Last Updated : 02 Jul, 2014 08:10 AM

 

Published : 02 Jul 2014 08:10 AM
Last Updated : 02 Jul 2014 08:10 AM

முதல் உலகப் போரின் போக்கை மாற்றிய அமெரிக்கா

அமெரிக்க வல்லரசுக்குக் கட்டியம் கூறிய மார்ன் நதிக்கரைச் சண்டை உங்களுக்கு தெரியுமா?

அது 1918-ன் முற்பகுதி. ஜெர்மனியின் படை வடக்கு பிரான்ஸ் வழியாக முன்னேறிக்கொண்டிருந்தது. பிரான்ஸின் தலைநகர் மீது ஜெர்மனிப் படைகள் மூர்க்கமான தாக்குதல் நிகழ்த்தப்போகின்றன என்று பிரான்ஸ் ராணுவத்தின் அதிகாரிகள் நடுங்கிக்கொண்டிருந்தனர். தலைநகரை நெருங்குவதற்கு ஜெர்மன் படையினர் மார்ன் நதியையும் பெலோ உட் என்ற சிறு காட்டையும் கடந்து வர வேண்டும். அந்த வழியில்தான், அனுபவம் மிக்க பிரெஞ்சு வீரர்களும், பிரிட்டிஷ் வீரர்களும் மிகவும் களைத்துப்போய்க் காத்திருந்தார்கள். அவர்களுடன் அப்போதுதான் இணைந்துகொண்ட அனுபவம் இல்லாத அமெரிக்க வீரர்களும் காணப்பட்டனர். சில மாதங்களுக்கு முன்புதான் போரால் தொய்வடைந்திருந்த பிரான்ஸ், அமெரிக்க வீரர்களின் வருகையை அணிவகுப்புகள், இசை முழக்கங்களுடன் உற்சாகமாக வரவேற்றது. நேச நாடுகளுக்கு வெற்றியை நிச்சயம் ஈட்டித்தருபவர்களாக அமெரிக்கர்கள் பார்க் கப்பட்டனர். ஆனால், பிரெஞ்சுத் தளபதிகளுக்கு அமெரிக்கர்கள் குறித்து ஐயமே இருந்தது. நான்கு ஆண்டுகளாக ரத்தக்களரிகளாகக் காணப்பட்ட நெடுங்குழிகளில் போரிட்ட அனுபவமுள்ள ஜெர்மன் படைகளை இந்தக் கத்துக்குட்டி அமெரிக்க வீரர்களால் எப்படிச் சமாளிக்க முடியும். அதிலும் பலர் ஆயுதங்களே இல்லாமல் வந்திருக்கின்றனர்.

அமெரிக்க யுகத்துக்குக் கட்டியம்

ஐரோப்பியப் போர் ஒன்றில் அமெரிக்க ராணுவம் கலந்துகொண்டது அதுதான் முதல்முறை. அதிலும் கொலைக்களத்தின் வாசலிலேயே அவர்கள் கொண்டுவிடப்பட்டனர். அவர்களுக்கு இடப்பட்ட கட்டளைகள் நேரடியானவை: எதிரிகளை முன்னேற விடாதீர்கள்; தடுத்து நிறுத்துங்கள்.

அமெரிக்க வீரர்கள் செய்ததும் அதுதான். மார்ன் நதிக்கரை யில் நடந்த இரண்டாவது சண்டை முதல் உலகப் போரில் திருப்பு முனையாகக் கருதப்படுகிறது. நேசப் படைகள், ஜெர்மனிப் படைகள் முன்னேறுவதைத் தடுத்து நிறுத்தி, அவர்களை முனைமழுங்கச் செய்தது மட்டுமல்லாமல், எதிர்த் தாக்குதலையும் தொடுத்தனர்; இதுவே இறுதி வெற்றிக்கும் காரணமாக அமைந்தது. மற்றொரு வகையில், இந்த வெற்றி நவீன அமெரிக்க ராணுவத்தின் குணாம்சத்தைத் தீர்மானிப்பதாக மாறியது; நவீன ராணுவ வல்லாதிக்கமாக அமெரிக்காவின் வருகைக்கு அதுதான் கட்டியம் கூறியது.

அமெரிக்காதான் பாதுகாவலரா?

“முதல் உலகப் போரின் திருப்புமுனையே அந்தச் சண்டைதான்” என்கிறார் அமெரிக்க ராணுவத்தின் போர்க் கல்லூரிப் பேராசிரியர் நெய்ல் பெர்க். மேற்கு ஐரோப்பாவின் பாதுகாவலராகவும் படிப்படியாக உலகின் ஒற்றை வல்லரசாகவும் அமெரிக்கா உருவானதன் தொடக்கமே அந்த வெற்றிதான். மத்தியக் கிழக்கு நாடுகள் விவகாரம், உக்ரைன்-ரஷ்யா விவகாரம் போன்ற வற்றில் அமெரிக்கத் தலையீடுகுறித்து இப்போது கடும் எதிர்ப்புகள், ஆதரவுகள் நிலவுவதுபோலவே முதல் உலகப் போரில் அமெரிக்கா தலையிட்டதற்கு அப்போதும் எதிர்ப்புகள், ஆதரவுகள் இரண்டுமே தீவிரமாகக் காணப்பட்டன.

நூற்றாண்டுகளுக்குப் பிறகும் முதல் உலகப் போரின் சாயல்கள் காணப்படுகின்றன. ஈராக், ஆப்கானிஸ்தான் என்று 13 ஆண்டுகள் நடந்த போர்களில் அமெரிக்க மக்கள் தற்போது களைப்பும் விரக்தியும் அடைந்திருக்கும் சூழலில் வெளிநாட்டு விவகாரங்களில் அதிகம் குறுக்கிடாத வெளியுறவுக் கொள்கையையே ஒபாமா நாடுகிறார். ஆனால், உலகத்தின் அமைதியே அச்சுறுத்தலுக்கு ஆளாகும்போது வேறெந்த நாடுகளும் நடவடிக்கை எடுக்க முன்வருவதில்லை என்பதுதான் ஒபாமாவுக்கு நிதர்சனமாகத் தெரிகிறது; 100 ஆண்டுகளுக்கும் முன் அப்போதைய அதிபர் வுட்ரோ வில்சன் கண்டுகொண்டதும் அதுதான்.

போரின் மிச்சங்கள்

அமெரிக்க நூற்றாண்டு தொடங்கிய இடமான மார்ன் நதிக்கரை இப்போது அழகிய கிராமப்புறமாகப் பசுமையுடன் காட்சியளிக்கிறது. மூன்று லட்சத்துக்கும் மேற்பட்டோர் மரணமடைந்ததும் படுகாயமடைந்ததும் இங்கேதான் என்பதைத் தற்போது நம்பவே முடியவில்லை.

“காலப்போக்கில் மக்கள் எல்லாவற்றையும் மறந்துவிடுவார்கள். மேலும், முதல் உலகப் போரில் போரிட்ட வீரர்கள் ஒருவர்கூட இப்போது உயிருடன் இல்லை” என்கிறார் திதியே பிளான்ஷா. மார்ன் நதிக்கு அருகிலுள்ள மான்சி என்னும் கிராமத்தில் உணவு விடுதி ஒன்றை நடத்துகிறார் அவர். அந்த உணவு விடுதி முழுக்க முதல் உலகப் போர் தொடர்பான நினைவுப் பொருட்களை வைத்திருக்கிறார். எனினும், அந்தக் கொலைக்களத்தின் எச்சங்கள் இன்னும் மக்களைத் தொடர்கின்றன. மரங்கள் வெட்டப்படும்போது அவற்றில் பதிந்திருக்கும் குண்டுச்சிதறல்களை அவ்வப்போது காண நேரிடுகிறது. வெடிக்காத குண்டுகள் தங்கள் வயல்களில் காணப்படுவதாக உழவர்கள் அடிக்கடி புகார் தெரிவிக்கின்றனர். அந்தப் பிரதேசத்தில் போரிட்டு உயிரிழந்த அமெரிக்க வீரர்களுக்காக நினைவுமண்டபம் ஒன்றும் அங்கே இருக்கிறது. 9,000-க்கும் மேற்பட்ட அமெரிக்க வீரர்களுக்கென்று கல்லறைகளும் அங்கே இருக்கின்றன.

இரண்டாவது மார்ன் போர்

1917-ல்தான் அமெரிக்கா உலகப் போர் அரங்கில் நுழைந்தது. அனுபவம் இல்லாத அந்த ராணுவத்தின் தளபதி ஜான் ஜே. பெர்ஷிங் பிரெஞ்சுத் தளபதிக்குக் கீழே போரிடுவதை விரும்பவில்லை. ஆனால், 1918-ன் வசந்த காலத்தில் ஜெர்மனி மூர்க்கமாகப் போரிடத் தொடங்கியதும் பெர்ஷிங் தனது எதிர்ப்பைக் கைவிட்டார். பிறகு, நேச நாடுகளின் படைகள் அமெரிக்க வீரர்களின் வருகைக்குப் பிறகு, தங்கள் சக்தியையெல்லாம் ஒன்றுதிரட்டிப் போரிட்டன.

அதற்கு நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இதே மார்ன் நதிக்கரையில், பாரீஸை நோக்கி முன்னேற முயன்ற ஜெர்மன் படைகளுக்கும் பிரெஞ்சுப் படைகளுக்கும் இடையே தீவிரமான போர் நடந்தது. ஜெர்மானியர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர். முன்னேறவோ பின்செல்லவோ முடியாமல் நான்கு ஆண்டுகள் நெடுங்குழிகளில் நிகழ்ந்த ரத்தக்களரிக்கு மார்ன் நதிக்கரையில் நிகழ்ந்த முதல் போர் காரணமானது. 1918-ல் மறுபடியும் அந்த இடத்துக்கு ஜெர்மன் படைகள் முன்னேறிவிட்டிருந்தன. இரண்டாவதாக, மார்ன் நதிக்கரையில் நடந்த போரில் ஜெர்மன் படைகள் வென்றிருந்தால் நேசநாடுகளுக்கு அது பெரிய அடியாக இருந்திருக்கும்.

கோதுமை வயலில் சிலைகள்

பிரெஞ்சுத் தளபதியின் கீழ் அமெரிக்க வீரர்கள் தீவிரமாகப் போரிட்டனர். 42-வது காலாட்படைப் பிரிவில் அமெரிக்க வீரர்கள் போரிட்ட விதத்துக்காக பிரான்ஸின் கோதுமை வயல்களில் அமெரிக்க வீரர்களுக்குச் சிலைகள் வைக்கப்பட்டிருக்கின்றன. கருப்பினத்தவரின் படைப் பிரிவுகள், அமெரிக்கர்கள் தங்களுக்கு இழைத்த நிறவெறிக் கொடுமைகளை மறந்து தீரத்துடன் போரிட்டன.

அமெரிக்கர்கள் தங்கள் திறமையை மார்ன் நதிக்கரைப் போரில் நிரூபித்தனர். இதையடுத்து அமெரிக்கத் தளபதி பெர்ஷிங்கின் ஆசையும் நிறைவேறியது. ஆம், பிரெஞ்சுத் தளபதியின் தலைமையில் இல்லாமல் சுயேச்சையாகவே அமெரிக்கப் படைகள் போரிட அனுமதி கிடைத்தது. மார்ன் போர் இன்னும் சில வகைகளில் அமெரிக்காவுக்கு முக்கியமானது. இரண்டாம் உலகப் போரில் அமெரிக்கத் தளபதிகளாகப் போரிட்ட ஜார்ஜ் சி. மார்ஷலும் ஜார்ஜ் பேட்டனும் பெர்ஷிங்கின் கீழேதான் முதல் உலகப் போரில் பணியாற்றினர். முன்னாள் அமெரிக்க அதிபர் தியோடர் ரூஸ்வெல்ட்டின் மகனான குவென்டின் ரூஸ்வெல்ட் தனது சிறு விமானத்துடன் சுட்டு வீழ்த்தப்பட்டதும் அந்தப் போரில்தான்.

மான்சியில் உள்ள தனது உணவு விடுதியில், முதல் உலகப் போரின் சின்னங்களாக எஞ்சிய சீருடைகள், துப்பாக்கிகள், அப்போது வெளியான செய்தித்தாள்களின் முதல் பக்கங்கள், இன்ன பிற சின்னங்கள் சூழ அமர்ந் திருக்கிறார் பிளான்ஷா. பிரான்ஸில் தலைதூக்கியிருக்கும் தீவிரவாத அரசியல், உக்ரைனை அச்சுறுத்தும் ரஷ்யா என்று தற்கால அரசியல் சூழலை எண்ணி அவர் கவலையுற்றிருக்கிறார். அமெரிக்கா முன்பைப் போல உத்வேகமும் துணிவும் இழந்து காணப்பட்டாலும் இன்னும் பல ஐரோப்பியர்கள் அமெரிக்காவை இன்றியமையாத ஒரு நாடாகவே பார்க்கிறார்கள் என்று அவர் கருதுகிறார். “அமெரிக்கா சற்று வலு குறைவாக இருந்திருந்தால், இங்கே தீவிரவாதப் போக்குகள் மேலும் வலுவாக இருந்திருக்கும்” என்கிறார் பிளான்ஷா.

- தி நியூயார்க் டைம்ஸ், தமிழில்: ஆசை

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x