Published : 22 Nov 2017 09:46 AM
Last Updated : 22 Nov 2017 09:46 AM

ஆளுநருக்கான வரையறை என்ன?

மிழ்நாட்டில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசு ஆட்சியிலிருக்கும்போதே, ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கோவைக்குச் சென்று அரசு அதிகாரிகளுடன் ஆலோசனையும் ஆய்வும் நடத்தியது சர்ச்சையாகியிருக்கிறது. ‘ஆட்டுக்குத் தாடியும், நாட்டுக்கு ஆளுநரும் தேவையில்லை‘ என்றவர் அண்ணா. அவர் வழி நிற்கும் தமிழ்நாட்டில் உள்ள பெரும்பான்மைக் கட்சிகள் இதைக் கண்டித்துள்ளன. ஆனால், அண்ணாவின் பெயரிலான கட்சியிலிருந்து வந்து, ஆட்சியிலிருப்பவர்கள் இதுகுறித்து ஒரு வார்த்தை எதிர்த்துப் பேசவில்லை என்பது தமிழ்நாட்டின் பெரும் துயரம். போகட்டும், “ஆளுநருக்கு இதற்கான அதிகாரம் இருக்கிறதா, சட்டம் என்ன சொல்கிறது?” என்பது தொடர்பாக நிறைய விவாதங்கள் நடக்கின்றன. நாம் நம் விவாதத்தைக் கொஞ்சம் மாற்றி அமைத்துக்கொள்வோம்: சட்டம் சொல்வது கிடக்கட்டும்; முதலில் ஆளுநர் பதவி தேவையா? அப்படித் தேவை என்றால், அதற்கான வரையறையாக எதை வைத்துக்கொள்ளலாம்?

மாகாண அரசுகளைக் கண்காணிக்கும் கங்காணிகளாகவே ஆளுநர்களை நியமித்தனர் ஆங்கிலேயர்கள். இன்றைக்கும் அது அப்படியே நீடிப்பதுதான் துயரம். நாட்டின் சுதந்திரத்துக்குப் பின் வைஸ்ராய் பதவி குடியரசுத் தலைவர் பதவியாக மாற்றப்பட்டது. ஆளுநர் பதவியை நியாயப்படுத்த குடியரசுத் தலைவர் பதவியையும் ஆளுநர் பதவியையும் பலர் ஒப்பிடுவது உண்டு. குடியரசுத் தலைவர் தேர்தலின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுபவர் என்பதை இங்கு நினைவில் கொள்ள வேண்டும். ஆளுநர் பதவி நியமனம் வழியாகவே பூர்த்திசெய்யப்படுகிறது. இப்படியான ஒரு பொதுநிலைப் பதவிக்கு நியமனம் மூலம் ஆட்கள் அமர்த்தப்படும் சூழலில், கண்ணியமான நடைமுறைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும். இதுகுறித்து இந்திய அரசியல் அரங்கில் நிறையவே விவாதிக்கப் பட்டிருக்கிறது.

எப்படி உருவானது ஆளுநர் பதவி?

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நினைவுகூரத்தக்க தலைவர்களில் ஒருவரான புபேஷ் குப்தா, மாநிலங்கள் அவையில் தனிநபர் மசோதாவே கொண்டுவந்தார். “மக்க ளின் வரிப் பணத்தில் தண்டத்தீனியாக இருக்கும் ஆளுநர் பதவி தேவையற்றது” என்றார் அவர். “ராஜ்பவனின் வாடகை தராத குடியிருப்புவாசிகள் ஆளுநர்கள்” என்று நீதிபதி கிருஷ்ணய்யர் குறிப்பிட்டதுண்டு. நாட்டின் முக்கியமான மாநிலக் கட்சிகள் எல்லாமே இது தொடர்பில் பேசியிருக்கின்றன. காரணம், இதுவரையில் ஆளுநர் பதவி என்பது இந்தியாவில் பெருமளவில் எப்படியானதாகக் கையாளப் பட்டுவருகிறது எனும் வரலாறுதான். அரசியல் சட்டப் பிரிவு 356-ஐப் பயன்படுத்தி, இதுவரை 126 முறை மாநில அரசுகள் கலைக்கப்பட்டிருக்கின்றன என்பது ஓர் உதாரணம். மத்தி யில் ஆளுங்கட்சியைச் சேர்ந்த பிரமுகர்களுக்கு அரசியல் ஓய்வு கொடுக்கும்போது, அவர்களைத் திருப்திப்படுத்த உதவுவதாகவும் திரைமறைவில் டெல்லியை ஆளும் கட்சி யின் அபிலாஷைகளை நிறைவேற்ற முயல்வதாகவுமே பல தருணங்களில் அது பயன்படுத்தப்பட்டுவந்திருக்கிறது.

நம்முடைய அரசியல் சட்டம் இப்படி ஒரு பதவியை உள்ளடக்கியிருக்கிறது, நமக்கும் மாநிலத்தில் ஆட்சியமைக்க ஒரு கட்சிக்கு அழைப்பு விடுப்பதில் தொடங்கி, மத்திய அரசுக் கும் மாநில அரசுக்கும் இடையில் ஒரு பாலமாகச் செயல்படுவது வரை பல விஷயங்களுக்கு ஆளுநர் தேவைப்படுகிறார் என்று வைத்துக்கொள்வோம். அப்படியான ஆளுநருக்கான வரையறையாக எதைக் கொள்ளலாம் என்று பல நிபுணர்களின் அறிக்கைகள் நமக்கு வழிகாட்டுகின்றன. 1965-ல் ஹனுமந்தய்யா தலைமையில் மொரார்ஜி தேசாய் அமைத்த ‘நிர்வாகக் சீர்திருத்தக் குழு’ தந்த அறிக்கை, தமிழகத்தில் 1974-ல் முதல்வர் கருணாநிதி நியமித்த ராஜமன்னார் குழுவின் அறிக்கை தொடங்கி வங்க முதல்வர் ஜோதி பாசு அரசு அளித்த வெள்ளை அறிக்கை, என்.டி. ராமாராவ் தலைமையில் நடைபெற்ற ஐதராபாத் மாநாட்டுப் பிரகடனம், ஃபரூக் அப்துல்லா நடத்திய ஸ்ரீநகர் மாநாட்டுப் பிரகடனம், நீதிபதி வெங்கடாசலய்யா குழு பரிந்துரை, கர்நாடகத்தில் அப்போதைய முதல்வர் ஹெக்டே தலைமை யில் கூடிய தென்மாநில முதல்வர்கள் மாநாட்டுத் தீர்மானங் கள் உள்ளடக்கி பூஞ்ச் கமிஷன் அறிக்கைப் பரிந்துரை வரை நமக்கான வழிகாட்டிகள்தான்.

சர்க்காரியா சொன்ன அறிவுரை

மத்திய - மாநில உறவை ஆராயும் வகையில் இந்திரா காந்தியால் நியமிக்கப்பட்ட சர்க்காரியா குழு ஆளுநர் பதவி தொடர்பில் சொன்ன விஷயங்கள் இதில் மிகமிக முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டியவை. “ஆளுநருடைய பொறுப்பு மிக முக்கியமானது; வெளிமாநிலத்தைச் சேர்ந்த பாரபட்சமற்றவரே ஆளுநர் பதவிக்கு நியமிக்கப்பட வேண்டும்” என்றார் சர்க்காரியா. அதேசமயம், ஆளுநருக் கான வரையறைகளாக அவர் பல விஷயங்களைப் பரிந்துரைத்தார். அவற்றில் முக்கியமானவற்றை இப்படித் தொகுக்கலாம்.

“அரசியலில் சமீப காலம் வரை ஈடுபட்டவரை ஆளுநர் பொறுப்புக்கு நியமிப்பதைத் தவிர்க்க வேண்டும். மத்திய அரசிலுள்ள ஆளும் கட்சியைச் சார்ந்தவர், மாற்றுக் கட்சியினர் ஆளும் மாநிலங்களுக்கு நியமிக்கப்படக் கூடாது. குடியரசுத் தலைவர், பிரதமர் ஆகியோர் குறிப்பிட்ட மாநிலங்களின் முதல்வரை அவசியம் கலந்தாலோசித்த பின்பே ஆளுநரை நியமிக்க வேண்டும். இந்தப் பரிந்துரையை ராஜமன்னார் குழுவும் முன்வைத்தது. இதனை முறைப்படுத்தும் வகையில் இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் திருத்தப்பட வேண்டும். ஐந்தாண்டு காலத்துக்குள் ஓர் ஆளுநரைப் பதவியிலிருந்து விலக்க நேர்ந்தாலோ, மாற்ற நேர்ந்தாலோ அதற்கான காரணங்களை நாடாளுமன்றத் தில் மத்திய அரசு தெரிவிக்க வேண்டும். சம்பந்தப்பட்ட ஆளுநர் அதைப் பற்றி விளக்கங்கள் அளித்திருந்தால் மக்களவை உறுப்பினர்கள் கவனத்துக்கு அதையும் கொண்டுவர வேண்டும். ஆளுநர் பதவி வகிக்கின்றவர் வருமானம் தரும் எந்தப் பதவியையும் ஏற்கக் கூடாது என்ற மரபை உருவாக்க வேண்டும். கோப்புகள் பற்றி விளக்கம் பெற, மாநில அரசின் ஆலோசனை பெற ஆளுநருக்கு அதிகாரம் உள்ளது. கொள்கைத் திட்டங்களை மாநில அரசிடம் வலியுறுத்துவது ஆளுநரின் பணியல்ல. அதைப் போல பெரும்பான்மை ஆதரவு ஓர் அரசியல் கட்சிக்கு இருக்கிறதா என்பதைச் சட்ட மன்றத்தில்தான் சோதிக்க வேண்டுமே ஒழிய ராஜ்பவனில் ஆளுநர் சோதனையில் ஈடுபடக் கூடாது.”

தமிழ்நாட்டுக்கு என்று தனி மரபு உண்டு!

ஏனைய மாநிலங்களோடு ஒப்பிடுகையில், ஆளுநர்கள் கை ஓங்கவிட்ட வரலாறு என்பது தமிழகத்தைப் பொறுத்தவரையில் கடந்த ஐம்பதாண்டுகளில் மிகக் குறைவு. மாறாக, ஆளுநர் டெல்லியின் போக்குக்கு இசைந்து செல்ல மறுத்ததுண்டு. பர்னாலா ஆளுநராக இருந்தபோது அன்றைய பிரதமர் சந்திரசேகர் திமுக ஆட்சியைக் கலைக்க அவரிடம் அறிக்கை கேட்டார். ஆனால், பர்னாலா மறுத்துவிட்டார். பிற்பாடு அவரையும் மீறி ‘வேறு வழிகளில்’ (Otherwise) பிரிவு 356-ஐப் பயன்படுத்தியே 1991-ல் திமுக ஆட்சி கலைக்கப்பட்டது. அதேபோல ஆளுநரோடு கடுமையாக மோதிய வரலாறு இங்குண்டு.

சென்னா ரெட்டி ஆளுநராக இருந்தபோது அன்றைக்கு முதல்வர் ஜெலலிதாவுக்கும் அவருக்கும் இடையே பனிப்போர் உருவானது. ஒருகட்டத்தில், ‘பல்கலைக்கழக வேந்தர்களாக முதலமைச்சரே இருக்கலாம்’ என்ற சட்ட முன்வடிவைக் கொண்டுவந்தார் ஜெயலலிதா. அதேபோல், மகாராஷ்டிர பூகம்ப நிதிக்கு நன்கொடை திரட்டுகையில், முதல்வர் தனியாகவும் ஆளுநர் தனியாகவும் நிதி திரட்டினர். அன்றைய பிரதமர் பி.வி.நரசிம்ம ராவ் சென்னை வந்தபோது அவரை வரவேற்க ஆளுநரும், முதல்வரும் தனித்தனியே பந்தல்கள் அமைத்து வரவேற்ற நிகழ்ச்சி நூலகங்களில் உள்ள பத்திரிகைகளில் இன்றும் காணக் கிடைக்கிறது.

 

அன்றாட நிர்வாகத்தில் தலையிடும் தன்னுடைய செயல்பாடுகளை நியாயப்படுத்துவதைவிட, தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு ஆட்சியில் இருக்கும்போது அதைக் கவனித்துக்கொண்டு அதில் தலையிடாமல் இருப்பதுதான் ஜனநாயகத்தின் மாண்பு. அதேபோல, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு ஆட்சியைக் கையில் வைத்திருக்கும் முதல்வர் தன்னுடைய பதவிக்கேற்ற பலத்துடன் நிற்க வேண்டும். வார்த்தைக்கு வார்த்தை ஜெயலலிதா பெயரை உச்சரிக்கும் அதிமுகவினரும் முதல்வர் பழனிசாமியும் தங்களுடைய தலைவி எப்படி நடந்துகொண்டார், தாம் எப்படி நடந்துகொள்கிறோம் என்பதை நினைவுகூர வேண்டும்! ஆளுநர்களுக்கான எல்லையை வகுப்பதை ஒரு தேசிய விவாதமாக்கி, புதிய வரையறைகளை உண்டாக்க வேண்டும்!

- கே.எஸ்.இராதாகிருஷ்ணன்

வழக்கறிஞர், இணையாசிரியர், ‘கதைசொல்லி’,

தொடர்புக்கு: rkkurunji@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x