Last Updated : 06 Oct, 2023 06:16 AM

 

Published : 06 Oct 2023 06:16 AM
Last Updated : 06 Oct 2023 06:16 AM

சாதிவாரிக் கணக்கெடுப்பு: பிஹார் புயல் விஸ்வரூபம் எடுக்குமா?

பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீட்டுக்கும் பிஹாருக்கும் இடையில் இயல்பாகவே ஒரு பிணைப்பு உண்டு. தேசிய அளவில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு (ஓபிசி) இடஒதுக்கீடு வழங்கப் பரிந்துரைகளை வழங்கிய பி.பி.மண்டல் பிஹாரைச் சேர்ந்தவர்; அம்மாநிலத்தின் ஏழாவது முதலமைச்சராகவும் (1968) பதவி வகித்தவர். முன்னதாக, பிஹார் முதலமைச்சராக இருந்த தரோகா பிரசாத் ராய், பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக 1971இல் அமைத்த முங்கரிலால் ஆணையத்தின் பரிந்துரைகள், 1977இல் ஜனதா கட்சி முதல்வர் கர்பூரி தாக்கூரால் அமல்படுத்தப்பட்டன. 1979இல் அமைக்கப்பட்ட மண்டல் ஆணையத்துக்குப் பல்வேறு வகைகளில் அடிப்படையாக இருந்த அறிக்கை அது. 1990இல் வி.பி.சிங் தலைமையிலான மத்திய அரசு மண்டல் ஆணையப் பரிந்துரைகளை அமல்படுத்தியதும், அதற்குக் கிடைத்த ஆதரவும் எதிர்ப்பும் இந்திய சமூக அரசியலின் முக்கியமான கண்ணிகள்.

இன்றைக்கு ஓபிசி அரசியல் மீண்டும் பிஹாரிலிருந்து தொடங்கியிருக்கிறது. நிதீஷ் குமார் தலைமையிலான பிஹார் அரசு நடத்திய சாதிவாரிக் கணக்கெடுப்பின் அறிக்கை தேசிய அரசியல் களத்தில் புயலைக் கிளப்பியிருக்கிறது.

கடந்துவந்த பாதை: கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் அனைத்துச் சமூகத்தினரும் தத்தமது எண்ணிக்கைக்கு ஏற்பப் பிரதிநிதித்துவம் பெற வேண்டும் என்பதுதான் சாதிவாரிக் கணக்கெடுப்பை வலியுறுத்துபவர்களின் முக்கிய நோக்கம். 1951 முதல் பட்டியல் சாதி - பழங்குடிச் சமூகத்தினர் குறித்த தரவுகள் மட்டும் மக்கள்தொகைக் கணக்கெடுப்பில் சேகரிக்கப்பட்டு வெளியிடப்பட்டுவருகின்றன. இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர் குறித்த தரவுகள் இடம்பெறுவதில்லை.

2011இல் மத்திய ஊரக வளர்ச்சித் துறை நடத்திய சமூக-பொருளாதார சாதிவாரிக் கணக்கெடுப்பில் (SECC) சாதிவாரிப் புள்ளிவிவரங்கள் சேகரிக்கப்பட்டன. எனினும், பல்வேறு தடங்கல்கள் காரணமாக 2013 இறுதியில்தான் அந்த அறிக்கை முழுமையடைந்தது. ஆனால், முழுமையான சாதி விவரங்கள் வெளியிடப்படவில்லை. அடுத்து வந்த பாஜக அரசும் அதைச் செய்யவில்லை.

பட்டியல் சாதி-பழங்குடி சமூகத்தினர் தவிர, பிற சமூகத்தினர் குறித்து சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்துவதில்லை என்பதைக் கொள்கை முடிவாகவே மோடி தலைமையிலான பாஜக அரசு அறிவித்துவிட்டது. இத்தனைக்கும், சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்த வேண்டும் எனும் குரலை - எதிர்க்கட்சி வரிசையில் இருந்தபோது - பாஜக எழுப்பியிருக்கிறது.

2021 மக்கள்தொகைக் கணக்கெடுப்பு கரோனா பெருந்தொற்று உள்ளிட்ட காரணங்களால் தள்ளிப்போடப்பட்டுவிட்டது. இதற்கிடையே, சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்துமாறு பிரதமர் மோடியைச் சந்தித்து வலியுறுத்திவந்தார் நிதீஷ் குமார். இந்நிலையில், 2022 ஜூன் 6 அன்று, பிஹாரில் சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்படுவது தொடர்பாக அறிவிப்பு வெளியானது. ஆனால், அரசமைப்புச் சட்டத்தின்படி, மத்திய அரசுதான் மக்கள்தொகைக் கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கால், இந்தப் பணிகளுக்கு முட்டுக்கட்டைகள் ஏற்பட்டன. சட்டப் போராட்டத்துக்கு நடுவே ஒருவழியாக சாதிவாரிக் கணக்கெடுப்பை நடத்தி அறிக்கையையும் வெளியிட்டுவிட்டது பிஹார் அரசு.

அரசியல் அஸ்திரம்: இதன்படி, அம்மாநிலத்தில் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் 36%, இதர பிற்படுத்தப்பட்டோர் 27.13%, பட்டியல் சாதியினர் 19.65%, பட்டியல் பழங்குடியினர் 1.68%, முன்னேறிய வகுப்பினர் 15.52% எனத் தெரியவந்திருக்கிறது. ஐந்து மாநிலத் தேர்தல்கள், 2024 மக்களவைத் தேர்தல் காத்திருக்கும் நிலையில், இண்டியா கூட்டணி இதைப் பெரும் அரசியல் அஸ்திரமாகப் பயன்படுத்தத் தொடங்கியிருக்கிறது.

“2024இல் எங்கள் அரசு அமைந்த பின்னர் நாடு முழுவதும் சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்படும்” என்று லாலு பிரசாத் யாதவ் உள்ளிட்ட தலைவர்கள் உறுதியளித்திருக்கின்றனர். “மக்கள்தொகைக்கு ஏற்றவாறு உரிமைகள் வழங்கப்பட வேண்டும்” என்று ராகுல் காந்தி வலியுறுத்திவருகிறார்.

ஆரம்ப காலம் முதல், பிற்படுத்தப்பட்டோர் குறித்து காங்கிரஸ் அக்கறை காட்டியதில்லை என்று ஒரு விமர்சனம் உண்டு. 1980இல் வெளியான மண்டல் ஆணையப் பரிந்துரைகளை அமல்படுத்த காங்கிரஸ் அரசு ஆர்வம் காட்டவில்லை. ஐஏஎஸ் அதிகாரி பி.எஸ்.கிருஷ்ணன், ராம்விலாஸ் பாஸ்வான் போன்றோரின் தீவிர முனைப்புக்குப் பின்னர் - 10 ஆண்டுகளுக்குப் பிறகு - வி.பி.சிங் தலைமையிலான அரசு மண்டல் குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்த இசைந்தது.

1990ஆகஸ்ட் 7 அன்று, மண்டல் ஆணையப் பரிந்துரைகளை அமல்படுத்துவதாக அப்போதைய பிரதமர் வி.பி.சிங் நாடாளுமன்றத்தில் அறிவித்தபோது, ராஜிவ் காந்தி அதை எதிர்த்தார். இன்றைக்கு அவரது மகன் ராகுல் காந்தி ஓபிசி அரசியலை முன்னெடுப்பது மிகப் பெரிய மாற்றம்.

மாறும் காட்சிகள்: மண்டல் குழுவின் பரிந்துரைகள் அமல்படுத்தப்பட்ட பின்னர், பிஹார், உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட இந்தி பேசும் மாநிலங்களில், ஓபிசி தலைவர்கள் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம், ராஷ்ட்ரிய ஜனதா தளம் போன்றவை வலுப்பெற்றன; காங்கிரஸின் செல்வாக்கு சரிந்தது. முன்னேறிய வகுப்பினரையே பெருமளவில் வாக்குவங்கியாகக் கொண்டிருந்த பாஜக, அதன் பின்னர்தான் ராமர் கோயில், ரத யாத்திரை ஆகிய அஸ்திரங்களைப் பிரயோகிக்கத் தொடங்கியது. ‘மண்டல் எதிர் கமண்டல்’, ‘மண்டல் எதிர் மந்திர் (கோயில்)’ போன்ற பதங்கள் அப்போது பிரபலம். காலப்போக்கில் அதற்கான பலனும் பாஜகவுக்குக் கிடைத்தது; ஓபிசி பிரிவினரின் ஆதரவும் அக்கட்சிக்குக் கடந்த சில ஆண்டுகளில் கணிசமாக உயர்ந்திருக்கிறது.

பிஹார் அரசின் சாதிவாரிக் கணக்கெடுப்பு அறிக்கை வெளியான பின்னர் பாஜக தடுமாறுவது வெளிப்படை. இதற்கு வெவ்வேறு விதமாக அக்கட்சி எதிர்வினையாற்றுகிறது. கணக்கெடுப்பு தொடங்கிய நேரத்தில், பிஹாரின் கூட்டணி அரசில் தாங்கள் இருந்ததாக பாஜகவினர் உரிமை கொண்டாடுகிறார்கள். அதே வேளையில், இந்தக் கணக்கெடுப்பில் பொருளாதாரப் பின்னணி தொடர்பான தரவுகள் ஏன் வெளியிடப்படவில்லை என்றும் கேள்வி எழுப்பியிருக்கிறார்கள்.

மறுபுறம், காங்கிரஸ் மக்களை இன்னமும் சாதிரீதியாகப் பிளவுபடுத்துவதாக மோடி சாடுகிறார். ஓபிசி பிரதமர் எனும் அடையாளத்தைக் கொண்டிருக்கும் மோடி பாஜகவுக்குப் பெரும் பலம். பாஜக எம்.பி-க்கள், எம்.எல்.ஏ-க்கள், மேலவை உறுப்பினர்களில் பிற்படுத்தப்பட்டோர் கணிசமாக இருப்பதாகவும் அக்கட்சியினர் சுட்டிக்காட்டுகிறார்கள்.

பாஜகவுக்குச் சவால்கள்: காங்கிரஸ் தலைமையிலான கர்நாடக அரசு, 2015இல் இதேபோன்ற கணக்கெடுப்பை நடத்தியது. எனினும், அதன் விவரங்கள் இன்றுவரை வெளியிடப்படவில்லை. அதனால்தான், காங்கிரஸுக்குக் கர்நாடகம் ஒரு மாதிரி, பிஹார் இன்னொரு மாதிரியா என பாஜக கேள்வி எழுப்புகிறது.

எனினும், பாஜகவுக்கு இது நிச்சயம் சவாலான விஷயம்தான். பல்வேறு தருணங்களில் பாஜக அரசுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுக்கும் ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கூட, சாதிவாரிக் கணக்கெடுப்பு விஷயத்தில் பாஜகவுக்கு எதிர் நிலைப்பாட்டை எடுத்திருக்கிறார்.

ஒடிசா அரசு ஏற்கெனவே நடத்திய சாதிவாரிக் கணக்கெடுப்பின் அறிக்கை விரைவில் வெளியாகவிருக்கிறது. உத்தரப்பிரதேசத்தில் சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்படவேண்டும் என்று மாயாவதி கோரிக்கை விடுத்திருக்கி றார். பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் அப்னா தளம் (சோனேலால்) உள்ளிட்ட சில கட்சிகளும் இதே குரலில் பேசத் தொடங்கியிருக்கின்றன.

இந்துக்கள் என்ற வகைப்பாட்டில் அனைத்துச் சாதியினரையும் அணிதிரட்டுவதில் கணிசமான வெற்றியை அடைந்திருக்கும் பாஜக, இந்துத்துவ அரசியலுடன், வளர்ச்சிப் பணிகள், நலத்திட்ட உதவிகள் போன்றவற்றை முன்னிறுத்தி வியூகம் வகுத்திருந்த வேளையில், இண்டியா கூட்டணி இப்படிஒரு ஆயுதத்தை எடுத்திருக்கிறது. இதன் விளைவுகள் எப்படி இருக்கும் என அறிய, 2024 மக்களவைத் தேர்தல் வரை காத்திருக்க வேண்டியிருக்காது!

- தொடர்புக்கு: chandramohan.v@hindutamil.co.in

To Read in English: Caste census: Will Bihar storm take a giant leap?

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x