Published : 18 Apr 2024 06:25 AM
Last Updated : 18 Apr 2024 06:25 AM

பாஜகவும் மக்கள் தீர்ப்பும்: ஆ.கோபண்ணா Vs நாராயணன் திருப்பதி | - அலசல் கட்டுரை

கோபண்ணா மற்றும் நாராயணன் திருப்பதி

பாஜகவுக்கு ஏன் வாக்களிக்க கூடாது? - ஆ.கோபண்ணா, மாநில துணைத் தலைவர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி: பத்து ஆண்டு கால பாஜக ஆட்சியில் கொடுத்த வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை. இந்திய பொருளாதார வளர்ச்சியை இரு மடங்காக கூட்டுவேன் என்ற இலக்கும் எட்டப்படவில்லை.

கருப்பு பணத்தை ஒழித்து, ஒவ்வொருவரின் வங்கிக் கணக்கிலும் ரூபாய் 15 லட்சம் டெபாசிட் செய்யப்படும் என்று கூறப்பட்டது. ஆனால், இதுவரை சொன்னதை செய்யவில்லை. பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் மூலமாக கருப்பு பணம் ஒழியும் என்றார்கள். ஆனால், கருப்பு பணம் வெள்ளை பணமாக மாறியதுதான் நடந்தது.

இந்திய பொருளாதாரத்தை 2024-ம் ஆண்டுக்குள் ரூ.390 லட்சம் கோடியாக உயர்த்துவேன் என்று பிரதமர் மோடி 2019-ல் தெரிவித்தார். ஆனால், 2023-24 -ல் ரூ.173 லட்சம் கோடி என்ற சொற்ப வளர்ச்சியே ஏற்பட்டுள்ளது.

மக்களின் வாங்கும் சக்தி: 2014-ல் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஆட்சி பதவி விலகியபோது டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 55.78 ஆக இருந்தது. இது 2024-ல்ரூபாய் 83.59 ஆக கடுமையாக சரிந்துள்ளது. இதுதான் பாஜகவின் டாலர் புரட்சி. இதன் காரணமாக இந்திய மக்களின் வாங்கும் சக்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் மொத்த கடன் 1947 முதல் 2014 வரை 55 லட்சம் கோடி ரூபாய். 2014 முதல் 2024 வரை பாஜக ஆட்சியில் மொத்த கடன் 183 லட்சம் கோடி ரூபாய். 10 ஆண்டுகளில் ரூபாய் 128 லட்சம் கோடி கடனை பாஜக பெற்றிருக்கிறது. 2014-க்கு முன்பு ஒவ்வொரு இந்தியரின் மீதும் ரூபாய் ரூ.43,000 கடன் இருந்தது. அது 2024 -ல்ரூ.1 லட்சத்து 27 ஆயிரமாக உயர்ந்திருக்கிறது.

பாஜக ஆட்சியில் 25 கோடி பேரை வறுமையிலிருந்து மீட்டு விட்டதாக திரும்பத் திரும்ப கூறப்படுகிறது. 2023 டிசம்பரில் ஹின்ட்ரைஸ் பவுண்டேஷன் வெளியிட்ட உலக வறுமை குறியீட்டு அறிக்கையின்படி, 125 நாடுகளில் 2022-ல் 107-வது இடத்தில் இருந்தஇந்தியா, 2023-ம் ஆண்டு 111-வதுஇடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. இதுதான் பாஜகவின் வறுமை ஒழிப்பு சாதனையாகும்.

கடந்த ஏப்ரல் 16, 2014 அன்று கிருஷ்ணகிரிக்கு அருகில் பிரதமர் மோடி உரையாற்றும்போது பாஜக கூட்டணி ஆட்சிக்கு வந்தால் 70 கோடி பேருக்கு வேலை கொடுப்போம் என்று கூறினார்.

ஆனால் 2023 அக்டோபர் நிலவரப்படி இந்திய பொருளாதார கண்காணிப்பு மைய அறிக்கையின்படி 40 கோடியே 20 லட்சம் பேர் வேலையில்லாமல் உள்ளனர்.

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளின் வருமானத்தை இருமடங்காக கூட்டுவோம் என்று பாஜக 2014 தேர்தல் அறிக்கையில் கூறியது. ஆனால் கடந்த 10 ஆண்டுகளாக கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத காரணத்தால் தலைநகர் டெல்லியில் ஓராண்டுக்கு மேல் விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தினார்கள்.

சர்வதேச ஆராய்ச்சி நிறுவனமான ஆக்ஸ்பார்ம் 2023-ல் வெளியிட்ட அறிக்கையின்படி இந்தியாவில் 10 சதவீதத்தினர் மொத்த சொத்து மதிப்பில் 77 சதவீத சொத்துகளை குவித்து கொண்டுள்ளனர்.

அதேநேரத்தில் 50 சதவீதத்தினர் அதாவது 67 கோடி இந்தியர்களின் சொத்து மதிப்பு 1 சதவீதம்தான் உயர்ந்துள்ளது. இதன்மூலம் பாஜக ஆட்சியில் பயனடைந்தவர்கள் கார்ப்பரேட்டுகளே தவிர, ஏழை எளியவர்கள் அல்ல.

28,821 பேர் மட்டுமே பேசுகிற சம்ஸ்கிருத மொழிக்கு கடந்த 8 ஆண்டுகளில் மத்திய அரசு ஒதுக்கிய தொகை ரூ.1,488 கோடி. ஆனால், செம்மொழி தகுதி பெற்ற 8 கோடி மக்கள் பேசுகிற தமிழ் மொழிக்கு ஒதுக்கிய தொகை ரூ.74 கோடி.

நியாய பத்திரம்: சமீபத்தில் அகில இந்திய காங்கிரஸ் கட்சி வெளியிட்ட நியாய பத்திரம்என்ற தேர்தல் அறிக்கையில் சமூகநீதி, பெண்களுக்கான சமஉரிமை, சமவாய்ப்பு, விவசாயிகள் நலன், சிறுபான்மையினர் பாதுகாப்பு, மாநிலஉரிமைகள், கருத்துசுதந்திரம், மீனவர் நலன், கல்விக் கடன் ரத்து, நீட் தேர்வு ரத்து, 100 நாள் வேலை திட்ட ஊதியம் ரூ.400 ஆக உயர்வு, சாதிவாரி கணக்கெடுப்பு.

அரசு வேலைகளில் பெண்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு, பெண்களுக்கு ஆண்டுக்கு ரூபாய் 1 லட்சம் வழங்குகிற மகாலட்சுமி திட்டம், மீனவர்களுக்கு மீண்டும் டீசல் மானியம், 12-ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு மதியஉணவு, மூத்த குடிமக்களுக்கு ரயில்களில் மீண்டும் கட்டண சலுகை, நாடு முழுவதும் ஒன்றிய அரசு பணியிடங்களில் காலியாக உள்ள 30 லட்சம் பணியிடங்கள் நிரப்பப்படும்.

விவசாயிகளுக்கு எம்.எஸ். சுவாமிநாதன் குழு பரிந்துரையின்படி குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டப் பாதுகாப்பு என மக்கள் நலன் சார்ந்த வாக்குறுதிகள் வழங்கப்பட்டிருக்கின்றன.

எனவே, கடந்த 10 ஆண்டுகால பாஜக ஆட்சியில் ஏற்பட்ட பொருளாதார பேரழிவுக்கும், மக்களை பிளவுபடுத்துகிற அரசியலுக்கும் முடிவுகட்ட வேண்டிய தேர்தலாக இந்த மக்களவை தேர்தல் அமைந்திருக்கிறது. பாஜக ஆட்சியை அகற்றுகிற வகையில் இண்டியா கூட்டணியை ஆதரிக்க வேண்டுமென வாக்காள பெருமக்களை அன்போடு கேட்டுக் கொள்கிறோம்.

பாஜகவுக்கு ஏன் வாக்களிக்க வேண்டும்? - நாராயணன் திருப்பதி, மாநில துணைத் தலைவர், பாரதிய ஜனதா கட்சி: இந்தியாவின் கட்டமைப்பை பெருக்க, முதலீடுகளை ஈர்த்து, தொழில் முன்னேற்றத்தை முன்னெடுத்துச் சென்று வேலைவாய்ப்புகளை பெருக்கி இந்தியாவை உலகின் மூன்றாவது பொருளாதார நாடாக, வளர்ந்த நாடாக உருவாக்கும் உன்னத பாதையில் செல்லும் நரேந்திர மோடி மூன்றாவது முறையாகவும் பிரதமராக பொறுப்பேற்பார்.

பத்து வருடங்களுக்கு முன்னர் அடித்தட்டு மக்கள் நினைத்து கூட பார்த்திராத பல்வேறு அடிப்படை தேவைகளை நரேந்திர மோடி அரசு செயல்படுத்தியிருக்கிறது. சொந்த வீடு, தடையில்லா மின்சாரம், எப்போதும் குடிநீர், சுகாதார பாதுகாப்பு என்ற தேவைகளை அனைவருக்கும் வீடு, மின்சாரம், குழாய் மூலம் குடிநீர், சுகாதார காப்பீடு போன்ற திட்டங்களின் மூலம் மக்களிடையே நேரடியாக சென்றடைய செய்துள்ளார் மோடி.

2014-ல் ஒரு தேநீர் அருந்த அல்லது காய்கறி வாங்குவதற்கு கூட 'கூகுள் பே'மூலம் அலைபேசி வழியே பணம் செலுத்தலாம் என்று இந்திய மக்கள் யாரும் கற்பனையில் கூட நினைத்திருக்க மாட்டார்கள்.

இந்த நிலையில் அலைபேசி மூலம் செலுத்தப்படும் UPI அல்லது ஒருங்கிணைந்த கட்டண பரிவர்த்தனைகள் மூலம் 10-வது வருடமான2023-24-ல் மட்டும் 10,000 கோடிக்கும் அதிகமான பரிவர்த்தனைகள் நடைபெற்றுள்ளன என்பது, மக்களின் தேவையறிந்து செயல்பட்ட பாஜக அரசின் உறுதியை வெளிப்படுத்தியுள்ளது.

2014-ல் 11 கோடி குடும்பங்கள் மட்டுமே (சுமார் 44 கோடி பேர்) பயன்படுத்திக் கொண்டிருந்த எரிவாயு இணைப்பு இன்று 25 கோடி குடும்பங்களுக்கு (சுமார் 100 கோடி பேர்) சென்றடைந்துள்ளது என்பது சாதாரண ஏழைகுடும்ப பெண்களின் வாழ்வில் ஒளியேற்றியுள்ளது என்பதை படம் பிடித்து காட்டுகிறது.

JAM என்ற ஜன்தன் (அனைவருக்கும் வங்கிக்கணக்கு), ஆதார், அலைபேசி ஆகியவற்றை இணைத்து நேரடியாக பயனாளிகளின் வங்கிக் கணக்கில் சம்பளத்தை, மானியத்தை செலுத்தும் திட்டத்தால் அத்திட்டங்களில் நடைபெற்றுக் கொண்டிருந்த கூட்டுக் கொள்ளை, ஊழல் ஒழிக்கப்பட்டு பயனாளிகளின் முழு உரிமை தொகை செலுத்தப்படுகிறது.

விவசாயிகளுக்கு காப்பீட்டு திட்டம், விவசாயிகள் கவுரவ நிதி, நுண்நீர் பாசனத்திட்டம், உரமானியம், பல லட்சம் கோடிகளுக்கு விவசாயக்கடன், 23 பயிர்களுக்கு குறைந்த பட்ச ஆதாரவிலை, மின்னணு சந்தை உள்ளிட்ட பல்வேறு திட்டங்களால் விவசாய உற்பத்தி மட்டுமல்ல, விவசாய பொருட்களின் ஏற்றுமதியும் அதிகரித்திருப்பது கண்கூடு.

தொழில் துறையில் ஒற்றை சாளர முறை, எளிதான உரிமங்கள், முத்ரா திட்டம், ஸ்டார்ட்-அப், ஸ்டாண்ட்-அப்,உடனடி வங்கிக்கடன், ஒரு மாவட்டம்ஒரு பொருள், என பல்வேறு சலுகைகள் மற்றும் திட்டங்களால் தொழில் முனைவோர் உந்தப்பட்டு சிறு குறுதொழில் முன்னேற்றம் அடைந்துள்ளதோடு சுய வேலைவாய்ப்பும், வேலைவாய்ப்பும் பெருகியுள்ளன.

பெண்களுக்கான திட்டங்கள்: 33 சதவீத இடஒதுக்கீடு, செல்வ மகள் சேமிப்பு திட்டம், முத்ரா கடனுதவி, ஜன்தன் வங்கிக் கணக்கு, அனைவருக்கும் வீடு போன்ற பலத்திட்டங்களில் பெண்களுக்கு முன்னுரிமை அளித்ததால் பெண்கள் முன்னேற்றம் அடைய குடும்பங்கள் பொருளாதார ரீதியாக முன்னேறின.

தேசிய நெடுஞ்சாலைகள், பிரதம மந்திரி கிராம சாலைகள், உள்ளூர் நீர் போக்குவரத்து, ரயில்வே துறையில் புதிய பாதைகள், விமான நிலையங்கள் என கட்டமைப்புகளை இரு மடங்கு அதிகரித்ததால் கிராமங்கள் நகரங்களோடு இணைக்கப்பட்டு கல்வி, வேலை வாய்ப்பு, விவசாயம் என அனைத்து துறைகளிலும் முன்னேற்றத்தை காண முடிகிறது.

கரோனா தொற்று காலத்தில் இடர்பாட்டை மத்திய அரசு கையாண்ட விதம் மற்றும் தடுப்பூசியை விரைந்து கண்டுபிடித்ததோடு, 140 கோடி மக்களுக்கும் இருமுறை செலுத்திய அமைப்பு மற்றும் நேர்த்தி உலகத்தில் எந்த நாடும் செய்யாத, இனியும் செய்யமுடியாத சாதனையாகும். ராமர் பிறந்தஅயோத்தியில் கோயில் கட்டியது இந்த நாட்டின் கலாச்சாரத்தை, பண்பாட்டை மீட்டெடுத்தது.

ஏழைகள், நடுத்தர மக்கள், பெரு நிறுவனங்கள், மாணவர்கள், பெண்கள், முதியோர், விளையாட்டு வீரர்கள், அரசு ஊழியர்கள் என அனைத்து மக்களுக்கும் துறை சார்ந்த பல்வேறு திட்டங்கள் வகுக்கப்பட்டதோடு, வளர்ச்சியடைந்த இந்தியா என்ற இலக்கை நோக்கி தன் மூன்றாவது தொடர் வெற்றியை நோக்கி நடை போடுகிறது நரேந்திர மோடியின் பாரதிய ஜனதா கட்சி.

தனிநபர் சக்தி பெற, குடும்பம் நலம் பெற, நாடு வளம் பெற பாஜகவிற்கு வாக்களிக்க வேண்டும் என்பதற்கு இதுவே சான்று!

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x