Published : 22 Sep 2017 09:08 AM
Last Updated : 22 Sep 2017 09:08 AM

அடைக்கலம் தேடி வந்த ரோஹிங்கியா அகதிகளை திருப்பியனுப்புவது நியாயமா?

மி

யான்மரில் வன்முறைத் தாக்குதலுக்கு இலக்காகும் ரோஹிங்கியா முஸ்லிம்கள் இந்தியாவில் அடைக்கலம் புகுந்திருக்கும் நிலையில், அவர்களை மியான்மருக்கே திருப்பி அனுப்புவதில் குறியாக இருக்கிறது மத்திய அரசு.

தேசப் பாதுகாப்புக்கு ஆபத்து எனும் வலுவில்லாத காரணத்தை முன்வைத்து இப்படியான நிலைப்பாட்டை அரசு எடுத்திருக்கிறது. அகதிகளின் விஷயத்தில் நாம் கவனமாக இருக்க வேண்டும் என்பது அவசியமானதுதான். அதற்காக, மனிதாபிமான அடிப்படையில் கூட உதவ மறுப்பது என்பது ஏற்கத்தக்க செயல் அல்ல!

இருக்கிற நிதியாதாரங்களைக் கொண்டு குடிமக்களுக்கே போதுமான வேலைவாய்ப்பையும், கல்வி மருத்துவ வசதிகளையும் அளிக்க முடியாத நிலையில் அளவுக்கதிகமாக அகதிகளை அனுமதிப்பதில் பிரச்சினைகள் இருப்பதாகவும், ரோஹிங்கியா அகதிகளிடத்தில் தீவிரவாத உணர்வு அதிகரித்திருப்பதாகவும் உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ள உறுதிமொழிப் பத்திரத்தில், மத்திய அரசு சுட்டிக்காட்டியிருக்கிறது. இந்தியாவில் பவுத்த மதத்தைப் பின்பற்றும் குடிமக்கள் ரோஹிங்கியா அகதிகளால் அச்சுறுத்தலுக்கு ஆளாகியிருப்பதாகவும் மத்திய அரசு கூறியுள்ளது. இத்தகைய ஊகங்கள் எந்த அளவுக்கு உண்மை என்பது வேறு விஷயம். இந்தப் பிரச்சினையை மத்திய அரசு விரிவான தளத்தில் அணுகவில்லை என்பதுதான் வருத்தம் தரும் விஷயம். ரோஹிங்கியா முஸ்லிம்களை மியான்மர் தனது குடிமக்களாகவே ஏற்றுக்கொள்ளவில்லை. அவர்களை நாடில்லாதவர்களாகவே அந்நாடு நடத்துகிறது. ரோஹிங்கியா மக்களுக்கு எதிராக மியான்மர் ராணுவத்தினரும், புத்த மதத்தைச் சேர்ந்தவர்களில் பலரும் குழந்தைகள், முதியவர்கள், பெண்கள் என்று பாராமல் கொடூரமான தாக்குதல்களை அரங்கேற்றிவருகிறார்கள். பல்லாயிரக் கணக்கான ரோஹிங்கியா அகதிகள் வங்கதேசத்திற்கு அபயம் தேடிச் சென்றிருக்கிறார்கள். இந்தியாவில் மட்டும் ஏறக்குறைய 40,000 ரோஹிங்கியா அகதிகள் இருக்கிறார்கள்.

இந்தியாவைப் பொறுத்தவரையில், சுதந்திரம் பெற்ற காலத்திலிருந்தே அகதிகள் நலனில் உலகத்திற்கே முன்னுதாரணமாக விளங்கிவருகிறோம். 1951-ல் அகதிகளுக்கான ஐநா உடன்பாட்டில் இந்தியா கையெழுத்திடவில்லை என்றாலும் இதுவரையிலும் அதன் வழிகாட்டும் நெறிமுறைகளை பின்பற்றியே வந்திருக்கிறோம்.

இந்தியாவில் நாடு முழுவதும் சுதந்திரமாகச் செல்வதற்கும் தங்குவதற்குமான உரிமையை குடிமக்களுக்கு மட்டுமே அரசியல் சட்டம் வழங்குகிறது. அதேநேரத்தில், அரசியல் சட்டக் கூறு 21, உயிர்வாழ்வதற்கான உரிமையைக் குடிமக்களுக்கு மட்டுமே அளிக்கவில்லை. இந்திய மண்ணில் கால் பதித்திருக்கும் ஒவ்வொரு மனிதருக்கும் அந்த உரிமையை வழங்கியுள்ளது.

மத்திய அரசு தான் விரும்பும் வகையில், அகதிகளைத் திருப்பியனுப்புவதற்கான நடைமுறைகளைக் கொண்டிருக்கலாம். அந்த நடவடிக்கையில் நியாயமிருப்பதாகவும்கூட ஒருவர் நினைக்கலாம். ஆனால் ஒருநாட்டிலிருந்து அகதிகளாக வருபவர்கள் அனைவருமே திருப்பியனுப்பப்பட வேண்டியவர்கள், அவர்கள் அனைவருமே தாங்கள் தங்கியிருக்கும் நாட்டுக்கு ஆபத்து விளைவிக்கக்கூடியவர்கள் என்று கூறுவது நேர்மையானதாக இருக்க முடியாது. மியான்மரின் ராக்கைன் மாநிலத்தில் நிலவிவரும் பயங்கரவாதச் சூழல் தொடர்பாக இந்தியா ராஜதந்திர ரீதியிலும் ராணுவ உத்திகளின்படியும் எந்தவொரு நிலைப்பாட்டையும் எடுக்கலாம். ஆனால், முஸ்லிம்கள் என்ற காரணத்திற்காக அகதிகளாக வருபவர்களை பயங்கரவாதிகள் என்று கூறுவதும், நாடில்லாத அவர்களுக்கு பாதுகாப்பான ஒரு சூழலை மறுப்பதும் மாபெரும் தவறு!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x