Published : 04 Sep 2017 09:09 AM
Last Updated : 04 Sep 2017 09:09 AM

பாறைகள் சொல்லும் கதை

செவ்வாய் கிரகத்தில் உயிரினம் வாழ்ந்ததற்கான அடையாளம் இருந்ததா என்று அறிய கோடிக்கணக்கான ரூபாய்களைச் செலவிடுகிறோம், நம் நாட்டிலேயே உள்ள விலைமதிப்பில்லாத பல சான்றுகளை நாசப்படுத்திக் கொண்டிருக்கிறோம்.

பெங்களூரு சர்வதேச விமானநிலையத்திலிருந்து ஊருக்கள் காரில் செல்லும்போது நூறு கோடி ஆண்டுகளைக் கடந்த சிறு பாறைக் குன்றை, கல் உடைக்கிறோம் என்ற போர்வையில் சின்னாபின்னப்படுத்தியிருப்பதைக் காணாமல் இருக்க முடியாது. ஒரு காலத்தில் சுற்றுவட்டாரப் பகுதிகளை ஒரே இடத்திலிருந்து சுற்றிச்சுற்றிப் பார்க்க உதவியாக இருந்த அந்தக் குன்று, வரம்பில்லாமல் பாறைகளை வெட்டியதால் வடிவில் பாதியாகிவிட்டது. மண்ணியல் பாரம்பரியத்தைச் சிதைக்கும் இந்தியர்களின் அலட்சியத்துக்கு இது நல்ல அடையாளம்.

இந்தியாவில் அதிகம்

உலகில் பாறைகளால் செய்யப்படும் பொருள்களில் 30%, இந்தியாவில்தான் தயாராகிறது என்பதிலிருந்தே பாறை உடைப்பு எந்த அளவுக்கு அத்துமீறிவிட்டது என்பதை அறியலாம். சலவைக்கல்லைத் தவிர கருப்புக் கல் (கிரானைட்) என்ற பெயரில் – உருமாறிய பாறைகள் முதல் அனல் பாறைகள் வரை எல்லாவிதமான பாறைகளும் உடைத்து ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இதன் மூலம் கோடிக்கணக்கில் அன்னியச் செலாவணி ஈட்டப்படுகிறது.

பாறைகளை வெட்டி எடுப்பது அறிவியல் தொழில்நுட்பங்களைக் கையாண்டு மேற்கொள்ளப்படுவதில்லை. பொதுமக்கள் இது குறித்து அக்கறை காட்டுவதில்லை. இதை யாரும் கண்காணிப்பதோ, வரைமுறைப்படுத்துவதோ இல்லை. இந்தியாவின் மொத்த நிலப்பரப்பில் 10%-க்கும் மேலாக இப்படி பாறை வெட்டியெடுப்பு நிகழ்கிறது. இதை இப்படியே தொடர அனுமதித்தால் மண்ணியல் பாரம்பரியமும், நிலப்பரப்பு பாறைகளும் ஒரேயடியாக மறைந்துவிடும். பல்லுயிர்ப் பெருக்கத்தைக் காப்பாற்றுவதைப்போல மண்ணியல் பாரம்பரியங்களையும் காப்பாற்ற நாம் தொடர்ந்து செயல்பட்டாக வேண்டும்.

கலாச்சாரமல்லாத பாரம்பரியம்

மண்ணியல் பன்மை என்பது பாறைகள், கனிமங்கள், புதைபடிவங்கள், இயற்கை நிலப்பரப்பு ஆகியவற்றைக் கொண்டது. இவை உருவாக பல நூறு கோடி ஆண்டுகள் பிடித்துள்ளன. இப்படி மண்ணிலும் பாறைகளிலும் நிலப்பரப்பிலும் கலந்துள்ள இவற்றை கலாச்சாரம் சாராத பாரம்பரியங்களாக நாம் கொண்டாடிப் பாதுகாக்க வேண்டும். மண்ணியல் பாதுகாப்பு என்பது நம் நாட்டில் புறக்கணிக்கப்புக்குள்ளாகியிருக்கிறது.

வழக்கத்துக்கு மாறான வகையில் உள்ள பாறை வடிவங்கள், நில அமைப்பு போன்றவை தேசிய சொத்துகளாக அறிவிக்கப்பட்டு யாரும் அவற்றைச் சேதப்படுத்தாத வகையில் வேலியிட்டு பாதுகாக்க வேண்டும். கோடிக்கணக்கான ஆண்டுகளாகப் பெய்த மழையாலும் வீசிய காற்றாலும் உருவான இவற்றை அழியாமல் காப்பாற்ற சட்டப்பூர்வமாகவும் நிர்வாகங்கள் மூலமும் ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும். இப்போது மூடப்பட்டுவிட்ட கோலார் தங்க வயல் சுரங்கம் மண்ணியல் அருங்காட்சியகமாக அறிவிக்கப்பட்டு மாணவர்களைக் கூட்டிச் சென்று அதன் சிறப்புகளை விளக்க வேண்டும். உயரமான மலைச் சிகரம், பவளப் பாறைத் தீவுகள், கடலோர மணல்திட்டுகள், சதுப்பு நிலங்கள், உள்நாட்டுக்குள் காணப்படும் மிகப்பெரிய நீர்த்தேக்கங்கள் என்று உலகின் வெவ்வேறு பகுதிகளில் நிலவும் இயற்கை அதிசயங்களுக்கு ஈடாக இந்தியாவிலும் ஏராளமாக உள்ளன.

குஜராத்தின் கட்ச் பகுதியில் 20 கோடி ஆண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்த டைனோசார்களின் எலும்புகள் புதைபடிவங்களாகக் கிடைத்துள்ளன. புதிய நெடுஞ்சாலைகள், வீடுகள் கட்டுமானத்தால் கணிசமான பகுதிகளை இழந்துவிட்டோம். செவ்வாய் கிரகத்தில் உயிரினம் வாழ்ந்ததற்கான அடையாளம் இருந்ததா என்று அறிய கோடிக்கணக்கான ரூபாய்களைச் செலவிடுகிறோம், நம் நாட்டிலேயே உள்ள விலைமதிப்பில்லாத பல சான்றுகளை நாசப்படுத்திக் கொண்டிருக்கிறோம்.

தொடரும் அலட்சியம்

மண்ணியல் பன்மைத்துவத்தைப் பாதுகாப்பது எப்படி என்று ஜப்பான் செயலிலேயே விளக்குகிறது. 1995-ல் ஹொக்குடன் என்ற நகரில் நிலநடுக்கத்தின்போது சாலையில் சுமார் 500 அடி நீளத்துக்கு ஏற்பட்ட பெரிய விரிசல் அப்படியே வேலியிட்டு காட்சிப் பொருளாக்கப்பட்டிருக்கிறது. 1993-ல் மகாராஷ்டிரத்தின் லாட்டூரில் இதே போல மிகப்பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டது. கில்லாரி நகருக்கு அருகில் சுமார் 1 மீட்டர் நீளத்துக்குப் பூமியில் பெரிய வெடிப்பு ஏற்பட்டது. நாம் அதைப் பாதுகாக்கவில்லை. இந்த இடத்திலும் 2004 சுனாமியின்போதும் ஏற்பட்ட சேதங்களை நிலநடுக்கப் பூங்கா என்ற பெயரில் பராமரித்திருக்க வேண்டும். நிலத்தில் தோன்றும் நிலநடுக்கமும் கடலுக்கு அடியில் தோன்றும் நிலநடுக்கமும் எவ்வளவு ஆற்றலை வெளியிடுகின்றன, அதன் விளைவுகள் எப்படிப்பட்டவை என்று சிறார்கள் தெரிந்துகொள்ள வழிபிறக்கும். அது எதிர்காலச் சந்ததியினருக்கு எச்சரிக்கையாகவும் தங்களுடைய வாழ்க்கையின் மதிப்பை உணர்த்துவதாகவும் இருக்கும்.

மண்ணியல் சார்ந்த அரிய நினைவுச் சின்னங்களைப் பாதுகாக்கும் பொறுப்பு இந்திய மண்ணியல் மதிப்பாய்வு அமைப்பிடம் தரப்பட்டிருக்கிறது. இவ்வாறு பாதுகாக்க 26 பகுதிகள் தேர்வு செய்யப்பட்டிருப்பதாக அதன் இணையதளம் தெரிவிக்கிறது. அதிகாரிகளிடம் இதில் கருத்தொருமித்த செயல் இன்னமும் உருவாகாமல் இருக்கிறது.

இந்தியாவின் வெவ்வேறு பகுதிகளில் உள்ள மண்ணியல் அமைப்புகளை முதலில் பார்வையிடுவதும், அபூர்வமானவற்றைப் பட்டியலிடுவதும் பிறகு அவற்றைப் பாதுகாப்பதும் பெரிய சவாலான வேலை. இவற்றைக் காக்க செயல்படுத்தக்கூடிய நடைமுறைகள் உருவாக்கப்பட வேண்டும். நிலப் பயன்பாட்டைத் திட்டமிடுவது, பாதுகாப்பது, வளப்படுத்துவது, வலிமையான சட்டக் கட்டமைப்பை உருவாக்கி இவற்றைப் பாதுகாப்பதற்கான வியூகங்களை வகுக்க வேண்டும். நம்முடைய வரலாறு ஹரப்பா, மொகஞ்சதாரோவிலிருந்து தொடங்கவில்லை, அதற்கும் நூறு கோடி ஆண்டுகளுக்கு முன்னாலேயே தொடங்கிவிட்டது.

- சி.பி.ராஜேந்திரன், பேராசிரியர், ஜவஹர்லால் நேரு நவீன ஆராய்ச்சி மையம், பெங்களூரு

தமிழில்: ஜூரி

C: ‘தி இந்து’ ஆங்கிலம்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x