Last Updated : 16 Oct, 2017 09:04 AM

 

Published : 16 Oct 2017 09:04 AM
Last Updated : 16 Oct 2017 09:04 AM

சீன கம்யூனிஸ்ட் கட்சி மாநாடு: மேலும் பலம் பெறுவாரா ஜி ஜின்பிங்?

சீ

ன கம்யூனிஸ்ட் கட்சியின் 19-வது தேசிய மாநாடு அக்டோபர் 18-ல் கூடுகிறது. இந்த மாநாட்டின் போக்கு, முடிவு, அதிபரின் செல்வாக்கு ஆகியவை குறித்து இப்போதே சர்வதேச அளவில் பேசத் தொடங்கிவிட்டனர். கட்சியின் உயர் அமைப்பான ‘அரசியல் தலைமைக் குழு’ (பொலிட் பீரோ) இனி யாருடைய முழுமையான கட்டுப்பாட்டில் இருக்கும், சீன அதிபர் ஜி ஜின்பிங் இந்த மாநாட்டுக்குப் பிறகு தன்னிகரில்லாத் தலைவராக அதிகாரம் பெறுவாரா என்றெல்லாம் ஆர்வமாகக் கவனிக்கப்படுகிறது. உலகின் செல்வாக்கு மிக்க வல்லரசாக சீனா உருவெடுத்து வருவதால், உலக அரசியல் விவகாரங்களைத் தீர்மானிக்கும் இடத்தில் சீன கம்யூனிஸ்ட் கட்சி இருக்கிறது. எனவே அதற்கு முக்கியத்துவம் அதிகமாகிறது.

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய மாநாடு ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறுகிறது. 2012-ல் நடந்த 18-வது தேசிய மாநாட்டில், ஹூ ஜின்டாவிடமிருந்து தலைமைப் பொறுப்பை ஜி ஜின்பிங் ஏற்றார். அப்போது கட்சியின் மத்தியக் குழுவில் அவருக்கு முந்தைய தலைவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் அதிக எண்ணிக்கையில் உறுப்பினர்களாக இருந்தனர். எனவே ஜி ஜின்பிங்கால், தான் நினைத்தபடி சுதந்திரமாகச் செயல்பட முடியவில்லை. ஆனால், கடந்த ஐந்தாண்டுகளில் நிலைமை வெகுவாக மாறியிருக்கிறது.

அதிகாரம் வலுத்தது

ஜி ஜின்பிங் அதிபரானது முதலே நன்கு திட்டமிட்டு அதிகாரத்தைக் குவித்துவருகிறார். சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கும் சீன ராணுவமான மக்கள் விடுதலை சேனைக்கும் மட்டுமல்ல புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ள பல அமைப்புகளுக்கும் அவரே தலைவராகத் திகழ்கிறார். சீர்திருத்தங்களை அமல் செய்வதற்கான ‘மத்திய முன்னணிக் குழு’, பயங்கரவாதம் – பிரிவினைவாதம் ஆகியவற்றை ஒடுக்க ஏற்படுத்தப்பட்ட ‘மத்திய தேசிய பாதுகாப்பு ஆணையம்’ ஆகியவற்றின் தலைமைப் பொறுப்பையும் வகிக்கிறார்.

இந்த ஆண்டு ஜனவரி மாதம், ‘ராணுவ, சிவிலியன் வளர்ச்சிக்கான ஒருங்கிணைந்த மத்திய ஆணையம்’ என்ற அமைப்பின் தலைவர் பதவியையும் ஏற்றுக்கொண்டார். சீன கம்யூனிஸ்ட் கட்சி அவரை ‘முழு அதிகாரம் பெற்ற முக்கியத் தலைவர்’ (கோர் லீடர்) என்று அறிவித்த பிறகு ஆணையத்தின் தலைவர் ஆனார். ‘முக்கியத் தலைவர்’ என்ற அடைமொழி, சீனத்தின் சமீபத்திய வரலாற்றில் மா சேதுங், டெங் சியோபிங், ஜியாங் ஜெமின் ஆகியோருக்கு மட்டுமே வழங்கப்பட்டது.

ஜி ஜின்பிங் அதிபராகும் வரை சர்வதேச அரங்குகளில் சீனா தன்னை வல்லரசாகக் காட்டிக்கொள்ளவில்லை. கட்சியின் தலைமை, நிறுவனங்களின் இயக்குநர்கள் குழுவைப்போல கூட்டுத் தலைமையாகவே செயல்பட்டது. கட்சித் தலைவரின் விருப்பப்படி செயல்படாமல், ஏற்கெனவே தீர்மானித்த நடைமுறைப்படியே செயல்பட்டது. ஜி ஜின்பிங் அதிபரான பிறகு மாறுதல் ஏற்பட்டது. அவர் கவர்ச்சிகரமான தலைவர், அத்துடன் எதிலும் தன்னுடைய முத்திரையைப் பதிக்க விரும்புகிறார். தற்போது உலக வல்லரசு என்று தன்னை நிலைநிறுத்த சீனம் விரும்புகிறது. தன்னுடைய புவிசார் ராணுவ உத்திகளையும் ஆசைகளையும் அது மறைக்க விரும்பவில்லை.

மூன்று உத்திகள்

ஜி தன்னுடைய அதிகாரத்தைப் பெருக்க மூன்று உத்திகளைச் செயல்படுத்துகிறார் என்கிறார் டோக்கியோ பல்கலைக்கழகத்தைச் சேர்நத சீன அறிஞர் ஷின் கவாஷிமா. ஊழலுக்கு எதிரான அதிரடி நடவடிக்கை, செய்தி ஊடகங்கள் மீது முழு ஆதிக்கம், ராணுவ மறு சீரமைப்பு என்று அவற்றை வரிசைப்படுத்துகிறார். ஊழல் எதிர்ப்பு இயக்கம் என்பது இரு வழிகளில் ஜி ஜின்பிங்குக்குப் பயன்படுகிறது. நேர்மையானவர் என்று மக்களால் பாராட்டப்படுகிறார். கம்யூனிஸ்ட் கட்சிக்குள் தனக்கு வேண்டாத நிர்வாகிகளை ஊழல் குற்றஞ்சாட்டி பதவியிலிருந்து நீக்கி கண்மறைவாக அனுப்பிவைக்க இது வசதியாக இருக்கிறது. ஜி ஆட்சிக்கு வந்தது முதலே இரு நூறுக்கும் மேற்பட்ட முக்கிய நிர்வாகிகள் இப்படி நீக்கப்பட்டுள்ளனர். அந்த இடங்களுக்கு ஜியின் விசுவாசிகளும் தோழர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய மாநாடு வழக்கமாக ஏழு நாட்கள் முதல் 10 நாட்கள் வரையில் நடைபெறும். இம்மாதம் நடைபெறவுள்ள மாநாடு எத்தனை நாட்களுக்கு நடைபெறப்போகிறது என்பதும் ஆர்வமாகக் கவனிக்கப்படும். வழக்கத்தைவிட விரைவாக முடிந்துவிட்டால் ஜி ஜின்பிங்கின் போட்டியாளர்களுக்குச் செல்வாக்கு இல்லை என்றும் அதிபரின் விருப்பப்படியே எல்லாம் விவாதிக்கப்பட்டு முடிந்தது என்றும் கருதப்படும். மாநாடு நீடித்தால் எதிர்ப்பாளர்களின் எண்ணிக்கையும் எதிர்ப்பின் வலிமையும் அதிகம் என்று ஊகிக்கப்படும்.

நாட்டின் எல்லா மாகாணங்களிலிருந்தும், அரசுக்குச் சொந்தமான நிறுவனங்களிலிருந்தும், ராணுவத்திலிருந்தும் மொத்தம் 2,300 பிரதிநிதிகள் வருவார்கள். அவர்கள் இருநூறுக்கும் அதிகமான மத்தியக் குழு உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பார்கள். மத்தியக் குழு, கட்சியின் மூத்த பதவிகளுக்கான நிர்வாகிகளைத் தேர்ந்தெடுக்கும். அரசியல் தலைமைக் குழுவின் 25 உறுப்பினர்களில் 11 பேர் பதவிக்காலம் முடிந்ததால் ஓய்வுபெறவுள்ளனர்.

68 வயதாகிவிட்டால் தலைமைக்குழு பதவியிலிருந்து ஓய்வு பெற்றாக வேண்டும். அதற்குப் பிறகும் நீடிப்பதற்கு விதிகளைத் திருத்த வேண்டும். ஜியின் நம்பிக்கைக்குரிய வாங் கிஷான் 68-ஐ எட்டிவிட்டார். அவர் நீடிப்பாரா, ஓய்வு பெறுவாரா என்பதிலிருந்தே ஜியின் செல்வாக்கை எடைபோட்டுவிடலாம்.

முத்திரை பதிப்பு

இந்த மாநாட்டில் அதிபர் ஜி ஜின்பிங்கின் ‘சிந்தனைகள்’, சீன கம்யூனிஸ்ட் கட்சியின் விதிமுறைகளிலேயே இடம் பெறுவதற்கும் வாய்ப்பு இருக்கிறது. சீன கம்யூனிஸ்ட் கட்சியின் வரலாற்றில் இப்படியொரு நடைமுறை. மாவோ, டெங் தவிர இதர தலைவர்களின் சிந்தனைகளும் லட்சியங்களும் இப்படி இடம் பெற்றதில்லை. ‘மாவோவின் சிந்தனைகள்’, ‘டெங் சியோபிங்கின் கருதுகோள்கள்’ மக்களிடையே பிரபலமாயின. ஜியாங் ஜெமினின் மூன்று (சமூக-பொருளாதார) கோட்பாடு, ஹு ஜின்டாவோவின் வளர்ச்சி பற்றிய அறிவியல் நோக்கு ஆகியவை சீன கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டதிட்டங்களில் சேர்க்கப்படவில்லை. ஜியின் சிந்தனைகள் சேர்க்கப்படுகின்றனவா என்று பார்ப்போம். சேர்க்கப்பட்டால் அவருடைய செல்வாக்கு பெரிது என்று தெரிந்துகொள்ளலாம். சீன கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர், சீன அதிபர் ஆகிய பதவிகளின் காலம் 2022-ல் முடிவுக்கு வரும். தனக்கு அடுத்து பதவியேற்க வேண்டியவரின் பெயரை ஜி ஜின்பிங் தாமதம் செய்தால், அவரே தலைமைப் பதவிகளில் தொடர்வார்.

ஜி இன்னமும் சக்திவாய்ந்த தலைவராகிவிடவில்லை என்கிறார் கவாஷிமா. ஜியால் ஓரங்கட்டப்பட்ட குழுக்கள் தங்களுக்கு வேண்டியவர்களை அரசியல் தலைமைக் குழுவில் இடம்பெறச் செய்ய முயற்சிக்கும். அரசியல் தலைமைக் குழுவின் நிலைக் குழுவில் மொத்தமுள்ள ஏழு பேரில் நான்கு பேர் ஜியின் ஆதரவாளர்களாகிவிட்டால் அவரால் எதிர்த்தரப்பை அடக்கிவிட முடியும். நடக்கிறதா என்று பார்ப்போம். அந்த நிலைக்குழுதான் வட கொரியாவின் அணு ஆயுத – ஏவுகணை ஆயுத சோதனைகள் தொடர்பாக சீனா என்ன செய்ய வேண்டும் என்று தீர்மானிக்கும். இந்தியாவுடனான எல்லைத் தகராறுகளை எப்படித் தொடர வேண்டும் அல்லது தீர்க்க வேண்டும் என்பதையும் தீர்மானிக்கும். ஜி ஜின்பிங்கின் கை வலுத்தால் ஆசியப் பிராந்தியத்திலும் உலக அளவிலும் சீனா தன்னுடைய உத்திகளை மேலும் தீவிரமாக அமல்படுத்தும்.

ஜி ஜின்பிங் அதிகாரங்களைத் தன்னுடைய கையில் குவித்துக் கொண்டால் பொருளாதாரச் சீர்திருத்தம் தீவிரமாக இருக்காது என்று சீன விவகாரங்களைக் கவனித்துவரும் மேலைநாட்டு நிபுணர்கள் கருதுகின்றனர். ஆனால் உள்நாட்டு அரசியல் நோக்கர்களோ, அதிகாரம் பெருத்தால் சீர்திருத்தங்களை இப்போதிருப்பதைவிடத் தீவிரமாக அமல்படுத்துவார் என்று கூறுகின்றனர். எது நடக்கும் என்பதைக் காலம்தான் தெரிவிக்கும்!

தமிழில்: சாரி.

© தி இந்து (ஆங்கிலம்)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x