Published : 28 Feb 2024 06:16 AM
Last Updated : 28 Feb 2024 06:16 AM

பிப்ரவரி 28: தேசிய அறிவியல் நாள் | ராமன் என்னும் அறிவியல் மேதை

ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் மாதத்தில்தான் நோபல் குழு, அந்த ஆண்டுக்கான நோபல் பரிசு அறிவிப்பை வெளியிடும். எனினும், 1930 இல் செப்டம்பர் மாதத்திலேயே தனக்கும் தனது மனைவிக்கும் ஸ்டாக்ஹோம் செல்ல கப்பலில் பயணச்சீட்டு எடுத்துவிட்டார் சி.வி.ராமன். தனது ஆய்வுக்கு அந்த ஆண்டு நோபல் பரிசு நிச்சயம் என அவருக்கு அவ்வளவு தன்னம்பிக்கை. அந்த நம்பிக்கை பொய்க்கவில்லை!

முக்கியமான கண்டுபிடிப்பு: 1928 பிப்ரவரி 16இல் ராமனின் ஆய்வு மாணவர் கே.எஸ்.கிருஷ்ணன் அவரைத் தேடித் துள்ளிக்குதித்து ஓடோடி வந்தார். “நிறமாலையில் கூடுதல், குறைந்த அலைநீளத்தில் இரண்டு புதிய துணைக்கோடுகள் அரசல் புரசலாகத் தென்படுகின்றன” எனக் கூறினார்.

அடுத்த சில நாள்கள் பரிசோதனையை மீண்டும் மீண்டும் மேற்கொண்டார் ராமன்; புதிய இரண்டு உமிழ்கோடுகள் மங்கலாகத் தென்பட்டது உறுதிப்பட்டது. தூய கிளிசரின் திரவத்தின் ஊடே ஒற்றை அலைவரிசை ஒளியைப் பாய்ச்சி, ஒளிச்சிதறலை நிறமாலைமானி மூலம் அவர்கள் ஆய்வு செய்துவந்தனர்.

பிப்ரவரி 27 அன்று தெள்ளத் தெளிவாகப் பச்சை நிறத்தில் கூடுதல் உமிழ்கோடுகள் தென்பட்டன. அதாவது, கிளிசரின் மூலக்கூறில் வினைபுரிந்து, ஒளியின் ஒரு சிறு பகுதி மட்டும் அலைநீளம் மாறிவிட்டது.

இந்தக் கண்டுபிடிப்பைப் பற்றிய செய்தி, ‘ஸ்டேட்ஸ்மேன்’ நாளிதழில் 1928 லீப் நாளான பிப்ரவரி 29 அன்று வெளியானது. இதைக் கொண்டாடும் விதமாகத்தான் பிப்ரவரி 28-ஐ ‘தேசிய அறிவியல் நாள்’ என இந்தியாவில் கொண்டாடுகிறோம்.

ராமன் கோடுகள்: நோபல் பரிசு வழங்கப்பட்ட, ‘ராமன் விளைவு’ என அழைக்கப்படும் நிகழ்வு, குவாண்டம் விளைவின் வெளிப்பாடு. குறிப்பிட்ட அலைநீளம் கொண்ட ஒளியைக் குறிப்பிட்ட ஆற்றல் கொண்ட ஒளித்துகள் - ஃபோட்டான் - எனக் கொள்ளலாம்.

மூலக்கூறு எப்போதும் அதிர்வு நிலையில் இருக்கும். அதில் உள்ள எலெக்ட்ரான் முன்னும் பின்னும் அசைந்தபடியே இருக்கும். அதிர்வு நிலையில் இருக்கும் மூலக்கூறின் எலெக்ட்ரான் மீது இந்த ஃபோட்டான் பட்டுத் தெறிக்கும்போது ஃபோட்டானின் ஆற்றல் மூன்று நிலைகளில் அமையலாம். அதன் ஆற்றல் சற்றே கூடலாம், குறையலாம் அல்லது அதே நிலையில் அமையலாம்.

தெறிக்கும் ஃபோட்டான்களில் பெரும்பாலானவை அதே ஆற்றல் நிலையைக் கொண்டிருக்கும் - எனவே நிறமாலைமானியில் பிரகாசமான உமிழ்கோடு தென்படும். சில ஆற்றல் கூடியும் ஆற்றல் குறைந்தும் தெறிக்கும் - இவை மங்கலான புதிய இரண்டு கோடுகளாகத் தென்படும்.

இந்த இரண்டு கோடுகளின் தன்மை ஒளியைச் சிதறவைக்கும் மூலக்கூறைப் பொறுத்து அமையும். அதாவது, இந்தக் கூடுதல் கோடுகள் மூலக்கூறின் கைரேகைபோல அமையும். ‘ராமன் கோடுகள்’ எனப்படுபவை இவைதான்.

ராமன் கோடுகளை ஆய்வுசெய்யும் ராமன் நிறமாலைமானியைக் கொண்டுதான் நிலவில் நீர் உள்ளது எனச் சந்திரயான்-1 கண்டறிந்தது. ராமன் நிறமாலைமானி கருவியைக் கொண்டு புற்றுநோய் செல்களை இனம் காண முடியும். இப்படி மருத்துவம் முதல் தொலையுணர்வு ஆய்வுவரை ராமன் விளைவு இன்று பயன்பாட்டில் உள்ளது.

முற்போக்குச் சிந்தனையாளர்: ஒரு முறை காந்தியை ராமன் சந்தித்தபோது, கடவுள், மதம் குறித்து இருவரும் கலந்துரையாடினர். போர், சண்டை சச்சரவுகளைக் கடந்து மனிதர்களை ஒன்றுபடுத்த மதங்கள் உதவும் என காந்தி சொல்ல, ராமன் அதை மறுத்தார். “கடவுள் உள்ளார் என்றால், அவரை நாம் பிரபஞ்சத்தில் தேட வேண்டும்.

இந்தப் பிரபஞ்சத்தில் அவர் இல்லை என்றால், அவரைத் தேடுவதில் எந்த மதிப்பும் இல்லை. என்னைச் சிலர் நாத்திகன் எனத் தூற்றுகிறார்கள். மதங்கள் அல்ல, அறிவியல் மனப்பான்மைதான் மக்களை ஒற்றுமைப்படுத்த முடியும்” என்று பதிலுரைத்தார். எனினும் காந்தியின் நேர்மை, எளிமை, மக்களை ஒன்றுபடுத்திய திறன் முதலியவை மீது அவருக்குப் பெரும் பற்று இருந்தது.

கமலா சோஹோனி என்று அறியப்பட்ட கமலா பாகவத், 1933இல் இந்திய அறிவியல் நிறுவனத்தில் ஆய்வு மாணவியாகச் சேர முனைந்தபோது, அந்நிறுவனத்தின் இயக்குநராக இருந்த ராமன் அவரைச் சேர்த்துக்கொள்ள மறுத்தார். பெண்களால் ஆய்வுப் பணிகளைச் சரிவர மேற்கொள்ள முடியாது என அவர் கருதினார்.

பெரும் போராட்டத்துக்குப் பிறகுதான் கமலாவுக்கு இடம் கிடைத்தது. பின்னாளில் மூன்று மாணவிகள் ராமனிடம் படித்தனர். ஆயினும் மாணவர்களோடு சரிசமமாகக் கலந்து பேசக் கூடாது என்பது போன்ற கட்டுப்பாடுகளை ராமன் விதித்தார். சில விஷயங்களில் மரபு சார்ந்த சிந்தனையிலிருந்து அவர் விடுபட்டிருக்கவில்லை.

எனினும் காலப்போக்கில் மூடநம்பிக்கைச் சடங்குகள் போன்றவை மீது ஒவ்வாமை கொண்டவராக ராமன் மாறினார். மரணிக்கும் தறுவாயில் அவரது மனைவி கடவுளின் பெயரைப் பிரார்த்திக்கும்படி கூற, “மகாத்மா, கிறிஸ்து, புத்தர் போன்றவர்களின் மனிதத்துவத்தை மட்டும் நம்பு” என உறுதிபடக் கூறினார் ராமன். தேவையற்ற சடங்கு சம்பிரதாயங்களை தவிர்த்து அவர் உருவாக்கிய ‘ராமன் ஆய்வு நிறுவன’த்தில் எளிமையான முறையில், தனது சிதையை எரிக்கும்படியும் அவர் கூறியிருந்தார்.

இந்திய அறிவியல் வளர்ச்சியில் அக்கறை: இந்தியர்கள் ஆய்வுகளை மேற்கொள்ளும் அளவுக்கு அறிவுத் திறன் கொண்டவர்கள் அல்ல என காலனிய பிரிட்டிஷ் அரசு கருதியதால், ஆய்வு நிறுவனங்கள் ஏதும் இருக்கவில்லை. எனவே, நோபல் பரிசு பெற்றுத்தந்த ஆய்வைச் செய்து கொண்டிருந்தபோது, கல்கத்தா பல்கலைக்கழகத்தில் ராமன் பணியாற்றிக் கொண்டிருந்தார்.

எனினும் இந்தியர்களும் ஆய்வுகளில் ஈடுபட வேண்டும் என்கிற நோக்கில், பொதுமக்களின் நிதியுதவியுடன் மகேந்திர லால் சர்க்கார் எனும் விடுதலை வீரர் நிறுவிய ‘இந்தியன் அசோசியேஷன் ஃபார் கல்டிவேஷன் ஆஃப் சயின்ஸ்’ என்னும் தன்னார்வ நிறுவனத்தில்தான் அவரது ஆய்வுகளை மேற்கொள்ள முடிந்தது.

இந்திய விடுதலை இயக்க வெற்றியில்தான் இந்திய அறிவியலின் எதிர்காலம் உள்ளது என ராமன் உள்பட அந்தக் கால விஞ்ஞானிகள் அனைவரும் அறிந்திருந்தனர். மேகநாத் சாகா போல நேரடியாகக் காலனிய எதிர்ப்பு அரசியலில் ராமன் ஈடுபடவில்லை என்றாலும் அரசியல் அல்லாத முறையிலும் தேசிய விடுதலைக்குப் பாடுபடலாம் என ராமன் கருதினார். திறன் மிக்க அறிவியலாளர்களைத் தயார் செய்வதன் மூலம் தேச வளர்ச்சிக்கு உதவ முடியும். அதுவும் விடுதலை இயக்கத்தின் ஒரு பகுதியே என அவர் கூறினார்.

நோபல் பரிசு பெற்ற பின்னர், பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் நிறுவனத்தின் முதல் இந்திய இயக்குநராக 1934இல் ராமன் நியமிக்கப்பட்டார். அந்த வாய்ப்பைப் பயன்படுத்தி இந்திய அறிவியலை வளர்க்கும் விதமாக ஜெர்மனியைச் சேர்ந்த விஞ்ஞானிகளை இந்தியாவுக்குப் புலம்பெயரச் செய்வதில் முனைப்புக் காட்டினார். ஹிட்லரின் நாஜி ஆட்சியில் யூத விஞ்ஞானிகள், இடதுசாரி எண்ணம் கொண்ட விஞ்ஞானிகள் பெரும் அச்சுறுத்தலுக்கு உள்ளானார்கள்.

இந்தச் சூழலில், முன்னணி ஜெர்மானிய விஞ்ஞானிகள் இந்தியாவில் தங்கி ஆய்வுபுரிவது இந்திய வளர்ச்சிக்குப் பெரும் கொடையாக அமையும்என ராமன் கருதினர். குவாண்டம் இயற்பியலின் முன்னணிக் கதாநாயகனாகப் பிற்காலத்தில் உருவான மாக்ஸ் போர்னை (Max Born) இந்தியாவுக்கு வருமாறு ராமன் அழைத்தார்.

1935இல் இந்தியாவுக்கு வந்த போர்ன், பெங்களூருவில் தங்கி ஆய்வுகளை மேற்கொள்ள விருப்பம் கொண்டிருந்தார். ஆனால், இந்திய அறிவியல் நிறுவனத்தின்ஆட்சி மன்றத்தின் பிரிட்டிஷ் உறுப்பினர்கள் சிலர் ஆட்சேபம் தெரிவிக்கவே, இந்த முயற்சி கைகூடவில்லை.

போர்ன், ஐன்ஸ்டைன் போன்றஜெர்மானிய விஞ்ஞானிகள் பலரும் அமெரிக்காவுக்குப் புலம்பெயர்ந்ததும் அங்கே நவீனஅறிவியல் புரட்சியைத் தோற்றுவித்ததும் வரலாறு. அவர்கள் இந்தியாவில் புகலிடம் பெற முடிந்திருந்தால் வரலாறு தலைகீழாக மாறியிருக்கும்.

- தொடர்புக்கு: tvv123@gmail.com

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x