Last Updated : 30 May, 2018 08:54 AM

 

Published : 30 May 2018 08:54 AM
Last Updated : 30 May 2018 08:54 AM

அயர்லாந்தின் மனசாட்சியை உலுக்கிய சவிதா!

யர்லாந்தில் கருக் கலைப்பு தடைச் சட்டத்தில் மாற்றம் கொண்டுவருவது தொடர்பான வாக்கெடுப்பில் 66.4% மக்கள் ஆதரவாக வாக்களித்திருப்பது உலகமெங்கும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது. ‘இது ஒரு அமைதிப் புரட்சி’ என்று பெருமிதப்படுகிறார் அயர்லாந்து பிரதமர் லியோ வரத்கர். பல பெண்கள் எதிர்கொண்ட மனப்போராட்டத்துக்குக் கிடைத்திருக்கும் மாபெரும் வெற்றி இது. மிக முக்கியமான விஷயம், தனி மனிதருக்கு நேர்ந்த கொடுமையை ஒட்டுமொத்த சமூகமும் தன்னுடையதாகப் பார்த்ததுதான்.

அயர்லாந்தில் 1861-லிருந்து கருக்கலைப்புக்குத் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. கருக்கலைப்புக்கு எதிரான அயர்லாந்து சட்டங்கள் வெறுமனே நீதிமன்றம் சார்ந்தது மட்டுமல்ல; மிக முக்கியமாக இது மத நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டதும்கூட. 1992-ல் 14 வயது பள்ளிச் சிறுமி பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டாள். அதன் மூலம் கருத்தரித்தாள். அவள் பெயரை வெளியிடாமல் ஊடகங்களும், நீதிமன்றமும் ‘எக்ஸ் வழக்கு’ என்று அழைத்தன. அச்சிறுமியை பிரிட்டன் அழைத்துச்செல்லத் திட்டமிட்டது அவள் குடும்பம். ஆனால், அந்தப் பயணத்துக்குத் தடைவிதிக்கப்பட்டது. இறுதியில், அச்சிறுமியின் தற்கொலையில் முடிந்தது அவ்வழக்கு. 1997-லும் 13 வயதுச் சிறுமிக்கு இதே கதி நேர்ந்தது. அவளும் தன் உயிரை மாய்த்துக்கொண்டாள்.

இவ்விரு சம்பவங்களைத் தொடர்ந்து கருக்கலைப்புத் தடைச் சட்டத்தை எதிர்த்துப் போராட்டங்கள் நடந்தன. வழக்குகள் தொடுக்கப்பட்டன. ஆனால், பலனில்லை. இந்நிலையில், அயர்லாந்தில் வசித்துவந்த இந்திய மருத்துவரான சவிதா, தனது 17-வது வார கர்ப்பகாலத்தில் கருச்சிதைவை உணர்ந்து மருத்துவர்களை அணுகினார். மருத்துவர் கள் செவிசாய்க்கவில்லை. அயர்லாந்தின் கருக்கலைப்புக்கு எதிரான கடுமையான சட்டத்தாலும், அலட்சியமான மருத்துவப் பரிசோதனையாலும் 2012-ல், தனது 31-வது வயதில் இறந்துபோனார் சவிதா. சவிதா வின் இறப்பு தேசிய அளவிலும் உலக அளவிலும் பெரும் அதிர் வலையை ஏற்படுத்தியது.

மே 25 அன்று நடந்த வாக்கெடுப்பில், கருக்கலைப்புக்கு ஆதரவான தங்கள் நிலைப்பாட்டை அயர்லாந்தின் பெரும்பாலான மக்கள் வெளிப்படுத்தியிருக்கிறார்கள். வாக்கெடுப்புக்கான பிரச்சாரம் சில வாரங்கள் முன்பே தொடங்கியது. சவிதாவின் புகைப்படங்கள் அடங்கிய பதாகைகளும் சுவரோவியங்களும், ‘கருவுக்குத் தரும் அதே முக்கியத்துவத்தை அக்கருவைச் சுமக்கும் பெண்ணுக்கும் தர வேண்டும்’, ‘என் உடல் என் உரிமை’ என்றன. பெண்கள் தாங்கள் அனுபவித்த மருத்துவமனை நடைமுறைகளைப் பொதுவெளியில் பகிர்ந்துகொண்டார்கள். இந்த வாக்கெடுப்பு வெற்றி பெற்றதற்கு இது மிக முக்கியக் காரணம்.

வாக்களிப்பதற்காக வெவ்வேறு நகரங்களிலிருந்து டப்ளினுக்குப் பலரும் பயணித்திருக்கிறார்கள். “இந்த நாடு விழிப்பதற்கு முன்பாக இப்படி உனக்கு நேர்ந்ததற்கு மிகவும் வருந்துகிறோம். எனது வாக்கு உனக்காகத்தான். உன்னை இறக்கவிட்டுவிட்டோம் சவிதா. எங்களை மன்னித்துவிடு. உனது மரணம் வீணாகிவிடாது” என்று சவிதாவின் நினைவுச்சின்னம் முன்பாக நின்றபடி கண்ணீர் மல்கியிருக்கிறார்கள்.

சமூகத்தில் மாற்றம் வேண்டுமெனில் முதல்கட்டமாக அது தனிமனிதனுக்குள் நிகழ வேண்டும் என்பதை இந்தப் போராட்டங்கள் உணர்த்துகின்றன. தங்கள் இனத்தைச் சேராத, தங்கள் தேசத்தைச் சேராத ஒரு பெண்ணின் மரணத்தை ஒருமித்த உணர்வோடு அயர்லாந்து மக்கள் எதிர்கொண்டிருக்கிறார்கள். அயர்லாந்து சட்டத்தால் நிகழ்ந்துவந்த கொடுமைகளுக்கு ஏதோ ஒருவகையில் தாங்களும் காரணம் என அவர்கள் உணர்ந்ததைத்தான் அவர்களின் கண்ணீர் உணர்த்துகிறது.

- த.ராஜன்,

தொடர்புக்கு: rajan.t@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x