Last Updated : 21 Sep, 2017 10:20 AM

 

Published : 21 Sep 2017 10:20 AM
Last Updated : 21 Sep 2017 10:20 AM

பொருளாதாரச் சரிவிலிருந்து மீள்வது எப்படி?

மத்திய புள்ளியியல் அலுவலகம் 2017-18-ம் ஆண்டுக்கான முதல் காலாண்டு மதிப்பீடுகளை வெளியிட்டுள்ளது. அதன்படி, நாட்டின் ஒட்டுமொத்தப் பொருளாதார வளர்ச்சிவீதம் (ஜிடிபி) 5.7%, மொத்த நிகர மதிப்பு (ஜிவிஏ) 5.6% என்று தெரியவருகிறது. எப்படிப் பார்த்தாலும் வளர்ச்சி 6%-க்கும் கீழே குறைந்துவிட்டது. கடந்த ஆண்டு இதே காலாண்டில் ஜிடிபி. 7.9%, ஜிவிஏ 7.6% என்பது குறிப்பிடத்தக்கது. வளர்ச்சி வீதம் 2% குறைவதற்கான காரணங்கள் என்னென்ன? பணமதிப்பு நீக்கம் நிச்சயம் ஒரு காரணம். பொதுச் சரக்கு - சேவை வரி அமலுக்கு வருவதையொட்டி, கையிருப்பில் வைத்த சரக்குகளை அனைவரும் குறைத்தது மற்றொரு காரணம்.

உண்மையில், 2016-17 நிதியாண்டின் முதல் காலாண்டிலிருந்தே ஜிடிபி குறையத் தொடங்கி விட்டது. அப்போது ஜிவிஏ 7.6% ஆக இருந்தது. 2016-17-ல் மூன்றாவது காலாண்டிலிருந்து வளர்ச்சி வீதம் 6.7% ஆகக் குறைந்தது. அதற்குப் பிறகு மேலும் 0.9% சரிந்தது. தற்போது முதல் காலாண்டில் வளர்ச்சி வீதம் 5.6% ஆக இருப்பதால் இந்த நிதியாண்டு முழுவதிலுமே இது 6.5%-ஐத் தாண்ட வாய்ப்பில்லை. அப்படி உயர வேண்டும் என்றால், அடுத்த மூன்று காலாண்டுகளிலும் வளர்ச்சி வீதம் குறைந்தபட்சம் 7% ஆவது இருக்க வேண்டும். முதல் காலாண்டில் ஆலை உற்பத்தி வளர்ச்சி வீதம் வெறும் 1.2% ஆக இருப்பது மிகவும் ஏமாற்றமளிக்கிறது.

ஜிடிபி ஏன் சரிகிறது?

ஜிடிபி சரிவுக்கு வெளிநாட்டு ஏற்றுமதி, வர்த்தகம் காரணமாகக் கூறப்படுகிறது. உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் நம்முடைய பொருட்களுக்கும் சேவைகளுக்கும் தேவை அதிகம் இருந்தால் வளர்ச்சி அதிகரிக்கும். ஏற்றுமதி அதிகரித்தால்தான் வளர்ச்சியும் அதிகரிக்கும். 2005-06 முதல் 2007-08 வரையில் ஏற்றுமதி 20% என்ற அளவையும் தாண்டியதால்தான் இந்தியாவால் அப்போது உயர் வளர்ச்சியை எட்ட முடிந்தது. வளர்ந்த நாடுகளில் பொருளாதாரம் சுறுசுறுப்பான வளர்ச்சியை அடையாததால் நம்மால் ஏற்றுமதியைப் பெருக்க முடியவில்லை. 2014-15 மற்றும் 2015-16-ல் ஏற்றுமதி சரிந்து பூஜ்யத்துக்கும் கீழே போனது. 2016-17-ன் இரண்டாவது பாதிக்குப் பிறகு ஏற்றுமதி வளர்ச்சியுற்றது.

முதலீட்டில் வீழ்ச்சி

முதலீட்டில் ஏற்பட்ட வீழ்ச்சிதான் இதற்கு அடிப்படைக் காரணம். 2011-12-ல் சேமிப்பிலிருந்து பெறப்பட்ட முதலீடு 34.3% ஆக இருந்தது. 2015-16-ல் இது 29.3% ஆகக் குறைந்தது. 2016-17-ல் இது மேலும் சரிந்து 27.1% ஆகக் குறைந்தது. 2017-18 முதல் காலாண்டில் இது 27.5% ஆக இருந்தது. அரசு செய்யும் பொது முதலீடு, மொத்த உற்பத்தி மதிப்பில் 7.5% ஆக இருக்கிறது. தனியார் முதலீடு தான் குறைந்துகொண்டே வருகிறது.

‘தனியார்’ என்பது கம்பெனிகள் மற்றும் தனி முதலீட்டாளர்கள் என்ற இரு பிரிவினரையும் குறிக்கும். 2007-08-ல் செய்த முதலீட்டுடன் இப்போதைய நிதியாண்டை ஒப்பிட்டால், நிறுவனங்களின் முதலீடு 13%. தனியார் முதலீடு என்பது குடும்பஸ்தர்களின் முதலீடு மட்டுமல்ல.. முறையாகப் பதிவுசெய்யாத நிறுவனங்களின் முதலீடும் இதில் சேரும்.

வேலைவாய்ப்புகள் எங்கே?

சமீபத்திய ஆண்டுகளில் பொருளாதார வளர்ச்சி ஏற்பட்டாலும் வேலைவாய்ப்புகள் பெருகவில்லை என்று கவலை தெரிவிக்கப்பட்டது. இதை ‘வேலைவாய்ப்பில்லாத வளர்ச்சி’ என்றே அழைக்கிறார்கள். வேலைவாய்ப்பு தொடர்பாகக் கிடைக்கும் தரவுகள் நம்பத்தக்கவை அல்ல. அமைப்புரீதியாக உள்ள துறையில் வேலைபார்ப்பவர்கள் பற்றிய தகவல்கள் மட்டும்தான் மத்திய புள்ளிவிவரத் துறைக்குக் கிடைக்கிறது. எஞ்சியவை எல்லாம் பொதுக் கணக்கெடுப்பிலிருந்து கிடைக்கும் தகவல்களிலிருந்து சில வரையறைகளை வைத்துக்கொண்டு மதிப்பிட்டுக் கணக்கிடுவதுதான். அமைப்புரீதியாகத் திரட்டப்படாத துறையில் வேலைகள் பெரும்பாலும் படித்த படிப்புக்கும் தெரிந்த தொழில்திறனுக்கும் பொருத்தமில்லாத வேலைகள்தான்.

உள்நாட்டு முதலீடு?

வளர்ச்சிக்கு இரண்டு முக்கியக் காரணங்கள் உள்ளன. இப்போதுள்ள தொழில் உற்பத்தித் திறனை முழுதாகப் பயன்படுத்திக்கொள்ளும்போது உற்பத்தி அதிகரிக்கும். அல்லது புதிதாக முதலீடு கள் வரும்போது உற்பத்தி அதிகமாகும். இப்போது நாம் உற்பத்தி அதிகமாவதைப் பார்ப்பதற்குக் காரணமே தொழில்நிறுவனங்கள் தங்களுடைய உற்பத்தித் திறனை முழுதாகப் பயன்படுத்துவதால்தான். ஆனால், முதலீடு அதிகரிக்கவில்லை. புதிய முதலீடுகள் பெருகினால் வேலைவாய்ப்பு தானாகப் பெருகும். சமீப காலத்தில் அந்நிய நேரடி முதலீட் டின் பங்களிப்பு அதிகமாகிவருவது உண்மைதான். 2016-17 நிதியாண்டில் மொத்த அந்நிய முதலீடு ரூ.3.86 லட்சம் கோடி ஆகும்.

2017-ன் முதல் காலாண்டிலேயே அந்நிய நேரடி முதலீடு ரூ.70,000 கோடி ஆகும். ஆனால், முதலீட்டு விகிதம் அதிகரிக்கவில்லை. இதன் மூலம், அந்நிய முதலீடெல்லாம் பழைய சொத்துகளைக் கைப்பற்றத்தான் பயன்படுத்தப்படுகிறது, புதிய திட்டங்களுக்கோ ஆலைகளுக்கோ அல்ல என்பதைப் புரிந்துகொள்ளலாம். உள்நாட்டு முதலீட்டாளர்கள் இன்னமும் முதலீடு செய்யத் தயங்குகிறார்கள் என்பதே இதில் கிடைக்கும் செய்தி.

தனியார் முதலீடு

தனியார் முதலீட்டைத் தூண்டிவிட என்ன செய்யலாம்? பொருத்தமான முதலீட்டுச் சூழலை உருவாக்குவதில் சீர்திருத்தங்களுக்கு முக்கியப் பங்கு இருக்கிறது. கடந்த சில ஆண்டுகளில் திவால் சட்டம், பொதுச் சரக்கு - சேவை வரி சட்டம் இயற்றப்பட்டதும் அந்நிய நேரடி முதலீடு தொடர்பான விதிகளில் செய்யப்பட்ட மாற்றங்களும் குறிப்பிடத்தக்கவை.

சீர்திருத்தங்களைத் தொடர வேண்டும். அரசு நிர்வாகத்தில் செய்ய வேண்டியது அதிகம். வங்கிகளின் நிதி நிலைமை மோசமாக இருப்பதால் முதலீடு தொய்வடைந்துள்ளது. எல்லா அரசு வங்கிகளும் குறுகியக் காலக் கடன் மற்றும் நீண்ட காலக் கடன்களை வழங்குகின்றன. புதிய கடன்களை வழங்குவது திடீரெனக் குறைந்துவிட்டதால் முதலீட்டாளர்களின் நிலை மோசமாகிவிட்டது. வாராக் கடன் பிரச்சினையைச் சமாளிக்க வங்கிகள், தங்களுடைய கடன் சுமையை உடனடியாகக் குறைத்துக்கொள்ள வேண்டும். வங்கிகள் நல்ல நிலையை அடைய அவற்றுக்கு மூலதனம் உடனடியாகச் செலுத்தப்பட வேண்டும். அரசு நிறுவனங்களின் பங்குகளை விற்பதற்கு நிர்ணயித்த இலக்கை அதிகப்படுத்தி, அந்தத் தொகையை வங்கிகளுக்கு மூலதனம் வழங்கப் பயன்படுத்த வேண்டும். மேற்கொண்டு நகரமுடியா மல் நின்றுவிட்ட திட்டங்களை ஆய்வுசெய்து அவற்றைப் புதுப்பிக்கவும் லாபகரமானதாக ஆக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். புதிய முதலீடுகள் வரத் தடையாக இருப்பவை என்ன என்று அறிய முதலீட்டாளர்களைக் குழுவாக அழைத்து ஆலோசனைகளை நடத்த வேண்டும்.

எல்லா முதலீட்டுக் குழுக்களுமே தீர்க்க முடியாத பிரச்சினைகளோடு இல்லை. ஒவ்வொரு தொழில் வாரியாக அழைத்து, பிரச்சினைகளை அலசி ஆராய்ந்து தீர்வு காண வேண்டும். பெரிய தொழில்நிறுவனங்களின் வளர்ச்சியைத்தான் சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் சார்ந்திருக்கின்றன என்றாலும் சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களைத் தூண்டிவிடுவதும் புதிய முதலீடுகளுக்கு வழிவகுக்கும்.

வளர்ச்சிக்கான இயந்திரங்கள்

2017-18-ம் ஆண்டில் வளர்ச்சி வீதம் 6.5% என்ற அளவைத் தாண்ட வாய்ப்பில்லை. பொதுச் சரக்கு - சேவை வரி தொடர்பான அச்சங்களும் தடைகளும் விலகிய பிறகு வளர்ச்சி அதிகரிக்கும். நம்முடைய வளர்ச்சி இலக்கு 8% அல்லது அதற்கும் மேலே என்று இருக்க வேண்டும். தனியார் முதலீடு பிரச்சினையாக இருந்தாலும், பொது முதலீடு சமீப காலமாக அதிகரித்துவருகிறது. ஆனால் இது போதாது. பொது முதலீடும் தனியார் முதலீடும் ஒரே சமயத்தில் அதிகரித்தால்தான் இந்திய வளர்ச்சி முழுவேகம் பெற முடியும்!

- சி.ரங்கராஜன்,

இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர்

©: ‘தி இந்து’ ஆங்கிலம், தமிழில்: சாரி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x