Last Updated : 14 Nov, 2017 10:36 AM

 

Published : 14 Nov 2017 10:36 AM
Last Updated : 14 Nov 2017 10:36 AM

காஷ்மீர் ‘சுயாட்சி’: புதிரை விடுவிக்க வேண்டிய நேரம்!

மா

ற்றுக்கட்சிக்கார்கள் கூறிய கருத்துக்கு பதில் கருத்து கூறும் அரசியல் தலைவர்கள், அவர்கள் சொல்வதைப் புரிந்துகொள்ளாமலோ, அல்லது தவறாகப் புரிந்துகொண்டோ சச்சரவில் ஈடுபடுவதைக் கவனித்திருக்கிறீர்களா? அவர்கள் சொல்வதில் முக்கியமான, புதிய அம்சம் இருப்பதைக் கவனிக்காமல் கூடப் பேசிவிடுவார்கள்; முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் தலைவருமான ப. சிதம்பரம் சமீபத்தில் காஷ்மீர் குறித்துப் பேசியது தொடர்பாக அப்படித்தான் எதிர்வினையாற்றப்பட்டிருக்கிறது.

காஷ்மீருக்குச் சுதந்திரம் தர வேண்டும் என்று சிதம்பரம் கூறுகிறார் என்று தவறாகப் புரிந்துகொண்டு பிரதமர் நரேந்திர மோடியும் நிதியமைச்சர் அருண் ஜேட்லியும் அவருக்குக் கண்டனம் தெரிவித்தனர். சிதம்பரம் அப்படிக் கூறவில்லை; மிகவும் நுட்பமாக, ஆனால் வித்தியாசமாக - ஒன்றைக் கூறியிருக்கிறார். காஷ்மீரிகள் ‘ஆஸாதி’ (சுதந்திரம்) என்று கேட்கும்போது, ‘சுயாட்சி’ என்பதைத்தான் மனதில் கொண்டு கேட்கிறார்கள் என்று அவர் குறிப்பிட்டிருக்கிறார்கள். பிரதமரும் ஜேட்லியும் இதைச் சரியாகப் புரிந்துகொள்ளவில்லை.

ஆஸாதி என்பதை இந்திய அரசியல் சட்டத்தின் பின்னணியில் பொருத்திப் பேசியிருக்கிறார். இந்த கோரிக்கையானது மத்திய அரசின் கவனத்தை ஈர்ப்பதற்கான சொல்லாடல் என்கிறார். அதிக எண்ணிக்கையிலான – பெரும்பாலானவர்களாக இல்லாமல் இருக்கலாம் – காஷ்மீரிகள் ‘சுயாட்சி’ என்பதைத்தான் அப்படி ‘ஆஸாதி’ என்று கோருகின்றனர். அதை ஏற்க முடியாது என்று மத்திய அரசு கூறுவது என்பதால் ஏற்பட்டுள்ள முட்டுக்கட்டை நிலைமை நீங்குவதற்கான வழியைத்தான் சிதம்பரம் சுட்டிக்காட்டுகிறார். இன்னும் ஆழமாகப் பார்க்கும்போது, நாடு சுதந்திரம் அடைந்த புதிதில் காஷ்மீரிகள் அனுபவித்த சுயாட்சி, டெல்லியில் அடுத்தடுத்து ஆட்சிக்கு வந்த அரசுகளால் படிப்படியாகக் குறைக்கப்பட்டதைத்தான் சிதம்பரம் குறிப்பிடுகிறார். அரசியல் சட்டத்தின் 370-வது பிரிவை நடைமுறையிலும் உணர்வுபூர்வமாகவும் அப்படியே பின்பற்ற வேண்டும் என்பதே காஷ்மீரிகளின் கோரிக்கை என்கிறார். இதைக் குறிப்பிட்ட சிதம்பரம், தான் சொல்ல வருவது என்ன என்பதை முழுதாக விளக்காமல் விட்டுவிட்டார்.

ஆனால் கடந்த ஆண்டு ‘இந்தியா டுடே’ டி.வி.க்காக 2016 ஜூலையில் எனக்கு அளித்த பேட்டியில் இதை நன்றாக விளக்கியிருந்தார் சிதம்பரம். “இந்தியாவுடன் காஷ்மீர் சமஸ்தானம் இணைக்கப்பட்ட போது ஒப்புக்கொண்டவற்றை நிறைவேற்றாமல் அலட்சியப்படுத்திவிட்டோம். நம்பிக்கையைச் சிதைத்துவிட்டோம், வாக்குறுதிகளைக் காப்பாற்றாமல் விட்டுவிட்டோம்” என்று கூறினார். ராணுவப் பாதுகாப்பு, வெளியுறவு விவகாரங்கள், செலாவணி, தொலைத்தொடர்பு ஆகியவை மட்டும் மத்திய அரசால் வழங்கப்படும்; எஞ்சியவற்றை காஷ்மீர் மாநிலமே நிர்வகித்துக்கொள்ளும் என்ற நிபந்தனை ஏற்கப்பட்டதால்தான் காஷ்மீர் இந்தியாவுடன் இணைந்தது. இந்திய இறையாண்மைக்குள் காஷ்மீரின் தனித்தன்மை காப்பாற்றப்பட வேண்டும் என்று அது வலியுறுத்தியது. காலப்போக்கில் பல்வேறு மத்திய அமைப்புகளின் அதிகார வரம்பு காஷ்மீருக்கும் விரிவுபடுத்தப்பட்டு அதுவும் இந்தியக் கூட்டமைப்பின் இதர மாநிலங்களைப் போலத்தான் என்ற நடைமுறை திணிக்கப்பட்டது.

இதுதொடர்பாக, சமீபத்தில் பேட்டியளித்த சிதம்பரம் தீர்வு பற்றிப் பேசவில்லை. ஆனால் கடந்த ஜூலையில் அளித்த பேட்டியில் அதை விவரித்திருந்தார். “இந்தியாவுடன் ஜம்மு-காஷ்மீர் மாநிலம் இணைந்தபோது மத்திய அரசால் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் காப்பாற்றப்படும் என்பதை உறுதி செய்ய வேண்டும்; இந்திய அரசியல் சட்டத்துடன் முரண்படாத வகையில், மாநிலத்துக்குத் தேவைப்படும் சட்டங்களை அந்த மாநிலமே இயற்றிக்கொள்ளட்டும் என்று அனுமதிக்க வேண்டும். அவர்களுடைய தனி அடையாளம், வரலாறு, கலாச்சாரம், மதம் உள்ளிட்டவற்றை அனுமதித்து இந்தியாவின் ஒரு பகுதியாகவே நீடிக்க அனுமதிக்க வேண்டும்” என்றார்.

இதை எப்படி மேற்கொண்டு விவாதிப்பது அல்லது அமல் செய்வது என்று சிதம்பரம் கூறவில்லை. ஆனால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி கடந்த செப்டம்பர் மாதம் எனக்களித்த தனிப் பேட்டியில் இதன் சாத்தியம் குறித்துக் குறிப்பிட்டார். “காஷ்மீரிகளுடன் நாம் பேச வேண்டும். 1947-க்குப் பிறகு நடந்தவற்றை நாம் திரும்பிப் பார்க்க வேண்டும்.

அதில் செய்த தவறுகளைத் திருத்திக்கொள்ள விருப்பம் தெரிவிக்க வேண்டும். இதுதான் பரூக் அப்துல்லாவின் தேசிய மாநாட்டுக் கட்சியின் நிலையும். எதையெல்லாம் சரிசெய்ய வேண்டும் என்பதில் அவர்களுக்குத் தெளிவில்லை. ஆனால் மாநிலத் தலைவரை எப்படித் தேர்ந்தெடுக்க வேண்டும், அவருடைய பதவிப் பெயரை பழையபடிக்கு (முதல்வர் என்பதற்குப் பதிலாக பிரதமர்) மாற்ற வேண்டும் என்று கூறுகின்றனர்.

உச்ச நீதிமன்றம், மத்திய தேர்தல் ஆணையம், தலைமை கணக்குத் தணிக்கையாளர் போன்ற இந்திய அரசியல் சட்டத்தால் உருவாக்கப்பட்ட தனி அதிகாரமுள்ள நிறுவனங்களுக்கு காஷ்மீரில் மரியாதை இருக்கிறது. எஞ்சியதை காஷ்மீரிகளே தீர்மானித்துக் கொள்ள அனுமதி வேண்டும் என்பதுதான் முக்கிய கோரிக்கை.

சிதம்பரம்-யெச்சூரிகளின் உத்தேச யோசனை என்னவென்றால் இந்தியர்களாக (இணைந்து) இருப்பதற்குப் பல வழிகள் உள்ளன. இமாசலம், உத்தராகண்ட், குஜராத், மகாராஷ்டிரம், வடகிழக்கு மாநிலங்கள் ஆகியவை தங்களுக்கென்று தனித்தனி அரசியல் சட்ட ஏற்பாடுகளைக் கொண்டு இந்திய மாநிலங்களாக இணைந்திருக்க முடியுமென்றால் ஜம்மு-காஷ்மீரும் ஏன் அப்படி இருக்க முடியாது என்பதுதான். இது, இந்திய நாட்டின் பல்வேறு இழைகளில் மேலும் ஒரு இழையைக் கூட்டும், தேசியம் என்கிற ஆடை அதனால் வலுவிழந்துவிடாது. இந்த அடிப்படையில்தான் எல்லோராலும் பெரிதும் பாராட்டப்பட்ட மன்மோகன் சிங் – பர்வேஸ் முஷரஃப் ரகசிய ஒப்பந்தப் பேச்சுகளும் நடைபெற்றன.

வித்தியாசமான கருத்து

இது, ஆஸாதி (சுதந்திரம்) அல்ல; அதற்கும் அப்பாற்பட்டது. பாஜகவும் ஆர்எஸ்எஸ்ஸும் இந்தியா என்று எதை நினைக்கின்றனவோ அதிலிருந்து வித்தியாசமானது. அதனால்தான் இதைப் புரிந்துகொண்டு, ஆராயாமல் இதைக் கடுமையாகத் தாக்கியிருக்கிறார்கள் பிரதமரும் நிதியமைச்சரும். அப்படியானால், காஷ்மீர் பிரச்சினைக்கான தீர்வு காஷ்மீரிகளை ‘அரவணைத்தல்’ என்று மோடி எதைக் கூறுகிறார்? யதார்த்தமாகப் பார்த்தால் அவர்களை எதிர்கொண்டு சந்தித்தல் என்று கொள்ளலாம்; அல்லது ஹம்டி டம்டி ஒரு முறை கூறியதைப் போல, “நான் ஒரு வார்த்தையைச் சொன்னால், சொல்ல வருவது அதைத்தான் – அதாவது, கொஞ்சமும் அதிகம் அல்ல – குறைவும் அல்ல!

- கரண் தாபர்,
தொலைக்காட்சி நிகழ்ச்சி நடத்துநர்.
தமிழில்: ஜூரி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x