Last Updated : 10 Apr, 2018 08:53 AM

 

Published : 10 Apr 2018 08:53 AM
Last Updated : 10 Apr 2018 08:53 AM

சூரியன் கோபம் தணிகிறது!

டும் கோபத்தில் இருப்பவரைக் குறிப்பிடும்போது, “அவர் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்கிறது” என்பதாகக் கூறுவது உண்டு. சூரியனின் முகத்திலும் அவ்வப்போது ‘எள்ளும் கொள்ளும் வெடிப்பது’ போன்ற நிலைமை தோன்றுகிறது. அந்த ‘கோபம்’ மாறி, வேறொரு சமயத்தில் சூரியன் முகத்தில் சாந்தம் தவழும் நிலை ஏற்படுவதும் உண்டு.

தினமும்தான் சூரியன் உதிக்கிறது. ஆனால், நாம் சூரியனை உற்றுக் கவனிப்பதில்லை. சூரியனை உற்றுப் பார்ப்பது ஆபத்து. கண் பார்வை கடுமையாகப் பாதிக்கப்படும்.

எனினும், தகுந்த கருவிகளைக் கொண்டு சூரியனை தினமும் கவனித்து வருவதற்கென்றே தனி நிபுணர்கள் இருக்கிறார்கள். சூரியனைக் கவனித்து வருவதற்கென்றே விசேஷமான செயற்கைக் கோள்களும் உள்ளன. அப்படி கவனிக்க வேண்டிய காரணம் உள்ளது.

சூரியனின் முகத்தில் அவ்வப் போது கரும்புள்ளிகள் தோன்றுகின்றன. பின்னர் அவை மறைகின்றன. சூரியனில் கரும்புள்ளிகள் தோன்றுவது சூரியனின் காந்த மண்டலத்துடன் தொடர்புடையது.

கரும்புள்ளி அதிகமாக இருக்கும் சமயங்களில் சூரியன் சீறுகிறது. இது மட்டுமின்றி, சூரியனில் இருந்து அப்போது சிஎம்இ (CME- Coronal Mass Ejection) எனப்படும் ஆற்றல் மொத்தைகள் தூக்கி எறியப்படுகின்றன. சில சமயங்களில் இவை பூமியைத் தாக்குகின்றன.

இதன் விளைவாக பூமியின் காற்று மண்டலம் பாதிக்கப்பட்டு அது விரிவடைகிறது. காற்று மண்டலம் பூரி போல உப்புகிறது. அதுவரை காற்று மண்டலத்துக்கு வெளியே அமைந்திருந்த செயற்கைக் கோள்கள் காற்று மண்டலத்துக்குள் வந்துவிடும் நிலை ஏற்படுகிறது. இதனால் செயற்கைக் கோள்களின் வேகம் பாதிக்கப்பட்டு, நீண்ட கால அளவில் அவற்றின் ஆயுள் குறைகிறது.

ரேடியோ ஒலிபரப்புகளும் பாதிக்கப்படுகின்றன. தவிர, பூமியில் மின்கட்டமைப்பும் பாதிக்கப்படுகிறது. கனடா வில் ஒருமுறை, மின்விநியோகம் கடுமையாக பாதிக்கப்பட்டு, பெரும் பகுதி இருளில் மூழ்கியது.

பூமியில் நிலத்துக்கு அடியில் புதைக்கப்பட்டுள்ள எரிவாயுக் குழாய்கள், கச்சா எண்ணெய்க் குழாய்களும் பாதிக்கப்படுவது உண்டு.

ஆனால், சூரியனில் ஏற்படும் சீற்றமோ, சூரியனில் இருந்து வீசி எறியப்படும் ஆற்றல் மொத்தைகளோ மக்களை நேரடியாக பாதிப்பதில்லை.

சூரியனில் கரும்புள்ளிகள் நிறைய இருக்கும்போதுதான் இத்தனை பிரச்சினைகளும் ஏற்படுகின்றன.

சூரியனில் கரும்புள்ளிகள் தோன்றுவதில் ஒரு பாணி உள்ளது. குறிப்பிட்ட ஆண்டில் கரும்புள்ளிகள் எண்ணிக்கை உச்சத்தை எட்டும். பிறகு படிப்படியாகக் குறைய ஆரம்பிக்கும். அதாவது, சுமார் ஐந்தரை ஆண்டுகளுக்குப் பிறகு கரும்புள்ளிகள் மிகக் குறைந்தபட்ச அளவில் இருக்கும், அல்லது கரும்புள்ளிகளே இருக்காது. அதற்கு அடுத்த ஐந்தரை ஆண்டுகளில் படிப்படியாகக் கரும்புள்ளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும். பிறகு அவற்றின் எண்ணிக்கை உச்சத்தை எட்டும்.

ஒரு தடவை உச்சத்தை எட்டிய 11 ஆண்டுகளுக்குப் பிறகு அடுத்த உச்சம் தோன்றுகிறது.

கடந்த 2000-ல் கரும்புள்ளிகளின் எண்ணிக்கை உச்சத்தை எட்டியது. இந்தக் கணக்குப்படி பார்த்தால், 11 ஆண்டுகள் கழித்துதான் அடுத்து உச்சத்தை எட்டியிருக்க வேண்டும். ஆனால், 2002-ல், அதாவது அடுத்த 2 ஆண்டுகளிலேயே மறுபடி இரண்டாவது உச்சம் ஏற்பட்டது. இப்படி குறுகிய கால இடைவெளியில் இரு உச்சங்கள் ஏற்படுவது அபூர்வமே.

அதன் பிறகு, 2013-ல் கரும்புள்ளிகளின் எண்ணிக்கை உச்சத்தை எட்டியது.

கரும்புள்ளிகளின் எண்ணிக்கை தினம் தினம் மாறலாம். விஞ்ஞானிகள் மாத சராசரி எவ்வளவு என்பதை முக்கியமாகக் கவனிக்கின்றனர். 1958 மார்ச் மாதத்தில் கரும்புள்ளிகளின் எண்ணிக்கை 285 ஆக இருந்தது. 2008 டிசம்பரில் இது வெறும் 2 மட்டுமே.

கரும்புள்ளிகள் எண்ணிக்கை உச்சம் தொட்ட 2013-ல் இருந்து தற்போது ஐந்து ஆண்டுகள் கழிந்திருக்கின்றன. இப்போது கரும்புள்ளிகளின் எண்ணிக்கை குறைந்து, சூரியன் அமைதியாக இருக்கிற கட்டத்தை எட்டியுள்ளோம். அதாவது, அடுத்த சில ஆண்டுகளுக்கு சூரியனில் சீற்றம், ஆற்றல் மொத்தையை வீசுவது போன்றவை இருக்காது. சூரியன் குறைந்தது சில ஆண்டுகளுக்கு இதுபோல அமைதியாக, சாந்தமாக இருப்பது நல்லதுதான்!

கட்டுரையாளர்: எழுத்தாளர்

தொடர்புக்கு: nramadurai@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x