Published : 12 Feb 2018 09:23 AM
Last Updated : 12 Feb 2018 09:23 AM

உற்பத்தித் துறையின் குளறுபடிகள் சீர்செய்யப்படுமா?

ந்தியத் தொழில் உற்பத்தித் துறையில் கடந்த பல ஆண்டுகளாகப் பாதிப்பை ஏற்படுத்திவந்த 'தலைகீழ் வரிவிகித அமைப்’பை இப்போது திருத்தியிருக்கிறது மத்திய பட்ஜெட். ஒரு பொருள் உற்பத்தியாகும்போது அதன் பல்வேறு இடைநிலைக் கட்டங்களில் வரியை அதிகமாக விதிப்பது, இறுதி நிலையில் அது பொருள் வடிவம் பெறும்போது வரியைக் குறைப்பது - இதுதான் ‘தலைகீழ் வரிவிகித அமைப்பு' . இந்திய சிறு மற்றும் நடுத்தரத் தொழில்களில் பயன்படுத்தப்படும் பொருட்களில் பல, சீனாவிலிருந்தும் பிற நாடுகளிலிருந்தும் இறக்குமதி செய்யப்படுபவையாகவே இருந்தன. அவற்றின் மீதான இறக்குமதி வரி குறைவாக இருந்ததால், உள்நாட்டில் சற்றே அதிகச் செலவில் தயாரிக்கப்படும் இணை பொருட்களைவிட இறக்குமதியை வாங்கிப் பயன்படுத்துவது சிறு, நடுத்தரத் தொழில்களுக்கு லாபமாக இருந்தது. இதனால் இந்தியாவின் உற்பத்தித் துறையில் பல பொருட்களைத் தயாரிப்பது குறைந்தது. அதன் விளைவாக வேலைவாய்ப்பும் குறைந்தன.

தொழிலாளர்களை அதிகம் ஈடுபடுத்தும் துறையும், மூலதனம் அதிகம் தேவைப்படும் துறையும் இதனால் பாதிக்கப்பட்டன. இதனால் 1991 முதல் ஜிடிபியில் உற்பத் தித் துறையின் பங்களிப்பும் வேலைவாய்ப்பும் அதிகரிக்கவேயில்லை. ‘உலகத்தின் ஆசியத் தொழிற்சாலை’ என்ற அந்தஸ்தை சீனாவுக்கு நாமே வழங்கிவிட்டோம். ‘இந்தியாவில் தயாரிப்போம்’ என்ற லட்சியம் நனவாக வேண்டும் என்றால், வெகு விரைவாக இந்த நிலையை மாற்றியாக வேண்டும்.

சீனாவுக்கே ஆதாயம்

இந்தியச் சந்தைகளிலிருந்து வெளிநாடுகளுக்கு ஏற்று மதி செய்தவர்களுக்கு இந்தத் தலைகீழ் வரிவிகிதம் தந்த அனுகூலத்தை புதிய ஜிஎஸ்டி - அதிலும் குறிப்பாக ஒருங்கிணைக்கப்பட்ட ஐஎன்ஜிஎஸ்டி - நீக்கத் தொடங்கியிருக் கிறது. மின்னணுவியல் துறையில் ஐடிஎஸ் தரும் ஆதாயத்தை நீக்குவதாக 2014 பட்ஜெட்டிலேயே அறிவித்தார் நிதியமைச்சர் அருண் ஜேட்லி. அதை அப்படியே அடுத்த பட்ஜெட்டுகளிலும் வேறு துறைகளுக்கு விரிவாக்கி வந்துள்ளார். ஆனால், இந்த ஐடிஎஸ் நமது உற்பத்தித் துறையின் பல்வேறு பகுதிகளை வெகுவாகப் பாதித்து விட்டது.

சுமார் 20 ஆண்டுகளாக சீனா தன்னுடைய தொழில் துறை உற்பத்தியைப் புதிய வியூகம் மூலம் வலுப்படுத்தி இந்தியாவைப் பின்தங்கச்செய்தது. தொழிலாளர்களை அதிக எண்ணிக்கையில் வைத்து வேலைவாங்கும் துறைகளை அது தேர்ந்தெடுத்து, ஏற்றுமதிக்குப் பயன்படுத்தியது. இந்தியாவின் கொள்கையோ அதிகத் தொழிலாளர்களை வேலையில் ஈடுபடுத்தினால் லாபம் ஏதுமில்லை என்ற நிலையை உருவாக்கியது. இதன் விளைவு, சீனா தன்னுடைய ஏழைகளில் லட்சக்கணக்கானோரை வேலைவாய்ப்பு வழங்கி, வறுமைக் கோட்டிலிருந்து மீட்டது. இந்தியாவில் வறுமை ஒழிப்பு தொய்வடைந்தது.

சீனாவில் வேளாண்மையும், கிராமப்புற வருமானமும் இந்தியாவைவிட வேகமாக உயர்ந்தன. அங்கே நுகர்வோரின் தேவை தொடர்ச்சியாக வளர்ந்தது. அதனால், தொழில் துறையிலும் வேலைவாய்ப்பு வேகமாக அதிகரித்தது. இந்தியாவில் 2000 முதல் 2011-12 வரையில் கட்டுமானத் துறையில் வேலைவாய்ப்புகள் வேகமாக அதிகரித்தன. உற்பத்தித் துறையிலும் வேலைவாய்ப்பிலும் வளர்ச்சி அதிகமாக இல்லை. 2004-05 முதல் 2011-12 வரையில், அதிலும் குறிப்பாக 2011-12 முதல் 2015-16 வரையில் உற்பத்தித் துறையில் வளர்ச்சி மந்தமடைந்ததுடன் ஸ்தம்பித்தது பிறகு, எதிர்மறையாகவும் பதிவாகியது. தொழிலாளர்களை அதிகம் ஈடுபடுத்தி வேலைவாங்கும் துறையில் கிட்டத்தட்ட 3 கோடிப் பேர் வேலை பார்க்கின்றனர். இப்போது இறக்குமதிகள் மீதான சுங்க வரி அதிகரிப்பால் இவர்களுக்கு இனி வேலை கிடைக்கும்.

தொலைத்தகவல் தொடர்புக்குப் பயன்படும் கண்ணாடி இழை கேபிள்களைத் தயாரிக்க உதவும் சிலிக்கா, மின்னணுச் சாதனங்கள், மூலதனப் பொருட்கள் ஆகியவற்றின் மீதான இறக்குமதி வரி அதிகரிக்கப்பட்டிருக்கிறது. இனி, இவற்றை உள்நாட்டிலேயே தயாரிக்கும் ஆலைகளில் உற்பத்தி தொடங்கும். உணவு பதப்படுத்தல், காலணிகள், தங்க நகை, பொம்மைகள் போன்ற இறக்குமதிகள் மீதும் இதே காரணத்துக்காகத்தான் சுங்க வரி அதிகப்படுத்தப்பட்டிருக்கிறது. சிலர் இதை 1991-க்கு முன்பு நிலவிய 'வர்த்தகக் காப்பு' நடவடிக்கைகள் என்று சாடியுள்ளனர். 1991-ல் 150% ஆக இருந்த காப்பு வரி 1999-ல் 40% ஆகக் குறைக்கப்பட்டு 2007-08-ல் 10% ஆகக் குறைக்கப்பட்டது.

1990 வரை வெளிநாட்டுப் போட்டியில்லாமல் பொத்திக் காக்கப்பட்டு வந்த இந்திய உற்பத்தித் துறை, திடீரென வெளிநாட்டுப் பொருட்களின் இறக்குமதி என்கிற தாக்குதலுக்கு இரையாக்கப்பட்டது. இதைப் படிப்படியாகக் குறைத்திருந்தால், அதற்குள் நமது தொழில்நுட்பத்தை வளர்த்திருக்கலாம், இறக்குமதிகளுடன் போட்டி போடும் திறனைப் பெற்றிருக்கலாம். இந்த இறக்குமதி வரிக் குறைப்பு நுகர்வோருக்கும் வியாபாரிகளுக்கும் பயனளித்தது. 2000-க்குப் பிறகு தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்களாலும் கிழக்கு - தென் கிழக்கு ஆசிய நாடுகளுடன் செய்துகொண்ட வர்த்தக ஒப்பந்தங்களாலும் சீனா, கொரியா உள்ளிட்ட நாடுகளிலிருந்து நுகர்வுப் பண்டங்களும் மூலதனப் பண்டங்களும் பெருமளவில் இந்தியச் சந்தைகளில் குவியலாயின.

வேலைவாய்ப்புகள்

2000 முதலே வேலை தேடுவோர் எண்ணிக்கை ஆண்டுதோறும் 1.2 கோடியாக 2004-05 வரை வளர்ந்தது. உள்நாட்டில் உற்பத்தித் துறையால் அனைவருக்கும் வேலை தர முடியாததால் வேளாண் துறையிலும் பாரம்பரியமான துறைகளிலும் ஓரளவுக்கு வேலை கிடைத்தது. முறைசாராத் துறைகளில் வேலைவாய்ப்பு அதிகரித்தது. 2003-04 முதல் ஜிடிபி வளர்ந்தது. வேளாண்மை சாராத துறைகளில் வேலைவாய்ப்பும் ஆண்டுக்கு 75 லட்சம் என்று வளர்ந்தது.

2004-05 முதல் இரண்டு அம்சங்கள், வேலை தேடுவோர் எண்ணிக்கையைக் கணிசமாகக் குறைத்தன. முதலாவது, 1990 முதலே மக்கள்தொகை அதிகரிப்பது குறைந்ததால் வேலைதேடும் தொழிலாளர் எண்ணிக்கையும் குறைந்தது. அனைவருக்கும் கல்வித் திட்டம் காரணமாக லட்சக் கணக்கான சிறார்கள் பள்ளிக்கூடங்களில் படிக்கும் ஆண்டுகள் அதிகமானதால் உடனடியாக வேலை தேடும் இளைஞர் எண்ணிக்கைக் கணிசமாகக் குறைந்தது. ஓரளவோ, நன்றாகவோ படித்த இவர்கள் இப்போது வேலை தேடி சந்தைக்கு வந்துவிட்டனர்.

அரசின் பல்வேறு துறைகளிலிருந்து பெறப்படும் தரவுகளை ஆராய்ந்ததில், வேலை தேடி ஆண்டுதோறும் சந்தைக்கு வருவோரின் எண்ணிக்கையைவிடப் பல மடங்கு குறைவாகத்தான் புதிய வேலைகள் உருவாகின்றன. 2011-12 முதல் 2015-16 காலத்தில் 15 வயது முதல் 29 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் வேலை தேடுவது 14.7 கோடியிலிருந்து 18.7 கோடியாக உயர்ந்திருக்கிறது.

வேளாண் துறை வேலைவாய்ப்பு சரிவு

வேளாண் துறையில் தொழிலாளர் பங்களிப்பு 1999-2000-ல் 60% ஆக இருந்தது. இது 2011-12-ல் 49% ஆகக் குறைந்தது. வேளாண் துறை அல்லாத பிற துறைகளில் வேலைவாய்ப்பு மந்தமானதும் வேளாண் துறையில் வேலைசெய்வோர் எண்ணிக்கை குறைவதும் ஓய்ந்தது. 2004-05-ல் 8.7 கோடி இளைஞர்கள் வேளாண் துறையில் இருந்தனர். 2011-12-ல் அந்த எண்ணிக்கை 6.1 கோடியாகச் சரிந்தது. ஆனால், 2011-12-க்குப் பிறகு வேளாண்மையில் இளைஞர்கள் எண்ணிக்கை அதிகமாகிவிட்டது. 2011-12 முதல் 2015-16-க்குள் 2.4 கோடிப் பேர் அதிகமாகிவிட்டனர். 6.1 கோடியிலிருந்து 8.5 கோடியாகிவிட்டது. கல்வி கற்ற பிறகும் வேறு துறைகளில் வேலை கிடைக்காமல் வேளாண்மைத் துறையிலேயே வேலை தேடும் நிலை உருவாகியிருக்கிறது. இது ஒரு பின்னடைவு.

2011-12-க்குப் பிறகு உற்பத்தித் துறையில் வேலைவாய்ப்பு மந்தமாகிவிட்டதைப் பல தரவுகளும் உறுதிப் படுத்துகின்றன. 2011-12-க்குப் பிறகு ஜிடிபி வளர்ச்சியும் குறைந்தது. உற்பத்தித் துறையில் வேலைகள் குறைந்த தால் இளைஞர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். ஆனால், இளைஞர்களை அதிகம் வேலைக்கு எடுத்துக்கொண்டது சேவைத் துறைதான். 2011-12-ல் 3.6 கோடி இளைஞர் களுக்கு வேலை தந்த சேவைத் துறை 2015-16-ல் 5.2 கோடிப் பேருக்கு வேலை தந்தது. இதே காலத்தில் இத் துறையில் ஏற்பட்ட மொத்த வேலைவாய்ப்புகள் முறையே 12.7 கோடி, 14.1 கோடி. பணமதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி அமல் ஆகிய காரணங்களால் இவர்கள் முறைசாராத் துறையில் இருந்து முறைசார்ந்த துறைக்கு வந்ததை, புதிய வேலைவாய்ப்பாகச் சிலர் கூறுகின்றனர். அது தவறு.

எதிர்காலம் ஒளிமயமாக…

ஜிஎஸ்டி அமல் காரணமாக தலைகீழ் வரிவிகிதத்தின் கெடுபலன் குறைக்கப்பட்டிருக்கிறது. ஏராளமானோர் முறைசார்ந்த தொழில்துறையின் கீழ் வந்துள்ளனர். பெரு நிறுவனங்களின் பற்று வரவில் ஏற்பட்டுள்ள பற்றாக்குறை, வாராக் கடன்களால் வங்கிகளுக்கு ஏற்பட்டுள்ள பற்றாக்குறை இரண்டையும் நீக்க நடவடிக்கைகள் எடுக்கப் படுகின்றன.

இத்துடன் திவால் சட்டமும் அமல்செய்யப்படுவதால் உற்பத்தித் துறையில் முதலீடு பெருக வேண்டும். இந்திய ரூபாயின் செலாவணி மாற்று மதிப்பு வலுவடைந்தால் ஏற்றுமதியாளர்களுக்கு ஊக்குவிப்பு இருக்காது. பத்து ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்றுமதிசெய்த அளவுக்குக் கூட இப்போது இல்லை.

பொருட்கள் - சேவைகளின் தேவை உயரும்போது அதைப் பூர்த்திசெய்யும் வகையில் உற்பத்தி இருக்க வேண்டும். இதைத்தான் கிராமப்புற வளர்ச்சி, அடித்தளக் கட்டுமானம் ஆகியவற்றுக்கு அதிக நிதி ஒதுக்கி மேற்கொண்டிருக்கிறது பட்ஜெட். நுகர்வோரின் தேவைகளைப் பூர்த்திசெய்யும் வகையில், உற்பத்தியைப் பெருக்காமல் ஜிடிபியும் வளராது, வேலைவாய்ப்பும் அதிகரிக்காது. தொழில்துறைக் கொள்கையை அரசு விரைந்து இறுதி செய்து அறிவிக்க வேண்டும். அப்போதுதான் பொருளா தார வளர்ச்சியைத் தொடர்ச்சியாக மேற்கொள்ள முடியும்.

- சந்தோஷ் மெஹ்ரோத்ரா,

வாஹர்லால் நேரு பல்கலைக்கழகப்

பொருளாதாரப் பேராசிரியர்.

தமிழில்: சாரி,

© ‘தி இந்து’ ஆங்கிலம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x