Last Updated : 04 Mar, 2024 06:16 AM

 

Published : 04 Mar 2024 06:16 AM
Last Updated : 04 Mar 2024 06:16 AM

சிறப்புக்கூறுத் திட்டத்தின் தனித்துவம்!

‘பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடிகளின் மேம்பாட்டுக்கான தமிழ்நாடு அரசின் சட்டம்’ என்னும் புதிய சட்டத்தைத் தமிழ்நாடு அரசு நிறைவேற்றியிருக்கிறது. இந்தியாவில் பட்டியல் சாதியினர் - பழங்குடிகளின் பொருளாதார மேம்பாட்டுக்காக, ‘பட்டியல் சாதியினர் துணைத்திட்டம்’, ‘பழங்குடியினருக்கான துணைத் திட்டம்’ ஆகியவை தேசிய அளவில் சுமார் 50 ஆண்டுகளாகப் பெயரளவில் உள்ளன. அவற்றின்அமலாக்கத்தைத் தமிழ்நாடு அளவில் வேகப்படுத்தவே இந்தச் சட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

பழங்குடியினருக்கான துணைத் திட்டத்தை டாக்டர் பூபிந்தர்சிங் ஐஏஎஸ், டாக்டர் பி.டி.சர்மா ஐஏஎஸ் ஆகியோர் 1970களில் உருவாக்கினார்கள். 1978 முதல் 2006 வரை, ‘பட்டியல் சாதியினருக்கான சிறப்புக்கூறுத் திட்டம்’ என்று அழைக்கப்பட்டு, பிறகு ‘பட்டியல் சாதியினர் துணைத் திட்டம்’ என்று அழைக்கப்படுகிற திட்டத்தை உருவாக்கியவர் மறைந்த முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி பி.எஸ்.கிருஷ்ணன்.

அம்பேத்கரைப் பின்பற்றியவர்: பாலக்காட்டில், முன்னேறிய வகுப்பைச் சேர்ந்த தமிழ்க் குடும்பத்தில்பிறக்க நேரிட்டாலும், அம்பேத்கரின் சமூகக் கருத்துகளைத் தனது வழிகாட்டியாகச் சிறு வயதிலேயே ஏற்றுக்கொண்டவர் பி.எஸ்.கிருஷ்ணன். கேரளப் பல்கலைக்கழகத்தில் சம்ஸ்கிருதத்திலும் தத்துவத்திலும் தங்கப் பதக்கம் பெற்ற கிருஷ்ணன், அம்பேத்கர் மறைந்த 1956இல் ஆந்திரத்தில் ஐஏஎஸ் அதிகாரியாகப் பொறுப்பேற்றார்.

‘ஐஏஎஸ் பயிற்சியிலும், அரசு நிர்வாகத்திலும் தலித் மக்களுக்கான திட்டமிடலே இல்லை’ என்பதை அனுபவத்தால் தெரிந்துகொண்ட அவர், தலித் மக்களின் அரசமைப்புச் சட்ட உரிமைகளை அரசு நிர்வாகத்தின் வழியாக நடைமுறைப்படுத்துவதையே தனது அன்றாடப் பணியாகக் கொண்டார். அதிருப்தியடைந்த அரசியல்வாதிகள் விரைவிலேயே அவரை டெல்லிக்கு அனுப்பிவிட்டார்கள்.

மத்திய அரசில் தலித் மக்களுக்கான திட்டங்கள் என்ன இருக்கின்றன என்று ஆய்வுசெய்த அவர், அம்பேத்கர் ஏற்படுத்திய திட்டங்களும் சட்டங்களும் மட்டுமே இருந்ததை உணர்ந்தார். “ஆங்கிலேயர் ஆட்சியில் தொழிலாளர் அமைச்சராக 1942 முதல் 1946 வரை டாக்டர் அம்பேத்கர் செயல்பட்டார்.

தொழிலாளர்கள், பெண்களுக்கான சட்டங்களையும் திட்டங்களையும் உருவாக்கினார். மத்திய அரசின் பணிகளில் தலித் மக்களுக்குத் தேசிய அளவிலான இடஒதுக்கீட்டையும் அறிமுகப்படுத்தினார். தலித் மாணவர்களின் பள்ளி இறுதி வகுப்புக்குப் பிறகான கல்வி உதவித்தொகைத் திட்டத்தையும், வெளிநாடு சென்று கல்வி பயில்வதற்கான கல்வி உதவித்தொகைத் திட்டத்தையும் அம்பேத்கர் அறிமுகப்படுத்தினார்.

இந்தியாவின் சமூக, பொருளாதார, அரசியலில் ஆதிக்கம் செலுத்துகிற மேல்குடி மக்களின் இயல்பை அம்பேத்கர் புரிந்துவைத்திருந்தார். இந்தியாவுக்குச் சுதந்திரம் கிடைத்தால் ஆதிக்கச் சக்திகளாக அவர்கள் மாறுவார்கள். அப்போது பட்டியல் சாதியினருக்கு என்ன நடக்கும் என்பதை அவர் அறிந்திருந்தார். அதனால்தான் சுதந்திரத்துக்கு முன்பாகவே தலித் மக்களுக்கான இடஒதுக்கீடு, கல்வித் திட்டங்கள் ஆங்கிலேயர் ஆட்சியில் அம்பேத்கரால் தொடங்கிவைக்கப்பட்டன.

சுதந்திரத்துக்குப் பிறகும் இந்தத் திட்டங்களைத் தொடர்வது அதனால்தான் எளிதாக இருந்தது. சுதந்திரத்துக்குப் பிறகு அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றியவர்களுக்கு இந்தத் திட்டங்களை ரத்துசெய்வது கடினமாக இருந்தது. சுதந்திரத்துக்குப் பிறகு எளிதாகப் பழங்குடிகளுக்கும் இந்தத் திட்டங்களை விரிவுபடுத்த முடிந்தது” என்று தனது 85 வயதில் ‘சமூக நீதிக்கான அறப்போர்’ என்ற பெயரில் கல்வியாளர் வே.வசந்தி தேவிக்கு அளித்த நேர்காணலில் கிருஷ்ணன் விளக்கியிருக்கிறார்.

சிறப்புக்கூறுத் திட்டம்: இந்தத் திட்டங்களை அம்பேத்கர் நிறுவியிருக்காவிட்டால் என்ன நடந்திருக்கும் என்பதைப் பிற்படுத்தப்பட்டோருக்கு என்ன நடந்தது என்பதிலிருந்து நம்மால் புரிந்துகொள்ள முடியும். அவர்கள் வாய்ப்பைத் தவறவிட்டவர்கள்.

சுதந்திரத்துக்கு முன்பாக அவர்களுக்கு எதுவும் கிடைக்கவில்லை. அதன் பிறகும் தங்களின் உரிமைகளுக்காக அவர்கள் பல பத்தாண்டுகள் காத்திருந்தனர்; மண்டல் ஆணையத்தின் பரிந்துரைகள் அமலான 1990களில்தான் அவர்களுக்குப் பயன்கள் கிடைத்தன என்று கிருஷ்ணன் விளக்குகிறார்.

தலித் மக்கள் தொடர்பாக வேறு என்ன செய்யலாம் என்று ஆய்வுசெய்த கிருஷ்ணன், காந்திக்கும் அம்பேத்கருக்கும் இடையில் 1932இல் கையெழுத்தான புணே ஒப்பந்தத்தை எடுத்துக்கொண்டார். அதில், “ஒவ்வொரு மாகாணமும் ஒதுக்குகிற கல்வி மானியத்தில் தாழ்த்தப்பட்டவர்களுக்குக் கல்வி வழங்குவதற்குப் போதுமான நிதியை ஒதுக்க வேண்டும்” என்ற விதி இருந்தது.

அந்த விதியைத்தான் மத்திய, மாநில அரசுகளின் வளர்ச்சித் திட்டங்களிலும், முதலீடுகளிலும் பட்டியல் சாதியினர் - பழங்குடி மக்களுக்கு உரிய பங்கு கிடைக்கச் செய்வதற்காகச் சிறப்புக்கூறுத் திட்டமாக வளர்த்தெடுத்தார் கிருஷ்ணன். அரசு நிர்வாகிகள் மக்கள் விடுதலைக்கான பணிகளையும் செயல்படுத்த முடியும் என்பதற்கான எடுத்துக்காட்டு அவர்.

“மத்திய அரசுத் திட்டங்களில் பட்டியல் சாதியினரின் பொருளாதார நிலை குறித்த எந்த அம்சமும் அப்போது இல்லை. கல்வி முன்னேற்றத்தைப் போலவே, பொருளாதார அடிமைத்தனத்திலிருந்து விடுதலை அடையப் பொருளாதார முன்னேற்றம் மிகவும் அவசியம்.

அந்தப் பொருளாதார முன்னேற்றம் அவர்களுக்குத் தீண்டாமை, சாதியப் பாகுபாடுகள், இயலாமைகள், தீண்டாமையை அடிப்படையாகக் கொண்ட பாகுபாடுகள் போன்ற தடைகளை எதிர்ப்பதற்கான வல்லமையை அளிக்கும்” என்றார் கிருஷ்ணன்.

“ ‘பட்டியல் சாதியினருக்கான சிறப்புக்கூறுத் திட்டம்’ எனும் திட்டத்தை ஜனதா ஆட்சிக் காலத்தில் 1978இல் உருவாக்குவதற்கு என்னை ஊக்கப்படுத்தியது புணே ஒப்பந்தம்தான்” என்றார் கிருஷ்ணன்.

பட்டியல் சாதியினரின் ஒருங்கிணைந்த வளர்ச்சிக்கும், முன்னேற்றத்துக்கும் தேவையான உள்ளார்ந்த ஆற்றலைத் தனக்குள்ளே கொண்டிருக்கிற, திறன்மிக்க, வலுவான திட்டமிடல் கருவியாகச் சிறப்புக்கூறுத் திட்டத்தை அவர் பார்த்தார். தலித் மக்கள் மேலும் மேலும் விழிப்புணர்வு அடைந்து, அவர்களே இந்தக் கருவியைச் செயல்படுத்தத் தொடங்குவார்கள் என்று அவர் எதிர்பார்த்தார்.

“ஜெர்மனியில் யூதர்களைத் தனிமைப்படுத்தி, ஹிட்லர் உருவாக்கிய ‘கெட்டோ’ எனும் தனிக் குடியிருப்புகள்போல, ஒவ்வொரு கிராமத்திலும், நகரத்திலும் தலித் குடியிருப்புகள் உள்ளன. ஆனால், அவர்கள்தான் கிராமப்புறங்களின் விவசாயத் தொழிலாளர்களிலும், நகரங்களின் ஒப்பந்த முறை, முறைசாராத் தொழிலாளர்களிலும் பெரும்பான்மையோராக உள்ளனர்.

தலித்துகளின் இத்தகைய வாழ்நிலைமைகளை மாற்றுவதே சிறப்புக்கூறுத் திட்டம். பட்டியல் சாதிகளைச் சார்ந்த தனிநபர்கள், குடும்பங்கள், குழுக்களுக்கும், அவர்களின் வாழ்விடங்களில் குடிநீர், சாக்கடை, சாலை, மின்சாரம், சுடுகாடு உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளை மேம்படுத்தலுக்கும் நேரடியாகச் செல்லும் வகையில் திட்டத்தின் பயன்கள் அனைத்தும் அமைய வேண்டும் என்பதற்காகவே சிறப்புக்கூறுத் திட்டத்தை வடிவமைத்தேன்” என்று பி.எஸ்.கிருஷ்ணன் குறிப்பிட்டிருக்கிறார்.

முழுமையான முன்னேற்றத்துக்கான படிகள்: 1979முதல் மாநில அளவில் சிறப்புக்கூறுத் திட்டங்கள் உருவாகின. திட்டத்தை நிறைவேற்றும் மாநிலங்களுக்கு மத்திய அரசு சிறப்பு உதவியைத் தரும் முறையையும் 1980இல் கிருஷ்ணன் தொடங்கி வைத்தார். அப்போது மாநில அதிகாரிகளிடம் அவர்பேசும்போது, “அனைத்து மக்களுக்குமானதிட்டங்களில் தலித் மக்களுக்கும் ஒரு பங்கு இருக்கும்.

அது அல்ல சிறப்புக்கூறுத் திட்டம். அந்தத் திட்டத்தின் ஒதுக்கீட்டில் ஒரு விகிதாச்சாரப் பங்கைத் தலித்துகளுக்கு என்று குறிப்பதல்ல சிறப்புக்கூறுத் திட்டம். தலித் தனிநபர்களுக்கும், குடும்பங்களுக்கும், குழுக்களுக்கும், குடிசைப் பகுதிகளுக்கும் நேரடியாகவும், தனிப்பட்ட முறையிலும் பயன்படுகிற முறையில் நிறைவேற்றப்படுவதே சிறப்புக்கூறுத் திட்டம்” என்று தெளிவாக வலியுறுத்தியிருக்கிறார்.

“தலித் மக்களின் அனைத்து அம்சங்களையும் தழுவிய முழுமையான முன்னேற்றத்துக்காக நான் என் வாழ்க்கையிலும் பணிக் காலத்திலும், செய்த மிக முக்கியப் பங்களிப்பாக ‘சிறப்புக்கூறுத் திட்ட’த்தைக் கருதுகிறேன்” என்று சொன்ன பி.எஸ்.கிருஷ்ணன், எதிர்காலத்துக்கான விரிவான செயல்திட்டத்தையும் விட்டுச் சென்றுள்ளார்.

2019 நவம்பர் 10 அன்று கிருஷ்ணன் மறைந்தார். அவர் உயிரோடு இருந்தபோதே சிறப்புக்கூறுத் திட்டத்தை அமலாக்குவதற்கான மாநிலச் சட்டங்களை ஆந்திரமும் கர்நாடகமும் நிறைவேற்றின. அத்தகைய மாநிலங்களின் வரிசையில் தமிழ்நாடும் தற்போது இணைந்துள்ளது வரவேற்கத்தக்கது. புதிய சட்டம் வழி இந்தத் திட்டம் விரைந்து நிறைவேற்றப்பட வேண்டும். 

அடிப்படைத் தேவைகளை மேம்படுத்தலுக்கும் நேரடியாகச் செல்லும் வகையில் திட்டத்தின் பயன்கள் அனைத்தும் அமைய வேண்டும் என்பதற்காகவே சிறப்புக்கூறுத் திட்டத்தை வடிவமைத்தேன்!

- தொடர்புக்கு: neethi88@gmail.com

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x