Published : 15 May 2018 08:33 AM
Last Updated : 15 May 2018 08:33 AM

காட்டுயிர்களுக்கு எமனாகும் காற்றாலைகள்

மே

ற்குத் தொடர்ச்சி மலைப் பகுதி என்பது எண்ணற்ற உயிரினங்கள் நிறைந்த தூய்மையான உயிர்ச்சூழல் பகுதி மட்டுமல்ல, வளமான காற்றும் பெரும் எண்ணிக்கையிலான காற்றாலைகளும் கொண்ட பகுதியும்கூட. 175 ஜிகாவாட் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் எனும் இலக்கை எட்ட முயற்சிசெய்துவருகிறது இந்தியா. 65 சதுர கிலோ மீட்டர் வனப் பகுதிகளில் காற்றாலைகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. மேலும், கிட்டத்தட்ட 30 சதுர கிலோ மீட்டர் வனப் பகுதிகளில் காற்றாலை அமைக்க அனுமதி கோரப்பட்டிருக்கிறது.

மேற்குத் தொடர்ச்சி மலையின், கேரளா முதல் குஜராத் வரையிலான பகுதிகளிலும், கிழக்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளின் பெரும் பகுதியிலும் காற்றாலைகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. காற்றாலைகளால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும் என்ற எதிர்ப்பின் அடிப்படையில் உள்ளூர் அளவிலான போராட்டங்கள் நடக்கின்றன. வழக்குகள் தொடரப்படுகின்றன. அத்துடன், காற்றாலைகளால் அந்தப் பகுதிகளின் உயிர்ச்சூழலில் மீள முடியாத பாதிப்பு கள் ஏற்படுவதைத் தடுப்பது தொடர்பாகவும் விரிவாகப் பேசப்பட வேண்டும். காற்றாலைகளின் காரணமாக வன உயிர்களில் ஏற்பட்டிருக்கும் பாதிப்புகளை உலகளாவிய அறிவியல் ஆராய்ச்சி கள் கோடிட்டுக் காட்டுகின்றன.

உதாரணத்துக்கு, 2018-ன் தொடக்க மாதங்களிலேயே பசிபிக் தீவுகளில் வவ்வால்களின் வருகை 20 மடங்கு குறைந்திருப்பதாக ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன. போலந்தில் காற்றாலைகள் இருக்கும் பகுதிகளில் கொறிக்கும் விலங்குகள் பெரும் நெருக்கடியைச் சந்திக்கின்றன. போர்ச்சுகலில், ஓநாய்கள் இனப்பெருக்கம் செய்யும் பகுதிகளுக்கு அருகே இயங்கிவரும் காற்றாலைகள் காரணமாக ஓநாய்களின் இனப்பெருக்கம் கணிசமாகக் குறைந்திருக்கிறது. அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில், நீர்நிலைகளுக்கு அருகில் காற்றாலைகள் இயங்கிவருவதால், சிவப்புத் தலை வாத்துகளின் எண்ணிக்கை 77% குறைந்திருக்கிறது. இந்தியாவிலும் கிட்டத்தட்ட இதே நிலைதான். சொல்லப் போனால், அதிகமான பல்லுயிர்ச் சூழல் கொண்ட வனப் பகுதிகளின் ஒவ்வொரு சதுர கிலோ மீட்டரை யும் கணக்கில்கொண்டால் இந்தியாவில் பாதிப்பு அதிகம் இருக்கலாம். ராஜஸ்தானில், காற்றாலை யின் விசிறிகள், மின் கம்பங்கள் காரணமாக, ‘கிரேட் இந்தியன் பஸ்டர்டு’ என்று அழைக்கப்படும் கானமயில் பறவைகள் உயிரிழக்கும் விகிதம் அதிகரித் திருக்கிறது. கட்ச் முதல் ஆந்திரா வரை உள்ள காற்றாலைகள் தொடர்பாக எடுக்கப்பட்ட ஆய்வுகளின் மூலம், காற்றாலைகளில் மோதி உயிரினங் கள் உயிரிழக்கும் சம்பவங்கள் நடப்பதாகத் தெரியவருகிறது.

கர்நாடகத்தில் 6,000 ஏக்கர் பரப்பளவிலான வனப் பகுதிகள் காற்றாலைகளை அமைப்பதற்காக ஒதுக்கப்பட்டிருப்பதால், பறவைகள் மட்டுமல்லாமல் நீர்நில வாழ்வன, ஓநாய் உள்ளிட்ட பாலூட்டிகள் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று அந்தப் பகுதிகளில் வாழும் மக்கள் தெரிவிக்கிறார்கள்.

உயிர்ச்சூழலில் காற்றாலைகள் ஏற்படுத்தும் பெரிய அளவிலான மறைமுக பாதிப்பு குறித்து உலகளாவிய ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன. இந்திய அளவில் அது தொடர்பான ஆய்வுகள் இன்னும் எடுக்கப்படவில்லை. பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் நிறுவனத்தில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்துவரும் மரியா தாக்கரும் அவரது குழுவினரும், காற்றாலைகள் அருகே உள்ள பகுதிகளில் வாழும் விசிறித்தொண்டை ஓணான்கள் தொடர்பாக ஆராய்ச்சி செய்துவருகிறார்கள். காற்றாலைகளின் சுழற்சி ஏற்படுத்தும் பாதிப்புகளை எதிர்கொள்ள முடியாமல், பறவைகள் மட்டுமல்லாமல், சிறிய வகை கொறிக்கும் விலங்குகளும், பாலூட்டிகளும் அவை இருக்கும் பகுதிகளுக்கு வருவதைத் தவிர்க்கின்றன. வேட்டையாடி உண்ணும் விலங்குகள் குறைவாக இருக்கும் இந்தப் பிராந்தியத்தில், பல்லிகளின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. இதனால், உணவுக்கான விலங்குகள் குறைந்திருப்பதுடன் வாழ்வாதாரத்துக்கான போட்டியும் அதிகரித்திருக்கிறது.

“உயிர்ச்சூழலின் மொத்த அம்சமே மாறிவிட்டது. உயிரினங்களிடையே உணவு வலை என்பது ஒன்றுடன் ஒன்று பிணையப்பட்டது. இந்தப் பகுதிகளில் அது சிதைந்துவிட்டது” என்கிறார் மரியா தாக்கர். நீண்டகால ஆய்வுக்குப் பின்னர்தான், இந்த மாற்றங்கள் பூச்சிகள், தாவரங்கள், மண் ஆகியவற்றில் காற்றாலைகள் ஏற்படுத்தியிருக்கும் பாதிப்புகள் பற்றித் தெரியவரும். மேலும், கட்டுமானப் பணிகள் காடுகளைச் சிதைக்கின்றன. வனப் பகுதிகளில் அமைக்கப்படும் சாலைகள், மின்கம்பிகள் காரணமாகக் காட்டுத் தீ ஏற்படும் அபாயமும் அதிகரித்திருக்கிறத.

‘தி இந்து’ ஆங்கிலம்

தமிழில்: வெ.சந்திரமோகன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x