Last Updated : 22 Dec, 2016 11:00 AM

 

Published : 22 Dec 2016 11:00 AM
Last Updated : 22 Dec 2016 11:00 AM

உயிர் காக்கும் ஸ்டென்ட்டுகளில் விலை வித்தியாசம் ஏன்?

நண்பர் ஒருவர் அவசரமாக அலைபேசினார்.. "என் மாமனாருக்குத் திடீர்னு நெஞ்சுவலி வந்து ஆஸ்பத்திரிக்கு அழைச்சிட்டுப் போனோம். இசிஜி, ஆஞ்சியோகிராம் எடுத்துப் பார்த்துட்டு, கடுமையான மாரடைப்பு ஏற்பட்டிருக்கு. ஹார்ட்ல 90% 'பிளாக்' இருக்கு. 'ஆஞ்சியோபிளாஸ்டி' பண்ணி ஸ்டென்ட் வெச்சு சரிபண்ணிடலாம். செஞ்சுடலாமா… சொல்லுங்க?'ன்னு அவசரப்படுத்தினார்கள். எனக்கு 'ஸ்டென்ட்'ன்னா என்னன்னு தெரியல. 'உங்களுக்கு எது நல்லதுன்னு தோணுதோ அதையே செய்யுங்க'ன்னு சொல்லிட்டேன். சிகிச்சை முடிஞ்சு வீட்டுக்கு வரும்போது நாலு லட்சம் செலவாச்சு" என்றார். படித்தவர்களுக்கே இந்த நிலை என்றால், பாமர மக்களுக்கும் கிராமத்து ஆட்களுக்கும் ஸ்டென்ட் பற்றி என்ன தெரியும்?

'ஸ்டென்ட்' என்றால் என்ன?

பொதுவாக, ஒன்று அல்லது இரண்டு ரத்தக் குழாய்கள் அடைத்துக்கொண்டிருந்தால் 'பலூன் ஆஞ்சியோபிளாஸ்டி ஸ்டென்ட்' சிகிச்சை மேற்கொள்ளப்படும். மூன்று ரத்தக் குழாய்களிலும் அடைப்பிருக்கிறது என்றால், 'பைபாஸ் அறுவை சிகிச்சை' மேற்கொள்ளப்படும். பைபாஸ் செய்ய முடியாதவர்களுக்கு ஆஞ்சியோபிளாஸ்டி தான் கைகொடுக்கும்.

'ஸ்டென்ட்' என்பது உலோகத்தால் ஆன ஒரு சுருள் வளைகுழல். இது வளையக்கூடியது; விரியக்கூடியது. இதன் நீளம் அதிகபட்சமாக 12 மி.மீ. உள்விட்டம் 3 மி.மீ. பார்ப்பதற்கு பால்பாய்ண்ட் பேனாவில் இருக்கும் 'ஸ்பிரிங்' மாதிரி இருக்கும். இதைத் தயாரிக்கும் நிறுவனத்தைப் பொறுத்து உலோகக் கலவை அமையும். பிளாட்டினமும் குரோமியமும் கலந்த 'ஸ்டென்ட்' பிரபலம். இதுதான் கொரோனரி ரத்தக் குழாயில் உள்ள அடைப்பை நீக்கி, மாரடைப்பிலிருந்து நம்மை விடுவிக்கிறது. எப்படி ஒரு செயற்கைக்கோளை விண்ணில் நிறுத்துவதற்கு ராக்கெட் தேவைப்படுகிறதோ அப்படியே அடைப்புள்ள ரத்தக் குழாய்க்கு ஸ்டென்ட்டைக் கொண்டுசெல்ல 'பலூன் ஆஞ்சியோபிளாஸ்டி' தேவைப்படுகிறது.

அது என்ன 'பலூன் ஆஞ்சியோபிளாஸ்டி'?

ஆஞ்சியோகிராம் செய்ய உதவும் வளைகுழாய் முனையில் சிறிய பலூன் இருக்கும். அதோடு, இந்த ஸ்டென்ட்டையும் இணைத்து, தொடை கொரோனரி ரத்தக் குழாய்க்குக் கொண்டுசென்று, அடைப்புள்ள இடத்தை அடைந்ததும், பலூனை விரிப்பார்கள். பலூனோடு சேர்ந்து ஸ்டென்டும் விரியும். இதனால் கொழுப்பு நசுக்கப்பட்டு, அடைப்பு விலகிக்கொள்ளும். பின்னர், பலூனைச் சுருங்கவைத்து வெளியில் எடுத்துவிடுவார்கள். ஸ்டென்ட் மட்டும் கான்க்ரீட்டைத் தாங்கும் போல்டு மாதிரி அங்கேயே நிலையாக நிற்கும். ஸ்டென்ட் வழியாக மீண்டும் ரத்தம் பாயும். இது மீண்டும் மாரடைப்பு வராமல் தடுக்கும்.

ஆஞ்சியோகிராம் செய்யும்போதே ஸ்டென்ட்டையும் பொருத்திவிட்டால், சிகிச்சை ஒரு நாளில் முடிந்துவிடும். செலவும் குறையும். பின்னொரு நாளில் இதைப் பொருத்த வேண்டுமானால், மீண்டும் இதே முறையில்தான் பொருத்த வேண்டும். இரட்டிப்புச் செலவு. அதற்குள் நோயாளியின் உயிருக்கு ஆபத்தும் நேரலாம். இதைத் தவிர்க்கத்தான் மருத்துவர்கள் ஸ்டென்ட்டைப் பொருத்து வதற்கு உடனடியாகச் சம்மதம் கேட்பார்கள்.

விலை வித்தியாசம் ஏன்?

இதற்கு 'டிரக் எலூட்டட் ஸ்டென்ட்' என்று இன்னொரு பெயரும் உண்டு. சாதாரண ஸ்டென்ட்டைப் பொருத்திக்கொண்டவர்களில் 10-ல் ஒருவருக்கு மீண்டும் அதே இடத்தில் 5, 10 ஆண்டுகளில் ரத்த உறைவு ஏற்பட வாய்ப்பிருக்கிறது. அதைத் தவிர்க்க, அவர்கள் வாழ்நாள் முழுவதும் ஆஸ்பிரின் மற்றும் சில மாத்திரைகளைச் சாப்பிட வேண்டும். அப்படியும் அவர்களுக்கு ஸ்டென்ட் உள்ள இடத்தில் அடைப்பு ஏற்பட்டு மீண்டும் மாரடைப்பு வந்துவிடுகிறது. இதைத் தவிர்க்கும் ஏற்பாடுதான் மெடிகேட்டட் ஸ்டென்ட். இதில் ரத்த உறைவைத் தடுக்கும் மருந்து சேர்க்கப்பட்டிருக்கும். சிறிது சிறிதாக இது ரத்தத்தில் கரைந்து ரத்த உறைவைத் தடுப்பதால், மீண்டும் மாரடைப்பு வருகிற அபாயம் குறையும்.

இந்தியாவில் ஆண்டுதோறும் ரூ.2,000 கோடிக்கு ஸ்டென்ட்டுகள் விற்பனை ஆகின்றன. இதில் 40% இந்தியத் தயாரிப்புகள். மீதி வெளிநாட்டுத் தயாரிப்புகள். பாதுகாப்புத் தன்மையைப் பொறுத்த அளவில் இந்தியாவில் தயாரிக்கப்படும் ஸ்டென்ட் எந்த வகையிலும் வெளிநாட்டு ஸ்டென்ட்டுக்குக் குறைவில்லை. என்றாலும், இந்தியத் தயாரிப்புகளுக்கான 'பின் ஆராய்ச்சிக் காலம்' ஆறு மாதங்கள் மட்டுமே. இங்கு சுமார் 100 நோயாளிகளுக்குப் பொருத்திப் பார்த்துவிட்டு, அதன் பாதுகாப்புத் தன்மையை நிர்ணயிக்கின்றனர். ஆனால், அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் இது 2,000 நோயாளிகளிடம் 4 ஆண்டுகளுக்குப் பயன்பட வைத்து, அதன் பாதுகாப்புத் தன்மையை நிர்ணயிக்கின்றனர். இதன் காரணமாக, இந்திய மருத்துவர்களுக்கு வெளிநாட்டு ஸ்டென்ட்டுகளின் மீது அதிக நன்பகத்தன்மை ஏற்படுகிறது. மேலும், விற்பனை உத்திகளில் வெளிநாட்டு நிறுவனங்கள் சில மருத்துவர்களை 'மயங்க' வைப்பதும் ஒரு காரணம்.

அரசின் கடமை

பொதுவாக, ஒரு ஸ்டென்ட்டின் தயாரிப்புக்கு ஆகும் செலவு 34 ஆயிரம் ரூபாய்தான். ஆனால், இது லட்சங்களில் விற்கப்படு கிறது. மத்திய அரசின் ஸ்டென்ட் விற்பனை விதிகளில் உள்ள குழப்பங்கள்தான் இதற்குக் காரணம். இடைத்தரகர்கள் அதைப் பயன்படுத்தி, இந்த மோசடியைச் செய்கிறார்கள். வெளிநாட்டு ஸ்டென்ட்டுகளின் விலை உள்நாட்டு ஸ்டென்ட்டுகளைவிட 15% அதிகம். வசதி குறைவாக இருப்பவர்கள், மருந்து தடவப்பட்ட இந்தியத் தயாரிப்பு ஸ்டென்ட்டைப் பொருத்திக்கொள்கிறார்கள். பண வசதி அல்லது இன்சூரன்ஸ் கிளெய்ம் வசதி உள்ளவர்கள் வெளிநாட்டு ஸ்டென்ட்டை விரும்புகிறார்கள்.

உயிர் காக்கும் பொருளில் விலை வித்தியாசம் இருந்தால், நோயாளிகளுக்கு அந்த மருத்துவத்தின் மேல் நம்பிக்கை குறையலாம் அல்லவா? குறைந்த விலை ஸ்டென்டைப் பொருத்திக்கொண்டவர்கள் நிம்மதியாகத் தூங்க முடியுமா? அதிக விலை ஸ்டென்டைப் பொருத்திக்கொள்வதற்கான வசதி இல்லை என்ற வருத்தமே அவர்களைச் சாகடித்துவிடுமே! இந்தியாவில் நீடிக்கும் இந்த மோசமான நிலைமையைக் கவனத்தில்கொண்டு, 'தரமான ஸ்டென்ட் எது?' என அரசே அறிவிக்க வேண்டும். கூடவே, அதன் விலையை நாடு முழுவதும் ஒன்றுபோல் நிர்ணயித்து, இங்குள்ள கோடிக்கணக்கான இதய நோயாளிகளைக் காப்பதற்கு வழி செய்ய வேண்டியது மைய அரசின் கடமை.

- கு. கணேசன், பொதுநல மருத்துவர். தொடர்புக்கு: gganesan95@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x