Last Updated : 03 Jan, 2023 06:51 AM

 

Published : 03 Jan 2023 06:51 AM
Last Updated : 03 Jan 2023 06:51 AM

பீலே எனும் உலக நாயகன்!

ஓர் அமெச்சூர் கால்பந்து வீரரின் மகனாகப் பிறந்து, உலகின் தலைசிறந்த கால்பந்து வீரராக, ஓர் அரசராக வாழ்ந்து மறைந்திருக்கிறார் பீலே. ‘கால்பந்துக் கடவுள்’ எனப் போற்றப்படும் அளவுக்கு அந்த விளையாட்டின் இலக்கணத்தையே மாற்றியமைத்த பீலேவின் மரணம், கத்தார் கால்பந்து உலகக் கோப்பை முடிந்த தருணத்தில் நிகழ்ந்திருப்பது வரலாற்றின் விநோத நிகழ்தகவு. தனது மிகச் சிறந்த ஆட்டங்களை வெளிப்படுத்திய சான்டோஸ் நகரின் விலா பெல்மிரோ மைதானத்தில் பீலேவின் இறுதிச்சடங்கு இன்று நடைபெறுகிறது.

உருப்பெற்ற பிம்பம்: மூன்று முறை உலகக் கோப்பையை பிரேசிலுக்குப் பெற்றுத் தந்தவர் பீலே. இன்றுவரை எந்த நாட்டு வீரராலும் முறியடிக்கப்படாத சாதனை இது. பீலே தன் வாழ்நாளில் மொத்தம் 1,281 கோல்களை அடித்திருக்கிறார். பெரும்பாலான கோல்கள், மைதானத்தில் இருந்த ரசிகர்களைத் தாண்டி பிறர் பார்த்திராதவை. எனினும், வர்ணனைகள் வானொலியில் ஒலிபரப்பான காலகட்டத்திலேயே பீலே எனும் பெயர், உருவமற்ற வீரராக ரசிகர்கள் மனதில் பதிந்துவிட்டது. பின்னர், தொலைக்காட்சி நேரலையாகப் போட்டிகள் ஒளிபரப்பானபோது அந்த மின்னல் வேக வீரரைக் கண்டு பிரமித்து நின்றார்கள் ரசிகர்கள்.

1970 இல் மெக்சிகோவில் நடந்த உலகக் கோப்பைப் போட்டிதான் முதன்முதலில் டெக்னிகலர் தொழில்நுட்பத்துடன் வண்ணமயமாகப் பல நாடுகளில் நேரடியாக ஒளிபரப்பானது. பசும்புல் மைதானத்தில் மஞ்சள் வண்ண டிஷர்ட் (பிரேசில் அணியின் சீருடை) அணிந்த மந்திரவாதி பீலேயின் திறனில் கட்டுண்டனர் கால்பந்து ரசிகர்கள். அந்தத் தொடரில் மூன்றாவது முறையாக பிரேசிலுக்கு உலகக் கோப்பையைப் பெற்றுத்தந்தார் பீலே.

அலங்கரித்த அங்கீகாரங்கள்: 1961இல் பிரேசில் அதிபர் ஜேனியோ குவாட்ரஸ், பீலேயை ஒரு தேசியச் சொத்தாக அதிகாரபூர்வமாக அறிவித்தார். பின்னாட்களில் பிரேசிலின் விளையாட்டுத் துறை அமைச்சர் பொறுப்பும் அவருக்கு வழங்கப்பட்டது. கறுப்பினத்தைச் சேர்ந்த ஒருவர் அந்தப் பொறுப்புக்கு வந்தது அதுவே முதல் முறை. குறிப்பாக, அடிமை முறை ஒழிக்கப்பட்ட கடைசி மேற்கத்திய தேசமான பிரேசிலில் இத்தகைய பெருமிதங்களை அடைந்தது முன்னுதாரணமற்ற சாதனை. இந்த நூற்றாண்டின் தலைசிறந்த கால்பந்து வீரர் என ஃபிஃபா அவரைக் கொண்டாடியது; நூற்றாண்டின் சிறந்த தடகள வீரர் என ஒலிம்பிக் கமிட்டியும் புகழாரம் சூட்டியது.

இவற்றையெல்லாம் தாண்டி அவருக்குக் கிடைத்த முக்கியமான கெளரவம், 1977 செப்டம்பர் 27இல் ஐநா அவை, அவரை ஓர் ‘உலகக் குடிமக’னாக அறிவித்ததுதான். பிரேசிலுக்கு மட்டுமான பெருமிதம் அல்ல, ஒரு சாதனை மனிதராக உலகுக்கே பொதுவானவர் என அவருக்கு வழங்கப்பட்ட அங்கீகாரம் அது. அந்தச் சான்றிதழ் வழங்கப்பட்ட தினம் தனக்கு மிகவும் விசேஷமானது என பீலே பெருமிதத்துடன் பதிவுசெய்திருக்கிறார். உண்மையில், 1950களிலேயே தனது அசாத்திய விளையாட்டுத் திறன் மூலம் அவர் பிரேசில் எல்லைக்கோட்டைத் தாண்டி, உலகமெங்கும் அறியப்பட்டிருந்தார்; ஐநா வழங்கியது அதிகாரபூர்வ அங்கீகாரம்தான்.

எல்லை கடந்த அன்பு: கால்பந்து மீதான அவரது காதல், தேச எல்லைகளுக்குள் அடைபட்டதல்ல என்பதற்குப் பல சான்றுகள் உண்டு. 1975இல் அமெரிக்காவின் நியூ யார்க் காஸ்மோஸ் அணியில் அவர் இணைந்ததன் பின்னணியில், கால்பந்து விளையாட்டை வளர்த்தெடுக்கும் அவரது கனவும் இருந்தது. அந்தக் காலகட்டத்தில் அமெரிக்கர்களிடம் கால்பந்து குறித்துப் பெரிய ஆர்வம் இருந்ததில்லை.

காஸ்மோஸ் அணியில் அவர் இணைந்த பின்னர், அமெரிக்கர்களின் கவனம் கால்பந்தின் பக்கம் திரும்பியது. 1990 உலகக் கோப்பைப் போட்டியில், 40 ஆண்டுகளில் முதன்முறையாக அமெரிக்கக் கால்பந்து அணி கலந்துகொண்டது. 1994இல் முதன்முறையாக உலகக் கோப்பைப் போட்டியையும் நடத்தியது. அந்தப் போட்டியை பிரேசிலில் நடத்தவே ஃபிஃபா திட்டமிட்டது. அமெரிக்காவுக்கு அந்த வாய்ப்பு சென்றதன் பின்னணியில் பீலேவும் இருந்தார்.

பிரேசிலைவிடவும் அமெரிக்காவில் போட்டி நடைபெற்றால், அது உலகக் கோப்பையின் முகத்தையே மாற்றும் என அவர் உறுதியாக நம்பினார். அவரது நம்பிக்கை வீண் போகவில்லை. அதன் பின்னர், அமெரிக்காவில் கால்பந்துப் புரட்சியே நடந்தது. வல்லரசின் பங்கேற்பில், கால்பந்து விளையாட்டு வணிகரீதியில் வளம்பெற்றது.

உலக நாடுகளுக்கு இடையே இருந்த பிணக்குகளுக்கு நடுவே ஒரு தேவதூதராகச் செயல்பட்டார் பீலே. தேச எல்லைகளைக் கடந்த உலக நாயகனாகக் கொண்டாடப்பட்டார். தனது ஆப்பிரிக்கப் பூர்விகம் குறித்த ஆழ்ந்த புரிதல் அவருக்கு இருந்தது. தனது முன்னோர்களில் ஒருவர் அங்கோலாவைச் சேர்ந்தவர் எனக் குறிப்பிட்ட பீலே, எடிஸன் ஆரான்ட்ஸ் டு நாஸிமியான்டோ எனும் தன் இயற்பெயரில் ‘நாஸிமியான்டோ’ என்பதன் நதிமூலம் நைஜீரியா என்றும் பதிவுசெய்திருக்கிறார். உள்நாட்டுப் போரால் அதிர்ந்துகொண்டிருந்த நைஜீரியாவில் விளையாட 1967இல் அவர் மேற்கொண்ட பயணம், வரலாற்றில் பதிவாகியிருக்கிறது.

மோதிக்கொண்டிருந்த அரசுத் தரப்பும், பையாஃப்ரா படைகளும் அவர் விளையாடுவதைப் பார்க்க சண்டையைத் தற்காலிகமாக நிறுத்திவைத்தன. புன்னகை தரித்த முகத்துடன், கால்பந்தை ஒரு மதத்தைப் போல் உலகெங்கும் பரப்பினார். அவர் கையெழுத்திட்ட அவரது மஞ்சள் டிஷர்ட் வாடிகன் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருக்கிறது.

இந்தியர்களை ஈர்த்தவர்: 1977 செப்டம்பர் 24இல் கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் பீலே ஆடிய ஆட்டம், இந்திய ரசிகர்களால் இன்றுவரை சிலாகிக்கப்படுகிறது. பீலே அங்கம்வகித்த நியூ யார்க் காஸ்மோஸ் அணிக்கும், மோஹுன் பகான் கிளப் அணிக்கும் இடையிலான அந்தப் போட்டியில் கெளதம் சர்க்கார் எனும் வீரர் பீலேயை கோல் போட விடாமல் தடுத்தாடினார். அதை மிகவும் ரசித்த பீலே, போட்டி முடிந்த பின்னர் அவரை மனம்திறந்து பாராட்டினார்.

முன்னதாக கொல்கத்தாவின் டம் டம் விமானநிலையத்தில் அவரைப் பார்க்க லட்சக்கணக்கானோர் கூடினர். அவர் தங்கியிருந்த விடுதியிலும் கூட்டம் மொய்த்தது. அவர் விளையாடுவதைப் பார்க்க மைதானத்தில் 90,000 பேர் குழுமியிருந்தனர். 2015இல் அவர் மீண்டும் கொல்கத்தா சென்றபோதும் அவரது தரிசனத்துக்காகக் கூட்டம் முண்டியடித்தது.

அழிவற்றவர்: ரசிகர்களால் மட்டுமல்ல, வர்ணனையாளர்களாலேயே ‘கடவுள்’ என விளிக்கப்பட்டவர் பீலே. “மெஸ்ஸி, ரொனால்டோ, நெய்மார், மாரடோனா ஆகியோர் அபூர்வமான, அற்புதமான வீரர்கள்தான். ஆனால், அவர்களெல்லாம் மனிதர்கள். பீலே மனிதரே அல்ல. அவர் சனிக் கிரகத்திலிருந்து வந்தவர்” என்று பிரமிப்பு அகலாமல் கூறியிருக்கிறார் சக பிரேசில் வீரரான கெர்ஸான். “நாஸிமியான்டோ இறந்திருக்கலாம். ஆனால், பீலே அழிவற்றவர்” என்று அந்த ஜாம்பவானுக்கு அவர் புகழஞ்சலி செலுத்தியிருக்கிறார்.

ரியோ டி ஜெனிரோவில் உள்ள பிரேசில் கால்பந்துக் கழகத்தின் (CBF) தலைமை அலுவலகத்தின் வெளிச் சுவரில், பீலேயின் உருவம் அச்சிடப்பட்ட பிரம்மாண்டமான போஸ்டர் ஒட்டப்பட்டிருக்கிறது. அதில் ‘அழிவற்றவர்’ (Eterno) எனும் சொல் எழுதப்பட்டிருக்கிறது. பீலேயின் சாசுவதத்தைச் சொல்ல அந்த ஒரு சொல் போதும்! - வெ.சந்திரமோகன்
தொடர்புக்கு: chandramohan.v@hindutamil.co.in

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x