Last Updated : 21 Mar, 2023 06:48 AM

 

Published : 21 Mar 2023 06:48 AM
Last Updated : 21 Mar 2023 06:48 AM

மாநிலக் கல்விக் கொள்கைக் குழு செய்ய வேண்டியது என்ன?

புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவதில் மத்திய அரசு தீவிரம் காட்டிவருகிறது. ‘தேசியக் கல்விக் கொள்கை 2020’ இந்தியக் கல்வி முறையில் மிகப்பொிய மாற்றத்தை ஏற்படுத்தி, அனைத்து வகையிலும் நாடு மேம்பட வழிவகுக்கும் என்று பிரதமர் மோடி தொடங்கி தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி வரையிலான பலரும் வலியுறுத்திவருகின்றனர்.

பெரும்பாலான மாநிலங்கள் புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்தத் தொடங்கிவிட்ட நிலையில், தமிழ்நாடு, கேரளம், தெலங்கானா, மேற்கு வங்கம் ஆகிய நான்கு மாநிலங்கள் இன்னும் அந்தப் பணிகளைத் தொடங்கவில்லை. குறிப்பாக, தேசியக் கல்விக் கொள்கைக்கு மாற்றாக மாநிலக் கல்விக் கொள்கையை உருவாக்குவதில் தமிழ்நாடு அரசு முனைப்புக் காட்டுகிறது.

அதிகரிக்கும் அழுத்தம்: மறுபுறம், பல்கலைக்கழக மானியக் குழுவின் (யுஜிசி) தலைவா் பேராசிரியா்எம்.ஜெகதீஷ்குமார், புதிய கல்விக் கொள்கையின் பாிந்துரைப்படி வாரத்துக்கு ஒரு திட்டத்தை அறிவித்துச் செயல்படுத்தப்பட வேண்டியமுறை தொடர்பான அறிவிப்புகளை பல்கலைக்கழகங்களுக்கு அனுப்பிவருகிறார். திட்டங்கள் அமல்படுத்தப்படுகின்றனவா என்றும் கண்காணிக்கப்படுகிறது.

தேசியக் கல்விக் கொள்கையின் திட்டங்களை அமல்படுத்தாத உயர் கல்வி நிறுவனங்களுக்கு யுஜிசி, தேசிய மதிப்பீடு மற்றும் தரச்சான்று நிறுவனம் (NAAC) போன்றவை தர மதிப்பீட்டில் மதிப்பெண்களை அளிக்கப்போவதில்லை எனத் தெரிகிறது. தர மதிப்பீட்டுக்காகப் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளிலிருந்து ஆண்டுதோறும் பெறப்படுகின்ற AQAR (Annual Quality Assurance Report) அறிக்கையில், ‘தேசியக் கல்விக் கொள்கை அமல்படுத்தப்படுகிறதா?’ என்று கேட்கப்பட்டுள்ளது. செயல்படுத்தாத கல்வி நிறுவனங்கள் அதற்கான மதிப்பெண்களை இழப்பதுடன் தகுதி (Grading) பெற முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன.

தமிழ்நாடு செய்ய வேண்டியது: புதிய கல்விக் கொள்கையும் யுஜிசி அறிவித்துள்ள திட்டங்களும் அவசியம்தான் எனத் தமிழ்நாடு உயா் கல்வியின் அங்கமாக விளங்குகின்ற கல்வியாளா்களில் பலர் கருதுகின்றனா். இந்தச் சூழலில் மொழிக் கொள்கையில் மாற்றம், நுழைவுத்தோ்வு, நான்கு ஆண்டுப் படிப்பு, படிப்பிலிருந்து வெளியேறவும் - உள்ளே வரவும் அனுமதிப்பது போன்ற சர்ச்சைக்குரிய அம்சங்களை எதிர்க்கும் தமிழ்நாடு அரசு, அவற்றைத் தவிர பிற திட்டங்களை மாநிலக் கல்விக் கொள்கையில் சோ்த்துக்கொண்டு செயல்படுத்துவது நல்லது.

பல்கலைக்கழகங்களின் ஆட்சிமன்றக் குழு (Syndicate), ஆட்சிக் குழு (Senate) பாடத்திட்டக் குழுவில் அனுமதி பெற்றுத்தான் மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையைச் செயல்படுத்த முடியும். அரசு அதிகாரிகள் அதிகம் கொண்டுள்ள இக்குழுவில் தமிழ்நாடு அரசு தங்களுக்கு ஏற்றவையல்ல என்று கருதுகின்றவற்றைத் தவிர, பிற திட்டங்களைச் செயல்படுத்துவதற்கு வழிவகை செய்யலாம்.

தேசியக் கல்விக் கொள்கையின் நல்ல அம்சங்கள்: உலகளாவிய உயா் கல்வியின்படி (Internationalization of Higher Education), கூட்டுப் பட்டம் (Joint Degree), இரட்டைப் பட்டம் (Dual Degree) போன்றவற்றுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஓராண்டு மட்டும் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் படித்தாலோ ஆராய்ச்சி மேற்கொண்டாலோ, அம்மாணவர் இந்திய மற்றும் வெளிநாட்டுப் பல்கலைக்கழகத்தின் பட்டத்தைப் பெற வழி செய்யப்பட்டுள்ளது.

# ஒரு கல்லூரி அல்லது பல்கலைக்கழகத்தில் பயிலுகின்ற மாணவா், அதே நிறுவனத்தில் அல்லது இந்தியாவில் அல்லது வெளிநாட்டுக் கல்வி நிறுவனத்தில் உள்ள படிப்புகள் அல்லது பாடத்தில் சோ்ந்து தோ்ச்சி பெறலாம். அப்படியான முறையில் பெறப்படுகின்ற மதிப்பெண்கள் அந்த மாணவருக்கென்று உருவாக்கப்படும் கல்வி வரவுக் கணக்கில் (Academic Bank of Credits - ABC) சோ்த்துக்கொள்ளப்படும்.

# பின்னால் பெறவிருக்கும் உயர் கல்விக்கும் வேலைவாய்ப்புக்கும் பயன்பெற இத்திட்டம் உதவுகிறது. அதாவது, ராமநாதபுர மாவட்டம் கமுதியில் உள்ள கல்லூரி மாணவன் மும்பை ஐஐடியில் பாடத்தைத் தோ்வுசெய்து தோ்ச்சி பெற்றுத் தனது கல்விக் கணக்கில் சோ்த்துக்கொள்ள முடியும்.

# ஒரு நிறுவனத்தில் பயிலுகின்ற மாணவர், அதே நிறுவனத்தில் அல்லது பிற நிறுவனங்களில், ஒரே சமயத்தில் மற்றுமொரு பட்டப்படிப்பில் நேரடி வகுப்பிலோ இணையவழி மூலமாகவோ சோ்ந்து, இரண்டு பட்டங்களை ஒரே நேரத்தில் பெற முடியும். ஏழை, எளிய மாணவா்களுக்கு இத்திட்டம் வரப்பிரசாதமாகும்.

# தாய்மொழியில் உயா்கல்வி அளித்தலுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு மருத்துவம், பொறியியல் பாடங்களைத் தாய்மொழியில் வழங்க அனுமதியும் நிதியும் அளிக்கப்படுகிறது.

மாநிலக் குழுவுக்குச் சில யோசனைகள்: தமிழ்நாடு அரசு 2022 ஜூன் 1 அன்று தமிழ்நாடு கல்விக் கொள்கையைத் தயார் செய்ய நீதிபதி டி.முருகேசன் தலைமையில் 14 போ் கொண்ட குழுவை நியமித்துள்ளது. மாநிலக் கல்விக் கொள்கை அறிக்கையில், பின்வரும் அம்சங்கள் இருந்தால் நமது கல்வித் திட்டம் மேம்பாடு அடையும்.

1. தமிழ்நாடு உயா் கல்வியின் தரம் இன்னும் மேலோங்காமைக்கு மிக முக்கியக் காரணம், தகுதியும் திறமையும் மிக்க ஆசிரியா்களைத் தோ்வுசெய்யாமைதான். இதைச் சீரமைக்கப் பல்கலைக்கழகம், கல்லூரி ஆசிரியர் ஆள்சேர்ப்பு வாரியத்தை (University and College Teacher Recruitment Board) உருவாக்க இக்குழு பாிந்துரைக்க வேண்டும்.

2. பெரும்பான்மையான பல்கலைக்கழகங்களும் கல்லூரிகளும் மத்திய அரசின் நிதியுதவியுடன்தான் தங்களது கட்டமைப்பு, ஆராய்ச்சிக்கான உள்கட்டமைப்புகளை உருவாக்கிவருகின்றன. மாநில அரசின் நிதியுதவி மிக மிகக் குறைவு. ஆசிாியா்களுக்கும் அலுவலா்களுக்கும் மாதச் சம்பளம், ஓய்வூதியம் அளிக்க முடியாமல் சில பல்கலைக்கழகங்கள் திண்டாடிவருகின்றன.

எனவே, கல்விக்கு மத்திய அரசு அதிக நிதி அளிக்க வேண்டும் என்று பாிந்துரைப்பதோடு, மாநில அரசும் தங்களது நிதிநிலை ஒதுக்கீட்டில் குறைந்தது 20% நிதியை அளிக்க வேண்டும் என இக்குழு பாிந்துரைக்க வேண்டும்.

3. இருமொழிக் கொள்கை தமிழ்நாட்டு அரசின் உறுதியான கொள்கை. அதை வலுவாக வலியுறுத்துவதில் தவறில்லை. அதேநேரத்தில், தேசியக் கல்விக் கொள்கைத் திட்டங்களை நடைமுறைப்படுத்தும் கல்வி நிலையங்களிலிருந்து வெளிவரும் இளைஞா்களுக்கு இணையாக, தமிழ்நாட்டு மாணவர்களைத் தயார்செய்ய, அவா்கள் விரும்புகின்ற, உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் வேலைவாய்ப்பைத் தரக்கூடிய மூன்றாவது மொழியை அவா்கள் விருப்பப் பாடமாக அளிக்கப் பரிந்துரைக்கலாம்.

4. தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களில் உள்ள உள்கட்டமைப்பு, ஆராய்ச்சிக் கூடங்கள், மென்பொருள்கள், நூல் நிலையங்கள் ஆகியவற்றை ‘மையப்படுத்தப்பட்ட வசதி’யாக (Centralized Facility) உருவாக்கி, அனைத்து நிறுவன மாணவ-மாணவியா்க்கும் அனைத்து நிறுவனங்களில் உள்ள வசதிகளைப் பயன்படுத்திக்கொள்ளும் வகையில் ஒரு புரிந்துணா்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட தமிழ்நாடு அரசிடம் இக்குழு பரிந்துரைக்கலாம். இதனால், ஆராய்ச்சிக் கருவிகளுக்காகப் பல கோடி நிதி செலவிடப்படுவதைத் தடுக்கலாம்.

5. அரசுப் பல்கலைக்கழகங்களில் செயல்பட்டுவரும் கல்விப் பணியாளர் கல்லூரியில் (Academic Staff College), தனியார் பல்கலைக்கழக, சுயநிதிக் கல்லூரிகளில் பணியாற்றும் ஆசிரியா்களும் பயிற்சிபெற வழிவகை செய்ய வேண்டும்.

6. தனியார் பல்கலைக்கழகங்களையும் அங்கீகாித்து, அரசுப் பல்கலைக்கழகங்களுக்கு நிகராகத் தமிழ்நாடு அரசு மதிக்க வேண்டும். அரசின் திட்டங்களில் அந்தப் பல்கலைக்கழகங்களுக்கும் இடமளிக்க வேண்டும்.

நடுத்தர, ஏழை, எளிய மாணவா்கள் சுயநிதிக் கல்லூரிகளிலும் தனியார் பல்கலைக்கழகங்களிலும் பயிலுகின்றனா். அவா்களில் தகுதியானவா்களுக்குப் படிப்பு நிதியுதவிகள் (Scholarship) ஆராய்ச்சி நிதியுதவிகள் (Stipend) ஆகியவற்றை அரசு அளிக்க இக்குழு பரிந்துரைக்க வேண்டும்.

- க.திருவாசகம் | முன்னாள் துணைவேவந்தர், சென்னைப் பல்கலைக்கழகம்; தொடர்புக்கு: vc@ametuniv.ac.in

To Read in English: What State Education Policy panel must do

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x