Last Updated : 18 Feb, 2018 03:13 AM

 

Published : 18 Feb 2018 03:13 AM
Last Updated : 18 Feb 2018 03:13 AM

இதுதான் கூட்டாட்சி தர்மமா?

தற்கு மேல் நீதிமன்றம் எதுவும் இல்லை, இங்கே நீதி கிடைத்தே தீரும் என்றே தமிழக உழவர்கள் பெரும் நம்பிக்கையில் இருந்தனர். ஆறு போகம் குறுவை பொய்த்தது. முப்போகம் என்பதும் இந்தத் தலைமுறையில் செத்த வார்த்தையானது. இனி ஒரு போகமேனும் இருக்குமா என்ற கேள்வியை உண்டாக்கும் அளவுக்குத் தலையில் இடியாக இறங்கியிருக்கிறது உச்ச நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பு.

குடகுப் பகுதி தனி பிராந்தியமாக இருந்து, கர்நாடகத்தில் இணைக்கப்படுவதற்கு முன், அத்தனை தண்ணீரையும் அள்ளியும் மொண்டும் தமிழகம் பருகியது. வேளாண்மை செய்தது. 1924-ல் 575.68 டிஎம்சி தண்ணீரைத் தமிழகம் பெற்றது என்கிற உண்மையின் பின்னணியில், இனி 177.25 டிஎம்சி தண்ணீர் என்கிற அளவைக் கணக்கிட்டால், கடந்த ஒரு நூற்றாண்டுக்குள் நாம் எவ்வளவு இழந்திருக்கிறோம் என்பது புரியவரும். கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதைதான்!

தண்ணீரின் இழப்பு விவசாயிகளைப் பொறுத்த அளவில் அவர்கள் வாழ்க்கையோடு, உயிரோடு சம்பந்தப்பட்டது என்பதை வேறு ஒரு புள்ளிவிவரத்தின் மூலம் நாம் அறிந்துகொள்ளலாம். விவசாயிகள் தற்கொலை விகிதாச்சாரத்தில் இன்றைக்கு முதலிடத்தில் இருக்கிற மாநிலம் தமிழகம். மகாராஷ்டிரத்தில் 14.2% என்றால் தமிழ்நாடு 22.8%. எனினும் டெங்கு காய்ச்சலில் பலியானோர் பட்டியல்போலவே உழவர்கள் தற்கொலைக் கணக்கிலும் இங்கே தில்லுமுல்லு நடப்பதால் விபரீதத்தின் தீவிரம் இன்னும் யாருக்கும் உறைக்கவில்லை. தேசிய மனித உரிமைகள் ஆணையமே ஒரு மாதத்தில் 106 இறப்புகளைக் கணக்கெடுத்து, தானாகவே முன்வந்து விளக்கம் கேட்டுள்ளது.

இரு முக்கியமான கேள்விகள் நம் முன் வருகின்றன.

1. பெங்களூரு நகரின் குடிநீர்த் தேவையைக் காரணமாகக் காட்டியே இன்றைக்கு தமிழ்நாட்டுக்கான குடிநீர்ப் பங்கீடு குறைக்கப்பட்டிருக்கிறது. 1892,1924 ஆகிய எந்த முந்தைய ஒப்பந்தங்களிலும் பெங்களூருவின் தண்ணீர்த் தேவை குறித்த பிரச்சினை எழுப்பப்படவே இல்லை. இன்றைக்கு பெங்களூரு மாநகரம் 140 கோடி லிட்டர் தண்ணீரைத் தினமும் காவிரியிலிருந்து பெறுகிறது. இதில் 52% வீணாவதை பெங்களூரு சமூக பொருளாதார ஆய்வுக் கழகமே சொல்கிறது. மேலும், பெங்களூருவின் நீர்ப் பயன்பாட்டில் பன்னாட்டு நிறுவனங்களுக்கு மட்டும் தினமும் 72 கோடி லிட்டர் தேவைப்படுவதையும் அறிந்துகொள்ள முடிகிறது. பிரம்மாண்ட பூங்காக்கள், ஷாப்பிங் மால்கள், கோல்ஃப் மைதானங்கள், நீர் விளையாட்டுப் பூங்காக்கள், செயற்கைக் கடல்கள், குதிரைப் பந்தய மைதானங்கள், ஒளி உமிழும் உல்லாச ஆடம்பர விடுதிகள் இவற்றையெல்லாமும் உள்ளடக்கியதுதான் நீதிமன்றம் குறிப்பிடும் உலகத்தரம் வாய்ந்த பெங்களூரின் இன்றைய நீர்த் தேவை. அதையும் விவசாயிகளின் உயிராதாரத் தேவையையும் ஒப்பிட முடியுமா? பிந்தையதைக் காட்டி முந்தையதைப் பின்னுக்குத் தள்ள முடியுமா?

2. இனி மேல்முறையீட்டுக்கே வழி இல்லாதபடி ‘இதுவே இறுதியானது’ என்று ஒரு தீர்ப்பை அளித்திருக்கிறது உச்ச நீதிமன்றம். ஆனால், தன்னுடைய தீர்ப்புகள் அமலாக்கப்படுவதில் எந்த அளவுக்கு அது உறுதிப்பாட்டைக் கொண்டிருக்கிறது? முக்கியமாக தொடக்கம் முதலாகவே தமிழகத்தை வஞ்சிக்கும் வகையிலேயே நடந்துகொண்டிருக்கும் மத்திய ஆட்சியாளர்களையும் தன் போக்குக்கு நடந்துகொள்வதையே இலக்கெனக் கொண்டிருக்கும் கர்நாடக அரசையும் வழிக்குக் கொண்டுவர அது என்ன செயல்திட்டத்தை வைத்திருக்கிறது? ஏனென்றால், ‘நர்மதா நதி கட்டுப்பாட்டு ஆணையம்’ குறித்த பிரகடனம் அரசிதழில் டிசம்பர் 1979-ல் வெளியிடப்பட்டது. எண்ணி ஓராண்டு முடிவதற்குள் டிசம்பர் 1980-ல் அந்த ஆணையம் அமைக்கப்பட்டது. அதேபோல் கிருஷ்ணா, கோதாவரி நடுவர் மன்றம் அரசிதழில் 28.05.2014-ல் வெளிவந்தது. 29.05.2014-ல் மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டுவிட்டது. காவிரியிலோ இறுதித் தீர்ப்பு வந்த தேதி 05.02.2007 அரசிதழில் வெளியிடவே ஆறு ஆண்டுகள் ஆயின.

19.02.2013-ல் தீர்ப்பு அரசிதழில் வெளியிடப்பட்டாலும், இன்னும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படவில்லை. ‘காவிரி மேலாண்மை வாரியம், ஒழுங்காற்று முறைக் குழு அமைக்கப்படாவிட்டால் எங்கள் தீர்ப்பு வெற்றுக் காகிதம்’ என உச்ச நீதிமன்றமே கூறியிருக்கிறது.

உள்ளபடி எவ்வளவு பெரிய கொடுமை இது! உலகெங்கும் பாரம்பரியச் சாகுபடி உரிமை கொண்டவர்களுக்கே நதி நீரில் முன்னுரிமை என்றிருக்க... நாம் நம் பாரம்பரிய உரிமையைப் படிப்படியாக இழந்து நிற்கிறோம். பெரும் இழப்போடு நிற்கும் சூழலில், மிச்சமிருப்பது நிச்சயமா என்றும் தெரியவில்லை. ஆனால், வயலுக்கான தண்ணீரைத் தர திராணி இல்லாதவர்கள் பெட்ரோலியம், மீத்தேன், ஹைட்ரோ கார்பன் என்று வெவ்வேறு பெயர்களோடு வேட்டையாடவும் நிற்கிறார்கள். இதுதான் விவசாயிகளின் நாடா? இதற்குப் பெயர்தான் இந்நாட்டில் கூட்டாட்சி தர்மமா?

- வெ.ஜீவகுமார், தொடர்புக்கு: vjeeva63@gmail.com

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x