Published : 31 May 2017 08:58 AM
Last Updated : 31 May 2017 08:58 AM

சுதந்திர வேளாண் சந்தை தேவை!

இந்த ஆண்டு விளைச்சல் அபரிமிதமாகிவிட்டதே என்று சில மாநிலங்களில் விவசாயிகள் கவலைப்படும் நிலைமை ஏற்பட்டிருக்கிறது. ஆந்திரம் தெலங்கானா மாநிலங்களைச் சேர்ந்த மிளகாய் சாகுபடியாளர்கள், கர்நாடகத்தில் தக்காளி பயிரிட்டோர், மகாராஷ்டிரத்தில் துவரை சாகுபடியை மேற்கொண்டோர் இப்போது விலை வீழ்ச்சி காரணமாகத் தங்களுடைய விளைச்சலைச் சேமித்து வைக்கவும் முடியாமல், நஷ்டத்துக்கு விற்கவும் முடியாமல் திண்டாடுகின்றனர். கடந்த ஆண்டு மிளகாய், தக்காளி, துவரை ஆகியவை அதிக விலைக்கு நுகர்வோர்களுக்கு விற்கப்பட்டதால், அந்த லாபத்தைத் தாங்களும் பெற வேண்டும் என்ற ஆசையில் ஏராளமானோர் சாகுபடியை மாற்றியதே இந்த உபரிக்கும் தேக்கநிலைக்கும் முக்கிய காரணங்கள் என்று சிலர் கூறுகின்றனர்.

காரணம் கருணையல்ல

வியாபாரிகள் ஒரு பண்டத்தை ஊக விலையில் வாங்குவது எப்போது என்றால், விளைச்சல் குறைவான நிலையில், எதிர்காலத்தில் விலை அதிகரிக்கும் என்பது நிச்சயமாகத் தெரியும்போது கொள்முதலில் இறங்குவர். அப்படி வாங்கும்போது விவசாயிகள் நஷ்டப்படும்படியாக மிகவும் குறைந்த விலையில் வாங்க மாட்டார்கள். சக வியாபாரியும் ஊக வியாபார நோக்கில் வாங்க வருவார் என்பதால், விலை ரொம்பவும் சரிந்துவிடாமல் பார்த்துக்கொள்வர். அதே போல விளைச்சல் அதிகரிக்கும்போது கைவசம் உள்ள சரக்கை நல்ல நிலையில் வைத்திருந்து, சந்தைக்கு வந்த சரக்கு முழுக்க விற்றுத்தீர்ந்து, அதன் விலை லேசாக உயரத் தொடங்கும்போது லாபத்துக்கு விற்கப் பார்ப்பார்.

உபரி உற்பத்தி இருக்கும்போது கூட போட்டி வியாபாரிகள் வாங்கிக் குவித்துவிடக் கூடாது என்பதற்காக நியாயமான விலை கொடுத்து வாங்கிக்கொள்வார்கள். எதிர்காலத்தில் நல்ல விலைக்கு விற்று லாபம் சம்பாதிக்க வேண்டும் என்பதுதான் அவர்களுடைய நோக்கம். இதை விவசாயிகள் மீதுள்ள கருணையால் அவர்கள் செய்வதில்லை. தானியம் மற்றும் பருப்பு வியாபாரத்தில் எப்போதும் தன்னிடம் கணிசமாகக் கையிருப்பு வேண்டும் என்று ஊக வியாபாரியே திட்டமிடுகிறார்.

வீணாகும் விளைபொருட்கள்

விவசாயிகள் தங்களுடைய பண்டங்களை யாருக்கு வேண்டுமானாலும் விற்றுக்கொள்ளலாம் என்பதால் அதிகப் பணம் தரும் வியாபாரியிடம் விற்கின்றனர். இது இப்படியே தொடரும் நிலையில், கடந்த பருவத்தின்போது என்ன விலை விற்றது, இனி என்ன விலைக்கு விற்கும் என்று சிந்தித்து வியாபாரிகள் கொள்முதல் விலையை நிர்ணயிக்கின்றனர். ஆனால், நியாயமான போட்டி நடைபெற இந்தியச் சந்தைகள் அனுமதிப்பதில்லை. அதற்கு முதல் காரணம், அதிகார வர்க்கம் கடைப் பிடிக்கும் ‘சிவப்பு நாடா’ நடைமுறை. எந்தெந்தப் பகுதி விவசாயிகள் தங்களுடைய விளைச்சலை எந்த இடத்தில் விற்க வேண் டும், அதிகபட்சம் எவ்வளவு விற்கலாம் என்றெல்லாம் வரம்புகள் நிர்ணயிக்கப்படு கின்றன. சில வேளைகளில், மாவட்டங்களைத் தாண்டிக்கூட விளைபொருட்களை எடுத்துச் செல்ல அனுமதிப்பதில்லை. இதனாலேயே குளிரூட்டப்பட்ட சரக்குக் கிடங்கு உள்ளிட்டவற்றைத் தனியார் அமைக்காமலேயே இருக்கின்றனர். இதனால் விளையும் பொருள் நுகர்வோரை அடையாமலேயே கெட்டும் போய்விடுகிறது. குளிரூட்டப்பட்ட சரக்குக் கிடங்கு இல்லாததால் விளையும் காய்கறிகளில் 40% வீணாக்கிக் கொட்டப்படுகின்றன.

மொத்த விலை வேளாண் விற்பனைக் கிடங்கில், விளைச்சலுக்கேற்ப வியாபாரிகள் கூட்டமைப்பு விலையை நிர்ணயிக்கிறது. அது விவசாயிகளுக்கு லாபகரமான விலை கிடைக்காமல் தடுத்துவிடுகிறது. பயிர்களுக்கு அதிகத் தேவை இருந்தால் விலை ஏற்றப்படுகிறது. நுகர்வோர் தரும் விலையில் 20% முதல் 25% வரையிலான தொகை மட்டுமே விவசாயிகளுக்குக் கிடைக்கிறது. எனவே, வியாபாரிகளால்கூட கட்டுப்படுத்தப்பட முடியாத சந்தை ஒன்றுதான் விவசாயிகளின் நெருக்கடிகளை ஓரளவுக்குத் தீர்க்க உதவும்.

சுருக்கமாகத் தமிழில்: சாரி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x