Published : 01 Dec 2017 10:45 AM
Last Updated : 01 Dec 2017 10:45 AM

செவிலியர்கள் கோரிக்கை: செயல்படுத்துமா அரசு?

தங்களது உரிமைகளைப் பெறுவதற்காக சென்னை டி.எம்.எஸ். அலுவலகத்தில் செவிலியர்கள் நடத்திய மூன்று நாள் உள்ளிருப்புப் போராட்டம் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்த புரிதலைப் பொதுவெளியில் ஏற்படுத்தியிருக்கிறது. போராட்டத்தை முறியடிக்க அரசு மேற்கொண்ட கடுமையான நடவடிக்கைகளும் பொதுத் தளத்தில் விவாதத்துக்கு வந்திருக்கின்றன. மறுபக்கம், அத்தியாவசியமான பணியில் இருப்பவர்கள் இப்படிப் போராடுவது சரியா என்று சிலர் கேள்வி எழுப்புகிறார்கள். மிகக் குறைந்த சம்பளத்துடன், பல மணி நேரம் வேலை பார்க்கும் செவிலியர்களின் நிலையை அறிந்துகொண்டால் இந்தப் பேச்சுகள் எழாது.

2012-ல் மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு வைத்து 11,000 செவிலியர்களைத் தமிழக அரசின் சுகாதாரத் துறை நியமனம் செய்தது. அவர்களுக்கு மாதம் ரூ7,700 தொகுப்பூதியம் வழங்கப்படுகிறது. கடும் பணிச்சுமை, குறைந்த சம்பளம், வாழ்வாதாரப் பிரச்சினைகள் என்று அல்லாடிக்கொண்டிருக்கிறார்கள் செவிலியர்கள். பணி நியமனத்தின்போதே அவர்களை நிரந்தர அடிப்படையில் நியமிக்காமல், ஒப்பந்த அடிப்படையில் நியமித்தது. மத்திய அரசின் தேசிய சுகாதார இயக்கம் மூலம் இவர்கள் நியமிக்கப்படுகிறார்கள் என்று அதற்குக் காரணமும் சொன்னது.

இது ஒரு மிக முக்கியமான கேள்வியை எழுப்புகிறது. மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள மருத்துவமனைகளுக்குப் பணி நியமனம், ஊதியம் வழங்கல் போன்ற விஷயங்களில் ஏன் மத்திய அரசு நேரடியாகத் தலையிடுகிறது? இது மாநில அரசுகளின் உரிமைகளைப் பறிக்கும் செயலல்லவா? இந்த உரிமை பறிப்புக்கு ஏன் மாநில அரசு உடன்பட்டது என்று புரியவில்லை. பணியாளர் நியமனத்தில் மாநில உரிமை பறிக்கப்படுவது என்பது கூட்டாட்சிக் கோட்பாட்டுக்கு எதிரானது. மாநிலங்களின் பட்டியலில் உள்ள நல்வாழ்வுத் துறையைப் படிப்படியாகப் பொதுப் பட்டியலுக்குக் கொண்டுசென்று, இறுதியில் அதுமையப் பட்டியலுக்குக் கொண்டுசெல்லப்படலாம் எனும் அச்சத்தை இது உருவாக்கியிருக்கிறது.

உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காக உறுப்புகளைப் பெற விரும்புவோர் பட்டியலைப் பராமரிப்பது, அரசு மருத்துவமனைகளின் படுக்கைகளைத் தனியாருக்கு விடுவது, தனியார் நிறுவனங்கள் மருத்துவமனைகள் கட்டிக்கொள்ள அரசு மருத்துவமனை இடங்களை வழங்குவது போன்றவற்றை மத்திய அரசு தேசிய நலக்கொள்கை மூலமும், தேசிய சுகாதார இயக்கம் மூலமும், நிதி ஆயோக் மூலமும் மாநில அரசுகளின் மீது திணிக்கிறது.

மத்திய அரசின் இந்தக் கொள்கைகளுக்குப் பின்னால் உலக வங்கியும் சர்வதேச நிதி மூலதன மும் உள்ளன. சர்வதேச நிதி மூலதனம், தொழில் துறைகளில் முதலீடு செய்வதைவிட சேவைத் துறைகளில் முதலீடு செய்ய விரும்புகிறது. சேவைத் துறைகளில் முதலீடு செய்வதன் மூலம் மிக விரைவாகவும் மிக அதிகமாகவும் லாபம் ஈட்ட முடியும் என்பதுதான் இதற்குக் காரணம்!

இரண்டாம் உலகப் போருக்கு முன்பாக சேவைத் துறைகளில் வர்த்தகம் என்பது மிகக் குறைவாகவே இருந்தது. ஆனால், அந்த நிலைமை மாறிவிட்டது. குறிப்பாக, 2002-க்குப் பிறகு, மொத்த வர்த்தகத்தில் நான்கில் ஒரு பங்காக உயர்ந்துவிட்டது. சேவைத் துறையில் வணிகமயமாக்கலுக்கான பொது உடன்பாடு இதற்கான வாய்ப்பை அதிகரித்துவிட்டது. சர்வ தேச நிதி மூலதனத்தின் லாபப் பசியைத் தீர்க்கும் வகையில், மத்திய அரசு வகுக்கும் கொள்கைகளின் விளைவுகள் மாநில அரசுகளின் தலையில் விழுகின்றன.

இதில் பலிகடா ஆக்கப்பட்டவர்களில் செவிலி யர்களும் அடக்கம். அரசின் அடக்குமுறையையும் கொட்டும் மழையையும் தாண்டி அவர்கள் நடத்திய உள்ளிருப்புப் போராட்டத்தின் பின்னணி இதுதான். பணி நிரந்தரம் செய்யப்பட வேண்டும், எட்டு மணி நேரம் மட்டுமே பணி என்பதை நடைமுறைப்படுத்த வேண்டும், எதிர்காலத்தில் ஒப்பந்த முறையில் பணி நியமனம் செய்யக் கூடாது எனும் கோரிக்கைகளைத்தான் அவர்கள் முன்வைக்கிறார்கள்.

தமிழக அரசோ அனைவருக்கும் பணிநிரந்தரம் உடனடியாகத் தர முடியாது. நிரந்தர செவிலியர்களுக்கான பணியிடங்கள் காலியாகும்போதுதான் படிப்படியாகப் பணிநிரந்தரம் தர முடியும் என்கிறது. நினைத்துப் பாருங்கள். ரூ. 7,700 சம்பளத்தை வைத்துக்கொண்டு இன்றைய விலைவாசியில் எப்படி வாழ்க்கையை நடத்த முடியும்? செவிலியர்களுக்குக் குறைந்தபட்ச ஊதியமாக மாதம்தோறும் ரூ. 20,000 வழங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட குழுவே கூறியுள்ளது. ஆனால், அதை அரசு கருத்தில் கொள்ளவில்லை.

‘போதிய நிதி இல்லை; மக்கள் நல்வாழ்வுத் துறைக்காக ஒதுக்குகின்ற நிதியை முழுவதுமாக ஊழியர்களின் ஊதியத்துக்காக வழங்க முடியுமா?’ என்று கேட்கிறது தமிழக அரசு. கடந்த ஏழு ஆண்டுகளில் தனியார் மருத்துவமனைகள், முதல்வர் காப்பீடு திட்ட நிதி மூலம் ரூ. 2,500 கோடி லாபம் ஈட்டியுள்ளன. அரசு மருத்துவமனைகளில் வழங்கப்படும் சிகிச்சைகளுக்குக்கூட, ஏன் தனியார் மருத்துவமனைகளை நோக்கி மக்களை விரட்ட வேண்டும்?

சில தனியார் மருத்துவமனைகளுக்கும் நேரடியாக நிதியை அரசு வழங்குகிறது. மருந்துகள், உபகரணங்கள் எல்லாவற்றையும் தனியார் நிறுவனங்களிடமிருந்து அதிக விலையில் கொள்முதல் செய்கிறது. ஏன் பொதுத் துறை நிறுவனங்கள் மூலமாக இவற்றைக் குறைந்த விலையில் உற்பத்தி செய்யக் கூடாது? மருத்துவச் செலவில் 80% மருந்துகளுக்குத்தான் செல்கிறது. இந்த செலவீனத்தைக் குறைக்க அரசு என்ன நடவடிக்கை எடுத்தது?

மக்கள் நல்வாழ்வுத் துறைக்கான நிதியை மிகக் குறைவாக ஒதுக்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. மத்திய - மாநில அரசுகள் மக்கள் நல்வாழ்வுத் துறைக்காக ஒதுக்கும் நிதி மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.04% மட்டுமே. இதை 6% ஆக்க வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் வலியுறுத்தியிருக்கிறது.

இந்த வழிகாட்டலின் அடிப்படையில் நிதி ஒதுக்கீட்டை அதிகப்படுத்தினால், நாட்டு மக்கள் அனைவருக்கும் தரமான இலவச சிகிச்சையை வழங்குவதோடு அனைத்து மருத்துவத் துறை ஊழியர்களுக்கும் நிரந்தர வேலைவாய்ப்பையும் நியாயமான ஊதியத்தையும் வழங்க முடியும். இன்னொரு விஷயம். கேரளம் உள்ளிட்ட சில மாநிலங்கள் மத்திய அரசு வழங்கும் ஊதியத்துடன் கூடுதலாக நிதி ஒதுக்கி செவிலியர்களுக்கு ரூ. 20 ஆயிரம் வழங்குகின்றன. இதைத் தமிழக அரசு பின்பற்றுவதில் என்ன பிரச்சினை?

போராட்டத்தைக் கைவிட்டு பணிக்குத் திரும்பு மாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து, செவிலியர்கள் தங்கள் போராட்டத்தைக் கைவிட்டிருக்கிறார்கள். தங்களது கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும் என்று அதிகாரிகள் அளித்த உறுதிமொழியை அவர்கள் நம்புகிறார்கள். அவர்களது கோரிக்கை நிறைவேறுவது அரசின் கைகளில்தான் இருக்கிறது!

- ஜி.ஆர்.இரவீந்திரநாத், பொதுச் செயலாளர்,
சமூக சமத்துவத்துக்கான டாக்டர்கள் சங்கம்.
தொடர்புக்கு: daseindia@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x