Published : 30 Nov 2017 09:57 AM
Last Updated : 30 Nov 2017 09:57 AM

இயற்கை நீதியின் ஆணை!

ந்திய அரசியல் சட்டத்தை வகுப்பதற்காக உருவாக்கப்பட்ட வரைவுக் குழுவின் தலைவர் பி.ஆர்.அம்பேத்கர் 68 ஆண்டுகளுக்கு முன்னால் நவம்பர் 26-ம் நாளில், பின்வரும் தீர்மானத்தை அந்த அரசியல் சட்டப் பேரவையின் கூட்டத்தில் வாக்கெடுப்புக்கு முன்வைத்தார். “இந்த அரசியல் சட்டப் பேரவை வகுத்தளித்தபடி அரசியல் சட்டம் நிறைவேற்றப்படுகிறது” என்பது அந்தத் தீர்மானம். ஆரவாரத்துடன் அந்தத் தீர்மானம் ஏற்கப்பட்டது என்று அன்றைய நிகழ்ச்சிப் பதிவேட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அடுத்த சில பத்தாண்டுகளில் ‘அந்த நாள்’ அங்கீகரிக்கப்படவேயில்லை. பிறகு, நவம்பர் 26-ஐ ‘சட்ட தினமாக’ உச்ச நீதிமன்றத்தின் வழக்கறிஞர்கள் சங்கம் அறிவித்தது. ‘அந்த நாள் இந்திய வரலாற்றில் பொன் எழுத்துகளால் பொறிக்கப்பட வேண்டிய நாள்’ என்று சங்கத் தலைவர் எல்.எம்.சிங்வி புகழ்ந்தார். இப்போது மத்திய அரசு அந்நாளை ‘அரசியல் சட்ட தின’மாக அறிவித்திருக்கிறது. இந்த நாளை எந்தப் பெயரில் அழைத்தாலும் இதை ஆண்டுதோறும் கொண்டாடப் பட வேண்டும் என்ற சிங்வியின் நோக்கம் வரவேற்கத் தக்கது.

அவசியமான மீள்பார்வை

“நம்முடைய குடியரசின் வாழ்க்கையில் சட்டத்தின் முக்கியப் பங்களிப்பை வலியுறுத்தவும், ஆண்டுதோறும் சட்டத்தையும் நீதி நிர்வாகத்தையும் ஆய்வுசெய்யவும், மேம்படுத்துவதற்கு ஆலோசனைகளை வழங்கவும், நீதிபதிகளுக்கும் வழக்கறிஞர்களுக்கும் இடையில் நல்லுறவு நிலவவும், சட்டங்களின் மீதும் நீதித் துறையின் மீதும் மக்களுக்குள்ள நம்பிக்கையைப் பராமரிக்கவும் வலுப்படுத்தவும் இந்த நாளைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்” என்று சங்கத்தின் தொடக்கக் கூட்டத்தில் சிங்வி குறிப்பிட்டுள்ளார்.

சிங்வி கூறியதைப் போல நாம் சட்டத்தின் மாட்சியும், சட்டப்படியான ஆட்சியும், நீதி நிர்வாகமும் அதற்கு அரசின் ஒத்துழைப்பும் இப்போது எப்படி இருக்கிறது என்று சில கேள்விகளைக் கேட்டுக்கொள்ள வேண்டும். உச்ச நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர்களுக்கும் நீதிபதிகளுக்கும் இடையில் நடந்த சொற்போர் அதிர்ச்சியையும் துயரத்தையும் ஏற்படுத்திவிட்டது. நீதித் துறை மீது மக்களுக்குள்ள நம்பிக்கைக்கும் ஆபத்தாக அமைந்துவிட்டது. சட்டம் குறித்து எல்.எம்.சிங்வி கொண்டிருந்த உயர்வான கருத்துகளுக்கு இந்நடவடிக்கைகள் சேதத்தை ஏற்படுத்திவிட்டன. அரசியல் சட்ட தார்மிகம் என்று அம்பேத்கர் கருதியவற்றின் வேர் வரை செல்பவை இந்நடவடிக்கைகள்.

ஒடிசா உயர் நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி ஐ.எம்.குதூஸி என்பவர் உச்ச நீதிமன்ற நீதிபதிகளிடம் இருந்து சாதகமான ஆணைகளைப் பெற்றுத்தருவதாகக் கூறிக் கையூட்டு பெற்றார் என்று பதிவான முதல் தகவல் அறிக்கைதான் இந்த சூறாவளியைக் கிளப்பிவிட்டது. உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியே தலைமை தாங்கும் அமர்வில் தன்னால் சாதகமான தீர்ப்பு பெற முடியும் என்று அவர் கூறியிருந்தாராம். நீதிபதி குதூஸி இப்படிக் கூறினார் என்பதெல்லாம் மோசடியாகத்தான் இருக்கும். ஆனால், நியாயமான விசாரணை இல்லாமல் இதை நம்மால் எப்படித் தெரிந்துகொள்ள முடியும்? ‘நீதித் துறையின் பொறுப்பேற்பு - சீர்திருத்தங்களுக்கான பிரச்சாரம்’ (சிஜேஏஆர்) என்ற இயக்கமும், வழக்கறிஞர் காமினி ஜெய்ஸ்வாலும் தனித்தனியாக இரண்டு மனுக்களைத் தாக்கல்செய்தனர். மத்தியப் புலனாய்வுக் கழகம் (சிபிஐ) இந்தப் புகாரை விசாரித்தால் நீதித் துறையின் சுயேச்சைத் தன்மையில் குறுக்கிடுவதாகவும் மாறக்கூடும். எனவே, உச்ச நீதிமன்ற ஓய்வுபெற்ற தலைமை நீதிபதியின் மேற்பார்வையில், ஒரு சிறப்பு விசாரணைக் குழுவை நியமித்து இதை விசாரிக்கலாம் என்று மனுக்களில் கூறப்பட்டிருந்தது.

இந்த மூல மனு தாக்கல் செய்யப்பட்டபோதே உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி இந்த விசாரணை யில் எந்த வகையிலும் சம்பந்தப்படுவதில்லை என்று விலகியிருந்தால் நன்றாக இருந்திருக்கும். எந்த வழக்கை யார் விசாரிக்க வேண்டும் என்று உத்தரவிடும் அந்தப் பொறுப்பைக்கூட இந்த வழக்கு விசாரணை யில் அவர் விட்டுக்கொடுத்திருந்திருக்கலாம். அவர் அப்படி ஒதுங்காததால்தான் காமினி ஜெய்ஸ்வால் தனது மனுவைத் தாக்கல்செய்தார். உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி இதில் தலையிடக் கூடாது என்ற நோக்கத்தில் பணி மூப்பில் அவருக்கு அடுத்த நிலையில் இருக்கும் நீதிபதி ஜே.சலமேஸ்வர் அமர்வில் இந்த மனு தாக்கல்செய்யப்பட்டது. மனுவை விசாரித்த சலமேஸ்வர் ஐந்து நீதிபதிகளைக் கொண்ட அரசியல் சட்ட அமர்வு இதை விசாரிக்க வேண்டும் என்று பெயர்களுடன் அறிவித்தார். சலமேஸ்வரின் உத்தரவு செல்லாது என்று அறிவித்த உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி, தன்னுடைய தலைமையில் வேறு ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வை அறிவித்தார். நீதிமன்றத்தின் நிர்வாகத்தில் தனக்குள்ள அதிகாரத்தை நிலைநாட்டிய அவர் அதை வெளிப்படையாகவும் கூறினார்.

நீதி வழங்கப்படுவது தெரிய வேண்டும்?

இந்த சர்ச்சையைப் பகுத்தறிவோடு அணுகினால் சில கேள்விகள் எழுகின்றன. எந்தச் சூழலில் ஒரு மனுதாரரின் மனு, நீதிபதியின் நலனுடன் தொடர்பு பெறுகிறது? விசாரணைக்கு நீதிபதிகளை நியமிக்கும் பொறுப்பிலிருந்து தலைமை நீதிபதி தன்னையே விலக்கிக்கொள்ள வேண்டியதும் அவருடைய கடமையா? இந்தக் கேள்விகளுக்கு விடை காண, வெளிப்படையாக நீதித் துறையைக் கட்டுப்படுத்தும் விதிகள் ஏதும் இல்லை. ஓரளவுக்கு முன்னுதாரணங்களும், பெரும்பாலும் ரகசியம் காப்பதற்காகவோ வேறு காரணங்களுக்காகவோ விருப்ப அதிகாரங்களும்தான் இதில் வழிகாட்டுகின்றன. 100 ஆண்டுகளுக்கு முன்னால் மன்னரின் அமர்வை அலங்கரித்த தலைமை நீதிபதி ஹேவார்ட் பிரபு கூறியதைப் போல, “நீதி வழங்கப்பட்டால் மட்டும் போதாது, அது வழங்கப்படுவது தெளிவாகவும் சந்தேகத்துக்கு இடமில்லாமலும் தெரிய வேண்டும்.”

நவம்பர் 14-ல், உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி நியமித்த மூன்று நீதிபதிகளைக் கொண்ட அமர்வு இந்த மனுவை விசாரித்தது. அதில் இருந்த ஒருவர் நீதிபதி குதூஸி மீதான மனு தொடர்பான விசாரணை அமர்வில் ஏற்கெனவே அமர்ந்தவர். இதைக் கருத்தில்கொள்ளாமல் காமினி ஜெய்ஸ்வாலின் ஆட்சேப மனுவை, நீதிமன்றத்துக்கு அவமானத்தை ஏற்படுத்தும் செயல் என்று நீதிமன்றம் கண்டித்தது. அந்த அமர்வில் இருந்து, ஏற்கெனவே விசாரித்த நீதிபதி விலக வேண்டும் என்று அவர் கோரியது நீதிமன்றத்தை அவமதிக்கும் செயல் என்றும் நீதிமன்றம் கண்டித்தது.

கஜேந்திர கட்கர் காட்டிய வழி

பம்பாய் நிலம் கையகப்படுத்தல் சட்டம் செல்லுமா என்ற வழக்கு உச்ச நீதிமன்ற விசாரணைக்கு 1964 ஆகஸ்டில் வந்தது. உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியாக அப்போது இருந்த பி.பி.கஜேந்திர கட்கர் தலைமையில் விசாரணை தொடங்கியது. புருஷோத் தம் திரிகம்தாஸ் என்ற வழக்கறிஞர் அப்போது ஒரு வேண்டுகோளை முன்வைத்தார். இந்த வழக்கின் தீர்ப்பு கஜேந்திர கட்கர் உறுப்பினராக இருக்கும் ஒரு கூட்டுறவு வீடமைப்புச் சங்கத்தைப் பாதிக்கக்கூடும் என்பதால், விசாரணையிலிருந்து அவர் விலக வேண்டும் என்றார். கஜேந்திர கட்கர் அதை ஏற்றதும் இன்றி, மதறாஸிலிருந்து விசாரணைக்கு வந்துள்ள இதே போன்ற வழக்கிலும் விலகிவிடுவதாகக் கூறினார்.

மதறாஸ் வழக்கில் அவர் தனிப்பட்ட முறையில் சம்பந்தப்படவில்லை என்றாலும், பம்பாய் வழக்கின் தீர்ப்பு மதறாஸ் வழக்கையும் பாதிக்கும் என்பதால் விலகுவது நல்லது என்று தலைமை அரசு வழக்கறிஞர் சி.கே.தப்தாரியும் ஆலோசனை தெரிவித்தார். கஜேந்திர கட்கர் தலைமையில் விசாரணை நடந்திருந்தால் வழக்கு அரசுக்குச் சாதகமாகியிருக்கும். அவர் விலகியதால் மனுதாரர்கள் என்.பி.ஜீஜிபாய் (பம்பாய்), வஜ்ரவேலு முதலியார் (மதறாஸ்) ஆகியோருக்குச் சாதகமாகத் தீர்ப்பு கிடைத்தது என்று கூறிவிட முடியாது. ஒரு வழக்கில் நியாயமான தீர்ப்பு கிடைக்க சட்டம் மட்டுமல்ல, இதர நீதிமன்ற நடவடிக்கைகளும் சந்தேகத்துக்கு இடமில்லாதபடிக்கு நேர்மையாக இருக்க வேண்டும் என்ற இங்கிலாந்து மரபை இந்தியாவிலும் நிலைநாட்டினார் என்று பாராட்டியிருக்கிறார் ஃபாலி நாரிமன்.

சுருக்கமாகத் தமிழில்: சாரி

©: ‘தி இந்து’ ஆங்கிலம்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x