Last Updated : 15 Feb, 2024 06:13 AM

 

Published : 15 Feb 2024 06:13 AM
Last Updated : 15 Feb 2024 06:13 AM

மக்களவை மகா யுத்தம் | முன்னேறும் பாஜக: தடுமாறும் ‘இண்டியா’

“அரசியலைப் பொறுத்தவரை ‘குடும்பக் கட்டுப்பாட்’டில் பாஜகவுக்கு நம்பிக்கை இல்லை” - சமீபத்தில் ஒரு செய்தித் தொலைக்காட்சிக்குப் பேட்டியளித்த அமித் ஷா, கூட்டணி விரிவாக்கம் குறித்து நகைச்சுவையுடன் குறிப்பிட்ட தகவல் இது. வெளிப்பார்வைக்கு நகைச்சுவையாகத் தெரிந்தாலும், தேசிய ஜனநாயகக் கூட்டணியைப் பலப்படுத்துவதில் பாஜக தீவிரமாக இறங்கியிருப்பதையே சமீபத்திய நிகழ்வுகள் உணர்த்துகின்றன.

மூன்றாவது முறையும் பாஜகவுக்கே வெற்றிவாய்ப்பு என்று கருத்துக்கணிப்புகள் கூறினாலும், அதீத நம்பிக்கையில் அலட்சியமாக இருக்காமல் வெற்றிவாய்ப்பை உறுதிசெய்ய பாஜக அனைத்து முயற்சிகளையும் எடுக்கிறது.

ஒருபுறம், பலமான கட்சியாகத் தன்னைக் காட்டிக்கொண்டாலும், இன்னொரு புறம் எதிர்க்கட்சிகளைக் கூட்டணிக்குள் கொண்டுவருவது, எதிர்க்கட்சித் தலைவர்களைக் கவர்ந்திழுப்பது, கூட்டணியிலிருந்து வெளியேறிய கட்சிகளுக்கும் அழைப்பு விடுப்பது என்று பாஜக மும்முரமாக இருக்கிறது.

ராஜ் தாக்கரேயின் நவ நிர்மாண் சேனா முதல் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் வரை பல கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திவருகிறது. இண்டியா கூட்டணியை உருவாக்கிய நிதீஷ் குமார் (மீண்டும்) பாஜக கூட்டணிக்குத் திரும்பிவிட்ட நிலையில், மேலும் பலர் பாஜக பக்கம் வரக்கூடும் என எதிர்பார்க்கப்பட்டது. அந்தக் கணிப்பு பொய்க்கவில்லை.

விதவிதமான வலைகள்: ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாக வலை விரிக்கிறது பாஜக. முன்னாள் பிரதமரும் தனது தாத்தாவுமான சரண் சிங்குக்கு மோடி அரசு பாரத ரத்னா விருது அறிவித்ததும், “எங்கள் உள்ளத்தைக் கவர்ந்துவிட்டீர்கள்” என்று நெகிழ்ந்த ராஷ்ட்ரிய லோக் தளம் (ஆர்எல்டி) தலைவர் ஜெயந்த் செளத்ரி, அதேவேகத்தில் பாஜக கூட்டணிக்குச் சென்றுவிட்டார்.

சமாஜ்வாதி கட்சியுடன் கூட்டணியில் இருந்த ஆர்எல்டி, மத்திய அரசு கொண்டுவந்த வேளாண் சட்டங்கள், அக்னிபத் திட்டம் போன்றவற்றுக்கு எதிராகக் கடுமையாகப் போராடிய கட்சி. தற்போது, அக்னிபத் திட்டத்துக்கு எதிராக இளைஞர்களும், குறைந்தபட்ச ஆதரவு விலை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகளும் போராட்டத்தில் குதித்திருக்கும் தருணத்தில் ஜெயந்த் செளத்ரியின் அணி மாற்றம் மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.

ஜெயந்த் செளத்ரியின் இந்த முடிவு ராகுல் காந்தியின் நியாய யாத்திரை பயணத்திலும் எதிரொலிக்கிறது. உத்தரப் பிரதேசத்தில் ஆர்எல்டி கட்சியின் செல்வாக்கு நிறைந்த மேற்குப் பகுதிகளில் பயணம் மேற்கொள்வதைத் தவிர்க்க காங்கிரஸ் முடிவெடுத்திருப்பதாகக் கூறப்படுகிறது.

ஆர்எல்டியின் அதிருப்திக்கான காரணங்களாக, ‘தங்கள் வேட்பாளர்கள் சிலரை ஆர்எல்டியின் சின்னத்தில் (அடி பம்ப்) போட்டியிட அனுமதிக்க வேண்டும் என்று சமாஜ்வாதி கட்சி அழுத்தம் கொடுத்தது’, ‘தொகுதிப் பங்கீட்டில் ராகுல் காந்தி தலையிட்டார்’ என்பது போன்ற வாதங்கள் முன்வைக்கப்படுகின்றன.

உத்தரப் பிரதேசத்தில், சமாஜ்வாதி கட்சியின் தேசியப் பொதுச் செயலராக இருந்த சுவாமி பிரசாத் மெளரியா பதவி விலகியிருக்கிறார். ‘கட்சிப் பணிகளில் கவனம் செலுத்த’ என்று காரணம் சொன்னாலும், மாநிலங்களவைத் தேர்தலில் தனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்பதால் அவர் அதிருப்தி அடைந்திருப்பதாகவும் ஓர் ஊகம் முன்வைக்கப்படுகிறது.

பட்டியல் சாதி, பழங்குடியினரின் நலனுக்காகப் பேசும் ஓபிசி தலைவர் என்பதால், அவர் சமாஜ்வாதியிலிருந்து விலகினால் அக்கட்சிக்குப் பாதிப்பு ஏற்படலாம். பாஜக உள்பட பல கட்சிகளில் இருந்தவர் என்றாலும், பாஜகவின் சித்தாந்தத்துக்கு எதிரானவரான மெளரியா, பகுஜன் சமாஜ் கட்சிக்குச் செல்வாரா, பாஜகவுக்கே திரும்புவாரா என்று விவாதங்கள் நடக்கின்றன.

மகாராஷ்டிரத் திட்டம்: மகாராஷ்டிர காங்கிரஸிலிருந்து மிலிந்த் தேவ்ரா, பாபா சித்திக் ஆகியோர் முறையே சிவசேனா (ஷிண்டே அணி), தேசியவாத காங்கிரஸ் (அஜித் பவார் அணி) என பாஜக ஆதரவுக் கட்சிகளுக்குத் தாவிவிட்ட நிலையில், அசோக் சவான் நேரடியாக (!) பாஜகவுக்கே சென்றுவிட்டார்.

“அமலாக்கத் துறை, சிபிஐ நடவடிக்கைகளுக்குப் பயந்து கட்சி மாறிய கோழை” என்று காங்கிரஸ் அவரைக் கடுமையாக விமர்சித்திருக்கிறது. ஆதர்ஷ் குடியிருப்பு முறைகேடு விவகாரத்தில், அப்போதைய முதல்வர் அசோக் சவான் குற்றம்சாட்டப்பட்டிருந்தபோது பாஜக அவரைச் சரமாரியாக விமர்சித்தது.

சமீபத்தில், பொருளாதாரம் குறித்த வெள்ளை அறிக்கையில் காங்கிரஸ் ஆட்சியின் ஊழல்களாக நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டிருந்த பட்டியலில் ஆதர்ஷ் முறைகேடும் இடம்பெற்றிருந்தது கவனிக்கத்தக்கது.

அசோக் சவானைத் துணை முதல்வராக்குவதா அல்லது மக்களவைத் தேர்தலில் - அவருக்குச் செல்வாக்கு உள்ள நாந்தெட் தொகுதியில் களமிறக்குவதா என்று ஆரம்பத்தில் பாஜக யோசித்தது.

சுவாமி பிரசாத் மெளரியா, அசோக் சவான், ஜெயந்த் செளத்ரி

2019 தேர்தலில் அத்தொகுதியை பாஜகவின் பிரதாப் சிக்லிகர்தான் வென்றார் என்பதால், இந்த முறை சவான் அல்லது பிரதாப் யார் நின்றாலும் வெற்றி உறுதி என்றும் பாஜக கருதியது. கூடவே,அவரை மாநிலங்களவைக்கு அனுப்பி, மக்களவைத் தேர்தலுக்குப் பின்னர் அமைச்சராக்கிவிடலாம் என்றும் ஒரு யோசனையில்அக்கட்சி இருந்தது. அதில் பாதி நடந்தேறிவிட்டது.

அதுமட்டுமல்ல, மகாராஷ்டிரத்தில் பல காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பாஜகவில் சேரத் தயாராக இருப்பதாகப் பேசப்படுகிறது. எனினும், ஜூலை - ஆகஸ்ட்டில் நடைபெறவிருக்கும் மாநிலங்களவைத் தேர்தலுக்கு முன்னர் அவர்கள் எம்எல்ஏ பதவியிலிருந்து விலகிவிட்டால், அந்தத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக (காங்கிரஸில் இருந்தபடியே) வாக்களிப்பது (Cross Voting) அசாத்தியமாகிவிடும் என்பதால் இப்போதைக்கு அந்த முடிவைஒத்திவைக்குமாறு அவர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டிருப்ப தாகச் செய்திகள் வெளியாகின்றன. இது அநாவசியக் குழப்பங்களுக்கு வழிவகுக்கலாம் என்பது வேறு விஷயம்.

முன்னாள் கூட்டாளிக்கு வலை: மோடி அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து 2020இல் வெளியேறிய சிரோமணி அகாலி தளம் கட்சியை மீண்டும் கூட்டணிக்குள் கொண்டுவரவும் பாஜக முயல்கிறது. விவசாயிகள் மத்தியில் செல்வாக்கைக் கொண்டிருக்கும் சிரோமணி அகாலி தளத்தை வளைப்பது எளிதல்ல. குறைந்தபட்ச ஆதரவு விலை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தித் தற்போது போராடிவரும் விவசாயிகளில் கணிசமானோர் ஜாட் சீக்கியர்கள்.

இந்தப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்திருக்கும் சிரோமணி அகாலி தளத்தின் தலைவர் சுக்பீர் சிங் பாதல், “விவசாயிகளுக்கு மத்திய அரசு அறிவித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்”என்று வலியுறுத்திவருகிறார். ஒருபக்கம், குறைந்தபட்ச ஆதரவு விலையைப் பரிந்துரைத்த எம்.எஸ்.சுவாமிநாதனுக்குப் பாரத ரத்னா வழங்கிவிட்டு, அந்தப் பரிந்துரையை வலியுறுத்திப் போராடும் விவசாயிகள்மீது பாஜக அரசு கடும் அடக்குமுறையை ஏவிவிடுவதாக விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன.

விவசாயிகளின் போராட்டத்தால் பஞ்சாப், ஹரியாணா, இமாச்சலப் பிரதேசம், மேற்கு உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட பகுதிகளில் பெரும் பின்னடைவு ஏற்படும் என்பதை உணர்ந்திருக்கும் பாஜக, சிரோமணி அகாலி தளத்தை ஈர்க்க எல்லா முயற்சிகளையும் எடுக்கிறது.

பஞ்சாபில் பகுஜன் சமாஜ் கட்சியுடன் கூட்டணியில் இருக்கும் அகாலி தளம் கட்சியினர், பாஜக பக்கம் செல்ல வாய்ப்பே இல்லை என்று ஒரு மாதத்துக்கு முன்புகூட பேசிவந்தனர். எனினும், “அக்கட்சியுடன் பேச்சுவார்த்தை நடக்கிறது” என்று அமித் ஷா நம்பிக்கையுடன் கூறியிருக் கிறார். உண்மையில், இந்த முறை அதிக இடங்களை அக்கட்சி கேட்பதாலேயே பாஜக சற்றே தயங்குகிறது என்று கூறப்படுகிறது.

இன்றைய நிலவரம்: இண்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால், விவசாயிகளுக்குக் குறைந்தபட்ச ஆதரவு விலை வழங்கப்படும் என்று ராகுல் காந்தி மிக முக்கியமான வாக்குறுதி அளித்திருப்பதால் சற்றே கிலேசமடைந்திருக்கும் பாஜக, “இத்தனை ஆண்டுகளாக ஆட்சியில் இருந்தபோது ஏன் அதைச் செய்யவில்லை?” என்று பதிலடி கொடுக்கிறது.

சாதி அரசியலில் நம்பிக்கை இல்லை என்று சொல்லிக்கொண்டாலும் சாதி அணிதிரட்டலில் பாஜக ஈடுபடத் தயங்கவில்லை. மாநிலங்களவைத் தேர்தலில் ஓபிசி-யினருக்கு அதிகம் வாய்ப்பு அளிக்கவிருக்கிறது அக்கட்சி.

அதேபோல மத்தியப் பிரதேச முதல்வராக மோகன் யாதவ் தேர்ந்தெடுக்கப்பட்டபோதே, மத்தியப் பிரதேசம் மட்டுமல்லாமல் உத்தரப் பிரதேசம், பிஹாரில் வசிக்கும் யாதவ சமூகத்தினரின் வாக்குகளைத் திரட்ட பாஜக முயற்சிக்கும் எனப் பேசப்பட்டது.

அதை உறுதிசெய்யும் விதத்தில் உத்தரப் பிரதேசம், பிஹாரில் தொடர்ந்து கூட்டங்களில் கலந்துகொள்கிறார் மோகன் யாதவ். காஷ்மீர் கிரிக்கெட் சங்கத்தில் முறைகேடு நடந்ததாக எழுந்த புகாரில் தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் ஃபரூக் அப்துல்லாவுக்கு அழுத்தம் தருவது, மேற்கு வங்கத்தில் சந்தேஷ்காளி கலவரத்தை முன்வைத்து மம்தா அரசைக் கடுமையாக விமர்சிப்பது என அடித்து ஆடிக்கொண்டிருக்கிறது பாஜக.

மறுபுறம், “போதும் நிறைய வேலை இருக்கிறது. 10 நாள்கள் முன்னதாகவே பயணத்தை நிறைவுசெய்துவிடுங்கள்” என்று ராகுலிடம் மல்லிகார்ஜுன கார்கே கெஞ்சும் சூழலுக்குக் காங்கிரஸின் நிலைமை இருக்கிறது. ஏதேனும் அதிசயங்கள் நிகழ்ந்தால்தான் இண்டியா கூட்டணி பலம் பெறும் என்பதே இப்போதைய நிலவரம்.

தொடர்புக்கு: chandramohan.v@hindutamil.co.in

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x