Last Updated : 02 Mar, 2024 10:09 AM

94  

Published : 02 Mar 2024 10:09 AM
Last Updated : 02 Mar 2024 10:09 AM

மிஷன் 400 - மத்தியில் பாஜக ஆட்சி ‘3.0’ சாத்தியமா?

மக்களவை தேர்தல் களம் சூடுபிடித்துவிட்டது. விரைவில் தேர்தல் தேதிகள் வெளி வரும். அரசியல் கட்சிகளும் கூட்டணியை முடிவு செய்வதில் ‘உள்ளே வெளியே’ விளையாட்டை தொடங்கி விட்டன. எது நடந்தாலும், மத்தியில் பாஜக ‘ஹாட்ரிக்’ அடிக்கும். 3-வது முறை ஆட்சியை பிடிக்கும். அதுவும் 400 தொகுதிகளை கைப்பற்றி ஆட்சி அமைப்போம் என்று ஓராண்டுக்கு மேலாகவே பாஜக பிரமுகர்கள் கூறி வருகின்றனர். அது சாத்தியமா? எந்த நம்பிக்கையில் அப்படி கூறுகின்றனர்.

பட்ஜெட் கூட்டத் தொடரில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவித்து மாநிலங்களவையில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி கூட, ‘‘இந்தத் தேர்தலில் பாஜக 370 தொகுதிகளில் வெற்றி பெறும். தேசிய ஜனநாயக் கூட்டணி (என்டிஏ) 400-க்கும் மேற்பட்ட இடங்களை கைப்பற்றும். காங்கிரஸ் கட்சி 40 தொகுதி

களையாவது தக்க வைத்துக் கொள்ள பிரார்த்தனை செய்கிறேன்’’ என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறிய கருத்துகளை குறிப்பிட்டு கிண்டல் செய்தார். பிரதமர் மோடி இப்படி 400 தொகுதிக்கு மேல்.... என்று குறிப்பிட்டு பேசுவது இதுதான் முதல் முறை. முன்னதாக அமித் ஷா உட்பட அமைச்சர்கள் பலர் பேசியிருந்தனர். மாநிலங்களிலும் இதே கருத்துடன் பாஜக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

‘‘மக்களவை தேர்தலில் 50 சதவீதத்துக்கு மேல் வாக்குகளை பெறுவதுதான் இலக்கு’’ என்று கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பாஜக பகிரங்கமாக அறிவித்தது. இதற்கு பாஜக சொல்லும் காரணங்கள் ஏராளம். கடந்த 10 ஆண்டு ஆட்சியில் பாஜக அரசு கொண்டு வந்த திட்டங்கள் ஏராளம்.

அதனால் பலன் பெற்றது கோடிக்கணக்கான விவசாயிகள், பெண்கள், பொதுமக்கள். ஊழலற்ற அரசு, நாடு முழுவதும் உள்கட்டமைப்புகள், உலகளவில் பொருளாதார வளர்ச்சி, உலகளவில் இந்தியாவின், இந்தியர்களின் மதிப்பை உயர்த்தியது... கிராமங்களில் கழிப்பறை திட்டம், ஏழைகள் வீடு வாங்க மானியம், சமையல் எரிவாயு திட்டம், விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6,000, இப்படி பல விஷயங்களை அடுக்கிச் செல்கின்றனர்.

அடுத்து தேர்தல் நேரத்தில் அயோத்தியில் ராமர் கோயில் திறந்தது. இது பாஜக.வுக்கு சாதகமாக அமையும் என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம் சாட்டின. எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்தாலும், ராமர் கோயிலுக்கு எதிராக அவர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை. ஏனெனில், தேர்தல், வாக்கு. இன்னும் அடுத்தடுத்து வரும் நாட்களில் பாஜக.வின் தேர்தல் திட்டங்கள் வெளிவரலாம். அவற்றை எதிர்கொள்ள எதிர்க்கட்சிகள் என்ன செய்யும்?

இப்போதைக்கு பாஜக கூட்டணிக்கு எதிராக ஆட்சியில் உள்ள குறைகள் மற்றும் சித்தாந்தங்களை முன்வைக்க முடியுமா என்பது முக்கிய கேள்வியாக உள்ளது. தேர்தல் நிபுணர் பிரசாந்த் கிஷோர் சொன்னது போல், ‘‘இந்துத்துவா, தேசியம், கட்சி உள்கட்டமைப்பு பலம், கடைசியாக பணபலம்’’ வேண்டும்.

இவற்றில் 3 இருந்தால் பாஜக.வை வீழ்த்த முடியும் என்கிறார். அந்த அளவுகோலுக்குள் தேசிய கட்சியான காங்கிரஸ் வருவதே கடினம். மற்ற கட்சிகள் பற்றி எதுவும் சொல்வதற்கு இல்லை. அப்படி இருக்கையில் பாஜக கூட்டணியை வீழ்த்த எதுதான் ஆயுதம்.

தேர்தலில் வாக்குச் சீட்டு பயன்படுத்த வேண்டும். மின்னணு வாக்கு இயந்திரங்களில் முறைகேடு நடத்துகின்றனர். அந்த நம்பிக்கையில்தான் 400-க்கும் மேல் என்று பிரதமர் மோடி உட்பட பாஜக.வினர் கூறுகின்றனர் என்று ஒரு குற்றச்சாட்டை முன்வைத்தனர். அதற்கு மோடி, ‘‘தேர்தலில்400-க்கும் மேல் என்று நான் கூறவில்லை. மக்கள் கூறுகின்றனர்’’ என்று பதில் அளித்தார். மீண்டும் வாக்குச் சீட்டு முறை என்பது சாத்தியம் இல்லாதது என்பது தெரிந்தே இந்தக் குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர்.

மாநிலங்களில் பிராந்திய கட்சிகள் வெற்றி பெறும் போது இந்தக் குற்றச்சாட்டு வைப்பதில்லையே ஏன்? இந்தச் சூழ்நிலையில், கடந்த தேர்தலில் பாஜக வெற்றி பெற்ற தொகுதிகளின் எண்ணிக்கையை குறைத்தாலே எதிர்க்கட்சிகளுக்கு ‘மாபெரும்’ வெற்றியாக அமையும்.

சுமார் 150 -200 தொகுதிக்குள் என்டிஏ கூட்டணியை சுருக்க வேண்டும். மற்ற இடங்களை ‘இண்டி’ கூட்டணி பிடிக்க வேண்டும். அப்போதுதான் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வருவதை தடுக்க முடியும். கடந்த ஆண்டு ஜூலையில் தொடங்கப்பட்டது எதிர்க்கட்சிகளின் ‘இண்டி’ கூட்டணி.

இதில் ராகுல், மம்தா பானர்ஜி, அகிலேஷ் யாதவ், அரவிந்த் கேஜ்ரிவால், சரத் பவார்... இப்படி பலர் இருக்கிறார்கள். இவர்களின் உள் எண்ணம், கூட்டணி, தொகுதி பங்கீடு கணக்கு எல்லாம் பாஜக.வை வீழ்த்துமா?

மொத்தத்தில் மோடி என்ற பிம்பம் தானாக உருவானதோ, உருவாக்கப்பட்டதோ அது பிரச்சினை இல்லை. அவருக்கு எதிராக மக்களை கவரும், வாரிசு அரசியல் இல்லாத தலைவர் ஒருவர் ‘இண்டி’ கூட்டணியில் இருந்து வரவேண்டும். அதுவும் இண்டி கூட்டணி தலைவர்களின் ஒருமித்த கருத்துடன். அவர் யார்?

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x