்ஸ்’ என்று ஒரு ஆய்வுக் கமிட்டி அமைத்தார். இப்படி ஓர் ஆய்வைத் தான் மேற்கொள்வதாக, அதிபர் ஜான்சன், ராஜாங்க செயலாளர் டீன் ரஸ்க் உட்பட யாருக்கும் அவர் தெரிவிக்கவே இல்லை.

3000 பக்கம் ஆய்வு; 4000 பக்க ஆவணங்கள்; 47 தொகுதிகள் கொண்டது இந்த ‘சென்சிடிவ்’ ஆய்வறிக்கை, 1964-65-ம் ஆண்டுகளில் மெக்னாட்டனிடம் உதவியாளராகப் பணி புரிந்தவர் டேனியல் எல்ஸ்பர்க். 1967-ல் பல மாதங்கள், பென்டகன் ஆய்வுப் பணியிலும் ஈடுபட்டவர். 1969-ல் ஆய்வறிக்கையைக் காணும் உரிமை இவருக்குக் கிடைத்தது. போர் எதிர்ப்பாளரான எல்ஸ்பர்க், 1969 அக்டோபரில், தனது நண்பர் அந்தோணி ரஸ்ஸோவுடன் இணைந்து, ஆய்வறிக்கையைப் பிரதி எடுத்தார்.

1971 பிப்ரவரி மாதம் ‘தி நியூயார்க் டைம்ஸ்’ செய்தியாளர் நீல் ஷீகன் - எல்ஸ்பர்க் சந்திப்பு நிகழ்ந்தது. அடுத்த மாதமே 43 தொகுப்புகளை ஷீகனிடம் தந்தார் எல்ஸ்பர்க். ‘அதி முக்கியமான ஆவணங்கள். வெளியிடலாமா...?’ என்று சட்ட ஆலோசனை கேட்டது பத்திரிகையின் ஆசிரியர் குழுமம். ‘லார்ட் டே & லார்ட்’ சட்ட நிறுவனம், ‘கூடாது’ என்றது. ஆனால், பத்திரிகை நிறுவனத்தின் சொந்த சட்ட ஆலோசகர் ஜேம்ஸ் கூடலே, அமெரிக்காவின் ‘முதல் சட்ட திருத்தம்’ இருப்பதை சுட்டிக் காட்டி, வெளியிட ஆதரவு தெரிவித்தார்.

13ஜூன் 1971 - ‘தி நியூ யார்க் டைம்ஸ்’ தனது முதல் பக்கத்தில் வெளியிட்டது - ‘Vietnam Archive - Pentagon study traces three decades of growing U.S. involvement.’

மூன்று நாட்கள் கழித்து ஜூன் 16-ல் அமெரிக்க அரசு பெடரல் கோர்ட் மூலம், ‘நியூயார்க் டைம்ஸ்’ நாளிதழுக்கு எதிராகத் தடையாணை பெற்றது. ஜூன் 18 முதல், ‘வாஷிங்டன் போஸ்ட்’ இக்கட்டுரையை வெளியிடத் தொடங்கியது. அதற்கு எதிராகவும் தடை அறிவித்தது அரசு.

பாஸ்டன் நகரில் நீதிமன்றத்தில் சரண் அடைந்த எல்ஸ்பர்க், “இது எனது கடமை; பொதுமக்களிடம் இருந்து இந்தத் தகவல்களை மறைப்பதில், நான் கூட்டாளியாக இருக்க விரும்பவில்லை. இதற்கான முழுப் பொறுப்பையும் நான் ஏற்றுக் கொள்கிறேன்” என்று தெரிவித்தார்.

1971 ஜூன் 29. செனட்டர் மைக் க்ரேவல், அறிக்கையின் 4100 பக்கங்களை, செனட்டுக்கான துணைக் கமிட்டியின், பொது இணைய வெளியில் பதிவிட்டார். இதுவும் அல்லாமல் சுமார் 40-க்கும் மேற்பட்ட உள்ளூர் செய்தித் தாள்கள், அறிக்கையின் விவரங்களை வெளியிட ஆரம்பித்தன. கீழமை நீதிமன்றங்களில் மாறுபட்ட தீர்ப்புகள் வந்தமையால், அத்தனை மனுக்களையும், கூட்டாக விசாரிக்க அமெரிக்க உச்ச நீதிமன்றம் தீர்மானித்தது. 1971 ஜூன் 30-ம் தேதி 6 க்கு 3 கணக்கில் பத்திரிகைகளுக்கு ஆதரவாக, உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

“தடையற்ற சுதந்திரமான பத்திரிகையே, அரசின் ஏமாற்று வேலையை திறம்பட வெளிக் கொணர முடியும். மக்களை ஏமாற்ற நினைக்கும் அரசின் செயல்களைத் தடுப்பது, சுதந்திரமான பத்திரிகைகளின் தலையாய பொறுப்புகளில் ஒன்றாகும்” (நீதிபதி பிளாக்) என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.

இதன் பிறகு, ‘தி நியூயார்க் டைம்ஸ்’ செய்தியின் 40ஆவது ஆண்டை ஒட்டி, 2011 ஜூன் 13 அன்று, மொத்த அறிக்கையும், முறைப்படி அரசிதழில் வெளியிடப்பட்டது. மகத்தான வெற்றி பெற்றது பத்திரிகை உலகம். யாராலும் மீற முடியாததாக மாறியது பத்திரிகை சுதந்திரம்.


Sign up to receive our newsletter in your inbox every day!

 
x