Last Updated : 08 Jul, 2023 08:56 PM

 

Published : 08 Jul 2023 08:56 PM
Last Updated : 08 Jul 2023 08:56 PM

இன்ஃப்ளூயன்சர் 4: நீங்களும் கும்பல் மனப்பான்மையில் இருக்கிறீர்களா..?

"தந்தையர் தினம் நெருங்கி கொண்டிருந்தது. 19 வயதான சுலைமான் தாவூத்துக்கு கடலின் மீதெல்லாம் பெரிய ஈர்ப்பு கிடையாது. ஆனால், சாகசங்களை தந்தை ஷாசதா தாவூத் விரும்பியதால் ஆழ்கடல் பயணத்துக்கு சுலைமான் தாவூத் ஒப்புக்கொண்டார். ஷாசதா - சுலைமான் இருவருக்கும் இடையேயான உறவு, தந்தை மகனாக எப்போதுமே இருந்ததில்லை. அவர்கள் நண்பர்களை போல்தான் அறியப்பட்டார்கள். ஷாசதாவை பொறுத்தவரை சுலைமான் பயண நண்பன். வாழ்நாள் முழுவதும் அவர்கள் ஒன்றாக பயணிப்பார்கள் என்று அவர் விரும்பினார். அவர் விரும்பியப்படியே இறுதிப் பயணமும் நடந்துவிட்டது” என நினைவுகூர்கிறார் சுலைமானின் தாயார் கிரிஸ்டின் தாவூத்.

ஓஷன்கேட் நிறுவனத்தின் நீர் மூழ்கி கப்பல் டைட்டன்,அட்லாண்டிக் கடல் பகுதியில் 12,500 அடி ஆழத்தில் மூழ்கிய டைட்டானிக்கை காண சென்று விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 5 பேர் மரணம் அடைந்தனர். உயிரிழந்தவர்கள் அனைவரும் பெரும் செல்வந்தர்கள் என்பதால் இந்த விபத்து உலகம் முழுவதும் பேசும் பொருளானது.

நீர்மூழ்கி கப்பல் மாயமானது தொடர்ந்தே யூடியூப் சேனல்களில் இன்ஃப்ளூயன்சர்களும், செய்தி சேனல்களும் அக்கப்பல் எப்படி விபத்துக்குள்ளானது என விவாதிக்கத் தொடங்கினர். ஒவ்வொரு நாளும் விபத்துக்கான அவர்களது கூற்று மாறிக்கொண்டே வந்தது. இதில் பெரும்பாலான இன்ஃப்ளுயன்சர்கள் கடல்சார் நிபுணர்களின் ஆலோசனைகளை பெற்று, விபத்து குறித்த தகவல்களை பகிராமல், உள்ளூர் பத்திரிகையாளர்களின் அதீத கற்பனைகளை உண்மைச் சம்பவங்களாக பார்வையாளர்களுக்கு முன்வைக்க முயன்றனர்.

இன்னமும் டைட்டன் நீர் மூழ்கிக் கப்பல் குறித்த கதைகளை இன்ஃப்ளூயன்சர்கள் கூறிக் கொண்டிருக்கிறார்கள். டைட்டன் நீர்மூழ்கி கப்பல் விபத்துக்குள்ளாவதற்கு சில நாட்களுக்கு முன்னர், கிரீஸில் அகதிகள் சென்ற படகு விபத்தை சந்தித்தது. இந்த விபத்தில் லிபியாவை சேர்ந்த 78 பேர் உயிரிழந்தனர். பலியானவர்களில் குழந்தைகளும் இருந்தனர். இவ்வாறான அகதிகளின் உயிரிழப்பு ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கில் நடந்து கொண்டிருக்கிறது. ஆனால், இவை எல்லாம் பெரும்பான்மை சமூகத்தால் அதிகம் கவனிக்கப்பட்டதில்லை. அகதிகளின் உயிரிழப்புகள் செய்தி ஊடகங்களிலும் சில நேரங்களில் புறம்தள்ளப்படுகின்றன.

இதற்கு முக்கியக் காரணம், சமூகத்தில் நிலவும் கும்பல் மனப்பான்மை. நாம் ஒவ்வொருவரும் தனி மனிதர்கள் என்றாலும், கும்பல் மனப்பான்மைதான் இங்கு எது பேசப்பட வேண்டும் என்பதை தீர்மானிக்கிறது. இந்த கும்பல் மனப்பான்மைக்கு இரு முகங்கள் உண்டு. ஒன்று கொண்டாடி தீர்க்கும், மற்றொன்று விலகிச் செல்லும்.

உலக அரங்கில் பரவலாக பேசப்பட்ட ’ஹோமோ சேப்பியன்ஸ்’யின் புத்தக ஆசிரியரான யுவால் நோவா ஹராரி, தன்னுடைய ‘21-ஆம் நூற்றாண்டுக்கான 21 பாடங்கள்’ என்ற நூலில், “ஹோமோ சேப்பியன்ஸ் (தற்போதுள்ள மனித இனம்) ஒரு கதை சொல்லும் விலங்கினங்கள். அவர்கள் எண்கள், வரைப்படங்களை சிந்திப்பதில்லை. மாறாக, கதைகளைத்தான் சிந்திக்க விரும்புவார்கள்” என்று குறிப்பிடுகிறார்.

மனித சமூகம் குழுவாக / கும்பலாக எப்போது இயங்க தொடங்கியதோ அப்போதுதான் வரலாறுகள் தொடங்கப்பட்டன. மனித இனம் தங்களுக்குள் கூறிக்கொண்ட கதையின் வாயிலாகத்தான் பரிமாணத்தின் அடுத்தக் கட்டத்தை நோக்கி பயணித்திருக்கிறது. இதில் அப்போதிருந்த கும்பல் மனப்பான்மைதான் அறிவுப் புரட்சி ,வேளாண் புரட்சி, அறிவியல் புரட்சி என வரலாற்றில் முக்கியப் பங்கு வகிக்க காரணமாகியது. ஆனால், சமூக ஊடகங்கள் உச்சத்தில் இருக்கும் 21-ம் நூற்றாண்டில் கடந்த காலத்தில் மாற்றத்தை அளித்த அதே கும்பல் மனம்பான்மையும் - கதைகளும் அச்சத்தை தரக் கூடியதாக மாறி இருக்கின்றன.

அடியாட்கள்... பிரபலம் என்ற அடையாளத்துடன் உலாவரும் யூடியூப் சேனல்கள் சில, அவ்வப்போது கருத்து மோதல்களில் ஈடுபடுவதை நீங்கள் பார்த்திருக்கலாம். சமீபத்தில்கூட அப்படி ஒரு நிகழ்வு நடந்தது. பிரபல யூடியூப் சேனல் ஒன்று, சாக்லெட்கள் செய்ய பயன்படுத்தப்படும் சிஸ்டின் மனித முடியிலிருந்துதான் எடுக்கப்படுகிறது என்று கூறியிருந்தது. இதனை மறுத்து மற்றொரு சேனல் கருத்து தெரிவித்திருந்தது. பின்னர், இது யூ டியூப்பில் விவாதமாகவே மாறியது. சாக்லெட்டில் மனிதனின் முடி பயன்படுத்தப்படுகிறதா.. இல்லையா .....? என ஆதரித்தும் எதிர்த்தும் பிற யூடியூப் சேனல்கள் தங்கள் கருத்துகளை பதிவிடத் தொடங்கின. ஆனால் கடைசிவரை இந்த விவாதத்தில் தெளிவான முடிவு எட்டப்படவில்லை.

இதில் நாம் உன்னிப்பாக கவனிக்க வேண்டியது.. இந்த நிகழ்வில் தெரியப்பட்ட கும்பல் மனப்பான்மை போக்கை...யூடியூப் சேனல்கள் கூறுவது உண்மையா? என்ற தேடலில் அந்தச் சேனல்களின் பின்தொடர்பாளர்கள் யாரும் ஈடுபட்டதாக தெரியவில்லை. யூடியூப் சேனல்களிடையே நிகழ்ந்த இந்தக் கருத்து மோதல்களை வெறும் பொழுதுபோக்காக அந்த சேனல்களின் பின் தொடர்பாளர்களை கடந்ததை பார்க்க முடிந்தது.

தமிழ் யூடியூப் கலாச்சாரத்தை பொறுத்தவரை தூய தமிழில், அறச்சீற்றத்துடன் ஒரு தலைப்பை நீங்கள் பேசினால் ஒரு பெரும் கும்பலை நீங்கள் சப்ஸ்க்ரைபர்களாக பெற்றுவிட முடியும் . இங்கு தரவுகளுக்கு இடமே இல்லை... சாக்லெட் - முடி சர்ச்சை விவகாரத்திலும் இதுதான் நடந்தது.

கேமிங் சேனல், டெக்னாலஜி சேனல்களை நடத்தும் இன்ஃப்ளூயன்சர்கள் இவ்வாறான கருத்து மோதல்களில்தான் தொடர்ந்து ஈடுபடுகின்றன. ஆனால், அந்தக் கருத்து மோதல்கள் எந்தவித ஆரோக்கியமான முன்னகர்வையும் இதுவரை கொண்டு சென்றதில்லை. மாறாக, தனி மனித தாக்குதல்களில் முடித்திருக்கிறது. இந்த போக்கின் உச்சமாக யூ டியூப் சேனல்களின் ஆதரவாளர்கள் அடியாட்களாக மாறி வார்த்தை மோதலில் ஈடுபட தொடங்கிவிடுகின்றன.

நீங்கள் கும்பல் மனப்பான்மையில் இருக்கின்றீர்களா? - பொருட்கள் வாங்குவது முதல் அறிவார்ந்த தேடல்கள் வரை இன்ஃப்ளூயன்சர்களின் சொல்லுக்கு கட்டுபட்டு கும்பல் மனப்பான்மையில் இயங்கும் வாழ்கை முறைக்கு பலர் பழக்கப்படுத்தப்பட்டுள்ளனர். இதன் நீட்சிதான் வாழ்க்கையில் அர்த்தமின்மையை அதிகரிப்பதாக உளவியல் வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள். இந்தக் கும்பல் மன நிலையிலிருந்து விடுபட முதலில் நாம் இந்த கும்பல் மனப்பான்மையில் சிக்கிக் கொண்டுள்ளோமா என்பதை அறிதல் அவசியமாகிறது.

உதாரணத்துக்கு, நீங்கள் சமூக வலைதளத்தில் இயங்கும் இன்ப்ளூயன்சர் ஒருவரால் ஈர்க்கப்படுகிறீர்கள்..... அந்த இன்ஃப்ளூயன்சர் விளம்பரப்படுத்தும் பொருளை பெரும்பாலான நபர்கள் வாங்கி மகிழ்வுடன் தங்களது ஃபேஸ்புக், இன்ஸ்டா பக்கங்களில் பதிவிடுகிறார்கள். இவ்வாறு பொருட்களை வாங்குபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்போது, அவர் விளம்பரப்படுத்தும் பொருள் உங்களுக்கு அவசியமா, இல்லையா என்று ஆராய்யாமல், அந்த இன்ஃப்ளூயன்சர் கீழுள்ள கூட்டத்தில் நீங்களும் ஒருவர் என்பதைக் காட்டிகொள்ள அப்பொருளை வங்குவீர்கள் என்றால், நீங்கள் அந்த கும்பல் மனப்பான்மையில் இணைந்துள்ளீர்கள் என்று தெரிந்துகொள்ளலாம். இவ்வாறுதான் இன்ப்ளூயன்சர்களுக்கான கும்பல் (Tribe) இங்கு உருவாக்கப்படுகிறது.

கும்பல் மனப்பான்மை என்ன செய்யும்? - கும்பல் மனப்பான்மையில் நாம் உள்ளபோது அது, சுயத்தை இழக்கச் செய்து முடிவுகளை எடுக்கத் தயங்கும் திறனற்றவர்களாவும், சிந்தனையற்றவர்களாகவும் மாற்றும். திறன் இழந்த நிலையில் எந்த நிலைபாடு சார்ந்தும் மூளை சலவைக்கு உள்ளாக தயாராகிவிடுவீர்கள்.

சமூக வலைதளங்களில் இயங்கும் இன்ஃப்ளுயன்சர்களுக்கு கட்டுபடும் கும்பல் மனப்பான்மையால் நம்மைச் சுற்றி எப்போதும் செயற்கையான நெருக்கடிகள் ஏற்பட்டு கொண்டே இருக்கும் சூழலுக்கு நாமே வழிவகுத்து கொள்கிறோம். நீங்கள் விரும்பாத சித்தாந்தத்தையும், எண்ணங்களையும் கும்பல் மனப்பான்மையை பயன்படுத்தி இன்ப்ளூயன்சர்கள் தலையில் ஏற்ற முயற்சிப்பார்கள். முடிவு, தனிமனித அடையாளங்கள் முழுமையாக உடைபட்டு கும்பல் மன ஓட்டத்துடனே பயணிப்பீர்கள். அவ்வாறே நீங்கள் அடையாளமும் காணப்படுவீர்கள்.

wisdom of crowds vs mob mentality: ’wisdom of crowds’ என்ற பிரபல ஆங்கிலம் சொற்றொடர் உண்டு. சுய சிந்தனை திறனுள்ள தனி நபர்கள் அடங்கிய கூட்டத்தினால் உண்டாகும் விளைவுகளானது சமூகத்துக்கு நன்மையை ஏற்படுத்தும். குழு மனப்பான்மை இதற்கு எதிரான அணுகுமுறையை கொண்டுள்ளது. ஒருவரை தலைவராக ஏற்றுக் கொண்டு பின் செல்லும் கூட்டத்தினால் சமூகத்தில் மனித உரிமை மீறல்களும், வன்முறைகளும் ஏற்படும். மனித குல வரலாற்றில் இதற்கு பல சான்றுகள் உள்ளன.

சமூக வலைதளங்களில் நிகழும் கும்பல் மனப்பான்மை போக்கும் இதனைத்தான் வெளிப்படுத்துகின்றன.

எளிமையாக சொல்லபோனால், ட்ரெண்டான பாடலை வைத்து இன்ஸ்டாவில் ஆயிரக்கணக்கில் ரீல்ஸ்கள் வெளியாகின்றன. அதே பாடல், அதே நடன அசைவுகள், நடனம் ஆடுபவர்கள் மட்டும் மாறிக் கொண்டே இருக்கிறார்கள். இந்த வீடியோக்களுக்கு லட்சக்கணக்கில் வியூஸ் கிடைக்கிறது. இதனை காண்பதற்காகவே இணையத்துக்காக மாதந்தோறும் குறிப்பிட்ட தொகையை நீங்கள் செலவிடுகிறீர்கள் என்றால், இதன் மன ஓட்டத்தின் பின்னால் இருக்கும் உளவியலை ஆராய்தால் நீங்கள் உள்ளிருக்கும் கும்பல் மனப்பான்மையின் ஒவ்வாமை புரிப்படக் கூடும்.

தன்னியல்பாக ஏற்படும் கிளர்ச்சிகளே சமூகத்தின் சமநிலையை ஆண்டாண்டு காலமாக பாதுகாத்திருக்கின்றன. , கடந்த பத்தாண்டுகளில் சமூக வலைதளங்களில் இன்ப்ளுயன்சர்களின் கலாச்சாரம் வளரத் தொடங்கியதிலிருந்து உளவியல் சார்ந்த அமைதியின்மை நிகழ்ந்து கொண்டே இருக்கிறது. மறுபக்கம் இன்ஃப்ளூயன்சர் கலாச்சாரம் பெரும் நிறுவனமாக பயணித்து வருகின்றது. இதில் அரசியலை தீர்மானிக்கும் பாதை வரை இன்ப்ளூயன்ஸர்கள் நுழைந்திருப்பது ஒருவித எச்சரிக்கையே!

’இன்ஃப்ளூயன்சர்கள் கலச்சாரம்’ எங்கு பயணிக்கிறது என்பதை அடுத்த அத்தியாயத்தில் பார்க்கலாம்.

| தொடர்ந்து பயணிப்போம்... |

தொடர்புக்கு: indumathy.g@hindutamil.co.in

முந்தைய அந்தியாயங்கள்:

இன்ஃப்ளூயன்சர் 1 | அந்தப் பெண் யூடியூபர் எங்கே? - நம் முன் விரிக்கப்படும் மாய வலை!

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x