Last Updated : 12 Dec, 2016 09:47 AM

 

Published : 12 Dec 2016 09:47 AM
Last Updated : 12 Dec 2016 09:47 AM

நம்மைச் சுற்றி: தொழிலாளருக்கு எதிரான தொழிலாளர் துறை அமைச்சர்!

அரசு அதிகாரத்தில் இருப்பவர்கள், தங்களுக்குச் சாதகமான, தங்களுக்குப் பணிவுடன் நடந்துகொள்ளக்கூடிய, தங்கள் 'அலைவரிசை' கொண்டவர்களையே அமைச்சர்களாக, அதிகாரிகளாக நியமித்துக் கொள்வது வழக்கம். அமெரிக்க அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் டொனால்டு ட்ரம்ப் அதில் புதிய சாதனையைப் படைப்பார்போலும். ட்ரம்ப் தனது அமைச்சரவைக்குத் தேர்ந்தெடுக்கும் நபர்கள் சர்ச்சைக்குரியவர்களாகவே இருக்கிறார்கள். பட்டியலின் சமீபத்திய வரவு, தொழிலாளர் அமைச்சராகத் தேர்வுசெய்யப்பட்டிருக்கும் ஆண்ட்ரூஸ் எஃப். புஸ்டர்.

தொழிலாளர் பாதுகாப்புக்கு எதிரான மனநிலை கொண்ட ஆண்ட்ரூஸ், தொழிலகங்களில் தொழிலாளர்களுக்குப் பதிலாக இயந்திரங்களைப் பயன்படுத்த வேண்டும் என்று கருதுபவர். “இயந்திரங்கள் அமைதியானவை. ஒருபோதும் விடுமுறையில் செல்லாது. பணிக்குத் தாமதமாக வராது” என்று 'பிஸினஸ் இன்சைடர்' எனும் அமெரிக்க இணைய இதழுக்கு அளித்த பேட்டியில் கூறியவர். அவரைப் பற்றிய தகவல்களைப் படிக்கும்போது, அவருக்கும் ட்ரம்புக்கும் நிறைய பொருத்தங்கள் இருப்பதை உணர முடிகிறது.

இவரும் தொழிலதிபர். கார்ல்ஸ் ஜூனியர், ஹார்டீஸ் போன்ற உணவக நிறுவனங்களின் தாய் நிறுவனமான 'சி.கே.ஈ. ரெஸ்டாரன்ட்'ஸின் தலைமை நிர்வாக அதிகாரி. பெரும் பணக்காரர். பழமைவாதி. சொல்லப்போனால், ட்ரம்பை விட அதிகமாகப் பழமைவாதச் சிந்தனை கொண்டவர். குடியரசுக் கட்சி ஆதரவாளர். பழமைவாதச் சிந்தனை கொண்ட வேட்பாளர்களுக்குத் தேர்தல் நிதி அளித்தவர். அவரது நிறுவனத்தின் விளம்பரங்கள் பெண்களின் கவர்ச்சிப் படங்களால் நிறைந்தவை. தொழிலாளர்களுக்குக் குறைந்தபட்ச சம்பள உயர்வு தந்தாலே, சிறிய தொழிலகங்கள் பாதிக்கப்பட்டு, வேலையிழப்பு ஏற்படும் என்று 'புரட்சி'கரமாகப் பேசியவர்.

கார்ல்ஸ் ஜூனியர், ஹார்டீஸ் நிறுவனங்களின் கடந்த 15 ஆண்டுகால வரலாற்றைப் பார்த்தால், தொழிலாளர்கள் பலருக்கு உரிய சம்பளம் கொடுக்கப்படவில்லை என்று தெரிகிறது. இதனால், அந்நிறுவனங்களுக்கு அபராதமும் விதிக்கப்பட்டிருக்கிறது.

எல்லாவற்றுக்கும் மேலாக, ஆண்ட்ரூஸ் குடும்ப வன்முறையில் ஈடுபட்டதாக, அவரது முன்னாள் மனைவி ஒருமுறை குற்றம்சாட்டியிருந்தார். ஆனால், 'அப்படித் தவறுதலாக உங்கள் மீது குற்றம்சாட்டிவிட்டேன். அதற்காக வருந்துகிறேன்' என்று அவரிடமிருந்து சமீபத்தில் கடிதம் வந்திருப்பதாக ட்ரம்ப் தரப்பு தெரிவிக்கிறது. இப்படிப்பட்டவரைத் தொழிலாளர் துறை அமைச்சராகத் தேர்ந்தெடுக்கும் ட்ரம்பை வழக்கம்போல் வறுத்தெடுக்கின்றன அமெரிக்க ஊடகங்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x