Last Updated : 26 Jan, 2018 10:00 AM

 

Published : 26 Jan 2018 10:00 AM
Last Updated : 26 Jan 2018 10:00 AM

பேருந்துக் கட்டண உயர்வுக்கு எதிரான போராட்டங்கள் முன்வைக்கும் நியாயங்கள்!

பெட்ரோலிய விலை உயர்வு, மின்கட்டண உயர்வு, பொதுவிநியோக மானிய வெட்டு போன்ற நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ளும்போது இடதுசாரிக் கட்சிகளும் அடுத்தடுத்து மற்ற கட்சிகளும் அவற்றைக் கண்டித்துப் போராட்டங்களில் இறங்குவது என்பது எப்போதும் நடப்பதுதான். தமிழக அரசு தற்போது பேருந்துக் கட்டணங்களைக் கடுமையாக உயர்த்தியிருக்கும் நிலையில், அதை எதிர்த்து எதிர்க்கட்சிகளின் போராட்டங்கள் நடக்கின்றன. விபத்துகள் ஏற்படுகிறபோது வழங்குகிற உதவித்தொகை, ‘நம் நாடு.. நம் ரோடு’ என்ற நினைப்புடன் வரும் வண்டிகளை வழிமறித்து வசூலிக்கும் சுங்கச்சாவடிகளுக்குத் தருகிற தண்டல் ஆகியவற்றையும் பயணிகளிடமிருந்தே எடுத்துத் தருவது என்ற முடிவையும் எதிர்த்தே இந்தப் போராட்டங்கள்.

இதில் மாறுதலான செய்தி என்னவென்றால், பல ஊர்களில் பொதுமக்கள், குறிப்பாகப் பயணிகள், இன்னும் குறிப்பாகப் பள்ளி/கல்லூரி மாணவர்கள் பேருந்துகளைச் சிறைப்பிடிப்பது உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபடுகிறார்கள் என்பதுதான். ஜல்லிக்கட்டு, கதிராமங்கலம், நெடுவாசல்போல இப்போராட்டமும் பல பகுதிகளில் தன்னெழுச்சியாக நடைபெறுகின்றதன. கட்டண உயர்வுக்குப் பொதுமக்களிடம் எதிர்ப்பு இல்லை என்று முதல்வர் சொல்லிக்கொண்டிருக்கையில்தான் கட்டண உயர்வுக்கு எதிரான மக்கள் போராட்டங்கள் நடந்துகொண்டிருக்கின்றன. மறுபுறம், கோபத்தையும் வருத்தத்தையும் வெளிப்படுத்தக்கூட நேரமில்லாமல் ஓடிக்கொண்டிருக்கும் மக்கள் கூட்டம், வேறு வழியின்றி ரயில்களிடம் தஞ்சமடைந்திருக்கிறது. ரயில்களில் கூட்டம் அலைமோதுகிறது. ஒரு ரூபாய் கட்டண உயர்வைக்கூடத் தாங்க முடியாத ஏழைகள் மீது சுமையேற்றக் கூடாது என்ற உணர்வின்றி, ஒரு ரூபாய் கொடுத்தால் பிச்சைக்காரர்கள்கூட வாங்குவதில்லை என்று கொச்சைப்படுத்துகிறார் ஒரு அமைச்சர்.

யாருக்கான குரல்?

மாணவர்கள் தெருவில் இறங்கியிருப்பது பொதுமக்களுக்காகவும்தான். ஆனால், அரசுப் பள்ளி மாணவர்களுக்கான இலவசப் பயண அட்டைகளும் தனியார் பள்ளி மாணவர்களுக்கான சலுகை அட்டைகளும் தொடரும் என்று அறிவித்து, பொங்கிவரும் அவர்களது ஆவேசத்தில் நீரூற்ற தமிழக அரசு முயல்கிறது. சலுகைகள் தொடர வேண்டும் என்று மட்டும்தான் மாணவர்கள் விரும்புகிறார்கள் என்று காட்ட விரும்புகிறதுபோலும் அரசு!

இது ஒருபுறம் இருக்க, அரசுப் போக்குவரத்துத் தொழிலாளர்களின் ஊதிய உயர்வுக்காக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட தொழிற்சங்கங்கள், தற்போது பேருந்துக் கட்டண உயர்வை எதிர்ப்பது ஏன் என்று ஆட்சியாளர்களும், கட்டண உயர்வை ஆதரிப்போரும் கேள்வி எழுப்புகிறார்கள். சமூக ஊடகங்களில், கட்டண உயர்வுக்கான கண்டனப் பதிவுகளுடன், ஆதரவுக் கருத்துகளும் போட்டி போடுகின்றன. கட்டண உயர்வுக்கு எதிரான தொழிற்சங்கங்களின் விமர்சனங்களைப் புரிந்துகொள்ளாத அரசு ஆதரவாளர்கள், இது தொழிற்சங்கங்களின் இரட்டை நிலை என்று கோபம் காட்டுகிறார்கள்.

உண்மையில், அரசுப் போக்குவரத்துத் தொழிலாளர்கள் போராட்டத்தைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்திருக்கிறார்கள். உயர் நீதிமன்றம் தலையிட்டு ஒரு நீதிபதி தலைமையிலான குழு அமைக்கப்பட்டதைத் தொடர்ந்தும், ‘ஊதியம் போதாதென்றால் வேறு வேலைக்குப் போங்கள்’ என்று தொடக்கத்தில் கூறிய தலைமை நீதிபதி அந்தக் கடுமையை மாற்றிக்கொண்டு, பொங்கல் விழாவையொட்டி மக்களின் நலன் கருதிப் பேருந்துகளை இயக்குமாறு கூறியதைத் தொடர்ந்தும் இந்த முடிவைத் தொழிலாளர்கள் எடுத்தார்கள். அவர்களுடைய போராட்டம் நடந்த ஒரு வாரத்தில் கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதன்மூலம், மக்கள் மத்தியில் போக்குவரத்துத் தொழிலாளர்கள் மீது அதிருப்தியை ஏற்படுத்தும் உள்நோக்கம் இருக்கிறதா என்றும் கேள்வி எழுகிறது.

தனியாருடன் ஒப்பிடலாமா?

கட்டணத்தை உயர்த்தாமல் எப்படி தொழிலாளர்களின் ஊதியத்தை உயர்த்த முடியும் என்கிறார்கள் அரசு ஆதரவாளர்கள். செலவு அதிகரிப்பதை ஈடுகட்ட, வரவை அதிகரிக்கத்தானே வேண்டும் என்பது அவர்கள் முன்வைக்கும் வாதம். அவர்களின் பொருளாதார அறிவில் பதிய மறுப்பது என்னவெனில், அரசுப் போக்குவரத்தை வெறும் லாப நட்டக் கணக்குப் பார்க்கும் வணிக நிறுவனமாகக் கருதக் கூடாது என்ற கோட்பாடுதான். தனியார் நிறுவனங்களுக்கு இது வணிகம்தான். அரசு நிர்ணயித்த கட்டணங்களிலேயே தனியார் நிறுவனங்கள் லாபகரமாக இயங்குகின்றன என்றால், சீருடைகூட வழங்கப்படாத ஓட்டுநர்களுக்கும் நடத்துநர்களுக்கும் நிர்வாகங்கள் வழங்குகிற சொற்பக் கூலி ஒரு முக்கியமான காரணம். இதையேதான் அரசுக் கழகங்கள் செய்ய வேண்டும் என்று இவர்கள் எதிர்பார்க்கிறார்களா? பொதுப் போக்குவரத்து என்பது மாபெரும் சமுதாய அசைவுத் தளம். தமிழ்ச் சமூகத்தின் இன்றைய வளர்ச்சிக்குப் பொதுப் போக்குவரத்தின் பங்களிப்பு அளப்பரியது. ஏழைக் குழந்தைகளின் கல்வி, பல்வேறு தரப்பினரின் தொழில், மாநிலப் பொருளாதாரம், எளியோர் வருமானம், உழவர்களின் பயணம், ஒதுக்கப்பட்ட சமூகங்களும் பழங்குடியினரும் வெளியே வருகிற மாற்றம்... இவையனைத்திலும் பொதுப் போக்குவரத்தின் ஆக்கபூர்வமான தாக்கம் இருக்கிறது.

பொதுப் போக்குவரத்து வலுப்படுத்தப்படாத மாநிலங்களில் நிலவும் பல பிற்போக்குத்தனங்களுடன் ஒப்பிட்டால் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வளர்ச்சிகளுக்கு பேருந்துகள் அரசுடைமையாக்கப்பட்டதன் பங்களிப்பு ஆழமானது. தமிழகத்தில் இதை அன்றைய திமுக அரசு செய்தது மிகப்பெரிய தொண்டு; தலையாய சமூக நீதி ஏற்பாடு!

கிராமங்களில் மட்டுமல்ல, நகரங்களிலும் அதிகாலையிலேயே அரசுப் பேருந்துகள் இயங்கத் தொடங்குகின்றன. நாட்டின் பெரும்பாலான மாநிலங்களில் இந்த அளவுக்குப் பொதுப் போக்குவரத்து வசதி கிடையாது என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். தமிழகத்தில், விரல்விட்டு எண்ணிவிடக்கூடிய சிலருக்காகக்கூட அரசுப் பேருந்துகள் இயக்கப்படுவதும், பேருந்து நிலையத்தில் கூட்டம் மிகுந்திருக்கிற நேரத்தை அடிப்படையாகக் கொண்டு தனியார் பேருந்துகளின் கால அட்டவணை இருப்பதும் இப்போதாவது சிந்தனைக்கு உட்படுத்தப்பட்டாக வேண்டும். அடிப்படையில் இது ஒரு சேவைத் துறை என்பதை நினைவில் கொண்டாக வேண்டும்.

கணக்கற்ற பலன்கள்

தமிழகத்தில் பொதுத் துறையின் கீழ் 1,40,000 தொழிலாளர்களால் இயக்கப்படும் 23,000 பேருந்துகளில், நாள்தோறும் 2 கோடிப் பேர், 88,64,000 கிலோ மீட்டர் தொலைவுகளைக் கடக்கிறார்கள். தமிழகத்தில் வேலைக்குச் செல்வோரில் 23.3% பேர் அரசுப் பேருந்துகளைச் சார்ந்திருப்பவர்கள்தான் (தேசிய அளவில் அரசுப் பேருந்துகளில் பயணிக்கிற பணியாளர்கள் 11.4%தான்.) 2011-ம் ஆண்டின் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை தெரிவிக்கிற இத்தகவலின்படி, எஞ்சியிருப்போர் குறைவான தனியார் பேருந்துகளையும் சொந்த வண்டிகளையும் நாடுகிறவர்கள்.

மக்கள் நடமாட்டத்தால் அரசின் கருவூலத்துக்கும், மாநிலப் பொருளாதாரத்துக்கும் சமுதாயத்துக்கும் ஏற்படுகிற முன்னேற்றகரமான பலன்கள் கணக்கற்றவை. குழந்தைகள் ஆரோக்கியமாக வளர்வதற்காகச் செலவிடுவது குடும்பத்துக்குப் பெரும் நன்மையாக விடிவது போன்றதே இது. அரசாங்கத்தின் பல்வேறு துறைகள் செலவுக்கு மட்டுமே உரியவை. வருவாய் இல்லை என்பதால் அவற்றின் ஊழியர்களுக்கு ஊதியம் வழங்காமல் இருக்கலாமா? உரிய கால இடைவெளியில் ஊதியத்தை உயர்த்தாமல் இருக்கலாமா? அங்கு வருகிற மக்களிடம் தண்டல் வசூலிக்கலாமா? அப்படிச் செய்வது அநியாயம் என்று நாம் அனைவரும் ஒப்புக்கொள்வோம். பொதுப் போக்குவரத்துத் துறைக்கும் அதே நியாயம்தானே?

புரிதல் அவசியம்

பொது விநியோகக் கடைகளிலிருந்து கிடைக்கிற வருவாய், செலவை விடக் குறைவுதான். ஆனால், அரிசியும் கோதுமையும் இதர முக்கியத் தேவைப் பொருட்களும் மானிய விலையில் தர முடிகிறது. அவற்றை மக்கள் நன்மைக்கான திட்டங்களாக அரசு செயல்படுத்துவதன் சமூக நியாயம் போக்குவரத்துத் துறைக்கும் பொருந்தும். அமைதியான நாட்களில் மறைமுகமாகவும், மழை வெள்ளம் போன்ற பேரிடர் நாட்களில் வெளிப்படையாகவும் சமூகப் பணியாற்றிடும் மக்கள் தொண்டுதான் போக்குவரத்துத் துறை. அதன் தொண்டர்கள்தான் தொழிலாளர்கள். இவர்களை அரசு ஊழியர்களாகக் கருத இயலாது என்று அரசு கூறுவது கொள்கை வறட்சியே. அரசு தன் நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள வேண்டும். இந்த அடிப்படை உண்மைகளை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும்.

கழகங்களுக்கு அரசு ஆண்டுதோறும் நிதி ஒதுக்குவது, பேருந்துகளை முறையாகப் பராமரிப்பதற்கான கட்டமைப்புகளை வலுப்படுத்துவது என இந்தச் சேவை இன்னமும் விரிவுபடுத்தப்பட வேண்டுமேயன்றி, நஷ்டம் என்று கூறி தொழிலாளர் வயிற்றில் அடிக்கக் கூடாது. பயணிகளுக்கும் கூடுதல் சுமை தரக் கூடாது!

- அ. குமரேசன், மூத்த பத்திரிகையாளர்.

தொடர்புக்கு: theekathirasak@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x