Last Updated : 14 Jun, 2018 09:56 AM

Published : 14 Jun 2018 09:56 AM
Last Updated : 14 Jun 2018 09:56 AM

ஜெயகாந்தன்: கலகக் கலைஞன்

புதுமைப்பித்தன் தன் எழுத்தையும் மூச்சையும் நிறுத்திக்கொண்ட அதே ஆண்டில், தன் உறையி லிருந்து பேனாவை உருவினார் ஜெயகாந்தன். தமிழ்ச் சிறுகதை உலகம் ஜெயகாந்தன் வருகைக்கு முன்பே செழித்திருந்தது. சுதந்திரக் கொடிக்கு முன்பே பறந்த ‘மணிக்கொடி’ இங்கே ஒரு சிறுகதை இயக்கத்துக்கு முன்னோடியாக இருந்தது. ‘ஜெயகாந்த சம்பவம்’ நிகழ்வதற்கு முன்பே சிறுகதைக் கலையில் செய்ந்நேர்த்தி காட்டுதற்கும், இன்னும் வனப்போடு வனைவதற்கும் தமிழை ஏற்கெனவே குழைத்து வைத்திருந்த குயவர்களை நாம் மறந்துவிடலாகாது.

ஆனால் சிறுகதை எழுதவந்த பலரும் தாசில்தார் தனயர்கள், வாத்தியார் வாரிசுகள், ஆங்கிலம் கற்ற அறிவுஜீவிகள், அக்கிரகாரத்து அடிவாழைகள், குமாஸ்தா வீட்டுக் குலக்கொழுந்துகள். அவர்களில் பலரும் உலகச் சிறுகதைகளை ஆங்கில வழி அறிந்தவர்கள். திடீர்த் திருப்பங்கள் நிகழ்த்தும் ‘செகாவியன் டச்’, சிலைக்குக் கண் திறப்பதுபோல் கடைசி வரியில் கலக்கி எடுக்கும் ‘ஓ ஹென்றி உத்தி’, மனித மனங்களைத் திருப்பிப் போட்டுச் சிந்திக்கும் ‘மாப்பஸான் மந்திரம்’ அறிந்தவர்கள். வேத மரபு தந்த விழுமியங்களின் நீண்டு விழுந்த நிழல்கள் அல்லது நடுத்தர வர்க்கத்தின் நசுங்கல் கள் என்று அந்த உள்ளடக்கங்களைச் சொல்லலாம்.

ந.பிச்சமூர்த்தியின் ‘மண்ணாசை’, பி.எஸ்.ராமையாவின் ‘நட்சத்திரக் குழந்தைகள்’, கு.ப.ரா. வின் ‘நூருன்னிஸா’, கல்கியின் ‘அனுபவ நாடகம்’, மெளனியின் ‘கொஞ்ச தூரம்’, லா.ச.ராவின் ‘உத்தராயணம்’, சுந்தரராமசாமியின் ‘பள்ளம்’ போன்ற சிறுகதைகளில் நடுத்தட்டு மக்களின் வாழ்வியலும் உளவியலும் உள்ளடக்கங்கள் ஆயின. ஆனாலும் குரலற்ற மக்களின் குரல் அவற்றில் முழுமையாய்க் கேட்கப்படவில்லை. இலக்கியத்தால் துப்பப்பட்டவனின் - வாழ்க்கையால் துரத்தப்பட்டவனின் அசல் வலி பதிவாகவில்லை.

ஜெயகாந்தன் கதைகளில் இருட்டுக்குப் பிறந்தவர்களின் கறுப்புக் குரல் கேட்டது. விளிம்புநிலை மக்களின் விம்மலும், இலக்கியத்தில் ஏறாத குரல்களும் பச்சை குத்தியதுபோல் பதிவாயின. கிராமத்திலிருந்து பிய்த்து எறியப்பட்டு, நகரங்களால் தண்டிக்கப்பட்டவர்களின் அவல அரவம் கேட்டுக் கொண்டேயிருந்தது.

பட்டுத் தெறிக்கும் மொழியாலன்று ஓர் எழுத்தாளன் நிலைபெறுவது. பட்டுப் பட்டுத் தெளிந்த பட்டறிவால் நிலைகொள்கிறான். அனுபவம் மூன்று வகை. செவிவழி வருவது; கண்வழி அறிவது; மெய்வழி உணர்வது. வெற்றிலை போட்டால் வாய் சிவக்கும் என்பது செவிவழி வருவது; வெற்றிலைச் செவ்வாய் பார்த்து வருவது கண்வழி அறிவது. சுண்ணாம்பால் வாய் வெந்து, பாக்கால் நாக்கைக் கடித்து, வெற்றிலையால் உதட்டைக் கடித்து, வாயைச் சிவக்கவைத்தது வெற்றிலையா உதடு கடித்த உதிர ஒழுக்கா என்று தெளிவது பட்டு அறிவது. ஜெயகாந்தன் எல்லா வெற்றிலைகளை யும் மென்று துப்பியவர்.

அவர்போல் யாருண்டு?

ஜெயகாந்தன் வாழ்வே ஒரு படைப்புலகம்போல் பரந்தது. “எனக்கு ரிக்‌ஷாக்காரன் - விபசாரிகள் - பொறுக்கிகள் - ரெளடிகள் - பிக்பாக்கெட்காரர்கள் முதலிய எத்தனையோ பேர் நெருங்கிய நண்பர்களாய் இருந்திருக்கின்றனர்” என்று எந்த எழுத் தாளனாவது எழுத்து மூலம் வாக்குமூலம் தந்ததுண்டா?

“நடுத்தர வர்க்கத்தின் வாழ்வு ரெண்டுங்கெட்டான் வாழ்வு; விளிம்பு நிலை மக்களின் வாழ்வில் ஒரு வெறித்தனமும் உயிர்ப்பும் உண்மையும் இருக்கிறது” என்று வாழ்ந்து தெளியும் வாய்ப்புற்றதுண்டா?

தாயைப் பிரிந்து பிறிதொரு பெண்ணோடு வால்டாக்ஸ் ரோட்டில் வாழத் தலைப்பட்ட தகப்பனுக்கு, பேறுகாலம் போனவள் திரும்பிவரும் வரைக்கும் சமைத்துப் போட்ட சமையல்காரனாய் இருந்ததுண்டா?

சூதாட்டமும் குடியும் விபசாரமும் சங்கமிக்கும் ஒரு சத்திரத்தில் விலைப் பெண்களுக்குத் தேநீர் வாங்கித் தரும் விடலைப் பையனாய் இருந்த பெருமிதத்தை எந்த எழுத்தாளனாவது எய்தியதுண்டா?

பொதுவுடைமைச் சிங்கம் ஜீவாவின் நாவோடு சொல் யுத்தமும், தோளோடு மல்யுத்தமும் நிகழ்த்தி நிகழ்த்தி நெஞ்சு விரிந்த அனுபவத்தை எந்த எழுத்தாளனாவது எட்டியதுண்டா?

தன் பெயரைத் தனித்தமிழில் மாற்றிக்கொள்ளச் சொன்ன தமிழாசிரியரை நடுத்தெருவில் வைத்து நையப்புடைத்து, அறச்சீற்றம் போன்றதோர் அநாகரிகம் கடந்ததுண்டா?

“கொலை தவிர ஏற்கெனவே நான் எல்லாக் குற்றங்களையும் ஒரு முறை செய்தாகிவிட்டது” என்று இதயத்தை முழுமையாகத் திறந்து காட்டியதுண்டா?

விளிம்பை மையம் ஆக்கியவர்

இப்படித் தேடிப் போனதும் தேடி வந்ததுமாய் நுரைக்க நுரைக்க அனுபவங்கள் கொட்டிக் கிடந்தன ஜெயகாந்தன் வாழ்வின் வழியெங்கும். காலடியில் சேறும் சகதியுமாய், வண்டலும் கலங் கலுமாய்ச் சுழித்துக்கொண்டோடும் வாழ்வென்ற மகாநதியில் தனக்கான தண்ணீரை முக்கிமுக்கி மொண்டுகொண்டார். அவர் உற்றதும் கற்றதும், பட்டதும் பெற்றதும், மேட்டுக்குடியின் சிறுமையும் ரோட்டுக்குடியின் பெருமையும் பார்க்குமிடந்தோறும் பாடுபொருள் தந்தன ஜெயகாந்தனுக்கு.

சிறுகதை என்ற கலை வடிவம் வாசகனுக்கு ஏற்கெனவே செய்துவைத்திருந்த செளகரியத்தை அவர் உடைத்தார். நுரைகட்டிய காபி, மல்லிகைப்பூ, நெய்யுருக்கு போன்ற வாசங்களும் - ஆலயமணி, வண்டுகளின் ரீங்காரம், கொலுசுமணி போன்ற ஓசைகளும், சுபம் என்று சொல்லி முடியும் சுகங் களும், மாறுவேடமிட்ட ஒரு தன்னின்பத்தை வாசகனுக்கு வழங்கியிருந்தன. அதை உடைத்துப் போட்டவர்களில் ஜெயகாந்தனும் முக்கியமானவர்.

வீழ்த்தப்பட்டாலும் வீழ்ந்துபோகாத விளிம்புநிலை மக்களின் ஒப்பாரியும், கண்ணீரும், விழுமியத்தின் வீழ்ச்சிகளும், வீழ்ச்சியின் விழுமியங் களும், அழிந்துபோக மாட்டேன் என்று அடம்பிடிக் கும் இந்தியத் தத்துவ மரபின் கடைசித் துடிப்புகளும் ஜெயகாந்தனால் கலைப்படுத்தப்பட்டன. உரைநடைக்கு முன்னெப்போதுமில்லாத இலக்கு ஜெயகாந்தன் எழுத்துகளில் நிர்மாணிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட அடித்தட்டு மக்களின் வலியை, பாதிக்கப்பட்ட மற்றும் பாதிக்கப்படாத மனித மனங்களுக்குக் கடத்துமொரு ரசவாதத்தை ஜெயகாந்தன் எழுத்து செய்தது.

உடல் என்ற சதைக்கோளம் அழுகி ஒழுகும் நிலையிலும் தத்துவ விசாரத்தோடு பீடிப்புகையில் நிலாவை ரசிக்கும் ஒரு பெருநோயாளி - (நான் இருக்கிறேன்),

கண்ணில்லாவிடில் ஒன்றும் கெட்டுப்போகாது என்ற அனுபவ முடிவோடு கண்ணொடு கண்ணினை நோக்காமல், சொற்களால் மட்டுமே காதல் வளர்க்கும் பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் - (வாய்ச்சொற்கள்),

திறந்த வெளியில் முதலிரவு காண முடியாமல் சொர்க்கத்திற்கும் நரகத்திற்குமிடையே பந்தாடப்படும் நடைபாதைத் தம்பதிகள் - (தாம்பத்யம்),

காவல் நிலையத்தில் பறிக்கப்பட்ட தன் ரிக்‌ஷாவை மீட்கப் போராடி, கைகளும் கால்களும் திசைக்கொன்றாய்த் திரும்பி முறுக்கி நிற்கும் ரிக்‌ஷாக்காரக் கிழவன் - (பற்றுக்கோல்),

ஒரு மூன்றாம் மனிதன் தன் தலையில் சூட்டிய பூவைக் கொத்துச்சிகையோடு வீதியில் விட்டெறிந்து தன் சுயதர்மத்தைக் காத்துக்கொள்ளும் ஒரு விதவைப் பூக்காரி - (பூ வாங்கலியா பூ),

தாலிகட்டி அழைத்துச்சென்று தன்னை விபசாரத்துக்குத் தள்ள முயன்ற நகரத்துக் கணவனைத் தூவென்று துப்பித் தூக்கியெறிந்து தன்னை நேசித்தவனைத் தேடித் திரும்பி வந்து தனக்கான வாழ்வை வரித்துக்கொள்ளும் ஒரு கிராமத்துக் கண்ணகி - (பெளருஷம்),

இப்படி எழுத்தாலும் வாழ்க்கையாலும் நிராகரிக்கப்பட்டவர்களை உயிர்ப்புள்ள பாத்திரங்களாய் உலவவிட்டதற்கு அவர் கம்யூனிஸப் பாசறையில் வளர்ந்தவர் என்பது மட்டுமே காரணமன்று. வறுமையுற்று பாலற்றுப்போனதனால் முலைத் துவாரம் தூர்ந்துவிட்டது என்ற பொருளில் ‘இல்லி தூர்ந்த பொல்லா வறுமுலை’ என்று பாடிய சங்க இலக்கியத்தின் மரபுத் தொடர்ச்சி அவர் என்றும் சொல்லலாம். போகிறபோக்கில் ஜெயகாந்தன் சிந்திப்போகும் வைரங்கள் முறுக்கி நிற்கும் எழுத்தின் முருகியலுக்குச் சாட்சியாகும்.

மழைக்காலத்துப் பேருந்தைச் செல்லமாக வைகிறார் ஜெயகாந்தன்: “வீதியில் தேங்கி நின்ற மழைநீரை இருபுறமும் வாரி இறைத்துக்கொண்டு அந்த டீசல் அநாகரிகம் வந்து நிற்கிறது” - இது ‘அக்கினிப் பிரவேசம்’.

தற்கொலை செய்துகொள்ளப்போன ஒரு மாற்றுத் திறனாளியைத் தேற்றி முடித்து ஆற்றுப் படுத்துகிறான் ஒரு பெருநோயாளி: “காலு இல்லேன்னு நெனச்சு நீ யாருக்கும் பாரமா இருக்காதே! இப்போ யாரோட துணையுமில்லாம எப்படிச் சாக வந்தியோ அந்த மாதிரி வாழப்போ” - இது ‘நான் இருக்கிறேன்’.

ஆணுக்கும் பெண்ணுக்குமான ஆனந்தப் போர்க்களத்தை உடல்வழி பயணிக்கும் உயிரின் பயணத்தை நரம்பு தெறிக்க எழுதுகிறது ஜெயகாந்தன் பேனா:

“ஒரு தடாகத்தில் விழுந்து நீந்துவது மாதிரி, ஓர் அருவியிலே நின்று குளிரக் குளிரக் குளிப்பது மாதிரி, உரம் தேயத் தேய ஒரு மரத்தில் ஏறுவது மாதிரி, ஒருவரையொருவர் உந்திக்கொண்டு ஒரு பாறையைப் புரட்டுவது மாதிரி, தலைகால் மாறித் தறிகெட்டுப் புரண்டு உருள்வது மாதிரி, நாணேற்றிய வில் வளைய வளைய நிமிரும் அம்பு மாதிரி உடலை வைத்துக்கொண்டு பின்னிப் பிணைந்து திணறித் தவிப்பதில் இப்படி ஒரு வாழ்வின் அர்த்தமா? மனுஷ உறவில், மனுஷ உப்பில், மனுஷ நாற்றத்தில் இப்படி ஒரு சுவையா?” - இது ‘சமூகம் என்பது நாலு பேர்’.

அதிரடித்த பறை எழுத்து

புல்லாங்குழலுக்குள் பறை ஒலி கேட்டதுபோல் ஜெயகாந்தனின் கலை ஓட்டத்தில் தெறிக்கும் இந்த ஆரவாரத்தின் மீது விமர்சன உலகம் விசனம் காட்டியது. “ஜெயகாந்தன் எழுத்தில் கலையமைதி இல்லை” என்றார் க.நா.சு.

“உருவ ஒழுங்குமில்லை” என்றது இன்னொரு கூட்டம். காலம் எல்லாவற்றை யும் புறம் தள்ளிப் படைப்பாளியின் சமூக அக்கறை யைக் கொண்டாடிக்கொண்டது.

அன்றைய மணிக்கொடி எழுத்தாளர்கள் திராவிட இயக்கப் படைப்பாளிகளைப் பொருட்படுத்தவில்லை என்பதும், அண்ணா - கலைஞர் - டி.கே. சீனிவாசன் - எஸ்.எஸ்.தென்னரசு போன்ற திராவிட இயக்கப் படைப்பாளிகள் மணிக்கொடி எழுத்தாளர்களைக் கண்டுகொள்ளவில்லை என்பதும் இலக் கியத்திற்கு நேர்ந்த இறந்தகால இழப்பாகும். ஆனால், ஜெயகாந்தனுக்கு அந்த துர்ப்பேறு நேரவில்லை. தன் இறுதிக் காலத்தில் எல்லாராலும் கொண்டாடப்பட்ட படைப்பாளி ஆனார். ஒரு படைப்பாளன் என்பவன் எழுதுவோன் மட்டுமல்லன். ஆழ்ந்த வாசகனும் அவனே; அழுந்திய விமர்சகனும் அவனே. ஜெயகாந்தன் நல்ல வாசகர் மற்றும் நல்ல விமர்சகர். ஒரே பொருள் குறித்த இரு கதைகளை அவர் வாசித்ததும் அதில் ஆகச் சிறந்தது எது என்று அடையாளங்காட்டியதும் மறக்கவியலாதவை.

கதை ஒன்று:

துரத்தும் காவல் துறையிடம் தப்பித்து ஒரு வீட்டுக்குள் ஓடி ஒளிகிறார் ஒரு தொழிற்சங்கத் தலைவர். அது ஒரு தொழிற்சங்கத் தொண்டன் வீடு. கைக்குழந்தைக்குத் தாய்ப்பால் ஊட்டிக்கொண்டிருக்கிறாள் தொண்டன் மனைவி. தொழிற்சங்கத் தலைவர் உள்ளே ஓடிவந்து ஒளிகிறார். வேட்டை நாயின் மூர்க்கத்தோடு வீட்டுக்குள் நுழைந்த போலீஸ் எங்கே அவன் என்று மிரட்டுகிறது. பால் குடித்துக்கொண்டிருந்த குழந்தையைத் தன் மார்பிலிருந்து உருவுகிறாள்; ஓங்கித் தரையிலடிக்கிறாள்; குழந்தை சிதறுகிறது; சூழ்நிலை திசைமாறுகிறது; போலீஸ் போய்விடுகிறது; தலைவர் காப்பாற்றப் படுகிறார்.

கதை இரண்டு:

உச்சத்தில் வியட்நாம் யுத்தம். ஒரு சிற்றூரை ராணுவம் வளைக்கிறது. ஊரே தப்பித்து ஓடி ஒரு பாலத்தின் அடியில் பதுங்கியிருக்கிறது. பாலத்தின் மேலே ராணுவத்தின் காலடிச் சத்தம் கேட்கிறது. பாலத்தின் கீழே மூச்சுவிடும் ஓசையைக்கூட வெளிவிடாமல் அச்ச மெளனத்தில் அடைந்து கிடக் கிறார்கள் ஊர் மக்கள். அந்தக் கூட்டத்தில் கைக் குழந்தையோடு ஒரு தாய். அப்போது அது அழ எத்தனிக்கிறது. அழுத குழந்தையின் வாயை அழுத்திப் பொத்துகிறாள் தாய். இப்போது மூக்கு வழியே கீச்சிடுகிறது. மூக்கையும் பொத்துகிறாள். அது கை கால்களை உதறுகிறது. இன்னும் அது அழப் பார்க்கிறது. அவள் இன்னும் அழுத்துகிறாள். தேடிவந்த ராணுவம் பாலத்தைக் கடந்துபோகிறது. பொத்திய கையை எடுக்கிறாள் தாய்; குழந்தை இறந்து கிடக்கிறது. வீறிட்டுக் கத்துவதற்குத் தாய் எத்தனிக்கிறாள்; இப்போது கணவனின் கை அவள் வாயைப் பொத்துகிறது.

இந்த இரண்டு கதைகளில் முதல் கதை செயற்கை. அதில் அதிர்ச்சி வைத்தியம் திட்டமிட்டு ஊட்டப்படுகிறது. இரண்டாம் கதை இயற்கை. அது சத்தியத்தின் கோட்டுக்குள் இயங்குகிறது. சத்தியத் தின் கோட்டைத் தாண்டுகிற எந்தக் கதையும் கலைக்கு உண்மையாய் இருப்பதில்லை. எனவே, இதில் இரண்டாம் கதையே சிறந்த கதை என்று தீர்ப்பளிக்கிறார் ஜெயகாந்தன்.

சினிமாவும் அரசியலும்

சினிமா ஒரு நட்சத்திர தேவதை. கலைகளின் ராணி. அவளைக் காதலித்தோர் பட்டியலில் ஜெயகாந்தனும் இருந்தார். தன் எழுத்து கலை வடிவம் பூண வேண்டும் என்ற வேட்கை அவருக்குள் விளைந்திருக்கக்கூடும். உலக சினிமாவைத் தமிழில் தர வேண்டும் என்ற உள்ளுணர்வும் அவரை உந்தியிருக்கக்கூடும். கலையுலகத்தைக் கையில் எடுத்த திராவிட இயக்கத்தின் வெற்றியும் ஜெயகாந்தனைச் சீண்டியிருக்கக்கூடும்.

சமரசம் செய்துகொள்ளாத அவரது ‘உன்னைப் போல் ஒருவன்’ தேசிய விருது பெற்றது. இயக்குநர் பீம்சிங் கரங்களில் ஒப்படைக்கப்பட்டதால் ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ பொதுமக்கள் படமானது. பிற படங்கள் பெருவெற்றி பெறவில்லையென்றாலும் அதுகுறித்து அவர் கவலையுறவில்லை.

சுத்தமான தங்கத்தில் நகை செய்ய முடியாது என்றும், துணியைக் கிழிக்காமல் சட்டை தைக்க முடியாது; எழுத்து ஊடகம் வேறு - காட்சி ஊடகம் வேறு என்றும் விளங்கிக்கொள்வதற்கு ஜெயகாந்தன் கொடுத்த விலை அதிகம். அவரது ‘யாருக்காக அழுதான்’ கதை உரிமையைத் தயாரிப்பாளர் ஜி.என்.வேலுமணிதான் முதலில் பெற்றிருந்தார். சிவாஜி - சாவித்திரி - ரங்காராவ் - பாலையா போன்ற புகழ்மிக்க நட்சத்திரங்கள் நடிக்க, கலைமிக்க இயக்குநர் ஸ்ரீதர் இயக்குவதாக அறிவிப்பு வெளிவந்தது.

திரைக்கதையில் உச்சக் காட்சியை உணர்ச்சி கரமாக மாற்றியிருப்பதாக ஜெயகாந்தனுக்குச் சொன்னார் ஸ்ரீதர். “ஒரு வாழைத்தோப்பின் நடுவே மரச் சிலுவையின் முன்னே தொழுது விழுந்து உயிர்விடுகிறான் திருட்டு முழி ஜோசப்” என்று மாற்றியிருக்கிறேன் என்றார் இயக்குநர். தன் உணர்ச்சிகளையெல்லாம் உள்ளே புதைத்துக்கொண்டு ‘சிறு யோசனை’ என்றார் ஜெயகாந்தன். ‘சொல்லுங்கள்’ என்றார் ஸ்ரீதர். “படத்தின் தலைப்பை யும் யாருக்காகச் செத்தான் என்று மாற்றி விடுங்களேன்”. அவ்வளவுதான் ஸ்ரீதர் இயக்குவதாக இருந்தபடம் செத்துவிட்டது.

ஜெயகாந்தன் எழுதுகிறார்: “என்னை அவர் கிறுக்கன் என்று நினைத்திருக்கலாம். சில வட்டாரங்களில் என்னை அப்படித்தான் அழைத்தார்கள் என்று எனக்குத் தெரியும். நானும் அப்படித்தான் இருந்தேன்”.

அது ஞானக் கிறுக்கு என்றோ, அதில் கிறுக்கைக் கழித்து ஞானத்தை மட்டும் கலை செய்ய வேண்டுமென்றோ, நிமிடத்தைப் பொன்னாக்கும் சினிமாவுக்கு நினைத்துப்பார்க்க நேரமிருந்திருக்காது. ஜெயகாந்தன் சினிமாவுக் குள் வந்துபோன ஒரு வசீகரம் மற்றும் நீண்டு தேய்ந்த நிழல்.

ஜெயகாந்தன் என்ற இலக்கியவாதியின் அரசியல் உற்றுநோக்கத்தக்கது மற்றும் கற்றுணரத்தக்கது. ஜெயகாந்தன் என்ற எழுத்தாளனுக்கு அரசியல் ஓர் ஒலிபெருக்கியை உபயம் தந்ததே தவிர, அரசியலுக்கு ஜெயகாந்தனோ ஜெயகாந்தனுக்கு அரசியலோ பெரிதும் பயன்பட்டதாய்ப் பேச்சில்லை. அவரது கலையுலகக் கனவு வர்த்தக வல்லாண்மையால் சூறையாடப்பட்டது. அரசியல் கனவோ திராவிட இயக்கத்தின் தீவிரத்தால் சிதறுண்டுபோனது. கடைசியில் அவர் கம்யூனிஸத்தை நேசித்தார்; கம்யூனிஸ்ட்டுகளை நேசிக்கவில்லை. காமராசரை நேசித்தார்; காங்கிரஸை நேசிக்கவில்லை.

வாழ்க்கை என்பது?

ஆர்ப்பாட்டமாக விழுந்த அருவி சமதளத்திற்கு வந்ததுபோல அவரது தணல் வாழ்வு தணிந்திருந்த முதுமையில் கேட்கப்பட்ட ஒரு கேள்வியும் சொல்லப்பட்ட பதிலும் முக்கியமானவை.

“நீங்கள் கோபக்காரரா? உங்களுக்கு ஏன் முறுக்கு மீசை?” - இது கேள்வி.

பதில் : “அது நடிப்புதானய்யா. எல்லா நேரமும் ஒரு மனிதன் கோபமா இருக்க முடியுமா? நான் எழுத வரும்போது யாரெல்லாம் எழுத்தாளன் தெரியுமா? எல்லாப் பயலையும் பயமுறுத்த வேணாமா? அதுக்குத்தான்”.

எல்லாப் பூட்டுகளுக்கும் ஒரே சாவி என்பதுபோல் எல்லாக் கேள்விகளுக்குமான ஒரே பதில் இது என்று கருதலாம். ஓர் ஆழ்ந்த உரையாடலில் அவரை ஒரு கேள்வி கேட்டேன்: “ஒவ்வொரு தனிமனித வாழ்வும் பெருமையாலும் சிறுமையாலும் நிறைந்து வழிகிறது. உங்கள் வாழ்விலும் இந்த இரண்டையும் கடந்தே வந்திருக்கிறீர்கள். இப்போது சொல்லுங்கள். வாழ்வில் இதைச் செய்திருக்கக் கூடாது என்று இன்று நினைத்து நீங்கள் வெட்கப்படும் சிறுமை யாது?”

என் கண்களில் கிடந்த அவர் கண்களைப் பிரித்து அந்தரம் பார்த்தார். சற்றே யோசித்தார். பிறகு சொன்னார் : “எதுகுறித்தும் வெட்கப்பட மாட்டேன். வாழ்க்கை என்பது அந்தந்த நேரத்து நியாயம்.”

அந்த விடையில் கட்டுண்டேன்.

இலக்கியம் என்பது வாழ்வின் நிழல் என்றால் இலக்கியத்துக்கும் இதுவே பொருந்தும். இலக்கியம் என்பதும் அந்தந்தக் காலத்து நியாயம்தான். ஜெயகாந்தன் ஒரு பாடலாசிரியரும்கூட. அவர் எழுதியவற்றுள் எனக்குப் பெரிதும் பிடித்த பாடல் ‘கண்டதைச் சொல்லுகிறேன்’.

“நல்லதைச் சொல்லுகிறேன் / இங்கு நடந்ததைச் சொல்லுகிறேன் / இதற்கெனைக் / கொல்வதும் கொன்று / கோயிலில் வைப்பதும் / கொள்கை உமக்கென்றால் - உம்முடன் கூடி இருப்பதுண்டோ”

ஆமாம். புரட்டிச் சிந்தித்தவனைப் புரிந்துகொள்ளாத இந்தச் சமூகம் புரியாமல் கொல்லும்; பிறகு புரிந்துகொள்ளும். புரிந்துகொண்ட பிறகு கொல்லப்பட்டவனைத் தூக்கிக் கோயிலில் வைத்துக் கொண்டாடும். அப்போது எழுத்தாளன் கேட்பான். “அட மூட மக்களே! உங்களோடு கூடி இருப்பதுண்டோ?”

சமூகம் கேட்கும்: “எம்மோடு நீங்கள் கூடி இருக்க வேண்டாம். உங்களோடு நாங்கள் கூடி இருக்கலாமல்லவோ?”

ஜெயகாந்தனோடு கூடி இருப்போம்!

மகத்தான தமிழ் ஆளுமைகளை இளைய சமூகத்திடம் கொண்டுசேர்க்கும் விதமாக கவிஞர் வைரமுத்து அரங்கேற்றிவரும் ‘தமிழாற்றுப்படை’ கட்டுரைத் தொடரில் நேற்று அவர் வாசித்த கட்டுரையின் சுருக்கப்பட்ட வடிவம்.

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x