Published : 14 Nov 2016 10:58 AM
Last Updated : 14 Nov 2016 10:58 AM

இப்படிக்கு இவர்கள்: பள்ளிகள் யாருக்கானவை?

தனியார் பள்ளிகளின் உள்கட்டமைப்பு வசதிகளை நிர்ணயிக்கும் குழுவில் என்னையும் ஒரு உறுப்பினராகத் தேர்ந்தெடுத்த உயர் நீதிமன்றத்துக்கு நன்றி. என் வயது, அப்பொறுப்பை ஏற்க ஒத்துழைக்கும் நிலையில் இல்லை. இருந்தாலும், ஒரு கருத்தைப் பதிவுசெய்ய விரும்புகிறேன்.

ஆங்கில ஆட்சியின்போதே பள்ளிகளுக்கு வேண்டிய நிலத்தின் அளவு, வகுப்பறையின் பரப்பு, கழிப்பிட வசதிகள் ஆகியவை அறிவியல்ரீதியாக வரையறுக்கப்பட்டுள்ளன. மாணவர் நகரவும், எழுதவும் வேண்டிய இடப் பரப்பும், சுவாசிக்கத் தேவையான குறைந்தபட்சக் காற்றின் அளவும்கூட நிர்ணயிக்கப்பட்டிருக்கின்றன.

ஆனால், தனியார் பள்ளிகள் எதையும் பின்பற்றுவதில்லை. மெட்ரிக் பள்ளிகள் முதலில் பல்கலைக்கழகத்தோடு இணைந்திருந்தன. இணைப்பு விதிகள் பல்கலைக்கழகத்தால் உருவாக்கப்பட்டன. அப்பள்ளிகளை அரசு மேற்கொண்டவுடன் பல்கலைக்கழகத்தின் இணைப்பு நிபந்தனைகளையே தொடர்ந்திருக்கலாம். இல்லையென்றால், தமிழ்நாடு தனியார் பள்ளிகள் (ஒழுங்குபடுத்தல்) சட்டம், 1976-ஐ அவற்றுக்கு விரிவுபடுத்தியிருக்கலாம். இவ்விரண்டையும் விட்டுவிட்டு, அவற்றுக்குத் தனி வாரியம் அமைத்தும், அவ்வாரியத்துக்கான விதிகளை உருவாக்கும் பணியினை மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கொண்ட குழுவிடமே ஒப்படைக்கப்பட்டதும்தான் சீரழிவுக்குக் காரணம். அவர்களாகவே உருவாக்கிய விதிகளைக்கூடப் பின்பற்ற மறுப்பதை எவ்வாறு ஏற்க முடியும்? பள்ளிகள் குழந்தைகளுக்காக, நிர்வாகத்துக்காக அல்ல என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

- ச.சீ.இராஜகோபாலன், சென்னை.



காழ்ப்புணர்வு அரசியல்

ப.சிதம்பரத்தின் கேள்வியான ‘ரூ.2000 நோட்டால் கறுப்புப் பணம் ஒழியுமா?’ (10.11.16) செய்தியை முழுமையாகப் படித்தால், அவர் ஒரு பொருளாதார நிபுணராகவோ, அனுபவம் மிக்க முன்னாள் நிதி அமைச்சராகவோ இந்தக் கருத்தைச் சொல்லவில்லை என்பது புரிகிறது. உங்களால் செய்ய முடியாத ஒரு நல்ல விஷயத்தை, 60 ஆண்டுகாலம் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சியால் செய்ய முடியாத ஒரு நல்ல காரியத்தை மோடி செய்ததற்காகப் பாராட்டாவிட்டாலும் கூட, காழ்ப்புணர்வோடு குறை சொல்லக் கூடாது. இந்திய மக்கள்தொகையில் 80% பேர் அரசின் நடவடிக்கையை வரவேற்கிறார்கள்.

- என்.கிருஷ்ணமூர்த்தி, ‘தி இந்து’ இணையதளம் வழியாக.



தொடரும் தொண்டுள்ளம்

இரா.நாறும்பூநாதன் எழுதிய ‘பள்ளிக்கூடங்களும், ஆசிரியர் வேலையும் காசு சம்பாதிப்பதற்கு மட்டுந்தானா?’ என்னும் கட்டுரை (நவ.9) படித்தேன். அந்தக் காலத்தில், ஒவ்வொரு பள்ளியும் ஒவ்வொரு காரணியின் பின்புலத்தில் உருவாக்கப்பட்டிருக்கிறது. இதில் இரு பள்ளிகளை மிக அருமையாக சுட்டிக்காட்டியிருக்கிறார் கட்டுரையாளர்.

இப்படி கல்வியைத் தொண்டாகச் செய்த பள்ளிகள் எல்லாம், எங்கேயும் போய்விடவில்லை. இன்னமும் இருக்கின்றன. நாம்தான் தொண்டினை மதிக்காமல் வணிகமாக்கி, அந்தச் சூழலில் சிக்கித் தவிக்கிறோம். தனியாரின் லாபவெறி ஒருபுறம் இருந்தாலும், மாற்றம் நம்மிலிருந்து துவங்க வேண்டு ம். ஆசிரியப் பெருந்தகைகளும் தொண்டுள்ளத்தோடு பணியாற்ற வேண்டும்.

- ப.தாணப்பன், தச்சநல்லூர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x