Published : 24 Jan 2018 09:18 AM
Last Updated : 24 Jan 2018 09:18 AM

மருத்துவ மாணவர்களின் மர்ம மரணங்கள்: அரசின் பொறுப்பு என்ன?

டெ

ல்லி பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் யு.சி.எம்.எஸ். மருத்துவக் கல்லூரியில் முதுநிலை மருத்துவம் பயின்றுவந்த தமிழக மாணவர் சரத்பிரபுவின் மர்ம மரணம் பல்வேறு சந்தேகங்களை எழுப்பியிருக்கிறது. 2016-ல் டெல்லி எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில் படித்துவந்த தமிழக மருத்துவ மாணவர் சரவணன் மர்ம மரணம் ஏற்படுத்திய அதிர்ச்சி விலகாத நிலையில் நடந்திருக்கும் மற்றொரு சம்பவம் இது.

சரவணன் போலவே சரத்பிரபுவும் விஷ ஊசி செலுத்தப்பட்டே இறந்திருக்கிறார். சரவணன் மரணத்தைப் பொறுத்தவரை, அது ஒரு தற்கொலை என்றே எய்ம்ஸ் நிர்வாகமும், டெல்லி காவல் துறையும் சொல்லிவந்தன. ஆனால் பிரேத பரிசோதனை முடிவுகள், அது தற்கொலை அல்ல என்பதை உறுதிப்படுத்தின. இதுவரை குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படவில்லை என்பது வேறு விஷயம்!

கவலை தரும் காரணிகள்

சில நாட்களுக்கு முன்பு, குஜராத்தின் அகமதாபாதில் உள்ள பி.ஜே. மருத்துவக் கல்லூரியில் முதுநிலை மருத்துவம் பயிலும் தமிழக மாணவர் மாரிராஜ் தூக்க மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றார். ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த தன்னை சக மாணவர்களும் பேராசிரியர்களும் சாதீய ரீதியாக இழிவுபடுத்தியதாலேயே அப்படி ஒரு முடிவுக்குச் செல்ல நேர்ந்ததாக மாரிராஜ் கூறியிருக்கிறார்.

சாதி, மதம், தேசிய இனம், மொழி போன்றவற்றின் அடிப்படையில் காட்டப்படும் பல்வேறு பாகுபாடுகள் இந்தச் சம்பவங்களுக்குக் காரணமாக அமைகின்றன. சமூகப் பொருளாதாரப் பாதுகாப்பின்மை, இளம் தலைமுறையிடம் அச்சத்தையும் கவலையையும் உருவாக்கியிருக்கிறது. வேலையில்லாத் திண்டாட்டம் ஒருபக்கம், வேலைவாய்ப்பை வழங்கங்கூடிய ஒருசில உயர் படிப்புகளுக்கு நிலவும் கடும் போட்டி மறுபக்கம் என்று பெரும் சவால்களை அவர்கள் எதிர்கொள்ள நேர்கிறது. அனைவருக்கும் உயர்கல்வி வாய்ப்புகள் கிட்டாமை, கல்விக் கட்டணங்கள் அதிகரித்திருப்பது உள்ளிட்டவை பிற காரணங்கள். இந்நிலையில், மாநிலங்களுக்கிடையே நிலவும் ஏற்றத்தாழ்வான உயர்கல்வி வாய்ப்புகள், வட மாநிலங்களில் போதிய மருத்துவக் கல்லூரிகள், மருத்துவ இடங்கள் இல்லாதது ஆகிய காரணிகள் மாணவர்களிடையேயான நல்லுறவைப் பாதித்திருப்பது மிக முக்கியமான பிரச்சினை.

தனியார் மருத்துவக் கல்லூரிகளில் முதுநிலை மருத்துவ இடங்கள் ரூ. 2 கோடி வரை விலை போகின்றன. இதன் காரணமாக, அரசுக் கல்லூரிகளுக்கு மாணவர்களிடையே கடும் போட்டி நிலவுகிறது. இதில் கவனிக்க வேண்டிய விஷயம், ஒரு மாணவர் சேர்ந்து ஒரு குறிப்பிட்ட காலத்துக்குள் அவரது இடம் மரணம் போன்ற காரணங்களால் காலியாகிவிட்டால், வேறு ஒரு மாணவர் அவரது இடத்தில் சேர முடியும் என்பதுதான். வேறு மருத்துவக் கல்லூரியிலிருந்து இடமாறுதல் பெற்றும் அவரது இடத்துக்கு வர முடியும். வெளிமாநிலங்களில் பயின்றுவரும் தமிழக மாணவர்களின் மரணங்களை இந்தப் பின்னணியில் பார்ப்பது அவசியம்.

அரசுகளே காரணம்

வட மாநிலங்களில் மருத்துவ இடங்கள் குறைவாக இருக்கின்றன. அந்த இடங்களில், தமிழக மாணவர்கள் சேரக் கூடாது என்பதற்காக பல்வேறு பாகுபாடுகளுக்கும் அச்சுறுத்தலுக்கும் உட்படுத்தப்படுகின்றனர். உண்மையில், தமிழக மாணவர்கள் வேறு மாநிலங்களில் சேர்ந்து படிக்க வேண்டிய நிலையை உருவாக்கியது இந்திய மருத்துவக் கழகமும் மத்திய, மாநில அரசுகளும்தான் என்பது கவனிக்க வேண்டிய விஷயம்.

தமிழகத்தில் உள்ள முதுநிலை மருத்துவ இடங்களில் 50%-ஐ அகில இந்தியத் தொகுப்புக்கு மத்திய அரசு எடுத்துக்கொள்கிறது. மீதி உள்ள இடங்களில் 50%-ஐ அரசு மருத்துவர்களும், 50%-ஐ அரசுப் பணியில் இல்லாத மருத்துவர்களும் பெற்றுவந்தனர். இந்நிலையில் சென்ற ஆண்டு, இந்திய மருத்துவக் கழகத்தின் புதிய விதிமுறையின்படி, அரசு மருத்துவர்களுக்கான 50% (அதாவது மொத்த இடங்களில் 25%) இடஒதுக்கீடு ரத்துசெய்யப்பட்டது. அதற்குப் பதிலாக, தொலைதூர மற்றும் கடினமான பகுதிகளில் பணியாற்றும் மருத்துவர்களுக்கு ஆண்டொன்றுக்கு 10% என்ற அடிப்படையில் மூன்று ஆண்டுகளுக்கு 30% மதிப்பெண்ணை, அவர்கள் பெற்ற நீட் தேர்வு மதிப்பெண்ணுடன் சேர்த்துக்கொள்ளலாம் என விதிமுறை உருவாக்கப்பட்டது.

இதன் விளைவாக, பெரும்பாலான ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்களுக்கு முதுநிலை மருத்துவப் படிப்பு கிடைக்காத நிலை ஏற்பட்டது. மிகவும் குறைந்த எண்ணிக்கையிலான, தொலைதூர மற்றும் கடினமான பகுதிகளைச் சேர்ந்த மருத்துவர்கள் மட்டுமே முதுநிலை மருத்துவப் படிப்பில் சேரும் சூழல் உருவானது. இதனால், தமிழக அரசு அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களையும் பெரும்பாலான அரசு மருத்துவமனைகளையும் கடினமான பகுதி மருத்துவமனைகள் பட்டியலில் இணைத்தது. இதன் காரணமாக 95% -க்கும் மேற்பட்ட முதுநிலை மருத்துவ இடங்கள் அரசு மருத்துவர்களுக்கே கிடைத்தன. இது அரசுப் பணியில் இல்லாத மருத்துவர்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தியது. நீட் தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்ற சரத்பிரபு போன்றோர் வெளி மாநிலங்களில் சேர்ந்து படிக்க வேண்டிய கட்டாயம் உருவானது இப்படித்தான்.

சட்டப் பாதுகாப்பு

முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கையில் ஏற்கனவே இருந்த நடைமுறை தமிழகத்தில் பின்பற்றப்படுவது, தமிழகத்தில் உள்ள அனைத்து இளநிலை, முதுநிலை, உயர் சிறப்பு மருத்துவ இடங்களையும் தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கே வழங்க நடவடிக்கை எடுப்பது ஆகியவை அவசியமானவை. ஆந்திரம், தெலங்கானா மாநிலங்களில் உள்ள மருத்துவ இடங்கள் அனைத்தும் அந்த மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு மட்டுமே வழங்கப்படுகின்றன. அவர்கள் அகில இந்தியத் தொகுப்புக்கு இடங்களை வழங்கவும் மாட்டார்கள், பெறவும் மாட்டார்கள். 1974-ல் கொண்டுவரப்பட்ட 32-வது அரசியல் சட்டத் திருத்தத்தின்படி, 371-டி என்ற பிரிவு சேர்க்கப்பட்டது. இதன்மூலம்தான் அந்த மாநிலங்களின் மாணவர்கள் இத்தகைய பலன்களைப் பெறுகிறார்கள். அத்தகைய சட்டப் பாதுகாப்பை நாமும் பெற வேண்டும். தனியார் மருத்துவக் கல்லூரிகளும் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களும் மத்திய அரசின் கல்வி நிறுவனங்களும் அவை அமைந்துள்ள மாநிலத்துக்கு 65% இடங்களை வழங்குவது பல பிரச்சினைகளைத் தீர்க்கும்.

மாணவர்களைக் காக்க…

வெளிமாநிலங்களுக்குப் படிக்கச் செல்லும் தமிழக மாணவர்களுக்கு உதவும் வகையில் தனித் துறை ஒன்றை அரசு உருவாக்க வேண்டும். ஒடுக்கப்பட்ட, பழங்குடியின மாணவர்களுக்கு உதவி மையங்களை அனைத்துக் கல்லூரிகளிலும் உருவாக்குவது அவசியம். சாதியப் பாகுபாடு தொடர்பான புகார்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுப்பது அசம்பாவிதங்களைத் தவிர்க்கும். மிக முக்கியமாக, மருத்துவ மாணவர்கள் மர்மமான முறையில் இறந்தால், அவர்களது இடத்தில் வேறு மாணவர்கள் சேர அனுமதிக்கக் கூடாது. சில இடங்களில் பேராசிரியர்களே மாணவர்களை ‘ராகிங்’ செய்யும் கொடுமை நடப்பதை அறிய முடிகிறது. இந்த அவலங்கள் தொடர அனுமதிக்கக் கூடாது. விடுதி வசதிகளை மேம்படுத்தி, பாதுகாப்பையும் அதிகரிக்க வேண்டும்.

மருத்துவ மாணவர்களுக்கு ஏற்படும் உடல்ரீதியான, மனரீதியான உளைச்சல்களைப் போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்துக் கல்லூரிகளிலும் மனநல ஆலோசனை மையங்களை உருவாக்கலாம். அவர்களது பொழுதுபோக்கு வசதிகளை மேம்படுத்தலாம். விளையாட்டு, கலை, கலாச்சார நடவடிக்கைகளுக்கான வாய்ப்புகளை அதிகரிக்க வேண்டும். அனைவருக்கும் இலவசக் கல்வியையும், வேலைவாய்ப்பையும் உறுதிசெய்ய வேண்டும். அதுவே, மாணவர்களின் மர்ம மரணங்களைத் தடுத்து நிறுத்தும் அரணாக அமையும்!

- ஜி.ஆர்.இரவீந்திரநாத்,

பொதுச் செயலாளர், சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம்.

தொடர்புக்கு: daseindia2011@gmail.com.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x