Published : 05 Apr 2018 09:53 AM
Last Updated : 05 Apr 2018 09:53 AM

காவிரி: உச்ச நீதிமன்றத் தீர்ப்பு முதல் உண்ணாவிரதம் வரை

ந்தியாவின் ஆகப் பெரிய நீதியமைப்பான உச்ச நீதிமன்றமே உத்தரவிட்டுவிட்டதால், குறிப்பிட்ட காலக் கெடுவுக்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்கும் என்பதுதான் பொதுவான கணிப்பாக இருந்தது. ஆனால் ஆறு வார கால அவகாசம் முடிந்த பிறகும்கூட காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படவில்லை. காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கவிடாமல் மத்திய அரசைத் தடுத்து நிறுத்திய சக்தி எது, வாரியத்தை அமைக்காமல் இருந்ததற்கு மத்திய அரசு முன்வைத்த காரணங்கள் என்னென்ன, அந்தக் காரணங்களுக்குத் தமிழக அரசு ஆற்றிய எதிர்வினைகள் என்ன, இடைப்பட்ட காலங்களில் நடந்த வார்த்தை விளையாட்டுகளின் பின்னணி என்ன என்பன போன்ற பல கேள்விகள் இந்த இடத்தில் எழுகின்றன.

காவிரி மேலாண்மை வாரியத்தை எக்காரணத்தை முன்னிட்டும் அமைக்கவிட மாட்டோம் என்று கர்நாடகத் தரப்பிலிருந்து கடுமையான எதிர்வினைகள் வந்துகொண்டிருக்க, அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி விவாதித்தார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. அந்தக் கூட்டத்தில், ஆறு வார காலத்துக்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கச் சொல்லி மத்திய அரசுக்கு வலியுறுத்துவது, தமிழகத்துக்கான நீர் குறைக்கப்பட்டது குறித்து உரிய சட்ட நடவடிக்கை எடுப்பது, உச்ச நீதிமன்றத் தீர்ப்பை உரிய முறையில் அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அனைத்து கட்சித் தலைவர்களும் நேரில் சென்று பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திப்பது ஆகிய மூன்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தொடங்கியது குழப்பம்

இந்நிலையில், “விரைவில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும். அதற்கான பணிகள் தொடங்கிவிட்டன” என்று சொல்லி எதிர்பார்ப்பை உருவாக்கினார் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி. என்ன அழுத்தம் வந்தது என்று தெரியவில்லை. சட்டென்று நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு, “ஆறு வார காலத்துக்குள் அமைப்பதெல்லாம் அவ்வளவு சுலபமான விஷயமில்லை. அது மிகக் கடினமான இலக்கு” என்று சொல்லி அதிர்ச்சி கொடுத்தார். தமிழக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குரல் கொடுத்தும் பலனில்லை.

ஆறு வார கால அவகாசம் குறைந்துகொண்டே வந்த சூழலில் காவிரி மாநிலத் தலைமைச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டத்துக்கு அழைப்புவிடுத்தார் மத்திய நீர்வளத் துறைச் செயலாளர் உபேந்திர பிரசாத் சிங். அந்தக் கூட்டத்தில் கருத்து தெரிவித்த கர்நாடகத் தரப்பு, “காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் சொல்லவில்லை” என்றது. அதனைத் தமிழகத் தரப்பு எதிர்த்தது.

ஆனால், “தீர்ப்பில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று தெளிவாகச் சொல்லவில்லை. ஆகவே, தமிழக அரசு விரும்பியபடி காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டிய அவசியம் இல்லை” என்றார் மத்திய நீர்வளத் துறை செயலாளர் உபேந்திர பிரசாத் சிங். அதற்கு ஆதாரமாக, உச்ச நீதிமன்றத் தீர்ப்பில் உள்ள ‘ஸ்கீம்’ என்கிற வார்த்தையைச் சுட்டிக்காட்டினார்.

2007-ல் இறுதித் தீர்ப்பை வெளியிட்ட காவிரி நடுவர் மன்றம், அந்தத் தீர்ப்பு செயல்வடிவம் பெற ‘காவிரி மேலாண்மை வாரியம்’, ‘காவிரி ஒழுங்காற்றுக் குழு’ என்ற இரண்டு அமைப்புகள் அவசியம் என்பதை அழுத்தந்திருத்தமாகச் சொல்லியிருந்தது. இவை அமைக்கப்படாதபட்சத்தில், காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு வெற்றுக் காகிதமாகவே இருக்கும் என்பதையும் பதிவுசெய்திருந்தது. இந்திய நதிநீர்த் தகராறு சட்டம் 1956-ன்படி, தீர்ப்பாயங்கள் என்கிற நடுவர் மன்றங்கள் தருகின்ற தீர்ப்புகள் உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு இணையானவை என்பதை இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவுகள் உறுதியாகச் சொல்வது குறிப்பிடத்தக்கது.

பொறுமை காத்த முதல்வர்

இந்நிலையில், காவிரி மேலாண்மை வாரியத்துக்குப் பதிலாக மத்திய நீர்வளத் துறை அமைச்சர் தலைமையில் 11 பேர் கொண்ட கண்காணிப்புக் குழுவையும், 6 பேர் கொண்ட காவிரித் தீர்ப்பை நடைமுறைப்படுத்துதல் குழுவையும் அமைக்க வேண்டும் என்று மத்திய நீர்வளத் துறைச் செயலாளருக்குக் கடிதம் எழுதியது கர்நாடக அரசு. காவிரி மேற்பார்வை ஆணையம் என்ற அமைப்பை உருவாக்க மத்திய அமைச்சரவைக்கு வரைவு ஒன்றை மத்திய நீர்வளத் துறை அமைச்சகம் தாக்கல் செய்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகின. தமிழக அரசு விரைந்து செயல்படவேண்டுமென எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. ஆனால் தமிழக முதல்வரோ, “கெடு தேதி முடியும்வரை காத்திருப்போம்” என்று அதீத நம்பிக்கையுடன் பேசிவந்தார். காவிரி மேலாண்மை வாரியத்தை அமைத்துத்தர வேண்டும் என்று வலியுறுத்தி தமிழக சட்டமன்றத்தில் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதற்கிடையே கர்நாடக சட்ட மன்றத்துக்குத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. மத்திய அரசு என்ன செய்யப்போகிறது என்று காத்திருந்தது தமிழகம். காலக்கெடு தேதியான 2018 மார்ச் 29ம் தேதி வந்தது. ஆனால் காவிரி மேலாண்மை வாரியத்துக்கான அறிகுறிகளே இல்லை. விளைவு, தமிழகத்தில் எதிர்க்கட்சிகள் கொந்தளித்தன.

ஆளும் அதிமுகவிடமிருந்து முதன்முறையாக எதிர்வினை வந்தது. ஏப்ரல் 2-ம் தேதி அதிமுக சார்பில் மாவட்டத் தலைநகரங்களில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என்று அறிவித்தார் துணை முதல்வர் ஓபிஎஸ். பிறகு உண்ணாவிரதம் ஒருநாள் தள்ளிவைக்கப்பட்டது.

மத்திய அரசின் ‘சந்தேகங்கள்’

இத்தகைய பரபரப்பான சூழ்நிலையில் தமிழகத்துக்கு அடுத்த அதிர்ச்சி காத்திருந்தது. ஆம், காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பாக ஸ்கீம் என்கிற வார்த்தையால் எழுந்திருக்கும் சர்ச்சை, கர்நாடகத் தேர்தல் அறிவிப்பு ஆகியனவற்றை மையப்படுத்தி, 31 மார்ச் 2018 அன்று உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தது மத்திய அரசு. அந்த மனுவில் சில கேள்விகள் எழுப்பப்பட்டிருந்தன.

ஸ்கீம் (திட்டம்) என்றால் என்ன, அந்தத் திட்டத்தை மத்திய அரசு அமைக்க முடியுமா, காவிரி மேலாண்மை வாரியத்திலிருந்து மாறுபட்ட அமைப்பை மத்திய அரசு ஏற்படுத்த முடியுமா என்றெல்லாம் கேள்விகளை முன்வைத்திருக்கிறது மத்திய அரசு.

உச்ச நீதிமன்றம் விதித்த கெடு தேதி முடிந்தபிறகு மத்திய அரசு தாக்கல் செய்திருக்கும் இந்த மனுவின் ஒவ்வொரு அம்சமும் விமர்சனத்துக்குள்ளாகியிருக்கிறது. கர்நாடகத்தின் பார்வையிலிருந்து பிரச்சினையை அணுகி, கர்நாடகத்தின் குரலாகவே மத்திய அரசு ஒலிக்கிறது என்ற விமர்சனத்தைத் தமிழக அரசியல் கட்சிகள் எழுப்பின. மத்திய அரசின் இந்த மனு காவிரி நடுவர் மன்றமும், உச்ச நீதிமன்றமும் அளித்துள்ள தீர்ப்புகளுக்கு முரணானது என்று கூறினார் முதல்வர் பழனிச்சாமி. யாரும் எதிர்பாராத வகையில், எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் நேரில் கலந்துகொண்டு, ஒருநாள் முழுக்க உண்ணாவிரதம் இருந்திருந்திருக்கிறார்கள்.

தமிழகத்தின் உயிர்நாடிப் பிரச்சினைகளுக்காக மாநிலத்தின் முதல்வரே உண்ணாவிரதத்தில் பங்கேற்பது என்பது முக்கியமான நிகழ்வு. தமிழக முதல்வர் பழனிச்சாமி இந்த நிலைப்பாட்டை எடுத்திருக்கும் நிலையில், மத்திய அரசு தாக்கல் செய்த கால அவகாசம் கோரும் மனுவை உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொண்டிருக்கிறது. இது காவிரி மேலாண்மை வாரியத்தை அமைத்துக்கொடுப்பதில் குழப்பத்தை உருவாக்குமா, தெளிவைக் கொடுக்குமா என்பதுதான் தமிழகத்தின் தற்போதைய எதிர்பார்ப்பு!

-ஆர்.முத்துக்குமார், எழுத்தாளர்.

‘காவிரி: அரசியலும் வரலாறும்’

உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்.

தொடர்புக்கு: writermuthukumar@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x