Published : 04 Nov 2016 09:53 AM
Last Updated : 04 Nov 2016 09:53 AM

அறிவியல் அறிவோம்: குடல் பூஞ்சையும் எதிர்கால எரிபொருளும்!

மனித முன்னேற்றத்துக்கும், எரிபொருள் பயன்பாட்டுக்கும் நேரடித் தொடர்பு உண்டு. ஆனால், இவை சுற்றுச்சூழலை நாசமாக்குவதால், படிம எரிபொருளைத் தோண்டியெடுப்பதற்குப் பதிலாக, உயிரி எரிபொருள் தயாரிப்பில் மனித சமுதாயம் ஆர்வம் காட்டுகிறது.

விலங்கு செல்லோடு ஒப்பிடும்போது, தாவரச் செல்களின் செல் சுவர்கள் மிக மிக வலுவானவை. லிக்னின், செல்லுலோஸ் மற்றும் ஹெமிசெல்லுலோஸ் போன்ற சிக்கல் மிகுந்த வேதிப்பொருட்களைக் கொண்ட இந்தச் செல்சுவர்களை மக்கச் செய்வதுதான் உயிரி எரிபொருள் தயாரிப்பின் பெரிய சிக்கல். எனவே, உருளைக் கிழங்கை முதலில் வேகவைத்து, உரித்துப் பின்னர் சமையல் செய்வதுபோல், இந்தச் சிக்கல் மிகுந்த வேதிப்பொருட்களை மிருதுவாக்க வேண்டியதிருக்கிறது.

சான்டா பார்பரா கலிஃபோர்னியப் பல்கலைக்கழகத்தின் வேதியியல் பேராசிரியர் மிசெலே ஒமாலி குழுவினர், இந்தச் சிக்கலுக்குத் தீர்வு காண முனைந்தனர். மக்குவதற்கு மாதக்கணக்கில் ஆகும் தாவரங்களை, ஆடு, குதிரை போன்ற விலங்குகள் ஒரே நாளில் செரித்துவிடுகின்றன. ஆக, இவற்றின் குடலில் உள்ள நொதியைப் போல் செயற்கையில் உருவாக்க முடிந்தால், உயிரி எரிபொருள் தயாரிப்பைத் துரிதப்படுத்த முடியுமே என்று யோசித்தார்கள்.

விலங்குகள் போடும் சாணிகளை உடனுக்குடன் சேகரித்துக் குடல் பூஞ்சைகளைப் பிரித்தெடுத்து ஆராய்ந்தார்கள். “ஆக்ஸிஜன் இல்லாத நிலையில் மட்டுமே வளரும் குடல் பூஞ்சைகள், இனப்பெருக்கம் செய்யும்போது வால்போன்ற அமைப்பைக் கொண்ட நுண்ணுயிர் விதைகளைத் தோற்றுவிக்கிறது. குடலில் வந்துசேரும் தாவரப் பகுதிகளில் இவை சென்று சேர்ந்து வேர்விடுகிறது. இவ்வாறு வளரும் வேரில், தாவரச் செல்களின் சிக்கல் மிகுந்த வேதிப்பொருட்களையும் செரிக்கும் நொதிகள் சுரக்கின்றன. தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் பூஞ்சைகள் வெறும் நூறு வகையான நொதிகளைத் தயாரிக்கின்றன. ஆனால், குடல் பூஞ்சைகள் இரண்டு மடங்கு அதிகமான வகைகளில் நொதிகளைத் தயாரிக்கின்றன. மேலும், சிக்கல் மிகுந்த சைலம் போன்ற வேதிப்பொருட்களைக்கூட நொதிக்க வைக்கும் பூஞ்சைகள் குடல் பூஞ்சைகளில் உள்ளது” என்று ஆய்வில் கண்டுபிடித்தனர்.

ஆக, விலங்குகளின் குடல் பூஞ்சைகளைப் பயன்படுத்தி, உயிரி எரிபொருள் தயாரிப்பது மேலும் சிறந்தது என்ற முடிவுக்கு வந்திருக்கிறார்கள். இந்தக் கண்டுபிடிப்பின் உச்சமாக, மாடுகளைப் போலப் புல்பூண்டுகளைத் தின்று கொண்டே வண்டி இழுக்கும் இயந்திரம் உருவாக்கப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை!

- த.வி.வெங்கடேஸ்வரன்,

மத்திய அரசின், விக்யான் பிரச்சார் மையத்தின் விஞ்ஞானி.

தொடர்புக்கு: tvv123@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x