Published : 21 Feb 2024 05:36 PM
Last Updated : 21 Feb 2024 05:36 PM

‘இந்திரா, மோடி அரசுகளின் முகத்தில் விட்ட அறை!’ - ஃபாலி நாரிமன் எனும் ‘சட்ட சாம்பியன்’

இந்தியாவின் புகழ்பெற்ற சட்ட வல்லுநர் ஃபாலி நாரிமன் மறைவையொட்டி புகழஞ்சலிக் கட்டுரை எழுதியுள்ள சென்னை உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் ஸ்ரீராம், “வயது முதிர்வு ஃபாலி நாரிமனின் வீரியத்தையோ, தீவிரத்தையோ குறைக்கவில்லை” என்று புகழாரம் சூட்டியுள்ளார். ‘தி இந்து’ ஆங்கிலத் தளத்தில் அவர் எழுதிய கட்டுரையின் எளிய தமிழ் வடிவம்:

புதன்கிழமையின் அதிகாலையில் ஃபாலி நாரிமன் எல்லையை கடந்து கடவுளின் மன்றத்துக்குள் சென்றபோது, நாடும் அதன் சட்டத் துறையும் ஈடு செய்ய முடியாத இழப்பை சந்தித்தது. அவருக்கு வயது 95. ஆனால், இந்த வயது அவரது வீரியத்தையோ தீவிரத்தையோ குறைக்கவில்லை. அவரது கடைசிப் புத்தகம் சில மாதங்களுக்கு முன்புதான் வெளியிடப்பட்டது. நீதிபதி முரளிதர் தொடர்பாக நீதிபதி லோகூருடன் இணைந்து அவர் எழுதிய கட்டுரை இன்னும் சமீபத்தியது. அவர் அளித்த கடைசி நேர்காணல் இன்னும் நினைவில் உள்ளது.

“வயதான வழக்கறிஞர்கள் இறப்பதில்லை / மங்குவதில்லை, நீதிமன்றத்தில் அவர்கள் ஆஜராவதில்லை; அவ்வளவுதான்” என்பது ஒரு சட்ட நகைச்சுவை. ஆனால், ஃபாலி நாரிமன் மங்கவில்லை என்பது மட்டுமல்ல, தன்னை நேசித்த, மதித்த பலருக்காகவும் அவர் ஆஜராகி இருக்கிறார்.

நாரிமன் குறித்து சொல்வதற்கு நிறைய விஷயங்கள் இருப்பதால், அவரைப் பற்றி எழுதுவது கடினம் அல்ல. ஆனால், அவர் செய்த பல செயல்கள் பிரம்மிக்கத்தக்கவை என்பதால், அவர் குறித்தும் அவரது பணி குறித்தும் முழுமையாக சித்தரிப்பது கடினமானது.

ஒரு வழக்கறிஞராக அவர் தனது சகாக்களை விட பல விதங்களில் மேம்பட்டவராக இருந்தார். அவரது உரத்த குரல், வலிமையான வாதம், அசைக்க முடியாத தர்க்கம், சட்டத்தின் ஆழமான அறிவு, துணிச்சலான அணுகுமுறை ஆகியவற்றின் கலவையாக இருந்ததால், அவர் பலருக்கும் பயமுறுத்தும் எதிரியாக இருந்தார். அதேநேரத்தில், அவர் நீதிமன்றத்துக்கும் தனது தொழிலுக்கும் கடமை தவறாத நேர்மையாளராக இருந்தார்.

மூத்த வழக்கறிஞர்களை எளிதாக வீழ்த்தக்கூடிய அவர், இளம் வழக்கறிஞர்களிடம் கனிவாகவும் அவர்களை ஊக்குவிப்பவராகவும் இருந்தார். சேது சமுத்திர திட்டம் வழக்கில் தலைமை நீதிபதி தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு முன் நான் எனது வாதங்களை ஆரம்பித்தபோது, அரசு தரப்பில் நாரிமன் தலைமை வழக்கறிஞராக இருந்தார். நான் எனது வாதங்களை சுற்றுச்சூழல் கோணத்தில் கொண்டு சென்றேன். நான் எனது வாதங்களை முடித்ததும், “இப்படித்தான் ஒரு வழக்கை வாதிட வேண்டும்” என்று சத்தமாக கூறினார்.

சிறந்த வழக்கறிஞர் என்பதற்கும் மேலானவர் ஃபாலி நாரிமன். அவர் ஓர் எழுத்தாளராக இருந்தார். சட்டம் மற்றும் நீதி பற்றிய அவரது புத்தகங்கள் அவரது பல ஆண்டு அனுபவ அறிவின் ஆழத்துடன் திகழக் கூடியவை. அவர் ஒரு சிறந்த பேச்சாளர். புத்திசாலித்தனத்துடனும், பல்வேறு உதாரணங்களுடனும் அவர் பேசும்போது, அவருக்கு உள்ள ஞானம் வெளிப்படும். அவரிடம் நேர்காணல் மேற்கொள்ள பலரும் விரும்புவார்கள். எளிதாக அணுகக் கூடியவராகவும் வெளிப்படையானவராகவும் அவர் இருந்தார். மிகச் சிறந்த நன்னடத்தையை கொண்டவர் அவர்.

எல்லாவற்றுக்கும் மேலாக குறிப்பிட வேண்டியது, அதிகாரத்தின் மீதான அவரது அணுகுமுறை. அதிகாரத்தை அதிகாரத்துக்காக தவறாகப் பயன்படுத்தப்படுவது குறித்து அவர் அக்கறை காட்டினார். அதிகாரத்தின் முகத்தில் குறிப்பிடத்தக்க இரண்டு அறைகளை வழங்கியவர் அவர். ஒன்று அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்ட உடனேயே அவர் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் பதவியை ராஜினாமா செய்தார். இதன்மூலம், இந்திரா காந்தியின் அரசாங்கத்தின் கன்னத்தில் ஓர் அறை விட்டார். அடுத்ததாக, கோத்ரா படுகொலைக்குப் பிறகு மோடியின் குஜராத் அரசாங்கத்தின் முகத்தில் அவர் விட்ட அறை. நாட்டின் மிகப் பெரிய வழக்கறிஞராக இருந்தும் அவர் கடைசி வரை அட்டர்னி ஜெனரலாக ஆகவில்லை.

நாரிமன், வார்த்தைகளைக் கொண்டு மறைக்கக்கூடியவர் அல்ல. அவர் மண்வெட்டியை மண்வெட்டி என்றே அழைத்தார். மிக உயர்ந்த பதவி வகித்தவர். அவரது வார்த்தைகள் கூர்மையானவை. அதில், ஏமாற்றத்தை விட கோபம் குறைவாகவே இருந்தது. தனி நபர்களை வீழ்த்துவதில் கவனம் செலுத்தியவரல்ல. அவரது சிந்தனை எப்போதும், செயல் மற்றம் விளைவுகள் மீதே இருந்தது. மதச்சார்பற்ற இந்தியாவுக்கு அவரை விட சிறந்த சாம்பியன் இருக்க முடியாது.

ரங்கூனில் பார்சி மதத்தில் பிறந்தார். ஆரம்ப ஆண்டுகளில் மும்பையில் வசித்தார். இந்த நாட்டின் உள்ளார்ந்த மதிப்பீடுகளை அறிந்திருந்தார். செயின்ட் ஸ்டீபன்ஸ் கல்லூரி வழக்கில் சிறுபான்மைக் கல்வி நிறுவனங்களைப் பாதுகாப்பதற்கான சட்டத்தைக் கொண்டு வர அவர் உதவினார். வழிபாட்டுத் தலங்கள் தொடர்பான சர்ச்சைகளைக் குறைக்கத் தவறியதற்காக அவர் மிகவும் வருந்தினார்.

துணிச்சல், வலிமை, உறுதிப்பாடு, அணுகுமுறை, சிந்தனை, பேச்சுத்திறன் ஆகியவற்றை ஒருங்கே கொண்ட அசாதாரணமான சட்ட வல்லுநர்களின் குழுவைச் சேர்ந்தவர் அவர். அவரது மறைவால் மெழுகுவர்த்தி மங்குகிறது. நமது மனம் துக்கத்தில் மூழ்கியிருந்தாலும், ஃபாலி நாரிமன் முன்வைத்த மரபுகளைக் கடைப்பிடிப்பதே நாம் செலுத்தக் கூடிய சிறந்த அஞ்சலி என்பதை நினைவில் கொள்ள வேண்டும். அப்படிச் செய்தால், அந்த பழைய போர்வீரர் நிம்மதியாக ஓய்வெடுப்பார்.

- தமிழில்: பால.மோகன்தாஸ்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x