Last Updated : 05 Apr, 2023 06:18 AM

 

Published : 05 Apr 2023 06:18 AM
Last Updated : 05 Apr 2023 06:18 AM

காவல் வன்முறைகள்: முற்றுப்புள்ளி இல்லா அத்துமீறல்

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் உதவிக் காவல் கண்காணிப்பாளராக இருந்த பல்வீர் சிங், குற்றம்சாட்டப்பட்ட சிலரின் பற்களைப் பிடுங்கிச் சித்ரவதை செய்தது விவாதப் பொருளாகியிருக்கிறது. உண்மையில், சித்ரவதை என்கிற வடிவம் காவல் துறையின் விசாரணையில் எழுதப்படாத நடைமுறையாக இருப்பதுதான்.

இதுபோன்ற செய்திகள் பொதுவெளிக்கு வரும்போதுதான் பதற்றத்துடன் இதைப் பற்றிப் பேசுகிறோம். மறுபுறம், கொடுமைகள் என்றென்றைக்குமாகத் தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றன.

தமிழ்நாட்டில் கடந்த மூன்று மாதங்களில் மட்டும் 11 பேரை, கால்களில் துப்பாக்கியால் சுட்டுக் காவல் துறை கைதுசெய்துள்ளது. சில ஆண்டுகளுக்கு முன் காவல் நிலையக் கழிப்பறைகளில் தவறி விழுந்ததாகக் கை, கால்களில் கட்டுகளுடன் சிலர் நீதிமன்றத்தில் காவல் அடைப்பு செய்யப்பட்டனர். தற்போது கால்களில் துப்பாக்கிக் குண்டுக் காயங்களுடன் கைதிகள் சிறைக்குச் செல்கின்றனர். இவர்களுக்கு வாழ்நாள் முழுதும் இந்தக் காயங்கள் நிரந்தர ஊனத்தை ஏற்படுத்தும்.

காவல் மரணங்கள்: தமிழ்நாட்டில், 2016-17 முதல் 2021-22 பிப்ரவரி வரை 478 காவல் மரணங்கள் நிகழ்ந்துள்ளதாக நாடாளுமன்ற அறிக்கை குறிப்பிடுகிறது. நாட்டின் தென் மாநிலங்களில் இந்த மரணங்களில் தமிழ்நாடு முன்னிலை வகிக்கிறது.

காவல் வன்முறைகளை ஒரு செய்தியாகக் கடந்துபோவதுதான் சமூகத்தின் இயல்பு. நீதிமன்றங்கள்கூட இதற்கு எதிராகப் போதிய எதிர்வினை ஆற்றுவதில்லை. பல வேளைகளில் காவல் நிலையச் சித்ரவதையால் காயமடைந்தவர்களைக் காவல் அடைப்பு செய்யும்போது போதிய மனித உரிமை அக்கறை, உணர்வுப் புரிதலுடன் நீதிமன்றங்கள் அணுகியிருக்கலாம்.

காவல் துறை சீர்திருத்தத்துக்கான உள் துறை அமைச்சகம் அமைத்த பத்மநாபய்யா கமிட்டியின் (2000) ஆய்வு, ‘காவல் துறை மக்களை அடிக்கும் அதிகாரம் படைத்தது என்கிற எண்ணம் நமது சமூகத்தில் ஆழமாகப் பதியப்பட்டுள்ளது. அந்த எண்ணம் காவல் சித்ரவதைக்கு ஒரு வகையில் காரணமாக அமைகிறது’ என்றது.

காவல் துறையினரின் மனதில் பதியப்பட்ட இந்தத் தவறான எண்ணம், தங்களுக்கு அத்தகைய அதிகாரம் உள்ளதாகக் கருதும் மனநிலை, அவர்களைச் சட்டத்துக்கு மேலானவர்களாக நினைக்க வைக்கிறது. பல்வேறு வடிவங்களில் காவல் சித்ரவதைகளைப் பொதுச் சமூகம் இயல்பாகக் கடந்து செல்ல அகம்-புறம் சார்ந்த காரணிகள் பல உள்ளன.

வெகுமக்களைப் பாதிக்கும் சினிமா ஊடகம், காவல் நிலையங்களையும் காவல் சித்ரவதைகளையும் சேர்த்தே காட்சிப்படுத்துகிறது. பல போலீஸ் கதாநாயகர்களின் படங்கள் போலி மோதல் கொலைகளைக் (என்கவுன்டர்) கொண்டாடுகின்றன. மனித உரிமை, தனிமனிதச் சுதந்திரம் போன்ற கருத்துகளை எதிர்நிலையில் நிறுத்த அவை தயங்குவதில்லை.

குற்றவாளிகளை உடனடியாகத் தண்டித்துவிட வேண்டும், சுட்டுக் கொல்ல வேண்டும் என்கிற கருத்து பொதுவாக உருவாக்கப்படுகிறது. ஆனால், இதே பொது சமூகம்தான் சாத்தான்குளம் பென்னிக்ஸ் - ஜெயராஜ் காவல் படுகொலையை எதிர்த்து மனித உரிமைகளுக்காகக் குரல்கொடுத்தது.

காவல் வன்முறையின் கோரம்: குற்றவாளிகள் எனக் கருதப்படுவோர் கொல்லப்படும்போது, சித்ரவதைக்கு உள்ளாகும்போது மக்கள் அவற்றைக் கண்டுகொள்ளாமல் கடந்துபோவதையும், மற்ற நிலைகளில் காவல் வன்முறையை எதிர்ப்பதையும் காண முடிகிறது. ஆனால், சட்டமும் நீதியும் ஒரே வகையானது, அது பாதிக்கப்படும் நபரைப் பொறுத்து மாறக்கூடிய ஒன்றல்ல.

விருப்பு - வெறுப்புகளின் அடிப்படையில் எவரும் செயல்படக் கூடாது என்பதற்காகவே எழுதப்பட்ட சட்டம் உள்ளது; அது எல்லாருக்கும் பொதுவானது. தண்டிக்கும் அதிகாரம் நீதிமன்றத்துக்கே உண்டு. இன்றைக்கு ரெளடிகள், சமூக விரோதிகளைக் காவல் துறையினரே தண்டிப்பது, சித்ரவதை செய்வது சரியென்றால், காவல் சித்ரவதைக்கு உள்ளாகும் ஒருவருக்கு தீவிரவாதி, சமூகவிரோதி என்பன போன்ற முத்திரைகளைச் சுமத்தி, காவல் துறை தன்னை நியாயப்படுத்திக்கொள்ளும்; சட்டத்தின் ஆட்சி கேள்விக்குள்ளாகும்.

2019இல் ஹைதராபாத் நகரில் கால்நடை மருத்துவர் ஒருவர் பாலியல் வன்முறைக்கு உள்ளாகி எரித்துக் கொல்லப்பட்ட வழக்கில், குற்றம்சாட்டப்பட்டவர்களை ‘என்கவுன்டர்’ செய்த காவல் துறையினரை மக்கள் கொண்டாடினர். ஆனால், உச்ச நீதிமன்றம் அமைத்த நீதிபதி வி.எஸ்.சிர்புர்கர் தலைமையிலான பத்து நபர் குழு, அது திட்டமிட்ட படுகொலை என்பதையும், சுட்டுக்கொல்லப்பட்ட நால்வரில் மூவர் சிறுவர்கள் என்பதையும் வெளிப்படுத்தியது.

காவல் வன்முறைகள் வெறும் உடல் சார்ந்த பாதிப்புகளை மட்டும் ஏற்படுத்துபவை அல்ல. அவை கடுமையான உளவியல் பாதிப்புகளையும் ஏற்படுத்திவிடும். சித்ரவதையின் வழியே ஒரு மனிதனின் சுய அடையாளமும் மனித நேயமும் சிதைக்கப்படுகின்றன. அந்தப் பாதிப்புகளை இன்னமும் சட்டம் முழுதாக உணரவில்லை. சித்ரவதை பாதிப்பை எதிர்கொண்டோர் வாழ்நாள் முழுதும் அதன் நினைவுச் சுமையைச் சுமக்க வேண்டும். நிகழ்ந்தபோது ஏற்பட்ட வேதனை, அதை ஒவ்வொரு முறை நினைக்கும்போதும் ஏற்படுவதைத் தவிர்க்க முடியாது.

வழிகாட்டு நெறிமுறை: கடந்த ஆண்டு தமிழகக் காவல் துறைத் தலைவர் சைலேந்திர பாபு, காவல் வன்முறைகளைக் கட்டுப்படுத்த, ஒரு வழிகாட்டு நெறிமுறைச் சுற்றறிக்கையை அனுப்பியிருந்தார். அந்தச் சுற்றறிக்கையைக் கீழ் நிலை அதிகாரிகள் படித்து நடந்திருந்தால், கைது செய்யப்படுபவர்களைக் கால்களில் சுடுவது, பற்களைப் பிடுங்குவது உள்ளிட்ட - மாநிலம் முழுதும் நடந்த - சித்ரவதைகள் தடுக்கப்பட்டிருக்கும். ஏனெனில், காயம் ஏற்படுத்துவதற்காக நடத்தப்படும் துப்பாக்கிச் சூடு, வன்முறைகள் அவை.

அமெரிக்க உச்ச நீதிமன்றத்தில் 1984இல் ‘கிரஹாம் எதிர் கானர்’ என்ற வழக்கில் காவல் துறையினர் காயம் ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துக்காக நடத்தப்படும் துப்பாக்கிச் சூடுகளுக்கு இழப்பீடு வழங்கியதுடன், காவல் துறையினர் நடத்திய தாக்குதல் நியாயப்படி சரியானதா, அது போன்ற உண்மையான ஆபத்து காவல் துறையினருக்கு இருந்ததா என்று பார்த்து முடிவுசெய்ய வழிகாட்டியது.

2014இல், ‘பி.யு.சி.எல் எதிர் மகாராஷ்டிர மாநிலம்’ வழக்கில் மோதல் கொலைகளில், துப்பாக்கிச்சூட்டில் ஈடுபடும் காவல் துறையினர் மீது தனியே வழக்குப் பதிவுசெய்து, அவர்களை விசாரிப்பதற்கு ஏதுவாகத் தற்காலிகப் பணிநீக்கம் செய்ய வேண்டும், அவர்கள் நிரபராதிகள் என நிரூபணம் ஆகும்வரை பதவி உயர்வு, விருது ஆகியவற்றைத் தரக் கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தார் மாவட்ட நீதிபதியைஅணுகித் தங்களுக்கான நீதியைப் பெற வழிகாட்டியது.தீர்ப்புகளின் வழிகாட்டுதல்கள் எவ்வளவுவந்தபோதும், காவல் வன்முறை சமூகத்தில் தொடர்ந்து தக்கவைக்கப்படுகிறது.

குற்றவாளிகளுக்கு ஆதரவா? - வாழ்வதற்கான உரிமை, ஒரு மனிதரிடமிருந்து பிரிக்க முடியாத உரிமை. அதில் யாரும் எந்தச் சமரசமும் செய்ய முடியாது. காவல் துறை ஆயுதம் வைத்துக்கொள்ளும் அதிகாரம், ஒரு மனிதனைத் துன்புறுத்த அல்லது கொலை செய்யும் அதிகாரத்துக்கானது அல்ல. ஒருபோதும் அது போன்ற அதிகாரத்தை எந்தச் சட்டமும் யாருக்கும் வழங்கவில்லை. அதுபோன்ற உத்தரவுகள் ஏதேனும் நடைமுறையில் இருந்தால், அது நமது அரசமைப்புச் சட்டத்தை அவமதித்து இடப்பட்டதாக இருக்கும்.

காவல் சித்ரவதைகள், காவல் மரணங்கள் ஆகியவை நீதிமன்றங்களின் தண்டிக்கும் அதிகாரம், விசாரணை முறைகள்மீது நடத்தப்படும் தாக்குதல் ஆகும். இது ஜனநாயகத்தின் ஒரு அமைப்பின்மீது மற்றொரு அமைப்பு மேற்கொள்ளும் அத்துமீறல்.

இவற்றை அனுமதிப்பது அல்லது சகித்துக்கொள்வது, நமது அமைப்பின்மீது நிரந்தரப் பாதிப்புகளை உருவாக்கும். காவல் வன்முறைக்கு எதிராகப் பேசுவது குற்றவாளிகளுக்கு ஆதரவாகச் செல்வதல்ல; மாறாக, ஜனநாயக விழுமியங்களைப் பாதுகாப்பதே என்பதை முதலில் புரிந்துகொள்ள வேண்டும்!

- ச.பாலமுருகன் | வழக்கறிஞர்; ‘சோளகர் தொட்டி’ நாவலாசிரியர்; தொடர்புக்கு: balamuruganpucl@gmail.com

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x