Published : 13 Dec 2016 08:59 AM
Last Updated : 13 Dec 2016 08:59 AM

என்ன நினைக்கிறது உலகம்?- என்னாகும் கிரேக்கத்தின் எதிர்காலம்?

கிரேக்க நாளிதழ்

கிரேக்கத்தின் தற்போதைய சூழல், பொருளாதாரப் பேரழிவைவிட மோசமான நிலைக்கு இட்டுச் செல்லலாம் என்று மரியாதைக்குரிய பல வரலாற்றாசிரியர்களும், அறிவுஜீவிகளும் எச்சரித்திருக்கிறார்கள். கிரேக்கம் வெளிநாடுகளின் மேற்பார்வையில் இருக்கின்ற, திவாலான ஒரு தேசம். கிரேக்கத்தின் அரசு நிறுவனங்கள் கதறிக்கொண்டிருக்கின்றன; கிரேக்க சமூகமோ விரக்தியின் கடலில் மூழ்கிக் கொண்டிருக்கிறது. கிரேக்கத்தின் ஒட்டுமொத்த நெருக்கடி இது.

அதேசமயம், சர்வதேச அளவிலும் நிலைமை குழப்படியாகத்தான் இருக்கிறது. சமீபத்திய எந்த ஒரு வரலாற்றுக்கும் மாறாக, தற்போது ஒரு மாற்றத்துக்கு உள்ளாகியிருக்கிறது அமெரிக்கா. மேற்கத்திய உலகத்திலும் ஒரு அதிகார வெற்றிடம் ஏற்பட்டிருக்கிறது. இப்போதைக்கு அதில் மாற்றம் ஏதும் ஏற்படுவதாகத் தெரியவில்லை. அமெரிக்க அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் டொனால்டு ட்ரம்பின் கிழக்கு மத்தியத் தரைக்கடல் பிராந்தியக் கொள்கை எப்படி இருக்கும் என்று கணிப்பது கடினம். ஒன்று மட்டும் நிச்சயம், இன்னும் சில வாரங்களுக்கு (ஒருவேளை சில மாதங்களுக்கு) அமெரிக்க அரசின் முடிவுகளை யார் எடுப்பார் என்றோ, அவை எப்படி அமையும் என்றோ நம்மால் கணிக்க முடியாது. அட்லாண்டிக் கடலுக்கு அப்பால் பார்த்தால், பலவீனமான பிரான்ஸ் தெரிகிறது. ஏற்கெனவே, அந்நாட்டின் அதிபர் ஹொல்லாந்தே பதவி விலகத் தயாராகிவிட்டார். மறுபுறம், ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்க்கல், குறைந்தபட்சம் தற்சமயத்துக்காவது, மேற்கத்திய உலகின் தலைவர்போலச் செயல்படுகிறார். ஆனால், புவியரசியல் ஆயுதங்கள் ஏதும் அவரிடம் இல்லை. ஐரோப்பிய ஒன்றியத்திடமோ, ஐரோப்பாவின் வேறு நாடுகளிடமோ உதவி கோரும் கிரேக்கத் தலைவர்கள் எதையும் சாதிப்பதாகத் தெரியவில்லை.

துருக்கி ஒரு குழப்பக் கடலில் பயணிக்கிறது. எப்போதும் எளிதில் கணிக்கப்படக்கூடிய ஒரு நாடாகவே அது இருக்கிறது. அதன் அரசு நிர்வாகத் துக்கும் ஆயுதப் படைகளுக்கும் இடையிலான அதிகாரச் சமநிலை பற்றி நமக்குத் தெரியும். துருக்கி அடுத்து என்ன செய்யும் என்றும் புரிந்துகொள்ள முடியும். எனினும், கிரேக்கம் - துருக்கி இடையிலான உறவும், சைப்ரஸில் துருக்கி ராணுவத்தின் ஊடுருவல் பிரச்சினையும் கொந்தளிப்பான தருணத்தை எட்டியிருக்கின்றன. கிரேக்க அரசோ செய்வதறியாது தடுமாறிக்கொண்டிருக்கிறது.

கிரேக்கம் அடுத்து எடுக்கும் ஒவ்வொரு நடவடிக்கையிலும் கவனம் தேவை. பொருளா தார நெருக்கடியுடன், தேசிய வீழ்ச்சியும் சேர்ந்துவிடக் கூடாது. தேசத் துரோகிகளுக்கும் தேசியவாதிகளுக்கும் இடையில் கிரேக்கம் பிளவுபடலாம் என்பதுதான் கிரேக்கம் சந்திக்க விருக்கும் மிக மோசமான பிரச்சினையாக இருக்கும். அதேசமயம், தேசப்பற்று என்பது உரத்த முழக்கங்களாக மட்டும் குறுகிவிடாமல், சாத்தியமுள்ள, உறுதியான நடவடிக்கைகளை எடுப்பதிலும், புதிய கூட்டணிகளை ஏற்படுத்திக் கொள்வதிலும், தேசநலனை அடிப்படையாகக் கொண்ட முடிவுகளை எடுப்பதிலும் பயன்பட வேண்டும். 1893-ல் கிரேக்கம் திவாலான நிலையி லிருந்து, 1909-ல் எழுச்சி நிலைக்குச் சென்றதைப் போல் நிலைமை மாற வேண்டும் - 1897-ல் துருக்கியுடனான கிரேக்கத்தின் போரைப் போன்ற இருண்ட காலத்தை எதிர்கொள்ளாமல்! அந்த வரலாறு மீண்டும் நிகழக் கூடாது!

தமிழில் சுருக்கமாக: வெ.சந்திரமோகன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x