Last Updated : 21 Dec, 2016 09:11 AM

 

Published : 21 Dec 2016 09:11 AM
Last Updated : 21 Dec 2016 09:11 AM

காந்தியின் கடிதப் பெட்டிக்குள் ஒரு பார்வை

புத்தருக்குப் பிறகு இந்தியாவில் அவதரித்த மாமனிதர் மகாத்மா காந்தி

காந்தியின் சொந்த ஆக்கங்கள் உலகறிந்தவை. அவரைப் பற்றிய புத்தகங்களும் கட்டுரைகளும் காலவாரியாகத் தொகுக்கப்பட்டு அவருடைய காலத்திலேயே வெளிவரத் தொடங்கின. அறிஞர்கள் கே.சுவாமிநாதன், சி.என்.படேல் மூலம் மிகக் கவனத்துடன் தொகுக்கப்பட்டு, திருத்தப்பட்டு 1958 முதல் 1994 வரையில் 97 தொகுப்புகளாக அவை பதிப்பிக்கப்பட்டன.

காந்தி என்ற எழுத்தாளரை, அரசியல் செயல்பாட்டாளரை, சமூகச் சீர்திருத்தவாதியை, பன்முகத்தன்மை கொண்ட ஆன்மிகவாதியை, தீர்க்கதரிசியை, தந்தையை, நண்பரை இப்போதுள்ளவர்களும் எதிர்காலத்தவர்களும் எடை போட இந்தத் தொகுப்புகள் முக்கியமான தகவல் ஆதாரங்களாகத் திகழ்கின்றன.

இந்தத் தொகுப்புகள் பிரம்மிப்பூட்டும் வகையிலும் தவிர்க்க முடியாத வகையிலும் இருந்தாலும், ஒரு குறைபாடு உண்டு. காந்தி எழுதிய அல்லது பேசிய கடிதங்கள், கட்டுரைகள், உரைகள் இதில் இடம்பெற்றுள்ளன. காந்திக்கு மற்றவர்கள் எழுதிய கடிதங்கள் இவ்விதம் தொகுக்கப்படாமல், அடிக்குறிப்பிட்டு சுட்டும் விதத்தில் ஒரு சில மட்டுமே இடம்பெற்றுள்ளன. தொகுப்புகளின் பிற்சேர்க்கைகளில் சில கடிதங்கள் இடம்பெறுகின்றன. இந்தத் தொகுப்புகள் காந்தியின் பார்வையில் உலகத்தைக் காட்டுகின்றன. காந்தியையும் அவருடைய காலத்தையும் அவர் ஏற்படுத்தியுள்ள மரபையும் புரிந்துகொள்ள அவரைப் பற்றிய தொகுப்புகளையும் காந்திக்கு எழுதப்பட்ட கடிதங்களையும் காந்தி குறித்து எழுதப்பட்ட கடிதங்களையும் அருகருகே வைத்துப் படிக்க வேண்டும்.

கனடாவிலிருந்து ஒரு கடிதம்…

காந்திக்கு எழுதப்பட்ட கடிதங்களின் அதிக எண்ணிக்கையிலான தொகுப்பு ஆமதாபாத் நகரில் உள்ள சபர்மதி ஆசிரமத்து அருங்காட்சியகத்தில்தான் ஆயிரக்கணக்கில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. குஜராத்தி, ஆங்கிலம், இந்தி ஆகிய மொழிகளில் எழுதப்பட்ட இக்கடிதங்கள், 1890-ல் தொடங்குகின்றன. காந்தி மட்டுமே அக்கடிதங்களைப் பெற்றுப் படித்ததால் பெரும்பாலானவை மற்றவர்களால் படிக்கப்படவேயில்லை. இலக்கிய அறிஞர் திரிதீப் சுருத், ஆர்வலர் கின்னாரி பட் இணைந்து மிகக் கவனமாகத் தேர்ந்தெடுத்து காந்திக்கு வந்த கடிதங்களைத் தொகுத்துள்ளனர். இவை அக்டோபர் மாதம் தொடங்கி அடுத்தடுத்து வெளியிடப்படுகின்றன.

இந்தத் தொகுப்பில் முதலில் வெளிவரவிருக்கும் சிலவற்றைப் படிக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அவை காந்தி தென்னாப்பிரிக்காவில் இருந்த தொடக்கக் காலத்தில் எழுதப்பட்டவை. காந்திக்குக் கடிதம் எழுதியவர்கள் பல்வேறு மதத்தவர்கள், சமூக அந்தஸ்து உள்ளவர்கள், பல்வேறு நாடுகளையும் கண்டங்களையும் சேர்ந்தவர்கள். இளம் வழக்கறிஞராகப் பணியாற்றத் தொடங்கிய காலத்திலிருந்தே முஸ்லிம்கள், இந்துக்கள், கிறிஸ்தவர்கள், யூதர்கள், பார்ஸிக்களோடு அவர் பழகினார். குஜராத்திகள், தமிழர்கள், ஆங்கிலோ-இந்தியர்கள், ஐரோப்பியர்கள், அதிகாரிகள், வியாபாரிகள், வழக்கறிஞர்கள், கொத்தடிமைகளாக நடத்தப்பட்ட தொழிலாளர்கள் எனப் பல்வேறு தரப்பினருடனும் அவருடைய உறவு இருந்தது. அவர்கள் நேடால், டிரான்ஸ்வால், தி கேப் மற்றும் இந்தியா, இங்கிலாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள். ஒரு கடிதம் கனடாவிலிருந்துகூட வந்திருக்கிறது.

ஆர்வமூட்டும் கடிதங்கள்

இக்கடிதங்களில் பல அவருடைய வழக்கறிஞர் தொழில் தொடர்பானவை. மற்றதில் பெரும்பாலானவை அரசியல் தன்மையவை. நேடால், டிரான்ஸ்வால் அரசுகள், 1910-க்குப் பிறகு ஐக்கிய தென்னாப்பிரிக்க அரசு ஆகியவற்றுடன் தொடர்புள்ளவை. இக்கடிதங்களின் இன்னொரு புறத்தைத்தான், காந்திஜி பற்றிய தொகுப்பு நூல்கள் காட்டுகின்றன. நிறவெறிச் சட்டங்கள், நடவடிக்கைகளுக்கு எதிரான காந்திஜியின் மனுக்கள், வேண்டுகோள்கள் கடிதங்களில் வெளிப்படுகின்றன. இத்தொகுப்புகளில், காந்திஜி எந்த அதிகாரிக்கெல்லாம் கடிதம் எழுதினாரோ அவர்களுடைய பதில்களையும் படிக்க முடிகிறது. பதில்களில் பல, எரிச்சல்தன்மையுடனும் வெட்டிவிடும் போக்குடனும் உதவி செய்ய முடியாத நிலையை விளக்கும் வகையிலும் காணப்படுகின்றன.

சபர்மதி ஆசிரமத்தில் உள்ள கடிதங்களில் பல தென்னாப்பிரிக்காவில் அவருக்கு நெருக்கமானவர்கள் எழுதியவை. 1906-ல் அவருடன் லண்டனுக்குச் சென்ற எச்.ஓ.அலி, நீண்ட காலம் செயலராகப் பணியாற்றிய சோன்ஜா ஸ்லெசின், நெருங்கிய சகா எல்.டபிள்யு. ரிட்ச், அவருடயை நண்பர்-சக குடித்தனக்காரர்- தளபதியான ஹென்றி போலக் போன்றவர்கள் எழுதியவை அவை. 1909-ல் இந்தியாவில் பயணம் செய்தபோது காந்திக்கு போலக் எழுதிய கடிதங்கள் மிக நீண்டவை. 1914 ஜனவரியில் காந்தியை தென்னாப்பிரிக்காவில் முதல் முறையாகச் சந்தித்து அவருக்கு நெருக்கமான ஆங்கிலேய நண்பரான சி.எஃப். ஆண்ட்ரூஸ் எழுதிய கடிதங்கள் படிக்கப் படிக்க ஆர்வம் ஊட்டுபவை. காந்தியின் தார்மிக, மத சித்தாந்தங்களின் ஆழத்தை அறிய உதவுபவை.

நகைச்சுவைக் கடிதம்

காந்தியின் சுயசரிதையில் விரிவாக எடுத்துக் கூறப்படும் ஒரு சம்பவம் இக்கடிதம் ஒன்றிலும் இடம்பெற்றுள்ளது. 1897-ல் காந்தியைக் கொல்ல வெறி கொண்ட கூட்டம் ஒன்று துரத்தும்போது, அவர் தங்கியிருந்த வீட்டுக்கு வெளியே காவலுக்கு நின்ற டர்பன் காவல்துறைக் கண்காணிப்பாளர் ஆர்.சி.அலெக்சாந்தரும் அவருடைய மனைவியும் சமயோசிதமாகச் செயல்பட்டு, அவரைக் காப்பாற்றிய சம்பவம், 1901-ல் நேடால் வாழ் இந்தியர்கள் தனக்கும் கஸ்தூர் பாவுக்கும் பரிசாக வழங்கிய தங்க நகைகளை காந்தி ஏற்காமல் திருப்பித் தந்தது ஆகியவை கடிதங்களில் இடம்பெற்றுள்ளன. பல கடிதங்கள் 1909-ல் காந்தி இங்கிலாந்து சென்றது தொடர்பானவை. தென்னாப்பிரிக்க அரசின் நிறவெறிச் சட்டங்களுக்கு எதிராக வெள்ளை ஏகாதிபத்திய அரசின் கவனத்தை ஈர்க்க அப்பயணத்தை அவர் மேற்கொண்டார். இப்பயணத்தின்போதுதான், வன்முறை மூலம் இந்தியாவின் சுதந்திரத்தைப் பெற முடியும் என்று நம்பிய வி.டி.சாவர்க்கர் உள்ளிட்ட இந்திய இளைஞர்களை காந்தி சந்தித்தார். இதையொட்டியே, தென்னாப்பிரிக்காவுக்குக் கப்பலில் திரும்பியபோது ‘ஹிந்த் ஸ்வராஜ்’ என்ற தலைப்பில் காந்தி கட்டுரை எழுதினார்.

தென்னாப்பிரிக்காவில் இருந்தபோது காந்திக்கு எழுதப்பட்ட கடிதங்கள் அனைத்துமே கனமான விஷயங்களைப் பற்றியவை. அத்திபூத்தாற்போல, எந்த நோக்கமும் இல்லாமல் நகைச்சுவையாக அமைந்த கடிதமும் உண்டு. நேடால் இந்திய காங்கிரஸ் ஏற்பாடு செய்யும் கூட்டத்தில் பேச விரும்பிய ஒரு ஐரோப்பியர், தான் பேசும் கூட்டங்களுக்கு ‘நிறையப் பேரை’ அழைத்து வரும் பொறுப்பை ஏற்க வேண்டும் என்று காந்திக்கு நிபந்தனை விதித்திருக்கிறார்! பல கடிதங்கள் சிறியவை, சொல்ல வந்ததைச் சுருங்கச் சொல்பவை. பல கடிதங்கள் விரிவானவை, முக்கியமான பிரச்சினைகளை விவாதிப்பவை.

தப்தாரியின் காட்டம்

தென்னாப்பிரிக்காவில் காந்தி என்னென்ன வேலைகளில் ஈடுபட்டிருந்தார், முக்கியமான பிரச்சினைகளாக அவர் கருதியவை எவை என்பதை அந்தக் கடிதங்கள் விளக்குகின்றன. பிற்காலத்தில் இந்தியாவில் அவர் மேற்கொள்ளக்கூடிய வேலை களையும் அவை முன்கூட்டியே உணர்த்துபவை யாகவும் உள்ளன.

சாதிகளால் நிலவும் ஏற்றத்தாழ்வுகள் தொடர்பான இரு கடிதங்கள் என் கவனத்தை மிகவும் ஈர்த்தன. பம்பாயைச் சேர்ந்த கே.ஆர்.தப்தாரி என்பவர் 1908-ல் காந்திக்கு ஒரு கடிதம் எழுதியிருக்கிறார். “தற்செயலாக ஒரு சாதியில் பிறந்துவிட்டவர் அதைக் கொண்டே தன்னை உயர்ந்தவர் என்று கர்வப்பட்டோ, தாழ்ந்தவர் என்று வருத்தப்பட்டோ நடக்கும் நிலை இருக்கும்வரையில், இந்தியா உதைபட்டே தீர வேண்டும். அந்நிலை மாறும்வரையில் சுதேசி, சுயராஜ்யம் என்பதெல்லாம் வெறும் நுரை போன்ற கனவுகளே” என்று தப்தாரி காட்டமாகக் குறிப்பிடுகிறார். நாம் அனைவரும் அனுபவிக்கும் பல தீமைகளுக்கும் அடிப்படையாக இருக்கும் சாதி என்ற அமைப்புக்கு எதிராகப் புரட்சிசெய்து அதைத் தகர்ப்பதைத்தான் நாம் முதல் கடமையாகக் கொள்ள வேண்டும் என்கிறார்.

ஜே.எம்.லாசரஸின் காட்டம்

ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு, நேடாலில் காந்திக்கு நெருக்கமாக இருந்த ஜே.எம்.லாசரஸ் என்ற தமிழ் கிறிஸ்தவர், இதைவிடக் காட்டமான கடிதத்தை இதே பிரச்சினை தொடர்பாக எழுதியிருக்கிறார். “இந்திய தேசிய காங்கிரஸ் என்பது பிராமணர்களாலும் உயர் சாதி இந்துக்களாலும் ஆதிக்கம் செலுத்தப்படும் அமைப்பாக இருக்கிறது. அவர்கள் ஒடுக்கப்பட்ட மக்களைக் கைதூக்கிவிட இதுவரை எதையும் செய்யாதவர்கள். நான் பிறந்த மதறாஸ் மாகாணத்தில் இன்றும்கூட பிராமணர்கள் வசிக்கும் வீதியில் நடப்பதைப் பறையர்கள் நினைத்தும்கூடப் பார்க்க முடியாது. பிராமணர்களுக்கு எதிராக தழையத் தழைய வேட்டியை உடுத்திச் செல்ல முடியாது. பிராமணர்கள் பயன்படுத்தும் கிணற்றிலிருந்து தண்ணீர் எடுத்துக்கொள்ள முடியாது. சுய ராஜ்யத்துக்காக காங்கிரஸ் கட்சியின் இயக்கம் வளர்வது வரவேற்கத்தக்கது.

ஆனால், தீண்டத்தகாதவர்களாக நடத்தப்படும் மக்களுக்கு சுயராஜ்யத்தில் எந்த இடம் கொடுக்கப்படப் போகிறது? இந்தியாவுக்கு அரசியல் சுதந்திரம் கிடைத்தால் பிராமணர்கள்தான் அதிகாரத்தைக் கைப்பற்றி, சபிக்கப்பட்டவர்களும் புறக்கணிக்கப்பட்டவர்களுமான மக்கள் மீது ஆதிக்கத்தைச் செலுத்துவார்கள். என்னுடைய கேள்வி மீது உங்களுடைய முழுக் கவனத்தையும் செலுத்துங்கள். இந்தக் கேள்வியை நான் எழுப்புவது காங்கிரஸ் கட்சியின் நோக்கங்களுக்குத் தடையாக அமையக் கூடும். ஆனால், கடினமான இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண நம்மை அது இட்டுச் செல்லும்” என்று கடிதத்தில் வலியுறுத்தியிருக்கிறார் லாசரஸ். இதற்கு முன்னர் இருந்ததைவிட இந்தப் பிரச்சினையைப் பற்றி காந்தி தீவிரமாகச் சிந்திக்க லாசரஸின் கடிதம் முக்கியப் பங்காற்றியிருக்கிறது.

காந்தியின் திறமைகள் மீதும் தலைமைப் பண்பு மீதும் தென்னாப்பிரிக்காவில் இருந்த பலதரப்பட்ட இந்தியர்களுக்கும் ஏற்பட்டிருந்த அபார நம்பிக்கையைக் கடிதங்கள் உணர்த்துகின்றன. கேப் டவுனைச் சேர்ந்த குஜராத்தி மீன் வியாபாரி, “காந்தியின் தூய்மையான கரங்களில் இந்தியர்களின் எதிர்காலம் பாதுகாப்பாக இருக்கும்” என்று அப்போதே நம்பிக்கையுடன் கூறியிருக்கிறார். தன்னைக் கொத்தடிமையாக நடத்தும் வெள்ளை எஜமானர்களின் செயல்கள் குறித்து உள்ளத்தை உருக்கும் வகையில் ஒரு தமிழர் கடிதம் எழுதியிருக்கிறார். தனக்கு இழைக்கப்படும் கொடுமைகளை அவர் விரிவாக விவரித்திருக்கிறார். காந்தி தனக்குள்ள செல்வாக்கைப் பயன்படுத்தி தன்னை அந்த வேதனைகளிலிருந்து காப்பாற்ற வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்திருக்கிறார். இந்தியர்களுக்கு நியாயமும் உரிமைகளும் கிடைக்க தன் வாழ்நாளை அர்ப்பணித்துள்ள காந்திஜியைப் பாராட்டி, போர்ட் எலிசபெத் என்ற ஊரிலிருந்து தமிழர்களும் குஜராத்திகளும் கூட்டாகக் கடிதம் எழுதியுள்ளனர்.

காந்தியை அனைவரும் நன்கு புரிந்துகொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில்தான் இந்தக் கடிதங்களெல்லாம் வெளியிடப்படுகின்றன. புத்தருக்குப் பிறகு இந்தியாவில் அவதரித்த மாமனிதர் மகாத்மா காந்தி பற்றிய வரலாற்றுத் தகவல்களை மேலும் அடையாளம் கண்டு, திரட்டி மக்களிடையே கொண்டு செல்லும் பணி அவசியம் செய்யப்பட வேண்டியதே!

சபர்மதி ஆசிரமத்தில்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x