Published : 10 Apr 2018 09:12 AM
Last Updated : 10 Apr 2018 09:12 AM

உத்தர பிரதேசத்தின் அரசியல் மாற்றம் தற்காலிகமானதா?

ன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் வீரியத்தைக் குறைக்கும் வகையில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்ததால், ஒடுக்கப்பட்ட மக்கள் நாடு முழுவதும் கடந்த வாரம் கிளர்ந்தெழுந்தனர். இதுவரை நடந்திராத அபூர்வ நிகழ்ச்சியாக, ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக சமாஜ்வாடி கட்சித் தொண்டர்கள் திரண்டனர். அக்கட்சியினர் மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் தொண்டர்களைத் தாக்குவது, ஒடுக்கப்பட்ட மக்களிடம் விரோதம் பாராட்டுவதே கடந்த கால வரலாறாக இருந்த நிலையில், வரவேற்கத்தக்க மாற்றம் இப்போது ஏற்பட்டிருக்கிறது. அம்பேத்கரின் 127-வது பிறந்ததினத்தை வெகு விமர்சையாகக் கொண்டாடும் திட்டமும் சமாஜ்வாடி கட்சிக்கு இருக்கிறது.

மக்கள் ஆதரவு

உத்தர பிரதேசத்தின் கோரக்பூர், புல்பூர் மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்ட சமாஜ்வாடி வேட்பாளர்களுக்கு மாயாவதி தானாகவே முன்வந்து ஆதரவு தெரிவித்தார். இரு கட்சியினரும் இணைந்து செயல்பட ஆரம்பித்தனர். முதல்வர் யோகி ஆதித்யநாத் ஐந்து முறை வென்ற கோரக்பூர் தொகுதியிலும், துணை முதல்வர் கேசவ பிரசாத் மௌரியா வென்ற புல்பூர் தொகுதியிலும் பாஜக படுதோல்வி அடைந்தது. 2014 மக்களவைத் தேர்தல் வெற்றியைவிடப் பெரிதாக 2017 சட்ட மன்றத் தேர்தலில் பாஜகவுக்கு வெற்றி கிடைத்த பிறகு இந்தப் படுதோல்வி ஏற்பட்டதற்கு ஒரே காரணம் மாயாவதி - அகிலேஷ் யாதவ் கூட்டணியை மக்கள் ஏற்றுக்கொண்டதால்தான்.

இந்தக் கூட்டணி இப்படியே அடுத்த தேர்தல் வரை தொடருமா என்று பார்க்க வேண்டும். பாம்பும் கீரியும் ஒன்றாக வந்து வாக்கு கேட்கின்றன என்று பாஜக அத்தேர்தல் பிரச்சாரத்தின்போது கேலி பேசியது. இடைத்தேர்தல் அறிவிப்புக்கு முன்னால்வரை அவ்விரு கட்சிகளும் அப்படித்தான் இருந்தன. இரு கட்சிகளும் சேர்ந்து 1993-ல் அமைத்த கூட்டணி அரசு 2 ஆண்டுகள் பதவியில் இருந்த பிறகு பிணக்கு காரணமாகக் கவிழ்ந்தது. 25 ஆண்டுகளுக்கு முன்னால் அப்படி நடக்கக் காரணம் இரு கட்சியினருக்கும் இடையே இருந்த முரண்பாடுகளும், அரசியல் செல்வாக்கைப் பெருக்கிக்கொள்ளும் ஆர்வமும்தான்.

இழுபறி உருவாகுமா?

இனி வரும் காலங்களில் அகிலேஷ், பாஜக தலைவர் அமித் ஷா இடையில் மோதல் தீவிரமாகும். இருவரில் யார் வெற்றியாளர் என்பதை மாயாவதிதான் தீர்மானிப்பார். இப்போதைக்கு சமாஜ்வாடியுடன் இணக்கமாக இருந்தாலும் தனது நிலையை எளிதில் மாற்றிக்கொள்ளும் குணம் உள்ளவர் மாயாவதி. தன்னுடைய ஆதரவாளர்களின் வாக்குகள் முழுக்க சமாஜ்வாடிக்குச் செல்லும், சமாஜ்வாடிகள் அதே போல முழு வாக்குகளையும் தங்களுடைய கட்சி வேட்பாளர்களுக்குத் தருவார்களா என்பதுதான் அந்தச் சந்தேகம். இந்த மூன்று தலைவர்களுக்கு இடையிலான முக்கோணப் போட்டியில் வலுமிக்கவர் அமித் ஷா. பாஜகவின் தலைமைப் பொறுப்பை ஏற்றது முதல் அவர் வெற்றிகளாகக் குவித்துக்கொண்டிருக்கிறார்; ஏராளமாக நிதி வைத்திருக்கிறார். உத்தர பிரதேசம் தொடங்கி வட கிழக்கு மாநிலங்கள் வரை பாஜகவின் வெற்றிப் பாதை நெடுகிலும் கட்சித் தாவல்களும், கூட்டணி சேர்தலும் - கூட்டணி உடைத்தலுமாகக் காட்சி தருகின்றன.

மாயாவதியை உடன் வைத்திருக்க அகிலேஷ் தன்னால் முடிந்த அனைத்தையும் செய்வார்; மாயாவதியை அவரிடமிருந்து விலக்க அமித் ஷா எல்லா எதிர் நடவடிக்கைகளையும் கையாள்வார். மாயாவதியுடன் கூட்டு வைக்க நினைக்க மாட்டார், கூட்டு என்றால் அதிகமான தொகுதிகளை மாயாவதிக்குக் கொடுக்க வேண்டிவரும். சமாஜ்வாடியையும் பகுஜன் சமாஜையும் பிரிக்க எல்லா தந்திரங்களையும் கையாள்வார். இந்தப் போட்டியில் இனி இருவராலும் பின்வாங்க முடியாது. அகிலேஷைப் பொறுத்தவரை அரசியலில் நிலைத்திருக்க மீண்டும் ஒரு வெற்றி தேவை; நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக உத்தர பிரதேசத்தில் பெரியதொரு வெற்றி கட்டாயம் என்ற நிலையில் இருக்கிறார் அமித் ஷா.

தரவுகள் கூறும் கதை

அகிலேஷ் ஏன் கூட்டணிக்கு ஆர்வமாக இருக்கிறார் என்பதை எல்லாத் தேர்தல்களிலும் கிடைத்த வாக்குகள் உணர்த்துகின்றன. பகுஜன் சமாஜுடன் சமாஜ்வாடி கூட்டு சேராவிட்டால் அக்கட்சி அழிந்துவிடும். 2009-ல் 23.26% வாக்குகள் பெற்ற சமாஜ்வாடி 23 தொகுதிகளைப் பெற்றது. 2014-ல் 22.35% வாக்குகள் பெற்று 5 தொகுதிகளில் மட்டும் வென்றது. சட்ட மன்றத் தேர்தலில் 2012-ல் 29.15% வாக்குகள் பெற்று 224 தொகுதிகளில் வென்று ஆட்சியைப் பிடித்த சமாஜ்வாடி 2017-ல் 21.82% வாக்குகளை மட்டும் பெற்று 47 தொகுதிகளில் வென்றது. பகுஜன் சமாஜ் கூட்டணிக்கு சம்மதிக்கும் இல்லாவிட்டால் அதன் அரசியல் வாழ்க்கையும் முடிவுக்கு வந்துவிடும் என்று அதற்குத் தெரியும் என்று சமாஜ்வாடி கருதுகிறது.

2009-க்குப் பிறகு பகுஜன் சமாஜின் செல்வாக்கு சரிவு, சமாஜ்வாடியைவிட அதிகம். 2007-ல் பெரும்பான்மைத் தொகுதிகளைப் பெற்ற பகுஜன் சமாஜ், சமாஜ்வாடி - காங்கிரஸை விட பின்தங்கி 2009-ல் 20 மக்களவைத் தொகுதிகளை மட்டுமே பெற முடிந்தது. 2014-ல் 19.77% வாக்குகளைப் பெற்றது. ஆனால் ஒரு தொகுதியில்கூட வெற்றி பெறவில்லை. 2017-ல் கட்சி மீண்டும் வளர்வதற்குப் பதிலாக, 22.23% வாக்குகளைப் பெற்று 19 தொகுதிகளில் மட்டும் வென்றது. இரண்டு கட்சிகளுக்குமே மாற்று வழியில்லை என்ற நிலை ஏற்பட்டிருக்கிறது என்று சமாஜ்வாடி கட்சியின் சுதிர் பன்வார் சுட்டிக்காட்டுகிறார்.

சமாஜ்வாடியும் பகுஜன் சமாஜ் கட்சியும் இப்படி கூட்டுசேர்ந்து பெரும்பான்மை இடங்களைக் கைப்பற்றுமாறு அமித் ஷா விட்டுவிட மாட்டார். மாயாவதி நிதி தொடர்பான சிக்கலில் ஆழ்ந்திருக்கிறார். கட்சியின் சொத்துகள் பெருகியுள்ளன. அதே சமயம் வருவாய்க்குப் பொருந்தாத வகையில் பணம் சேர்த்ததாக வருமான வரித் துறையின் சோதனைகளுக்கு ஆளாகியிருக்கிறார். இதற்கு முன்னரும் மேற்கொள்ளப்பட்ட ஒரு கூட்டணி முயற்சி, ‘நெருக்குதல்’ காரணமாகத்தான் தோற்றது என்று இரு கட்சிகளின் வட்டாரங்களும் தெரிவிக்கின்றன.

எலி - பூனை விளையாட்டு

கூட்டணிக்கு முயன்று பார்ப்பதைத் தவிர வேறு வழியில்லை மாயாவதிக்கு. பகுஜன் சமாஜுடன் கூட்டு வைப்பது பாஜகவுக்கு பொருந்தி வராது. அதேசமயம் தங்களுக்கு எதிராக பெரிய இரு கட்சிகளிடையே கூட்டு ஏற்படாமல் தடுக்க முயலும். இதற்கு சமாஜ்வாடி கட்சி உடன்படாது. பகுஜன் சமாஜ் உடன்பட வாய்ப்பிருக்கிறது. சமீபகாலத்தில் பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்த முஸ்லிம், பிற்படுத்தப்பட்ட வகுப்புத் தலைவர்கள் பலரைக் கட்சியிலிருந்து நீக்கியிருக்கிறார் மாயாவதி. இரு கட்சிகளிலிருந்தும் யாதவ் சமூகத்தவரும் ஒடுக்கப்பட்ட மக்களில் ஒரு பிரிவினரும் விலகிவிட்டனர். எனவே, இரு கட்சிகளும் இணைந்து செயல்பட்டால்தான் இந்த விலகல்கள் ஓயும். ஒடுக்கப்பட்ட மக்கள் இப்போது பாஜக மீது கோபத்திலும் அதிருப்தியிலும் இருக்கிறார்கள் என்பதை பகுஜன் சமாஜ் உணர்ந்திருக்கிறது. எனவே பிற்படுத்தப்பட்ட மக்களில் இதர பிரிவினரைத் தங்கள் பக்கம் இழுக்க பாஜக முயற்சிகளைத் தொடங்கும். அப்படி சேர்த்தாலும்கூட சமாஜ்வாடி - பகுஜன் சமாஜ் கூட்டணிதான் வெற்றிபெறும். பாஜகவைத் தோற்கடிப்பதே லட்சியம் என்று அறிவித்துவிட்டார் மாயாவதி. ஆனால், கர்நாடகத்தில் காங்கிரஸை ஆதரிக்காமல் மதச்சார்பற்ற ஜனதா தளத்துடன் சேர்ந்திருக்கிறார். இது மறைமுகமாக பாஜகவுக்குத்தான் உதவும்.

உத்தர பிரதேசத்தில் அரசியல் காட்சிகள் இனி எப்படி மாறினாலும், இந்த எலி - பூனை விளையாட்டு மிகவும் சுவாரசியமாக இருக்கப் போவது நிச்சயம்.

தமிழில்: சாரி,

© தி இந்து ஆங்கிலம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x