Last Updated : 21 Mar, 2024 08:45 AM

3  

Published : 21 Mar 2024 08:45 AM
Last Updated : 21 Mar 2024 08:45 AM

மக்களவை மகா யுத்தம்: திருப்புமுனையாகுமா தேர்தல் பத்திர விவகாரம்?

இந்திய அரசியலில் ‘மிஸ்டர் க்ளீன்’ அல்லது ‘திருவாளர் பரிசுத்தம்’ என முன்னிறுத்தப் பட்டவர்களில் முக்கியமானவர்கள் ராஜீவ் காந்தியும் நரேந்திர மோடியும். முன்னவரின் அரசியல் வீழ்ச்சிக்கு ஊழல் புகார்கள், வேண்டப்பட்டவர்களுக்குச் சலுகை அளித்தது, அமலாக்கத் துறை நடவடிக்கைகளில் தலையீடு என்பன உள்ளிட்ட எதிர்மறை அம்சங்கள் வழிவகுத்தன. வரலாறு திரும்புகிறது. ஊழலுக்கு எதிரானவராக முன்னிறுத்தப்பட்ட மோடியின் தலைமையிலான அரசு - இன்றைக்குத் தேர்தல் பத்திர விவகாரத்தில் காத்திரமான விமர்சனங்களை எதிர்கொண்டிருக்கிறது.

உச்ச நீதிமன்றம் பிறப்பித்துவரும் உத்தரவுகளும், எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களும் ‘மோடி அப்பழுக் கற்றவர்’ என்னும் பிம்பத்தின் மீது கருநிழலை விழச் செய்திருக்கின்றன. இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்த பிறகும் மீண்டும் மோடிதான் பிரதமராவார் என்று பாஜகவினர் அறுதியிட்டுக் கூறுகின்றனர். பாஜகவுக்குப் பங்கம் நேரும் எனக் கருத்துக் கணிப்புகளும் இதுவரை கூறவில்லை. இது சாத்தியமா?

பழைய பாடம்: இந்திரா காந்தி படுகொலைக்குப் பின்னர் அவரது மகன் ராஜீவ் காந்தி அவசரகதியில் பிரதமராக்கப்பட்டபோது, அவர் அரசியல் அனுபவமற்றவர் என்று பிரணாப் முகர்ஜி உள்ளிட்ட காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சிலர் கருதினர். இதையடுத்து, தன்னை ஊழலுக்கு எதிரானவர் என்று சித்தரித்துக்கொள்ள விரும்பிய ராஜீவ் காந்தி, அதற்கான கடும் பிரயத்தனங்களில் ஈடுபட்டார்.

எனினும், சில ஆண்டுகளிலேயே, ‘போஃபர்ஸ்’ பீரங்கி பேர ஊழல் புகார் அவருக்கும் காங்கிரஸுக்கும் பெரும் தலைவலியாக மாறியது. கிட்டத்தட்ட அதேபோன்ற நிலையைத் தேர்தல் பத்திர விவகாரத்தில் மோடி அரசு எதிர்கொள்கிறது.

இதற்கு முன்னர் ரஃபேல் போர் விமான பேரம், பெகாசஸ் வேவு மென்பொருள் விவகாரம் உள்ளிட்ட சர்ச்சைகள் எழுந்தபோது, மோடி அரசு தனக்கே உரிய பாணியில் அவற்றை அநாயாசமாகக் கடந்துவந்தது.

இன்றைக்கு நிலவரம் வேறு மாதிரியானது. தேர்தல் பத்திரம் தொடர்பான முழுமையான தரவுகளைப் பாரத ஸ்டேட் வங்கி தந்தே ஆக வேண்டும் என உச்ச நீதிமன்றம் உறுதியாக நிற்கிறது. இதுவரை இந்தியாவில் நடந்திராத பெரும் ஊழல் என்று தேர்தல் பத்திரத் திட்டத்தை அழைக்கிறது காங்கிரஸ்.

“இதுவரை அரசு நிறுவனங்களை இந்த அளவுக்கு யாரும் தவறாகப் பயன்படுத்தி வசூல் வேட்டை நடத்தியிருக்க முடியாது” என்கிறது ஆம் ஆத்மி கட்சி. இவ்விவகாரம் தொடர்பாக பாஜக இதுவரை வெளிப்படையாகப் பேசவில்லை. எனினும், தேர்தல் பத்திரம் தொடர்பான புள்ளிவிவரங்கள் குறித்து மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா கேள்வி எழுப்பியிருக்கிறார்.

“மொத்த தேர்தல் பத்திரங்களின் மதிப்பு ரூ.20,000 கோடி. பாஜகவுக்குக் கிடைத்தது ரூ.6,000 கோடிதான். மிச்சத் தொகைக்கான தேர்தல் பத்திரங்கள் என்னவாகின?” என்பது அவரது கேள்வி. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனோ, “தேர்தல் பத்திர முறைக்கு முன்பு இருந்த நடைமுறை மட்டும் 100% குறைபாடற்றதா என்ன?” என்று வினவியிருக்கிறார்.

பிரதமர்மோடி இதுவரை தேர்தல் பத்திர விவகாரம் குறித்துப் பேசவில்லை. மாறாக, எதிர்க்கட்சிகள் மீது ஏராளமான ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்துப் பேசிவருகிறார். எல்லாவற்றையும் தாண்டி, “நாங்கள் ஊழல் கறை படியாதவர்கள்” என்று பேசிவந்த பாஜகவினர் தற்போது, “எதிர்க்கட்சிகள் மட்டும் என்ன உத்தமமா?” என்று கேட்கும் நிலைக்கு வந்திருக்கிறார்கள்.

முக்கிய வித்தியாசங்கள்: என்னதான் திருவாளர் பரிசுத்தம் என முன்னிறுத்தப்பட்டாலும் மோடியும் ஊழல் புகார்களுக்கு அந்நியமானவர் அல்ல. அவர் தலைமையிலான குஜராத் அரசு, அதானி எரிசக்தி நிறுவனத்துக்கும் எஸ்ஸார் ஸ்டீல் நிறுவனத்துக்கும் சலுகை காட்டியதால், குஜராத் மாநில பெட்ரோலிய நிறுவனத்துக்கு (ஜிஎஸ்பிசி) ரூ.16,000 கோடி இழப்பு ஏற்பட்டதாக, 2012இல் மத்தியக் கணக்குத் தணிக்கையாளர் (சிஏஜி) முன்வைத்த குற்றச்சாட்டுகள் முக்கியமானவை.

ஆனால், 2ஜி ஊழல் முறைகேடு, நிலக்கரி பேரம் உள்ளிட்ட மெகா குற்றச்சாட்டுகளில் சிக்கித் தவித்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கு மாற்றாக - ஊழலுக்கு எதிராக உண்ணாவிரதப் போராட்டம் நடத்திய அன்னா ஹசாரே உள்ளிட்டோரின் புண்ணியத்தில் - வலுவான தலைவராக பாஜக சார்பில் மோடி முன்னிறுத்தப்பட்டார். வெற்றி கண்டார். 2019 தேர்தலிலும் அவரது அலை, வெற்றி தேடித்தந்தது.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் இரண்டாவது ஆட்சிக்காலத்தில் (2009-2014) ஊழல் புகார்கள் மட்டுமல்லாமல், கூட்டணிக்குள்ளேயே நிறைய குழப்பங்கள் இருந்தன. குறிப்பாக, இன்றைக்கும் காங்கிரஸுடன் கண்ணாமூச்சி ஆடிக்கொண்டிருக்கும் மம்தா பானர்ஜி, லோக்பால், சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீடு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் எடுத்த முரணான நிலைப்பாடுகளால் மன்மோகன் சிங் அரசு தடுமாறிக்கொண்டிருந்தது.

இதுபோன்ற பிரச்சினைகளுடன் ஊழல் புகார்களும் சேர்ந்ததால், காங்கிரஸ் அரசு 2014 தேர்தலில் பாஜகவிடம் ஆட்சியைப் பறிகொடுத்தது. ஆனால், தேர்தல் பத்திர முறைகேட்டுப் புகார் உள்ளிட்ட எதிர்மறையான அம்சங்கள் இருக்கும் சூழலிலும் ஐக்கிய ஜனதா தளம் முதல் பிஜு ஜனதா தளம் வரை பாஜகவின் நட்பை நாடுவதையே சமீபத்திய நகர்வுகள் உணர்த்துகின்றன (தென்னிந்தியா - குறிப்பாக, தமிழ்நாட்டில் நிலவரம் வேறு மாதிரியானது!).

ராஜீவ் காந்திக்கும் ரிலையன்ஸ் அதிபர் திருபாய் அம்பானிக்கும் இருந்த தொடர்பு, அந்தப் பின்னணியில் நடைபெற்றதாகச் சொல்லப்படும் முறைகேடுகள் அன்றைய காங்கிரஸ் அரசுக்குப் பிரச்சினையாக இருந்தன. அத்துடன் போஃபர்ஸ் ஊழல் புகார் தொடர்பாக ‘தி இந்து’, ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ உள்ளிட்ட முன்னணிப் பத்திரிகைகள் தொடர்ந்து பிரத்யேகமான செய்திகளை வெளியிட்டுப் பரபரப்பை ஏற்படுத்தின.

லண்டன் வாழ் தொழிலதிபர் அஜிதாப் பச்சன் (அமிதாப் பச்சன் தம்பி) மீது அமலாக்கத் துறை விசாரணைக்கு அப்போதைய நிதியமைச்சர் வி.பி.சிங் உத்தரவிட்டிருந்தபோது, அமிதாப்பின் அழுத்தத்தால் அந்த விசாரணைக்கு ராஜீவ் காந்தி முட்டுக்கட்டை போட்டதாகப் புகார்கள் உண்டு. பிரதமருக்கு நெருக்கமானவர்களாக இருந்தாலும் அவர்கள் மீது அமலாக்கத் துறைரீதியான நடவடிக்கைகளை எடுக்க வி.பி.சிங் தயங்கவில்லை என்பது இன்றைய அரசியல் சூழலில் ஆச்சரியமளிக்கக்கூடும்.

ஆனால், இன்றைக்குப் பெரும்பாலான வட இந்தியச் செய்தி ஊடகங்கள் (விதிவிலக்குகள் உண்டு!) பாஜகவுக்கு ஆதரவான நிலைப்பாட்டுடன் செயல்படுவதாகவே விமர்சிக்கப்படுகின்றன. இந்தியாவின் முன்னணி இந்தி நாளிதழான ‘தைனிக் ஜாக்ரண்’ - தேர்தல் பத்திரம் தொடர்பான செய்தியைச் சிறிய அளவிலான பெட்டிச் செய்தியாக வெளியிட்டது ஓர் உதாரணம்.

2014 மக்களவைத் தேர்தலின்போது 2ஜி அலைக்கற்றை ஊழல் புகார் தொடர்பான செய்திகள் பிரதான இடம்பிடித்ததைப் போல, தற்போது தேர்தல் பத்திரம் குறித்த செய்திகளுக்கு முக்கியத்துவம் தரப்படுவதில்லை எனக் காங்கிரஸ் கட்சியினர் சுட்டிக்காட்டுகிறார்கள்.

சூழல் மாறுமா? - 1989 இல் நடந்த மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் தோல்வியைத் தழுவியது. 1984 தேர்தலில் 414 இடங்களில் வென்றிருந்த காங்கிரஸுக்கு அந்தத் தேர்தலில் 197 இடங்கள்தான் கிடைத்தன. முந்தைய தேர்தலில் வெறும் இரண்டே இடங்களில் வென்றிருந்த பாஜக, 1989 தேர்தலில் 85 இடங்களில் வென்றதும், பாஜக உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் வி.பி.சிங் (ஜனதா தளம்) பிரதமரானதும் வரலாறு.

நேருவின் பேரன், இந்திரா காந்தியின் மகன் எனப் பெருமிதங்கள் நிறைந்த ராஜீவ் காந்தியை ஊழல் புகார்கள் காரணமாகவே மக்கள் தோற்கடித்தனர். போஃபர்ஸ் சர்ச்சைகளுடன் ஃபேர்ஃபேக்ஸ் விவகாரம், ஹெச்.டி.டபிள்யூ நீர்மூழ்கிக் கப்பல் பேரம் உள்ளிட்டவை அந்த வீழ்ச்சிக்குக் காரணமாகின. ராஜீவ் காந்தியின் ‘திருவாளர் பரிசுத்தம்’ பிம்பமும் அத்துடன் முடிவுக்கு வந்தது. உண்மையில் பாஜக தேசிய அளவில் தெம்பைப் பெற்ற முதல் தேர்தல் அதுதான்.

அதேபோன்ற தெம்பைக் காங்கிரஸ் தலைமையிலான இண்டியா கூட்டணி பெறுமா என்பது முக்கியமான கேள்வி. அரசியல் அறம் என்பதைத் தாண்டி - மக்களை நேரடியாகப் பாதிக்காத தேர்தல் பத்திர விவகாரத்தை மட்டும் பிரதானமாக வைத்துத் தேர்தலை எதிர்கொள்வது உசிதமாகாது.

மாறாக - கூட்டணியை வலுப்படுத்துவது, வாக்காளர்களிடம் நம்பிக்கை ஏற்படுத்தும் வாக்குறுதிகள், மோடி ஆட்சியில் நிகழ்ந்ததாகச் சொல்லப்படும் ஊழல்கள் குறித்து தீவிரமாக முன்னெடுக்க வேண்டிய பிரச்சாரங்கள் எனப் பல படிகளை எதிர்க்கட்சிகள் கடந்தாக வேண்டும்.

- தொடர்புக்கு: chandramohan.v@hindutamil.co.in

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x