Published : 15 Jul 2014 12:00 AM
Last Updated : 15 Jul 2014 12:00 AM

பிரேசிலில் ஒரு தமிழ் கால்பந்து காதலர்

கால்பந்து தேசம் பிரேசிலில், 40 ஆண்டுகளாக இருக்கிறார் கே. ராஜகோபால். ரியோடி ஜெனிரோ ஃபெடரல் பல்கலைக்கழகத்தில் வேதியியல், பெட்ரோலியத் துறை பொறியியல் பேராசிரியர். இன்னும் நெருக்கமாக அறிமுகப்படுத்த வேண்டும் என்றால், நீதிபதி கே. சந்துருவின் அண்ணன். கால்பந்தில், அதிலும் குறிப்பாக பிளமெங்கோ அணியின் ஆதரவாளர்.

அந்த ரசிகத்தன்மை மிக முக்கியமான கட்டத்தில் அவருக்குக் கைகொடுத்தது சுவாரசியமான கதை. 1975-ல் மனைவி மல்லிகாவை பிரேசிலுக்கு அழைத்துச் செல்ல விரும்பினார் ராஜகோபால். அது அவ்வளவு எளிதல்ல என்பதை டெல்லி நகரில் பிரேசில் தூதரக அதிகாரியைச் சந்தித்தபோதுதான் உணர்ந்தார். உங்கள் மனைவிக்கு பிரேசில் விசா கிடைப்பது அவ்வளவு எளிதல்ல என்று கூறிய அதிகாரி, அதற்கு சுமார் ஒரு வருடம் காத்திருக்க வேண்டும் என்றார். வேறு வழியில்லாததால் தூதரையே நேரில் சந்தித்து முறையிடுவது என்று தீர்மானித்தார்.

அடுத்த நாள் தூதரை அவருடைய இல்லத்தில் சந்தித்த போது, கடற்கரையோரம் காற்றுவாங்கும் சாதாரண பிரேசில் குடிமகனைப் போல அவரும் வெறும் அரைக்கால் சட்டை மட்டும் அணிந்துகொண்டு மேல் சட்டையில்லாமல் இருப்பதைக் கண்டார். சுமார் நான்கு ஆண்டுகளாக பிரேசிலில் தங்கியிருந்தபோது கற்ற போர்த்துகீசிய மொழியின் சில வார்த்தைகளையும் வாக்கியங்களையும் கலந்து, தன்னுடைய மனைவிக்கு விசா தேவைப்படுவதை முறையிட்டார். அவ்வள வாக ஆர்வம் காட்டாமல் அதைக் கேட்டுக்கொண்டிருந்த தூதர், 'உங்களுக்கு பிரேசிலில் எந்தக் கால்பந்து அணி பிடிக்கும்?' என்று கேட்டார். விசா பெறுவதற்கு இது ரொம்ப அவசியமோ என்று நாமாகவிருந்தால் கேட்டிருப்போம். ராஜகோபாலுக்கு நேரம் நன்றாக இருந்தது. ‘பிளமெங்கோ' என்று மின்னல் அடித்தாற்போலப் பதில் சொல்லிவிட்டார்.

அவ்வளவுதான்! இருக்கையை விட்டுத் துள்ளியெழுந்த தூதர், ராஜகோபாலை ஆலிங்கனமே செய்துகொண்டுவிட்டார். பிளமெங்கோ… பிளமெங்கோ… என்று சின்னக் குழந்தையைப் போல உற்சாக மாகக் கூவிக்கொண்டே குதித்துக் குதித்துக் கும்மாளமிட்டார். “பிளமெங்கோ ஆதரவாளருக்கு விசா இல்லை என்றால், வேறு யாருக்கு அந்த விசா, நாளையே வந்து வாங்கிக்கொள்ளுங்கள்” என்றார். “விசா எனக்கு இல்லை, என்னுடைய மனைவிக்கு” என்று இழுத்தார் ராஜகோபால். “பிளமெங்கோ ஆதரவாளரின் மனைவிக்கும் அந்த விசாவைப் பெறத் தகுதி உண்டு” என்று அழுத்தம்திருத்தமாக அறிவித்தார் தூதர்.

ராஜகோபால், மல்லிகா தம்பதிக்கு ஒரு மகன், ஒரு மகள். மகன் ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் பேராசிரியர். மகள் ஊடகத் துறையில் உயர் பதவியில் இருக்கிறார். பிரேசிலியர்களுக்கே உரிய உற்சாகம் ராஜகோபாலிடமும் ஒட்டிக்கொண்டிருக் கிறது இப்போது!

பிரேசில் பிடித்திருப்பதால் இங்கேயே தங்கிவிட்டேன் என்கிறீர் கள்; பிரேசிலில் உங்களை மிகவும் கவர்ந்தவை எவை?

பிரேசில் மக்களுடைய அன்பு, எளிமை, இந்தியாவில் இருப்பதைப் போன்ற தாவரச் சூழல், மா, பலா, வாழை மரங்கள், ஓவியம், இசை, நடனம் ஆகிய கலைகளில் பிரேசிலியர் களுக்குள்ள இயற்கையான அறிவு, என்னுடைய துறையில் வளர்ச்சி பெறவும், ஆக்கபூர்வமான பங்களிப்பைச் செய்யவும் எனக்குக் கிடைத்துள்ள வாய்ப்புகள்…

பிரேசிலில் உங்களுடனேயே தங்கிவிட வேண்டும் என்ற முடிவை உங்கள் மனைவி மல்லிகா எடுப்பதற்கு எப்படி அவர்களுடைய மனதை மாற்றினீர்கள், அவரும் உங்களைப் போலவே பிரேசிலை விரும்புகிறாரா?

திருமணத்துக்கு முன்னால் சிறிது குழப்பம் இருந்தது. நான் இருக்கும் நாடு அமெரிக்கா – ஆனால், யுனைடெட் ஸ்டேட்ஸ் ஆஃப் அமெரிக்கா அல்ல - என்று அவருடைய உறவினர் அவரிடம் கூறியிருந்தார். எனவே, அது கனடாவாகத்தான் இருக்கும் என்று அவராக ஊகித்தார். இப்படி ஒரு குழப்பம் ஏற்பட்டுவிட்டது. இங்கு வந்த பிறகு அக்கம்பக்கத்தாருடன் சேர்ந்து செய்த சில பணிகளாலும், எங்களுடைய குழந்தை களாலும், போர்த்துகீசிய மொழியைச் சரளமாகப் பேசப் பழகி விட்டார், சில ஆண்டுகளிலேயே பிரேசிலை அவரும் நேசிக்கத் தொடங்கிவிட்டார்.

பிளமெங்கோ கிளப் மீது உங்களுக்குள்ள ஈர்ப்புகுறித்துச் சொல்லுங்கள்; இது எப்படித் தொடங்கியது? பிரேசிலில் அது எப்படி வளர்ந்தது?

நான் இங்கே இருந்தபோதெல்லாம் உள்ளூர் கால்பந்து அணிகளைப் பற்றிப் பேசுவோம்; அப்போது மற்றவர்கள், ‘பிளமெங்கோ என்பது கால்பந்து அணி மட்டுமல்ல, அது ஒரு தேசிய அணி, அதில் பல்வேறு இனத்தவர்கள் இருக் கின்றனர்' என்பார்கள். எனவே, மரகானாவுக்குச் சென்று பிளமெங்கோ அணிக்கும் ஃப்ளூமினென்ஸ் அணிக்கும் இடையிலான ஆட்டத்தைப் பார்த்தேன். அப்போது பிளமெங்கோ ஆதரவாளர்கள் அமர்ந்திருந்த பகுதியில் இருந் தேன். பக்கத்தில் இருந்தவர்கள் என்னிடம் பிளமெங்கோ கொடியைக் கொடுத்தார்கள். சிவப்பு, கறுப்பு வண்ணங்களில் பட்டைபட்டையாய் கோடுகள் போட்டதைப் போன்ற கொடி அது. அந்த வண்ணங்கள் எனக்குப் பரிச்சயமானவையாக இருந்தன. அதற்கடுத்த இரண்டு மணி நேரத்துக்கு நான் பிளமெங்கோ ஆதரவாளனாக மாறினேன். அன்று எங்கள் அணிதான் வெற்றி பெற்றது. அதுதான் ஆரம்பம். எங்களுடைய மகனும் மகளும் சிறு குழந்தைகளாக இருந்தபோதுகூட, மரகானா சென்று கால்பந்துப் போட்டிகளைக் குடும்பத்துடன் பார்ப்பதை வழக்கமாக்கிக்கொண்டோம். நான் அந்த அணியின் உறுப்பினரானேன். என்னுடைய குழந்தைகள் அங்கே கால்பந்து, டென்னிஸ், நீச்சல் ஆகியவற்றைக் கற்றுக்கொண்டார்கள். மல்லிகா அவர்களுடன் செல்வார். எங்களுடைய குழந்தைகளும் பிளமெங்கோவுக்கு ரசிகர்களாகிவிட்டார்கள்.

பிளமெங்கோ தொடர்பாக உங்களிடம் சுவாரசியமான பல தகவல்கள் இருக்க வேண்டும், அவற்றை எங்களுடன் பகிர்ந்து கொள்ள முடியுமா?

ரசிகர்கள், ஆதரவாளர்கள் எண்ணிக்கை அதிகம் இருந்தாலும் அந்த அணிக்கு எப்போதும் நிதி நெருக்கடிதான். எனக்கு வியப் பளிப்பது எதுவென்றால், ரொமாரியோ போன்ற பிரபலமான கால்பந்து நட்சத்திரங்கள் அந்த அணியில் தொடர்ந்து இருக்க வேண்டும் என்பதற்காகப் பெரும் தொகையைக் கொடுத்துக் கொண்டிருப்பதுதான். சமீபத்தில் அட்ரியானோகூட அப்படியே நிதியளித்தார்.

பிரேசிலில் எப்போதும் கால்பந்து காய்ச்சல் அடிக்க அப்படி என்ன முக்கியமான காரணம்?

கால்பந்தில் புதுப்புது உத்தியைக் கண்டுபிடிப்பதில் பிரேசிலி யர்களை உலகில் எவராலும் வெல்ல முடியாது. கால்பந்து இங்கு விளையாட்டு மட்டுமல்ல, சுவாசமும்கூட.

கவிதா முரளிதரன், தொடர்புக்கு: kavitha.m@thehindutamil.co.in

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x