Last Updated : 16 May, 2018 07:43 AM

 

Published : 16 May 2018 07:43 AM
Last Updated : 16 May 2018 07:43 AM

வாழ்க்கை ரசனையானது..

வ்வோர் ஆண்டும் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் நாளன்று, அதுகுறித்து பரபரப்பாக விவாதிக்கப்படும். நல்ல மதிப்பெண் பெற்ற மாணவர்கள் கொண்டாடப்படுகின்றனர். எதிர்பார்த்த மதிப்பெண் பெறாதவர்கள் மன அழுத்தத்துக்கு உள்ளாகின்றனர். அடிப்படையாக ஒரு விஷயம்.. 1-ம் வகுப்பு தொடங்கி, பின்னர் 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு என வாழ்க்கையில் எதிர்கொள்ளும் அத்தனைத் தேர்வுகளுமே சிறந்த அனுபவத்தைக் கொடுப்பதற்கான தேர்வுகள் மட்டுமே. இவை எவையும் நம் வாழ்க்கையை தலைகீழாக மாற்றிவிடும் வல்லமை கொண்டவை அல்ல. உங்கள் வாழ்க்கையை உங்களை தவிர வேறு யாரும் மாற்றிவிட முடியாது. வாழ்க்கை ரசனையானது. அதை நீங்களே தேர்வு செய்யுங்கள். இதற்கு உலக வரலாற்றில் கடந்த காலத்திலும், நிகழ்காலத்திலும் நிறைய உதாரணங்களைச் சொல்ல இயலும்.

“என் இளம் வயதில் பத்தில் ஒன்பது முயற்சிகள் தோல்வியைத் தழுவும். இருப்பினும் சோர்ந்துவிடாமல், ‘எங்கே தவறு செய்தேன்’ என்று சிந்தித்து, இடைவிடாது உழைத்ததால், எடுத்த காரியம் எதிலும் வெல்லலாம் என்று புரிந்துகொண்டேன்” என்கிறார் எழுத்தாளர் பெர்னாட்ஷா.

‘ஒரு முட்டாள் எனக்கு மகனாக வாய்த்துள்ளான்’ என்று தந்தையின் வெறுப்புக்கு ஆளானவர்தான் புகழ்மிக்க இங்கிலாந்து பிரதமராக இருந்த வின்ஸ்டன் சர்ச்சில். படிக்க சிரமப்பட்ட இவரது வாழ்க்கை, ராணுவத்தில் சேர்ந்த பிறகு உலக வரலாற்றையே மாற்றும் அளவுக்கு வலிமையானதாக மாறியது.

3 வயது வரை பேச்சு வராமல் மனநிலை குன்றியவராகக் கருதப்பட்டு, ஆசிரியர்களாலும் ஒதுக்கப்பட்டவர் ஐன்ஸ்டைன். அவருக்குதான் 26 வயதில் 56 பல்கலைக்கழகங்கள் டாக்டர் பட்டம் தர முன்வந்தன.

உருவத்தை வைத்து கேலி செய்யப்பட்டவர் தாமஸ் ஆல்வா எடிசன். மூளைக் கோளாறு உடையவன் என்று நண்பர்களாலே இகழப்பட்டவர். பள்ளியில் இருந்தும் துரத்தப்பட்டார். ஆனால், அவர் தலைசிறந்த விஞ்ஞானியாக நமது மனதில் நிற்கக் காரணம் அவரது அறிவியல் ஆர்வமே. ஆய்வுக்கூடமே எரிந்தும் சோர்ந்துபோகாமல் மீண்டும் உழைக்கத் தொடங்கிய அவரது நேர்மறை சிந்தனைகளே அவரை உலகப்புகழ் பெறச் செய்தன.

‘மனிதக் குரங்கு போன்று நீளமான கைகள் கொண்டவன்’ என்று கேலிக்கு ஆளானவர் மைக்கேல் பெல்ப்ஸ். இவர் தன் உழைப்பால் 10 வயதிலேயே நீச்சலில் சாதனையாளர் ஆனார். ஒலிம்பிக் போட்டிகளில் 28 தங்கப் பதக்கங்களை குவித்த இவரது சாதனையை இதுவரை யாராலும் முறியடிக்க முடியவில்லை.

பிறவியிலேயே கைகளும், இடுப்புக்கு கீழே எந்த உறுப்பும் இல்லாத ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த நிக் வுஜெசிக் தனது நம்பிக்கையூட்டும் பேச்சால், தோல்விகளால் துவண்டுபோனவர்களை தூக்கி நிறுத்தியவர்.

திருமண பந்தத்துக்கு அப்பாற்பட்டு பிறந்து, பெற்றோரால் கைவிடப்பட்டவர் லியனார்டோ டாவின்ஸி. படிப்பு இவருக்கு வரவில்லை. ஆனால் பின்னாளில் சிற்பம், ஓவியம், உடற்கூறு, இயந்திர வடிவமைப்பு என பல துறைகளில் சாதனை படைத்தார். இவரது மோனாலிசா மர்மப் புன்னகைக்கு இணையான ஓவியம் உண்டா!

முகத்தில் அம்மைத் தழும்புகளுடன் 3 வயது வரை பேச்சு வராமல் முரண்டு பிடிக்கும் குழந்தையாக இருந்தவர் ராமானுஜன். கணிதம் தவிர பிற பாடங்கள் இவருக்கு சுட்டுப்போட்டாலும் ஏறவில்லை. ஆனாலும், தனது தனித்திறமையாக இருந்த கணிதத்தில் கவனம் செலுத்தியதால் உலகப் புகழ் பெற்றார்.

கணிதத்தை கசப்பென கருதிய பாரதி, தனது மொழித் திறனால் மகாகவி ஆனார். 10-ம் வகுப்பைத் தாண்டாத கண்ணதாசன்தான் ‘கவியரசர்’ ஆனார். 10-ம் வகுப்பைத் தாண்டாத சச்சின் டெண்டுல்கர், கிரிக்கெட் கடவுள் என்று புகழப்பட்டார். பல நட்சத்திர விடுதிகளுக்குச் சொந்தக்காரரான ஓபராய் சர்வராக வேலை பார்த்தவர். தனது முதல் படத்துக்கே ஏராளமான விருதுகளைப் பெற்ற தமிழ் திரைப்பட இயக்குநர் பாண்டிராஜ், ஏவி.எம் ஸ்டுடியோவில் காவலாளியாக இருந்தவர். ஃபிலிம் சிட்டிக்கு செல்ல ரூ.20 பணம் இல்லாமல் கடன் வாங்கிச் சென்றவர்தான் இந்திப் பட உலகின் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான். இவர்கள் யாரும் ஒரே இரவில் புகழின் உச்சிக்கு சென்றுவிடவில்லை. இலக்கு நோக்கிய கடின உழைப்பு மட்டுமே இவர்களது வெற்றிக்கான ஒரே வழியாக இருந்தது!

பெற்றோர் கவனத்துக்கு..

உங்கள் குழந்தையிடம் எப்போதும் ‘நன்றாகப் படியுங்கள்’ என்று மட்டுமே சொல்லிப் பழகுங்கள். ‘நிறைய மதிப்பெண் எடுங்கள்’ என்று சொல்லாதீர்கள். இயல்பாகப் புரிந்துகொண்டு படிப்பதே நல்லது. அது உளவியல் ரீதியாக ஆரோக்கியமானதும்கூட. உங்கள் குழந்தையின் படிப்பு, வியாபாரம் அல்ல. முதல் போட்டு லாபம் எடுக்க உங்கள் குழந்தை ஒன்றும் பங்குச் சந்தையும் இல்லை.

இறுதியாண்டு தேர்வு முடிவுகள் வெளியாகும் நேரத்தில் குழந்தைகளுடன் இருங்கள். குறைந்த மதிப்பெண்ணோ, அதிக மதிப்பெண்ணோ.. உங்கள் அன்பான வார்த்தைகள் மட்டுமே உங்கள் குழந்தையின் வாழ்க்கையை அடுத்த கட்டத்துக்கு நகர்த்திச் செல்லும். ‘உன்னிடம் நிறைய எதிர்பார்த்தேன்; நண்பர்கள், உறவினர்கள் முகத்தில் இனி எப்படி விழிப்பேன்?’ என்பது போன்ற உங்களது விரக்தியான வார்த்தைகளே குழந்தைகளை தவறான முடிவுகளுக்கு தள்ளுகின்றன என்பதை உணருங்கள். உங்கள் குழந்தைகள் அதிக சிரமம் இல்லாமல் எதை விரும்பி சிறப்பாக செய்கிறார்களோ, அதில் அவர்களை அனுமதியுங்கள். அதில் சாதிப்பார்கள்.. கட்டாயம் சாதித்துக் காட்டுவார்கள்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x